மேற்கு நாடுகளில், வன்முறை குறித்து அதிகமாகப் பேசப்படாத நோர்வேயில் இத்தாக்குதல் ஒரு குறித்த அரசியல் பின்னணியின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிற்கும் மார்க்சிசத்திற்கும் குறிவைக்கப்பட்டதாக தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே இந்து அடிப்படை வாதிகளும், இனவாதிகளும் முன்வைக்கின்ற அதே சுலோகங்கள் இன்னும் ஒரு முறை பதியப்பட்டது. இந்து அடிப்படை வாதிகள் சாரிசாரியாக மக்களைக் கொன்று போட்டுவிட்டு கூறிய அதே நியாய தர்மங்களின் பின்னர் தெற்காசிய அரசியல் கட்சிகள் நடந்துகொண்ட அதே வகையில் தான் நோர்வேஜியக் கட்சிகளும் செயற்பட்டன.
Anders Behring Breivik என்ற தனி மனிதனை உருவாக்கிய சமூகப் புறச் சூழல் ஐரோப்பா எங்கும் உருவாகி வருவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்தப் பகைப் புலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகளில் மீளவும் நடைபெற வாய்ப்புகள் உண்டா? இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் யார் என்ற வினாக்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் விடைகளையே தரவல்லன.
ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடிக்கும் இராணுவமயமாக்கலுக்கும்(relationship between economic crisis and the militarization) இடையாயான உறவு குறித்த விசாரணையிலிருந்து சில விடயங்கள் தெளிவாகலாம்.
உலகின் மிகப்பெரும் பொருளாதார இராணுவ வல்லரசான அமரிக்காவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதன் சாராம்சம் அமரிக்கா தனது கடன் எல்லையான 14.3 ரில்லியன் டாலர்களை உயர்த்தாவிடின் நாடு திவாலாகிப் போகும் என்பது தான் அது. ஐரோப்பியக் கூட்டமைப்பு இனிமேலும் நிலை பெற முடியுமா என்ற நிலை உருவாகிவிட்டதாக பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கிரேக்கத்தை மறுபடி தூக்கி நிறுத்துவதற்கு இன்னும் மூன்றாவது தடவையாகப் பண உதவி வழங்கப்பட்டுள்ளது. போத்துக்கல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஜூன் மாதத்தில் 80 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை அடைந்துவிட்டன. இந்த நாடுகளை மீட்பதற்கான வலு தம்மிடம் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே கையை விரித்துவிட்டது.
பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதை விட அதிகமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இன்னும் ஐந்து வருடங்களுக்கு உள்ளாக இத்தகைய நெருக்கடி இந்த மூன்று நாடுகளிலும் உருவாகும் என பொதுவாக எதிர்வு கூறப்பட்டாலும் கால எல்லை குறித்த பல முரண்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதற்காகவும் தமது நாடுகள் சரிந்து விழுவதைத் தவிர்ப்பதற்காகவும் மூன்று பிரதான திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. சர்வதேச வங்கிகளிடையேன ஒத்துழைப்பு.
2. எண்ணை மற்றும் கனிம வழங்களைக் கொண்ட நாடுகளைச் ஆகிரமித்தலும் சுரண்டுதலும்.
3. மேற்கு நாடுகளின் உள்ளே மக்களுக்கான சமூக உதவித் திட்டங்களை அழித்தல்.
இவற்றிற்கான அரசியல் ஒழுங்கு பல சிக்கலான சமூகப் பொறிமுறைகளைக் கொண்டதாக இயங்குகிறது. இந்தச் சமூகப் பொறிமுறைகளின் தொகுப்பே புதிய உலக ஒழுங்கு என அழைக்கப்படுகின்றது.
இந்த மூன்று திட்டங்களில் முதல் இரண்டும் நீண்டகால நோக்குடையவையும் பல நிகழ்ச்சித் திட்டங்களூடான நீண்ட நடவடிக்கைகளும் ஆகும். இதற்கான செயல்வடிவங்களாக மத்திய கிழக்கின் மீதான ஆக்கிரமிப்பு, இந்திய பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல நிகழ்வுகளைக் காணலாம்.
ஏகபோக அரசுகள் தமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் மூன்றாமுலக நாடுகளின் தரத்த்திற்குக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்கின்றன. குறிப்பாக சமூக உதவித்திட்டங்கள், சுகாதார சேவை, ஓய்வூதியம் போன்றன கேள்விக்குள்ளாக்கப்படுகின்ற அதே வேளை வரித் தொகை, வாழ்க்கைச் செலவு போன்றன எதிர்பாராத வகையில் அதிகரிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக வேலையற்றோர் தொகை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இவற்றிற்கான அடிப்படைக் காரணமாக உலகப் பொருளாதார நெருக்கடி முன்வைக்கப்பட்டுகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணமே உலக முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சி என்பது கூறப்படுவதில்லை. உலக முதலாளித்துவம் மாறாக உலக முதலாளித்துவமோ, மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்ற பணத்தை எவ்வாறு உறிஞ்சுவது என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.
1. மூன்றாம் உலக நாடுகளின் மூலவளங்களைச் சுரண்டுதல்.
2. மூன்றாம் உலக நாடுகள் உழைப்பு மூலதனத்தைச் சுரண்டுதல்.
3. தமது நாடுகளில் வரி கொடாமை.
இவற்றின் வழியாக அளவிற்கு அதிகமாகப் பணக் குவிப்பை மேற்கொண்டுள்ள உலக முதலாளித்துவமே பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணமாகும்.
தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ(CISCO) 7 மில்லியன் வரியை எவ்வாறு கொள்ளையடித்தது என்பது குறிப்பிடத்தக்க உதாரணம். தனது உப அலுவலகங்களை சுவிட்சிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிற்கு மாற்றியதனூடாகக் கடந்த 2009 – 2010 ஆம் ஆண்டுகளில் 7 மில்லியன் வரிப்பணத்தைச் செலுத்தாமல் தக்கவைத்துள்ளது. அதே வேளை அமரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 2.9 மில்லியன் தொழில்கள் வெளி நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளன. பிரான்சிலும் பிரித்தானியாவிலும் 1.9 மில்லியன் தொழில் வாய்ப்புக்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளை இந்த நாடுகளில் எல்லாம் உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு என மக்களிடமிருந்து வரிப்பணம் அறவிடப்படுகிறது. ஏழ்மையும், வேலையின்மையும் இந்த நாடுகளின் இருப்பையே கேள்விகுள்ளாக்கியிருக்கின்றது, இன்னும் ஐந்தாண்டுகளுக்குள்ளாக இந்த நாடுகளின் தற்போதைய வாழ்க்கைத் தரம் தலை கீழாக மாறிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. இவற்றீற்கெல்லாம் எதிரான அரசியல் உறுதியானதாக இல்லாதிருப்பினும், புதிய எழுச்சிகளும் போராட்டங்களும் ஐரோப்பாவையும் அமரிக்காவையும் அச்சத்திற்கு உள்ளாக்குகின்றன..
இன்னும் குறுகிய கால எல்லைக்குள் இவ்வாறான போராட்டங்கள் புதிய எதிர்ப்பியக்கமாக வலுப்பெறும் “அபாயம்” காணப்படுவதாக அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையயம் அச்சம் தெரிவிக்கின்றது.
இதனை எதிர்கொள்வதற்காக ஐரோப்பாவையும் அமரிக்காவையும் இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.
இதன் நுளைவாசலாக உலகத்தை ஆயுத மயமாக்கலையும் உலகை சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக்குவத்ற்கும் நவீன ஏகாதிபத்திய அரசுகள் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தையும், அதனை எதிர்கொள்ள சாரி சாரியான மனிதப் படுகொலைகளையும் தீர்வாக முன்வைத்தன. இவ்வாறான மனிதப் படுகொலைகள் சமூக அங்கீகாரமாகவும் சமூகத்தின் பொதுப் புத்தியாகவும் மாற்றப்பட்டது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவிகள் சாரி சாரியாகக் கொல்லப்படும் போது, ஏகபோகங்களின் படைகள் இரத்தக்குளிப்பு நடத்தும் போது மேற்கின் ஊடகங்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. அதே வேளை மேற்கின் இராணுவம் தாக்குதலில் கொல்லப்பட்டால் தேசத்திற்காக உயிரிழந்த மா வீரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.
நோர்வேயில் கொலை நிகழ்ந்த அதே நாள் இன்னொரு நாள் போன்று ஆப்கானில் விடிந்தது. ஐந்து அப்பாவிக் குழந்ததைகள் நேட்டோ படைகளின் குண்டுகளால் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.
ஆக, கடந்த தசாப்தம் உருவாக்கிய உலகன் பொதுச் சிந்தனையின், பயங்கரவாததிற்கு எதிரான யுத்தம் என்ற முழக்கத்தின் இன்னொரு பிரதினிதி நோர்வே கொலையாளி. அதன் மற்றொரு பிரதினிதி ராஜபக்சவும் கூட.
நோர்வே வின் கொலைகாரன் இந்த நாடுகள் தாம் ஆக்கிரமிக்கும் நாடுகளின் நடத்துகின்ற அதே கொலைகளை அதே சுலோகங்களோடு உள்நாட்டிலேயே நடத்தி முடித்துள்ளான்.
இரண்டிற்கும் அடிப்படையில் சித்தாந்தப் பின்னணி ஒன்றுதான். மார்க்சியத்திற்கும் இஸ்லாமிற்கும் எதிரான ஜனநாயக யுத்தம் என்பதுவே இரண்டும். இவை இரண்டையும் இணைத்து ஏகாதிபத்தியங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என அழகிய தலையங்கத்தை வழங்கியுள்ளன.
இலங்கையில் பேரினவாதிகளும், அவற்றின் பிரதிநிதிகளும், ராஜபக்ச குடும்பத்தினரும் வன்னியில் நடத்திய தர்பார், கோரக் கொலைகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றே பெயரிடுகின்றனர்.
மேற்கு தனது நலன்களுக்காக உருவாக்கிய மனிதம் மரத்துப் போன, கொலைகளை அங்கீகரிக்கும் பொதுப் புத்தி இன்னும் ஆயிரம் கொலைகளை கட்டவிழ்க்கும். லண்டனின் நடந்த நிறவாதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறும் நோர்வே கொலைகாரனின் கூற்று ஐரோப்பியத் தொழிலாளர்களை, வேற்று நாட்டவரை எச்சரிக்கின்றது.
Anders Behring Breivik ஐயும் அவனின் மனிதத் தன்மையை மரத்துப் போகச் செய்த மேற்கின் அரசுகளும், ஊடகங்களும் இன்னும் நிறுத்தியாகவில்லை. பிரித்தானிய தொழில்கள் பிரித்தானியர்களுக்கே என்று மீண்டும் ஒரு முறை மிடுக்கோடு கூறியிருக்கிறார் பிரித்தானியத் தொழிலமைச்சர். மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுகின்ற தமது கோழைத்தனத்தை அவர்கள் எப்போதும் பேசியதில்லை.
மேற்கின் அரசுகளை ஆட்டம்க்காணச் செய்யும் அரச எதிர்ப்புப் போராட்டங்களைத் திசைதிருப்புவதற்கு நோர்வேயின் கொலைகாரன் எவ்வாறு அவசியமாகின்றானோ அவ்வாறே மூன்றாமுலக நாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்ததை முன்னெடுக்க ராஜபக்ச போன்றோர் அவசியமாகின்றனர்.
உலக முதலாளித்துவம் உருவாக்க முனையும் புதிய உலக ஒழுங்கின் மரத்துப் போன சிந்தனை முறைகளைம் மீறி மக்களின் போராட்டம் உலகின் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம். இங்கு இறுதித் தீர்மானத்தை பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களே மேற்கொள்வர்.