Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்சில் றஞ்சன் கைது-புலிசார் அமைப்புக்கள் மௌனம்:பாலசிங்கத்தின் அரசியல் தொடர்ச்சி

ranjanபிரித்தானியாவில் வெளிவிகரச் செயலாளராகவிருந்த ஜாக் ஸ்ரோவினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2001 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. அவ்வேளையில் பிரித்தானியாவிலிருந்த தமிழ் சட்ட வல்லுனர்கள் தடையை நீக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளை விடுதலைப் புலிகளின் அரசியலை வழிநடத்திய அன்டன் பாலசிங்கம் பிரித்தானியாவில் தங்கியிருந்தார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக சட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் சட்ட வல்லுனர்களைத் தொடர்புகொண்ட பாலசிங்கம் உடனடியாக அவர்களது செயற்பாடுகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேற்கொண்டு என்ன செய்வது என்பது தமக்குத் தெரியும் என்றும் இந்த விடையத்தில் வேறு எவரும் தலையிட வேண்டாம் என்றும் கடிந்துகொண்டார்.
இந்த உண்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களாக பிரித்தானியாவில் செயற்பட்ட பலருக்குத் தெரியும்.

70 களின் ஆரம்பத்தில் அன்டன் பாலசிங்கம் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் தமிழ் ஆங்கில மொழிபெயர்பாளராக வேலைபார்த்தவர். பிரித்தானிய அரசிற்கு எதிராக தமிழ் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளையும் ஆக்கங்களையும் மொழிபெயர்ப்பதே அன்டன் பாலசிங்கத்தின் தொழில்.

பின்னதாக பிரித்தானியாவில் குடியேறிய பாலசிங்கம் 70 களின் இறுதியில் தமிழ் நாட்டிற்குச் சென்று புலிகள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.

80 களின் ஆரம்பத்தில் ஒபரோய் தேவனின் ரெலா அமைப்புடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கும் பாலசிங்கம் சில மாதங்களுக்கு உள்ளாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானிப்பவராகவும் செயற்படுகிறார். பிரித்தானியாவிற்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பயணங்களை மேற்கொண்ட அன்டன் பாலசிங்கம் சமாதான ஒப்பந்தம் உட்பட பல சந்தர்ப்பங்களில் புலிகளின் பிரதிநிதியாகச் செயற்பட்டார்.

ஆக, பிரித்தானிய காலனியவாதிகளும் ஏகாதிபத்திய அரசுகளும் ஈழப் போராட்டத்தைக் தமது தேவைக்கு ஏற்ப நேரடியாகக் கையாண்டனவா என்ற சந்தேகங்கள் ஒரு புறத்தில் மேலோங்க இன்று ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் புலிகளின் செயற்பாட்டாளர்களை கைது செய்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த றஞ்சன் என்றழைக்கப்படும் ஸ்ராலின் சவரிமுத்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

றஞ்சன் கடந்த 2007ம் ஆண்டு பிரான்ஸ் பொலிசாரால் கைதாகி தண்டனை பெற்று பின்னர் 2011ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் முழு நேரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். றஞ்சன் மீளக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணமாக இவர் வெளியே சென்றால் தமிழர்களுக்குப் பாதிப்பாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் முன்னை நாள் போராளிகளதும், செயற்பாட்டாளர்களதும் கைதுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட வேளையிலும், ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட போதும் புலிகள் அல்லாத பலர் தடைக்கு எதிராகக் குரலெழுப்பினர். புலிகளில் மேட்டுக்குடிப் பிரமுகர்கள் மயான மௌனத்தில் மூள்கினர்.
பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டட வாளாகத்தில் தமிழ் மற்றும் பிரித்தானியப் பாராளுமன்ற அரசியல் வாதிகள் பெரும்பான்மையாகப் புடைசூழ நிலப்பறிப்பிற்கு எதிரான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. தேசிய இன ஒடுக்குமுறை இராணுவ ஒடுக்குமுறையாகவும் இனச்சுத்திகரிப்பாகவும் உச்சமடைந்துள்ள நிலையில் அதன் பின்னணியில் செயற்படும் அனைவரோடும் கூட்டம் போடும் இந்த நிகழ்வு பாலசிங்கத்தின் தொடர்ச்சியே. பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள அனைத்து அமைப்புக்களும் முன்னை நாள் போராளிகளின் கைதிற்கு எதிராகக் குரல்கொடுக்க மறுத்துவரும் நிலையில் அவர்களின் பிழைப்புவாதமும் காட்டிக்கொடுப்பும் மக்களால் அடையாளம் காணப்படும்.

றஞ்சன் போன்றவர்கள் குற்றமிழைத்திருந்தால் அவர்கள் மீதான விசாரணை நாட்டின் ஏனைய பிரஜைகள் மீதான வழக்குகள் போன்று விசாரணை செய்யப்படவேண்டும் என்று ‘வேண்டுகோள்’ விடுப்பதற்குக் கூட தமிழர் தலைமைகள் இல்லாத வெறுமை புலம் பெயர் நாடுகளில் காணப்படுகின்றது.
மில்லியன் கணக்கில் மக்கள் பணத்தைச் சுருட்டிக்கொண்டவர்கள் அதிகாரவர்கத்தோடு ஐந்து நட்சத்திர விடுதிகளில் உலாவரும் வேளை, அப்பாவிகள் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

ஐரோப்பிய நாடுகளில் முன்னாள் போராளிகள் ஆபத்தில் : பினாமிகள் எங்கே?
முன்னை நாள் போராளிகள் மீதான ஒடுக்குமுறை : அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்
பெண் போராளிகள் கோரமான பாலியல், சமூக ஒடுக்குமுறைகளைக் கூறிக் கண்ணீர் வடிக்கிறார்கள்! : காணொளி
புலிகளின் அரசியலைத் தீர்மானித்த அன்டன் பாலசிங்கம் யார்?
Exit mobile version