பத்மநாபா 31 வது நினைவு தினம் – மீள் பதிவு
புலிகளின் அழிவிற்குப் பின்னர் இன்று வடக்கில், கடைவிரித்திருக்கும் எந்தச் சாதிவாதிக்கும் மத்தாளொடையின் பாரம்பரியம் தெரிந்திருக்காது என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.
சாதிக் கொடுமையும் யாழ்ப்பாண புன்னாலைக்கட்டுவன் வெள்ளாளர்களும் சிதைத்துத் தனிமைப்படுத்திய கூலி விவசாயிகள் உழைத்து மடியும் கிராமம் தான் மத்தாளோடை.
84 ஆம் ஆண்டு மத்தாளொடையில் சில மாதங்கள் தங்கியிருக்க சந்தர்பம் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்ட்டுக்கொல்லப்பட்ட விமலேஸ்வரன் வாழ்ந்த கிராமங்களில் மத்தாளொடையும் ஒன்று.
அபோதெல்லாம் ‘நாங்களும் போராட உரிமை தரவேண்டும்’ என்று இயக்கங்களை நோக்கி உள்ளக ஜனநாயகப் போராட்டங்கள் ஆரம்பித்திருந்த காலம்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு அணிதிரள வேண்டும் என்று சில ஆர்வம் மிக்க மத்தாளொடை இளைஞர்களோடு விவாதித்துக்கொண்டிருந்தேன். ஏனைய சமூகப்பகுதிகளிலிருந்து தனிமைப்பட்ட அந்தக் கிராமம் எழுச்சி பெற்ற காலத்தில் தான் ‘யாழ்ப்பாணம் வியட்னாமாகிறது’ என்று “மூத்த தேசியத்தலைவர்” அமர்தலிங்கம் குழு இலங்கை அரசிற்கு பாரளுமன்றத்தில் போட்டுக்கொடுத்தது.
கிராமத்தவர்கள் “பொடியள் விடமாட்டங்கள்” என்பதைத் தவிர தேசிய விடுதலைப் போராட்டம் குறித்துப் பெரிதாக எதுவும் அறிந்திருக்கவில்லை. அங்கிருந்து 5 கிலோமிட்டர் தொலைவில் தான் முன்பொரு காலத்தில் பிரபாகரன் உமாமாகேஸ்வரன் போன்றவர்கள் தலைமறைவாக இருந்தார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
இயக்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்துப் கிராமத்து இளைஞர்களோடு ஒன்று கூடல் நடத்திய போது அவர்களின் வெளியீடுகளையும் எடுத்துச் சென்றிருந்தேன்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் நூல் ஒன்றின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் “இது ரஞ்சன் தோழர்” என்று உரக்கச் சத்தமிட்டார். இல்லை இது பத்மநாபா, ஈ.பி.ஆர்.எல்.எப் << ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி>> என்ற இயக்கத்தின் செயலாளர் என்றதும், அவர் நம்ப மறுத்துவிட்டார். இல்லை இது ரஞ்சன் தோழர் தான், எனது மகனுக்குப் பெயர் வைத்தது கூட இவர் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். இவர் ஈ.பி.எல்.ஆர் இல் சேர்ந்துவிட்டது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். அவரது மகன் கூட சமரன் என்றே பெயர் சூட்டப்பட்டிருந்தார்.
இப்போது நான் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் ரஞ்சன் தோழரைப் பற்றிக் கூறத் தொடங்கினர். கிராமியத் தொழிலாளர் சங்கத்திற்கு வேலை செய்தவர். அப்போதே தாடி வைத்திருந்தார். எங்களைக் கூலிப் போராட்டங்களுக்குத் தயார் படுத்தினார். தன்னைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். அவர் எங்களவர். எங்களோடு வாழ்ந்தவர். ஈ.பி.எல்.ஆர் இற்காக எங்களைவிட்டுப் போய்விட்டார் என்றார்கள். இப்படி பலவற்றைக் கூறிய போது ரஞ்சன் தோழர்தான் “பிரபல” பத்மனாபா என உறுதிப்படுத்திக்கொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை.
எல்லாவற்றையும் மர்மக்கதை போல கேட்டு முடித்துத்ததும், நான் கண்ட பத்மநாபா குறித்த பிரதி பிமபம் வேறானது என உணரத் தொடங்கினேன்.
மத்தாளொடையில் பத்தமானாபாவை மக்கள் அறிமுகப்படுத்தும் முன்பதாக 1983 இல் தமிழ் நாட்டில் அவரைச் சந்தித்திருந்தேன். எபிக் (EPIC) அலுவலகத்தில் எஸ்.ஜி(S.G) தோழர் என்று அடைமொழியில் அழைக்கப்பட்டார். அதிகம் பேசாமல் கல்லாப்பெட்டி முதலாளி போல அவர் உட்காந்திருக்க சுரேஷ் பிரமச்சந்திரம் அவரது குரலாக ஒலிப்பார்.
ஈழத்து ‘சே’ என்று அழைக்கும் அளவிற்கு கவர்ச்சிகரமானவர். சில வேளைகளில் தாடியும் , நட்சத்திரத் தொப்பியுமாக பத்மனாபாவைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு புரட்சிக்காரன் என்று சொல்லிவிடலாம்.
மக்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனுக்கு S.M.G போல பத்மனாபாவிற்கு தாடி! நெடிய உருவத்தைக் கொண்ட அமைதியான மனிதர். என்னைப் போன்ற சிறுவர்களைக் கூட தனது தலைமையகத்திற்கு அழைத்து வரவேற்றவர்.
இந்தியாவில் அவரைச் சந்தித்த போது ரெலோ இயக்கத்தில் உள்முரண்பாட்டில் சிக்குண்டு விலகியிருந்தேன். நாளாந்தம் அவர்களது அலுவலகத்திற்கு அரசியல் பேசுவதற்காக மட்டுமல்ல பசித்த போது சாப்பிடுவதற்காகவும் செல்வது வழமை.
ஒரு நாள் என்னை அங்கு வந்தால் மாலை வரை காத்திருக்குமாறு இன்னோரு ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரிடம் கூறிவிட்டுச் சென்றிருந்தார். அவர் அங்கு வந்ததும் மோட்டார் சைக்கிளில் தன்னோடு வருமாறு அழைத்தார். அவரே அதனைச் செலுத்தினார். போகும் வழியிலேயே என்னிடம் பேசினார். அவர் தமது இரகசிய இடம் ஒன்றை எனக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் அங்கே இந்திய மார்க்சிய லெனினிய குழு தோழர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறினார்.
அரை மணி நேரப் பயணத்தின் பின்னர் நெருக்கமான வீடுகள் கொண்ட பகுதி ஒன்றைச் சென்ற்டைந்தோம். வாகனத்தை நிறுத்திவிட்டு மூன்றாவது அல்லது நான்காவது மாடிவரை சென்று தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்தார். அங்கே ஏற்கனவே அறிமுகமான சுரேஷ் பிரேமச்சந்திரனோடு ஒல்லியான நெடிய உருவம் கொண்ட தமிழ் நாட்டுத் தமிழரும் அமர்ந்திருந்தார். தாம் இந்தியாவில் வேலை செய்கின்ற மார்க்சியக் குழு என்றும் ஈழத்தில் மார்க்சிய அமைப்புக்களோடு இணைந்து வேலை செய்ய விருப்புக் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.
எனக்கு அந்த வயதில் எந்த அனுபவமும் இருந்ததில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் ஏன் உடன்பட முடியாது என்பதை நான் தெளிவாகக் கூறினேன். சுரேஷ் எதிர்வாதம் புரிய ஆரம்பித்தார். நாபா எதுவும் பேசவில்லை. ஒரு மணி நேர உரையாடலின் பின்னர். மீண்டும் நாபாவோடு மோட்டார் சைக்கிளில் எபிக் அலுவலகத்தை நோக்கிச் சென்றோம். நான் பேசியவற்றில் நியாயம் இருக்கிறது என்றும் இது குறித்து இன்னொரு நாளில் பேசவேண்டும் என்றார்.
இதற்கிடையில் ரெலோ இயக்கம் எம்மை தேட ஆரம்பித்திருந்தது. நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டோம். வேதாரணியத்திற்குப் போகவேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு நாபாவைச் சந்திக்கவில்லை. நாபா, சுரேஷ் போன்றவர்களை மறப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.
பின்னர் மத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள். பத்மாநாபாவை தமிழ் நாட்டிலிருந்து படகில் ஏறுவதற்கு முன்பதாக ஒரு முறை சந்தித்திருக்கலாம் என்று தோன்றியது அப்போதுதான்.
மத்தாளோடையில் இருந்து மட்டுமல்ல ஏனைய கிராமங்களிலிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எப் அன்னியப்பட்டிருந்தது. அவர்களின் கிராமியத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அத்தனை சீரழிவுகளையும் நியாயப்படுத்தும் பிரச்சாரக் குழுவாக மாற்றமடைந்திருந்தது.
மக்கள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தவர்கள் தலைவர்களாவிருந்த அமைப்பே இந்த மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தால் ஏனைய அமைப்புக்கள் குறித்து கற்பனை செய்தே முடிவிற்கு வந்துவிடலாம்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துக்கள் தலைமைதாங்கும் அமைப்பாகவே ஈ.பி.ஆர்.எல்.எப் உருவாகியிருந்தது.
83 இல் இந்திய அரசின் உளவுத்துறை வழங்கிய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்காக தமது பலத்தை நிறுவிக்காட்டுவதற்காக அனைத்து இயக்கங்களும் முயற்சித்தன. புலிகள் திருனெல்வேலியில் இராணுவத் தொடர்மீது தாக்குதல் நடத்தி, தமது பலம் இது தான் எனக் கூறினர். தனது பங்கிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் வெளிப்படையாக இயங்கிய எல்லா வெகுஜன அமைப்புக்களையும் ‘தமது’ என சுவரொட்டிகள் மூலம் தெரிவித்தனர்.வெளிப்படையாக வெகுஜன வேலைகளை மேற்கொண்ட பலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.
83 இற்குப் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் வெறும் ஆயுதக் குழு மட்டும் தான். அவர்கள் பேசிய அரசியல் என்பது தமது ஆயுதக் குழுவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக மட்டுமே அமைந்திருந்தது.ஈ.பி.ஆர்.எல்.எப் மார்க்சிய லெனினிய இயக்கமாக உருப்பெறுவதற்கான எல்லா அரசியல் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. ஒரு அரைப் புலிகள் இயக்கமாகவே மாறியிருந்தது. பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் ஈழத்தில் மக்கள் வேலைகளைத் தொடர்ந்தனர். அவர்கள் இந்திய அரசிற்கு எதிராகவும் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தலைமைக்கு எதிராகவும் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். புலிகள் ஈறாக எந்த “பெரிய” இயக்கத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இலிருந்த அளவிற்கு இந்திய அரசின் தலையீட்டிற்கு எதிரான உட்கட்சி முழக்கங்கள் முன்வைக்கப்படவில்லை.
வெறுமனே ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கும் எந்தக் குழுவும் அழிக்கபடும் என்பதற்கு இறுதி உதாரணம் புலிகள்என்றால் அதன் முதலாவது உதாரணங்களில் ஈ.பி.ஆர்.எல். ஐ இணைத்துக்கொள்ளலாம். 1986 இறுதிப்பகுதியில் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்டது.
புலிகளின் முகாம்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களாலும் ஆதரவாளர்களாலும் நிரம்பி வழிந்தது. முகாம்களில் மரண ஓலம் கேட்டது. பலர் ஏன் கொல்லப்படுகிறோம் என்று அறியாமலே கொல்லப்படனர். போராட வேண்டும் என்ற தியாக உணர்வோடு அனைத்தையும் துறந்து தெருவிற்கு வந்த இளைஞர்கள் தெருவோரத்தில் பிணமாக்கப்பட்டனர். யாழ்ப்பாணத் தெருக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைச் சரணடையுமாறு ஒலி பெருக்கியில் புலிகள் கட்டளையிட்டனர்.ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பெரும்பாலான உறுப்பினர்கள், தலைவர்கள், என பொதுவாக அனைவருமே புலிகளால் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். பலர் ஏன் செத்துப் போகிறோம் எனத் தெரியாமலேயே மடிந்தனர்.ஈ.பி.ஆர்.எல்.எப் இல் எஞ்சியிருந்த சிறு குழுவினரில் பெரும்பாலானவர்கள் அந்த இயக்கத்தின் பிற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள்.
அப்போது இலங்கை குண்டுத் தாக்குதல்களை நிறுத்தியிருந்தது. இந்திய அரசு தனக்கு துணைக்குழு ஒன்றை உருவாகிறது என்ற பூரிப்பில் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.
அதன் பின்னர் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இணைந்து கொண்ட அந்த இயக்கம் மத்தாளொடைக்கு மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வோடு மனிதனுக்கும் எதிரானதாக மாற்றம் பெற்றது.
வரதராஜப் பெருமாள் இலங்கை அரச தொலைக்காட்சியில் தோன்றி மக்களை மிரட்டினார். புத்தகங்களோடு பள்ளிக்குப்போன சிறுவர்களைப் பிடித்து கட்டாய இராணுவப் பயிற்சி கொடுத்து இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப்படையாக மாற்றியது பத்மநாபா தலைமை தாங்கிய இயக்கம்.
நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறினர்.
ஒரு மனிதனின் வாழ்க்கை தான் அவனது சிந்தனையைத் திர்மானிக்கும் என்பார்கள். இப்போது நாபாவின் வாழ்க்கை ஆக்கிரமிப்பு அதிகாரத்தைச் சார்ந்ததாக மாறியிருந்தது. அவரது சிந்தனை மக்கள் சார்ந்ததாக அப்போது இல்லை என்பதே உண்மை.
ஒரு கட்சியை, போராட்ட இயக்கத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்ற கேள்வியிலிருந்தே அவற்றின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. போராட்ட அமைப்பொன்று ஒழுங்கமைக்கப்பட்ட பலமான மக்களின் கண்காணிப்பில் இருக்கும் வரை தவறுகள் தவிர்க்கப்படும். அன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட நேபாளம் வரைக்கும் கட்சி தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படும் பொறிமுறையின்மையே தவறுகள் நிறுவனமயமாவதற்குக் காரணமானது.
1990 யூன் 19ம் திகதி தமிழ்நாடு, சென்னை, கோடம்பாக்கத்தில் சக்காரியா காலனி இல் புலிகளால் ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் சிலரோடு கொல்லப்பட்டார். நாபா எனக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் இரகசிய வீட்டில் வைத்தே ஒன்று கூடல் ஒன்றின் போது ஏனைய உறுப்பினர்களோடு சேர்த்துக் கொல்லப்பட்டார்.
மத்தாளோடையில் கிராமத்தவர்கள் விபரித்த ரஞ்சன் தோழராக அன்றி வெறும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இந்திய இராணுவத்தின் துணைகுழுவின் தலைவராக அவர் இறந்துபோனார். இந்திய இராணுவத்தின் சூழ் நிலைக் கைதியாக பத்மநாபா போன்ற நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் மாற்றியிருந்தனர். எது எவ்வாறாயினும் தனது லண்டன் வாழ்வைத் துறந்து மக்களுக்காகப் போராட என்று ஆரம்பித்த முன்னைய சமூகப்பற்றுள்ள போராளியின் மரணமும் மாற்றங்களும் வலி மிகுந்தவை.
தொடர்புடைய பதிவுகள்: