ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.
தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதிலும் பெரும்பான்மையான பகுதி, தூய தேசியவாதிகள் பிரபாகரன் மரணித்துப் போனதைக் கூட நம்ப மறுக்கிறார்கள்.
இதன் மறுபுறத்தில் இன்னொரு பகுதியினர், பிரபாகரன் ஒரு மன நோயாளி, கோரமான மிருகம், மன்ன்னிக்க முடியாத கொலையாளி என்ற தலையங்களில் அவரைச் சுற்றிய ஒரு விம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.
இதில் இந்த இரண்டு பகுதியனருமே பிரபாகரன் ஆரம்பத்திலிருந்தே வரித்துக்கொண்ட அரசியல் குறித்தும் சமூகத்தின் மீதான அதன் ஆளுமை குறித்தும், ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் பேச மறுக்கின்றனர்.
எழுபதுகளின் ஆரம்பங்களில் பிரபாகரன் என்ற தனிமனிதன் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் அரச சார்பான தனி நபர்களைக் “களயெடுப்பதை”த் தனது விடுதலைக்கான வழியாக வரித்துக்கொள்கிறார்.
70 களிலிருந்து தேசிய அலை தமிழ்ப் பேசும் இலங்கையர்கள் மத்தியிலிருந்து எழுச்சி பெறுகிறது. இந்தத் தேசிய அலையானது ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தையும் கொண்டிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடரும் பெருந்தேசிய வாதம் இலங்கையின் பிரதான முரண்பாடாகத் தேசிய முரண்பாட்டை உருவாக்கின்றது.
தீர்மானகரமான முரண்பாடாக உருவாகும் தேசிய இன முரண்பாற்கான தீர்விலிருந்தே இலங்கை மக்களின் விடுதலை என்பது சாத்தியமானது என்ற நிலைக்கு இலங்கையின் புற நிலை யதார்த்தம் காணப்பட்டது.
தேசிய இன முரண்பாட்டைக் கையாள்வதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்று இடதுசாரிகளிடம் காணப்பட்டாத நிலையில் பிரபாகரன் போன்ற தன்னிச்சையான போராளிகள் உருவாகின்றனர்.
சமூகத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் அதன் இருப்பிலிருந்தவாறே ஏற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பதற்கான இராணுவத்தைக் கட்டமைப்பதே பிரபாகரன் முன்வைத்த அரசியல்.
இது குறுந்தேசிய வாத அரசியல் என்று அதன் அடிப்படையான உள்ளர்த்தில் கூற முடியாவிட்டாலும் அதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியலாக மாற்றமடைகிறது.
பிரபாகரன் உருவாக்க எண்ணிய சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் பாதுகாக்கும் இராணுவக் குழுவைக் கட்டமைக்கும் அரசியலுக்குப் பிரபாகரன் ஒரு போதும் துரோகம் செய்தவரல்ல. ஆனால் பிரபாகரனின் வரித்துக்கொண்ட அரசியலின் அடிப்படையே சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் பிரிவுகளுக்கு அதன் மேலணிகள் இழைத்த துரோகங்களிலிருந்தே கட்டமைக்கப்பட்டது.
துரோகிகளைக் களையெடுக்கும் பிரபாகரனின் வழி முறை சமூகத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்கான இராணுவ வழிமுறைக்கு எதிரானதாகக் கருதப்பட்ட அனைவரையும் அழிக்கும் அரசியல் செயற்பாடாக முன்னெடுக்கப்படுகிறது.
தான் சார்ந்த அமைப்புக்களின் போராளிகளை, இராணுவக் கட்டமைப்பிற்கு எதிரான உட்கட்சி ஜனநாயகத்தை விரும்பியவர்களை அழிக்கும் பிரபாகரனின் அரசியல் இந்திய மேலாதிக்க நலன்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கும் உகந்தாக அமைய அவர்களின் ஆதரவைப் பிரபாகாரன் சார்ந்த அரசியலைக் கொண்ட அமைப்புப் பெற்றுக்கொள்கிறது.
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான பாரத்குமார் இவ்வாறு சொல்கிறார்:
“நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் பிரபாகரனை உருவாக்கினோம். எங்குமில்லாதவாறான ஒருவரை நாம் தேடியெடுத்தோம். அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே அரசியலற்ற பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் ஆயுதங்கள் குறித்தும், படைப்பிரிவு குறித்தும் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.”
இந்திய நலன்களுக்கு அடிப்படையில் எதிரியாக அமைந்திராத பிரபாகரனின் அரசியல், அதாவது சமூகத்தின் பிற்போக்கான இருப்பைப் பாதுகாக்கின்ற அரசியல் இந்தியாவினால் வளர்க்கப்பட்டது. சமூகத்தின் பிற்போக்கான கூறுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், வெற்றியை நோக்கிப் போராட்டத்தை வழி நடத்த முயன்ற அனைத்துப் பகுதிகளையும் அது அழிவிற்கு உட்படுத்தியது.
போட்டி இராணுவக் குழுக்களாக வளர்ச்சியடைய முற்பட்ட ஏனைய அமைப்புக்களை அழிப்பது என்ற போர்வைக்குள் கோரமான கொலைகளை நிகழ்த்தியது.
ஒரு ஏகபோக இராணுவ அரசிற்கு உரிய சிறைக் கூடங்கள், வதை முகாம்கள், கொலைப்படைகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. உயிரோடு எரிக்கப்பட்ட போராளிகள், இருட்டு அறைகளில் இறந்து போனவர்கள் போன்ற ஆயிரம் துயரச் சம்பவங்களைக் கொண்டது இந்த புலிகளின் இராணுவம்.
தனது இராணுவ நலனுக்காக தமது சொந்த நிலங்களிலிருந்து முஸ்லீம்கள் விரட்டியடிக்கபட்டிருக்கிறார்கள். கிழக்கில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல சிங்கள அப்பாவிகள் ஏன் கொல்லபடுகிறோம் என்று தெரியாமல் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஏனைய இயக்கங்களுக்கும் பிரபாகரன் வழிநடத்திய புலிகளின் அரசியல் திசை வழியில் பெரிதான முரண் ஏதும் இருந்ததில்லை. 83 இற்குப் பின்னான காலம் முழுவதும் அறியப்பட்ட எந்த தேசிய விடுதலை இயக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பகு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
எது எவ்வாறாயினும் ஏனைய இயக்கங்களின் உள்ளகக் கட்டமைப்பில் காணப்பட்ட குறித்தளவான ஜனநாயகக் கட்டமைப்பானது, குறித்தளவிலான முற்போக்கு சக்திகளையும் கொண்டிருந்தது. இந்திய அரச பின்புலத்தில் புலிகளால் இவர்கள் அழிக்கப்பட்ட வேளையில் இந்த முற்போக்கு அணியே அதிகமாக அழிந்து போனது.
புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த வெகுஜன அமைப்புக்கள், மக்கள் குழுக்கள் புலிகளின் அங்கங்களாக பலவந்தமாக இணைக்கப்பட்டன.
ஏனைய இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்கு அணிகள் இலங்கை அல்லது இந்திய அரசுகளின் துணைப்படைகளாக மாற்றமடைந்தன. இப்போது தமிழ்ப் பேசும் மக்களின் தலைமை புலிகள் ஒருபுறத்திலும் மறு புறத்தில் அரச ஆதரவு புலி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிற்போக்கு அணிகள் வசமானது.
இந்த இரு அணிகளும் நிகழ்த்திய இராணுவத் தர்பாரில் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ்ப் பேசும் மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் பெருந்தேசிய அடக்குமுறையின் பாதிப்பிற்கு உள்ளானவர்களே.
தமிழ்ச் சமூகத்தின் இருப்பைப் பேணுவதற்கான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரனின் அரசியல் மக்களின் அழிவோடு முள்ளிவாய்க்காலில் கரைந்துபோனது.
இதை விடுத்து பிரபாகரனினைக் கடவுளாக்குவதும், சூர்யத்தேவனாகப் புனைவுகளைக் கட்டமைப்பதும் அழிவுகளை அங்கீகரிப்பதாகும். தவிர, பிரபாகரனின் அரசியல் ஏற்படுத்திய அழிவுகளை விமர்சிப்பதை விடுத்து பிரபாகரனை வெறுமனே துரோகியாகவும் மன நோயாளியாகவும் சித்தரிப்பது சமூகப்பற்றற் செயற்பாடாகும். பழிக்குப் பழி என்ற, இரத்ததிற்கு இரத்தம் என்ற நிலப்பிரபுத்துவ குழு மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.
பிரபாகரன் என்ற தனிமனிதன் துரோகியா தியாகியா என்பதல்ல இன்றைய பிரதான கேள்வி. பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் இழைத்த துரோகம் பேசப்ப்பட வேண்டும். அதன் வெளிச்சத்திலிருந்தே புதிய போராட்டம் சரியான நெறியைக் கண்டறிய முடியும்.
பிரபாகரன் அரசியலின் மீள்கட்டமைப்பென்பது மறுபடி ஒரு முறை அரசியல் துரோகத்தை அரங்கேற்றுவதாகும்.
கூட்டம் கூட்டமாகத் தமிழ்ப் பேசும் மக்களை அழித்துப் போட்டுவிட்டு அவர்களின் அடையாளத்தைச் சிறுகச் சிறுக அழித்துக்கொண்டிருக்கும் கொடிய பேரினவாத இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைத் புதிய வழிகளில் மக்கள் பற்றுள்ளவர்கள் திட்டமிடத் தவறும் துரோகம் நிகழுமானால் பிரபாகரனின் உயிர்ப்பு தவிர்க்க முடியாதாகிவிடும்.