மனித குலத்தின் சிறு பான்மை சொத்துக்களை உரிமையாக வைத்துக்கொள்ள அதன் பெரும்பான்மை சிறுபான்மைக்காக உழைக்கின்ற நிலை உருவாகிறது. மனித குல வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும்பான்மை சிறுபான்மைக்கு எதிராகப் போராடி வெற்று பெற்றிருக்கின்றது. இவ்வாறு வெற்றி பெறுகின்ற ஒவ்வொடு கட்டத்திலும் புதிய சமூக அமைப்புக்கள் உருவாகின்றது. இவ்வாறான போராட்டங்களின் விளைவாக நில உடமையாளர்கள் அதிகாரம் செலுத்திய சமூக அமைப்பிற்கு எதிராக உருவானதே நாம் வாழுகின்ற முதலாளித்துவ சமூகத்தின் ஆரம்பம்.
ஒவ்வோர் தடவையும் முதலாளித்துவ சமூகங்கள் நிலைகொள்ள முடியாமல் போகின்ற போது அது மறு சீரமைக்கப்படுகின்றது. மறு ஒழுங்கமைக்கப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வோர் தடைவையும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையானது இன்று மீள முடியாத நெருக்கடிக்குள் வந்து சேர்ந்திருக்கின்றது.இனிமேல் புதிய உலக ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்த முடியாத அளவிற்கு அது அழிவுகளையும் அவ நம்பிக்கைகளையும் மனித குலத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
முதலாளித்துவம் முதலில் முளைவிட்ட நாடுகளில் பல ஏக போக அரசுகளாக மாற்றமடைந்தன. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாடுகளை ஆக்கிரமித்து அவற்றின் மூலவளங்களைச் சுரண்டி அவற்றில் வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் அழித்துச் சிதைத்தன.
நாடுகளைத் தொடர்ச்சியாகச் சுரண்டுவதற்காகவும் அவற்றைத் தமது தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பிளவுகளை உருவக்கின.
இவ்வாறு தம்மிடையே மோதிக்கொண்ட சுரண்டப்பட்ட வறிய நாடுகளின் மக்கள் தமது முதன்மையான எதிரியான ஏகாதிபத்தியங்கள்ளை மறந்து விட்டு தம்மைத் தாமே அழித்துக் கொண்டனர்.
உதாரணமாக இலங்கையைச் சுரண்டும் நோக்கோடு அங்கிருந்த மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியது பிரித்தானிய ஏகாதிபத்தியம்.
பாளி மொழியில் ஆங்காங்கே காணப்பட்ட மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகளை பிரித்தானி அரசாங்கம் சிங்களத்தில் மொழிபெயர்த்தது. அவ்வாறு மொழிபெயர்ப்பதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த இரண்டு பௌத்த மதகுருக்களை நியமித்தது. மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகள் சிங்களப் பகுதியிலிருந்த விகாரைகளுக்கு விநியோகம் செய்யபட்டது.
இதே வேளை ஹெலேனா பிளவாற்ஸ்கி போன்ற மனித விரோத நிறவாதச் சிந்தனை கொண்டவர்களூடாக சிங்கள பௌத்த சிந்தனை வளர்க்கப்பட்டது. சிங்கள பௌத்ததின் தேசியத் தந்தை என அழைக்கப்படும் அனகாரிக தர்மபால என்பவர் பிளவாற்ஸ்சி உருவாக்கிய தியோசோபிகல் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் அடையாறில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற பின்னர் இலங்கை சென்ற அனகாரிக அங்கே முதலில் தமிழர்களுக்கு எதிராகவும் குறிப்பாகத் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் தனது இனவாத நஞ்சைப் பரப்ப ஆரம்பித்தார். பௌத்தம், ஆரியத் தூய்மைவாதம், சிங்களம் என்ற சுலோகங்களின் அடிப்படையில் சிங்கள -பௌத்த பெருந்தேசிய வாதத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்தார்.
தாம் ஒன்று சேராவிட்டால் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களால் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற பய உணர்வைச் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இன்று வரைக்கும் இதுவே இலங்கை அரசியலில் சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான போராட்டங்களை சிதைக்கும் ஆயுதமாகவும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகவும் பயன்படுகின்றது.
மறுபுறத்தில் ஆறுமுக நாவலர் போன்ற சாதி வெறிகொண்டவர்களின் ஊடாக தமிழ் இனவாதம் உருவாக்கப்பட்டது. இனவாதம் ஒரு புறத்திலும் பெருந்தேசியவாதம் மறுபுறத்திலுமாக ஒன்றை மற்றொன்று வளர்க்க அதன் அழிவில் உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இலங்கையைச் சிதைத்துச் சீரழித்துக்கொண்டிருகின்றன.
இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்திய முரண்பாடுகள் இன்று வரை அவர்களது நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்காக குறித்த நாடு ஒன்று திட்டமிட்டுச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் போது, அந்த நாட்டில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசிய உணர்வு உருவாகிறது. இவ்வாறான உணர்வைச் சிதைப்பதற்காக ஏகாதிபத்தியங்கள் பெருந்தேசிய இனத்தைச் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகத் திசை திருப்பி மோதலை உருவாக்குகின்ற போக்கு காலனி ஆதிக்கத்தின் பின்னான காலப்பகுதி முழுவதும் ஏகாதிபத்தியங்களின் தந்திரோபாயமாக அமைந்திருக்கின்றது.
அன்னியத் தலையீடற்ற நாடுகளில் தேசிய இனங்களிடையே மோதல் என்பது இருக்காது என்பது மட்டுமல்ல தேசிய இனங்கள் காலப்போக்கில் ஒருங்கிணைந்து ஒரே தேசிய இனமாக உருவாகிவிடுகின்றது. பிரான்சில் 50 வீதமானவர்கள் மட்டுமே உபயோகப்படுத்திய கோலுவா என்ற மொழியும் பிரஞ்சு மொழியாக மாற்றமடைந்து பிரான்ச் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட நாடாக மாற்றமடைந்ததும் இவ்வாறே. பொதுவாக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறே ஒரு தேசிய இனத்தைக் கொண்ட நாடுகளாக மாற்றமடைந்தன. இவ்வாறான நாடுகளில் சுரண்டும் சிறுபான்மையினருக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மையினருக்கும் இடையேயான முரண்பாடே பிரதான முரண்பாடாக இருந்து வந்திருக்கின்றது.
வறிய நாடுகளான மூன்றாம் உலக நாடுகளில் வர்க்கங்களிடையேயான முரண்பாடு உருவாகிப் உள்னாட்டு ஆதிக்க அரசுகளுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களுகு எதிராகவும் மாற்றமடைந்த வேளையில் தான் தேசிய இனங்களிடையேயான முரண்பாடு திட்டமிட்டு உருவாக்கபட்டது. வர்க்க முரண்பாடு மழுங்கடிக்கப்பட்டது. அனைத்துத் தேசிய இனங்களிடையேயும் தேசிய உணர்வு உருவானது. தேசிய உணர்வானது அடிப்படையில் வர்க்க உணர்வை மழுங்கச் செய்ய்யும். தேசிய முரண்பாட்டையும் அதனூடாகத் தேசிய உணர்வையும் உருவாக்கிய அதிகார வர்க்கம் அதனூடாக வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்தது. அதிகார வர்க்கம் அடிப்படையில் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.
ஒரு குறித்த பிரதேசத்தைச் சார்ந்த மக்கள் தமக்குக் குறிப்பான அடையாளத்தைத் திட்டமிட்டு அழிக்க முற்படுகின்ற அதிகாரத்திற்கு எதிராக ஒன்றிணைகின்ற போதே தேசியம் என்ற கருத்து மூன்றாம் உலக நாடுகளில் வலுப்பெறுகிறது.
அதே வேளை பெருந்தேசிய ஒடுக்கு முறையையும் தேசிய உனர்வையும் வர்க்க உணர்வை மழுங்கடித்துத் தமக்கு ஏற்ற ஆட்சியை உருவாக்குவதற்கு உரிய கருவியாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற அடிப்படை உண்மையை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் உணரும் போது மட்டுமே ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சரியான பாதையில் திட்டமிட முடியும். தவறின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்கள் சுரண்டலுக்கான கருவியாகப் பயன்பட்டு இறுதியில் அழிந்துவிடும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களின் கபட நாடகங்களைப் புரிந்துகொள்ளாத ஒரு பிரிவும் அதனைப் புரிந்தே கொண்டே சமூக விரோதக் கருத்துக்கள் ஊடாக மக்களை நச்சூட்டுகின்ற இன்னொரு பிரிவும் தமது எதிரிகளிடமே தமது தலைவிதியை ஒப்படைக்கின்ற துயரம் சூழந்த சூழலைக் காண்கின்றோம்.
இந்தியா,சீனா,ஐரோப்பா, அமரிகா என்ற இனவழிப்பின் பின்னணியில் செயற்படுகின்ற ஒவ்வோர் அரசுகளதும் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்வது போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான முதல் அடிப்படையாகும்.
சுவீடன் தொழிலாளர்களின் அரசிற்கு எதிரான போராட்டமே நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து செல்வதை விரைபடுத்தியது.
அறுபது வருடங்களுக்கு மேலாக ஏகாதிபத்தியங்களாலும் அதன் உள்ளூர்
அடிவருடிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் இலங்கையின் சிங்கள மக்களின் பெரும்பகுதி, தமிழ் மக்களைப் போன்றே தம்மீதான ஒடுக்கு முறையின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொண்டதில்லை. ஏகாதிபத்தியங்களே அவர்களின் பிரதான எதிரி என்பதை உணர்த்துவதற்கு முப்பது வருடப் போராட்ட அனுபவத்தை உள்வாங்கிக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருக்கும் முன்னணி சக்திகளுக்கு மலையை கிளப்பும் வேலையல்ல.
வன்னிப் படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கையில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை போன்றன சிங்கள மக்களையும் ஒடுக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நிலையை உருவாக்குவது மக்கள் பற்றுள்ளவர்கள் உடனடி வேலைத் திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக இனவாதத்தை விதைக்கும் செயற்பாடானது ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் எம்மை உள்நுளைத்துக் கொள்வது போன்றதாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதாகும். அவர்களின் சுரண்டலுக்கான வெளியை மேலும் விரிவடையச் செய்வதாகும். இவை அனைத்திற்கு அப்பால் ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்க்தும் திறன்கொண்ட அனைத்து இலங்கை மக்களையும் இணைத்து தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலையைப் போரை புதிய வழிகளில் முன்னெடுப்பது இன்றைய எமது அவசரத் தேவையாகும். இதன் மறுபக்கம் உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் இணைவிலிருந்து ஆரம்பமாகும்.