Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தானில் காத்ரியின் மக்கள் எழுச்சி – தங்கச் சுரங்கம் பின்னணியில் : சபா நாவலன்

PAKISTAN-UNREST-POLITICSஉலகம் முழுவதும் போராட்டங்களும் எழுச்சிகளும் நடைபெறுகின்றன என்றால் அதன் அடிப்படைக்காரணம், அதற்கான அரசியல் புறச்சூழல் காணப்படுகின்றது என்பதே. அதிகாரவர்க்கமும், பண முதலைகளும் தமது அப்பாவி மக்களைக் கொள்ளையிட்டு உலகம் முழுவதும் பணப்பதுக்கலில் ஈடுபடுகின்றனர். உழைப்பையும் மூலதனத்தையும் சொந்தமாக்கிக் கொள்கின்ற உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களும் அவற்றைச் சார்ந்தவர்களுமே உலகில் ஒவ்வொரு மனிதனதும் வீட்டு நுளைவாசல் வரை வந்து கொள்ளையடித்துச் செல்லும் அளவிற்கு உலகம் அநாகரீகம் அடைந்துள்ளது. இவர்கள் விட்டுச் செல்கின்ற வறுமையும் மனித அவலமும் மக்கள் எழுச்சிகளைத் தூண்டுகிறது.

அந்த மகள் எழுச்சிகளைக்கூட மக்களை அவலத்துள் அமிழ்த்திய அதே குழுவினரே பயன்படுத்திக்கொள்கின்றனர். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஏகாதிபத்திய அரசுகள் அவர்களுக்கான எழுச்சிகளை திட்டமிட்டு நடத்துகின்றனர். எழுச்சிகளை நடத்துவதற்காக பயிற்சி வழங்கப்பட்ட புரட்சி வியாபார அமைப்புக்களையும், தன்னார்வக் குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அரசுகளதும், பல்தேசிய நிறுவனங்களாதும் பண வழங்கல்களைப் பெற்றுக்கொள்ளும் அரசு சரா நிறுனனங்கள் என தம்மைத் தாமே அழைத்துக்கொள்ளும் தன்னார்வ நிறுனனங்களும் தனி நபர்களும் புரட்சியைத் திட்டமிட்டு புதிய பொம்மை அரசுகளை நிறுவிக்கொள்கிறார்கள். இவை அனைத்தும் பல்தேசியக் கம்பனிகளின் நலன்களுக்காகவும் அரவணைப்பில் இயங்கும் அரசுகளின் நலன்களுக்காகவுமே நடைபெறுகின்றன.

மக்களின் மேலோட்டமான அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளை முன்வைத்து புதிய குழுக்களும், திடீர் எழுச்சிகளும் தோன்றுகின்றன.

அவ்வாறான திடீர் மக்கள் எழுச்சிகளில் ஒன்றே பாகிஸ்தானில் இன்று உருவாகியிருக்கும் மக்கள் போராட்டமும்.

மக்கள் எழுச்சிகள் அனைத்தும் மக்களுக்கானவையோ அல்லது விடுதலை முற்போக்கானவையோ அல்ல. ஹிட்லர் உருவாக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிகளையும், போலந்தில் அமரிக்க கிறீஸ்தவ திருச்சபைகளின் பின்னணியில் வலேசா தோற்றுவித்த எழுச்சிகளையும், நமது காலத்தில் அமரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காக அரபு நாடுகளில் தோன்றிய எழுச்சிகளையும் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் பாரதீய ஜனதா போன்ற மத அடிப்படைவாதிகள் தோற்றுவித்த எழுச்சிகளைக்கூட நமது காலத்தில் பார்க்கிறோம்.

இன்று உலகம் முழுவதும் அங்குள்ள புறச்சூழலைக் கற்றுக்கொள்ளும் ஏகாதிபத்திய அரசுகள் தாம் சார்ந்த பல்தேசிய நிறுவனனங்களின் மூலதனச் சுரண்டலுக்காக எழுச்சிகளைத் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன.

தமது தேவைக்காக தேசிய இனப்பிரச்சனை, அடையாளம் சார்ந்த அரசியல், போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏகாதிபதிய அரசுகள் திட்டமிட்ட திடீர் எழுச்சிகளையும் போராட்டங்களையும் பெரும் பணச்செலவில் நடத்திவருகின்றன.
பாகிஸ்தானிய அரசு பலோசிஸ்தான் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைய மறுத்து அதன் மீது இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பலோச்சிஸ்தானியர்கள் பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக சுயநிர்ணய உரிமைகோரிப் போராட்டம் நடத்திவருகிறார்கள். 2012 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் அமரிக்க செனட் சபையில் பலோச்சிஸ்தான் -Balochistan-மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் பாக்கிஸ்தான் அரசைக் கோருவதாகத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உட்பட்த்தப்பட்ட போது அதுகுறித்து கண்டுகொள்ளாது ராஜபக்ச அரசோடு உடன்படிக்கைகள் செய்துகொண்ட ஏகாதிபத்தியங்கள் பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக பலோசிஸ்தானை விடுதலை செய்யக் கோருகின்றன.

பலோச்சிஸ்தானின் ஷாகாய் மாவட்டத்திலிருக்கும் ரெக்கொ டிக் – Reko Diq- என்ற சிறிய நகரம் அண்மைக்காலமாக உலகின் கண்களை உறுத்துகின்ற குவியப் புள்ளியாகக் காட்சிதந்தது. அமரிக்காவின் பலோச்சிஸ்தான் மீதான அக்கறையினதும் ஐரோப்பாவினதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினதும் மனித உரிமை அக்கறையினதும் பின்புலத்தில் ரெக்கொ டிக் காணப்பட்டது. உலகத்தின் மிகவும் தரமான தங்கச்சுரங்கம் ஒன்றை ரிக்கோ டிக் கொண்டிருப்பதுவே இதன் பிரதான காரணம்.

சிலி நாட்டின் எஸ்கடோடியா தங்கச் சுரங்கத்தில் பெறப்படும் தொகையை விட அதிகளவான தங்கத்தை பலோச்சிஸ்தானில் பெறமுடியும் என்று கணிப்பிடுகிறார்கள். எரிமலை குளிர்வடைந்த இடங்களில் ஒன்றான ரேக்கோ டிக் 12.3 மில்லியன் செப்புத் தாதுக்களையும் கொண்டுள்ளது எனக் கணிப்பிடப்படுகிறது.

தங்க வியாபாரம் மேற்கொள்ளும் மேற்கின் பல்தேசிய நிறுவனங்கள் அங்குள்ள தங்கத்தைச் சுரண்டி எடுப்பதற்காக அருவருக்கத்தக்க மோதலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றன.

கனடா நாட்ட்டைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி நிறுனமன பாரிக் கோல்ட் -Barrick Gold mine- பலோச்சிஸ்தான் தங்கச் சுரங்கத்தில் தங்கம் அகழ்வதற்காக விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பலோச்சிஸ்தான் மாநில அரசும் பாகிஸ்தான் மத்திய அரசும் 2011 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நிராகரித்தன.

அதே வேளை பலோச்சிஸ்தானில் துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கும் ஏனைய அபிவிருத்திப் பணிகளும் சீனாவிற்கு வழங்கப்பட்டது.

மேற்குலக ஊடகங்கள் பாகிஸ்தான் தங்கம் அகழ்வதற்கு கனேடிய நிறுவனத்தை அனுமதிக்க மறுத்தது குறித்து இஸ்லாமிய அரசின் சர்வாதிகாரம் என்று பிரச்சாரங்களை ஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக ஒடுக்கப்படும் பலோச்சிஸ்தானியர்களின் மனித உரிமை மற்றும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைகள் போன்றவற்றைப் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்தன.

இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத பலோச்சிஸ்தான் இன்று உலகின் கண்களை உறுத்தியது. இந்த நிலையில் தான் கனடாவில் வசிக்கும் கனேடியப் பிராஜா உரிமை பெற்ற பாகிஸ்தானியரான பணக்காரர் தாகீர் உல் காட்ரி முன்னிலைக்கு வருகிறார். பாகிஸ்தானிய அரசின் ஊழல், மக்களின் வறுமை ஆகிய சுலோகங்களை முன்வைத்து பாகிஸ்தானிய அரசியலில் தலையிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் பதின்நான்காம் திகதி நான்கு பல்லாயிரம் மக்களைத் திரட்டி திடீர் எழுச்சி ஒன்றை காட்ரி நடத்தினார்.

நாடாளுமன்றம் மற்றும் மாகாண அரசுகளைக் கலைக்க வேண்டும், தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக இஸ்லாமாபாத் அருகே தமது ஆதரவாளர்களுடன் தொடர் போராட்டத்தை காத்ரி நடத்தி வந்தார். இது தொடர்பாக அரசுக்கும் கெடு விதித்திருந்தார்.
இப்போது அரசு காத்ரியின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ள மக்கள் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

கனேடிய மில்லியனியரான காத்ரிக்கும் கனடாவின் பாரிக் கோட்ல் நிறுனதிற்கும் நெருங்கிய வியாபாரத் தொடர்புகள் நிலவிவந்தன. இத்தகவலை பல ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

ஏகாதிபத்தியத்தின் அடியாளாக கனாவிலிருந்து ‘கடவுள்’ போலத் தோன்றிய காத்ரி தங்கச் சுரங்கத்தில் மேற்கு நிறுவனனங்கள் கைவைக்கும் வரைக்கும் அரசியலில் தலையிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் மேலாக இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் அந்த நாடுகளிலிருந்து சீன ஆதிக்கத்தை அகற்றுவதற்கு அமரிக்க ஏகாதிபத்தியம் அனைத்தையும் மேற்கொள்ளத் தாயாரகிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் அதிகாரவர்க்கதிற்கு எதிராகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் இனிமேல் அதிகாரவர்கம் சார்ந்ததாக மட்டுமே அமையும்.

இலங்கையிலும் இதேபோன்ற எழுச்சிகளையும் ஆட்சி மாறத்தையும் ஏற்படுத்தவும் புதிய பேரினவாதிகளால் ராஜபகசவைப் பிரதியிடவும் அமரிக்கா நேரடியாகவே முயன்று வருகிறது.

Exit mobile version