Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித்

1.

இலங்கை அரசியல் பின்புலம்

60 ஆண்டு இலங்கை அரச பேரினவாத அரசியல், 70 களின் பின்னர் அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறை என்ற தளத்திலிருந்து நேரடியான அரச இயந்திரத்தின் வன்முறையாக வளர்ச்சியடைந்தது. உறுதியான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்துத் திட்டமிடப்ப்படாத தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் அரச வன்முறையை எதிர்கொள்ளும் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உருவாக்கியது. 80களில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்டது. ஆயுதப் போரட்ட்த்திற்கான சமூக அங்கீகாரமும் தேவையும் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.

80 களின் சமூகப் புறச் சூழல் போராட்டத்தின் தேவையை எவ்வாறு உருவாக்கியதோ, அதனிலும் அதிகமாக இன்றைய அரசியல் போராடத்தைக் கோரி நிற்கிறது.

முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையின் பின்னர், இலங்கை அரச பாசிசம் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை நிகழ்த்துவருகிறது. சிங்கள – பௌத்த மயமாக்கல், பிரதேச ஆக்கிரமிப்பு, கலாச்சாரச் சீரழிப்பு, பேச்சுரிமை மறுப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் படுகொலைகள் என்ற ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் சிறீ லங்கா அரச பேரினவாதம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் பின்பலமும், சர்வதேச அரசுகளின் மௌனமும், ஐக்கிய நாடுகளின் கண்துடைப்பும் இலங்கை அரச பாசிசத்தை எதிர்கொள்வதற்கான உறுதியான எதிர்ப்பியக்கத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இவ்வாறான எதிர்ப்பியக்கம் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் இலங்கை அரசு அழித்து வருகிறது. உளவியல் யுத்தம், இராணுவ விஸ்தரிப்பு என்ற அனைத்து அடக்குமுறை எல்லைகளையும் விரிவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலுள் பல தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 2

 மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கு

பல மாதங்களாக மகிந்த ராஜபக்சவோ அன்றி இலங்கை அரச சார் பிரதிநிதிகளோ பிரித்தானியாவிற்கு வந்தால் பிரித்தானிய சட்டவிதிகளுக்கு உட்படக்கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான வழக்கு முறையீட்டை நீதிமன்றத்தில் மேற்கொள்வதாக புலி சார் அமைப்புக்கள் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வந்திறங்கியதும் இதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று அவர்களிடம் பலர் கேள்வியெழுப்பினர். இது குறித்துக் கேள்வியெழுப்பிய ஒருவர் புலிகளின் அரசியல் வழிமுறை மீது நீண்டகாலமாகத் தீவிர விமர்சனத்தை முன்வைப்பவர்.

நவம்பர் 29ம் திகதி நடந்த உரையாடலில் புலிசார் அமைப்புக்களைச் சார்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

1. வழக்குரைஞர்களுக்கான செலவுகளுக்குப் போதிய பணமில்லை.

2. பல வழக்குரைஞர்கள் போர்க்குற்ற வழக்கினால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

3. போதிய கால அவகாசமில்லை.

4. ஏனைய பல உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை.

 புலிசார் அமைப்புக்களைச் சார்ந்த சிலர் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

நவம்பர் 30ம் திகதி இவ்வமைப்புக்கள் சார்ந்த ஒருவருடன் நிகழ்ந்த உரையாடலில் வழக்கைப் புலிசார் அமைப்புக்கள் தாக்கல் செய்யாவிடின் தாம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக அம்முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அதே புலிசாராதவர் தெரிவித்திருக்கிறார். அதற்கு நாம் இது குறித்து உரையாடிக்கொண்டிருக்கிறோம் மறு நாள் பதில் தருவதாகக் கூறியிருக்கிறார். தவிர, போர்க்குற்ற வழக்கை புலிசாராத அமைப்புக்களும் மேற்கொள்ள முயற்சிப்பதாக ஏனையோருக்குத் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

டிசம்ப்பர் 1ம் திகதி மதியமாளவில் பிரிஎப் உம் அதன் நட்பு அமைப்புக்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகத் பிரிஎப் அமைப்பினைச் சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் புலிகளின் அரசியல்  வழிமுறை மீது விமர்சனம் கொண்டவர்களின் முயற்சி கைவிடப்பட பிரிஎப், ஜீரிஎப் ஆகியன நடவடிக்கைகளை கையிலெடுத்துக்கொண்டன.

இறுதியாக மகிந்தவும் அவரோடு பிரித்தானியா வந்திருந்த குழுவினரும் நாடு திரும்பிய பின்னரே வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஆக, வேறு சிலரும் வழக்குப் பதிவுசெய்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தான் புலி சார் அமைப்புக்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.

குறிப்பு : மேற்குறித்த சம்பவம் “உரிமை கோரலாக” அன்றி புலிசார் அமைப்புக்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பின்னணியிலேயே முன்வைக்கப்படுகிறது.

3

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்

இனச்சுத்திகரிபையும், இனவழிப்பையும் திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற இலங்கை அரசு இலங்கையில் தொடர்ச்சியான மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளளது. ஈழத் தமிழர்களது குரல் இலங்கையில் முற்றாக நசுக்கப்படுகின்ற நிலையில் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் எழக்க் கூடிய எதிர்ப்பியக்கங்களையும், போராட்டங்களையும் கையாள்வதே இலங்கை இந்திய அரசுகளின் இன்றைய உடனடித் தேவையாக அமைந்துள்ளது. பிரித்தானிய, கனேடியத் தனியார் நிறுவனங்களுக்கு மில்லியன்களை வழங்கி வாடகைக்கு அமர்த்தி கொண்ட இலங்கை அரசின் நடவடிக்கை இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது.

இந்த வகையில் மூன்று பிரதான செயற்பாட்டுத் தளங்களில் இலங்கை அரசின் நாடு கடந்த நடவடிக்கைகளை அவதானிக்கலாம்.

1. புலியெதிர்ப்பாளர்களைக் கையாள்தல்.

2. புலிகளின் வலையமைப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளல்.

3. அரச எதிர்ப்பாளர்களுக்கு இவ்விரு பகுதியினரூடாகவும், சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட நிறுனவங்களூடாகவும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்குதல்.

புலியெதிர்ப்பாளர்களைக் கையாள்தல் என்ற வகையில், பிரதானமாக ஐந்து வேறு கூறுகளாக இவை நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

1. அரச எதிர்ப்பாளர்கள் மீதான திட்டமிட்ட அவதூறுகள்.

2. புலிகளின் புலம்பெயர் வலையமைப்பைப் பயன்படுத்தல்.

3. அபிவிருத்தி, மறுவாழ்வு, ஜனநாயக மீட்ட்பு என்ற தலையங்கத்தில் உரிமைகான போராட்டத்தை மறுத்தல்.

4. புலிகள் அல்லது புலிகளின் இருப்பு குறித்த பய உணர்வை புலி எதிர்ப்பாளர்கள் மத்தியில் உருவாக்குதலும் அவர்களை அரச சார்பான தளத்திற்கு உள்வாங்குதலும்.

5. அழிவுகளை முன்வைத்துப் போராட்டத்திற்கான நியாத்தை மறுத்தல்.

4

புலிகளின் புலம்பெயர் வலையமைப்பைப் பயன்படுத்தல்.

 

இலங்கை அரசாங்கம் புலிகளின் புலம் பெயர் வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளல் என்பது சிக்கலான ஒன்றல்ல. உணர்ச்சியையும் அதன்வழியே உருவான சுலோகங்களையும், தனிமனித விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டே புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச அரசியல் நோக்கங்களும் வழிமுறைகளும் கூட முன்வைக்கப்படாத நிலையில் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இலங்கை அரசின் உளவு வலைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்குண்டிருப்பவர்களுள் புலி சார் அமைப்புக்களும் ஆதரவாளர்களுமே அதிகம்.

மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு விவகாரம் இவர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கான சிறிய உதாரணம் மட்டுமே.
கே.பியை இலங்கை அரசு விலைக்கு வாங்கிக்கொண்ட காலகட்டம் குறித்து ஊகங்கள் மட்டுமே நிலவுகின்றன. ஆனால் முள்ளிவாய்க்கால் தோல்விக்குப் பின்னதாக நூற்றுக்கனக்கில் புலிகள் அமைப்பிலிருந்து அரச உளவாளிகள் உருவாகியுள்ளனர்.
புலிகள் என்ற சிந்தனை முறைக்குள் உள்ளடங்குவதற்கான சில வரைமுறைகள் உள்ளன.

1. பிரபாகரனைக் கடவுளாக மதிப்பது.

2. தவறுகளை விமர்சித்தலோ புதிய வழிமுறைகள் குறித்துப் பேசுதலோ குற்றம்.

3. புலிகள் இலச்சனை, கொடி, இறந்த போராளிகள் ஆகிவற்றை வழிபடுவது.

மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு சென்ற போது அங்கு வழக்குத் தாக்கல் செய்யவெண்டும் என்பதில் தீவிர முனைப்புக்காட்டிய ஒருவர் புலிகளின் கடந்தகாலத் தவறை விமர்சித்த காரணத்தால் அதிர்வு என்ற அவர்களது இணையம் அவரைத் துரோகியாகச் சித்தரித்துக் கட்டுரை வரைந்திருந்தது.
தேசியத் தலைவர், புலி, புலிக்கொடி என்ற தலையங்கத்தில் “துரோகிகள்” குறித்துப் பேசும் அதிர்வு போன்ற புலிசார் இணையங்களை கூர்ந்து அவதானித்தால் அவர்கள் அரச ஆதரவாளர்கள் குறித்துப் பேசுவதில்லை. இவர்களில் பலர் புலம்பெயர் நாடுகள் எங்கும் பரந்து விரிகின்ற அரச உளவாளிகள் குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.

புலிகளுக்கு வெளியில் இலங்கை அரசிற்கு எதிராக குரல்கொடுக்கும், செயற்படும் சமூக அக்கறை உள்லவர்களைத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இவர்கள், சிதைந்து போன உரிமைப்போராட்டத்தை முற்றாக அழிப்பதற்குத் துணை போகிறார்கள்.

அதிர்வின் கட்டுரை சொல்லும் செய்தி என்ன? இலங்கை அரச எதிர்ப்பு ஆதரவு என்பதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டல்ல. புலிகளையும் பிரபாகரனையும் ஆதரித்தால் நீங்கள் தியாகி; அன்றேல் துரோகி.

இந்தச் சிந்தனையைத் தான் இலங்கை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. புலிகளின் புலம் பெயர் வலையமைப்புக்களுக்கு இருக்கும் ஆட்பலம், பணபலம் என்பன உலகம் முழுவதும் இலங்கை அரச இனப்படுகொலையை உலகம் முழுவது தீவிர பிரச்சாரத்திற்கு உட்படுத்த பயன்பட முடியும். ஐக்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்குகும் போராட்டங்களை நிகழ்த்த முடியும்.

வன்னிப் படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னரும் பிரபாகரன் வாழ்கிறாரா இல்லையா என்ற என்ற மூடத்தனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இவர்களின் வியாபார நலன், படுகொலைகள் குறித்த முழுமையான ஆவணம் ஒன்றைத் தயாரிபதற்குக் கூட இடம் கொடுக்கவில்லை.

ஆரம்பத்தில் போர்க்குற்றங்கள் குறித்தும் படுகொலைகள் குறித்தும் கண்டனம் தெரிவித்த ஆயிரக்கணக்கான மனித உரிமைவாதிகளிடமிருந்தும், ஜனநாயாக சக்திகளிடமிருந்தும் கூட இவர்கள் அன்னியப்பட்டுள்ளனர்.

5.

என்ன செய்யவேண்டும்?

80 களில் போராட்டம் என்பது இலங்கை இந்திய அரசுகளைப் பிரதான எதிரியாகக் கொண்டதாக அமைந்திருந்தது. இன்றோ அதே போராட்டம் எதிர் கொள்ள வேண்டிய மற்றொரு பகுதி மில்லியன்களை தமது உடமையாக்கிக்கொண்ட புலிகளின் வலையமைப்புக்குள்ளிருந்து அரச ஆதரவாளர்களாக மாறிவரும் மாபியா அழிவு சக்திகள்.

புலிகள் மீண்டும் மீட்சிபெறுகிறார்கள் என்று இலங்கை அரசு வதந்திகளைப் பரப்பிவருகிறது. இதனை ஆதராமாகக் கொண்டு தமிழ்ப் பிரதேசங்களை யுத்தகளம் போல இராணுவ மற்றும் உளவுத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தியுள்ளது.

சில நாட்களில் சரத் பொன்சேகா சார்பான இராணுவத்தினர் மீது புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட அரச ஆதரவாளர்களை வைத்தே தாக்குதல் தொடுத்துவிட்டு, புலிகள் தான் அதனை மேற்கொண்ட்டார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளும் போது புலம் பெயர் புலியமைப்புக்களின் அரச கூறுகள் அத்தாக்குதலை காட்டியே பணம் வசூலித்து இலங்கை அரசோடு பகிர்ந்து கொண்டாலும் வியப்படைவதற்கில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் இவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு முன்னறிவிப்போ என அஞ்சத் தோன்றுகிறது.

“தேசியத் தலைவர்”க் கடவுளாக உருவகித்துக்கொண்டே இலங்கை அரசு தனது அதிகாரத்தையும் அழிப்பையும் தீவிரப்படுத்திவருகிறது. புலிகளைக் காட்டியே தனது இருப்பை நிலை நாட்டிக்கொள்கிறது. இதற்கு எதிரான அரசியலுக்குப் ஈழப் பிரச்சனையில் சமூகப் பற்றோடு அக்கறை கொண்டவர்களைத் தயார்படுத்துவதே இன்று எமக்கு முன்னாலுள்ள கடமை. இது இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை அரச பாசிசத்தின் மறைமுக அரசியலை இனம் கண்டுகொள்வதற்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்,

1. இலங்கை அரசிற்கு எதிரான செயற்திட்டம் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது தேசியத் தலைவர், புலிகளின் தாகம் போன்ற வெற்று முழக்கங்கள் முன்வைக்கப்படுகிறதா என்று பிரித்தறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

2. இலங்கை அரசிற்கு எதிரான தேசிய ஜனநாயக சக்திகளைப் புலிகளை முன்வைத்துப் பிளவுபடுத்தும் செயற்பாடு குறித்த எதிர்ப்  பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. இலங்கை இந்திய அரச பாசிசங்களுக்கு எதிரான சக்திகள் புலிகள் என்ற அடையாளத்திற்கு அப்பால் மக்கள் சார்ந்த ஒன்றிணைய வேண்டும்.

இவைகள் புதிய மக்கள் பற்றுள்ள ஜனநாயக முன்னணிக்கான அடிப்படைகளாக அமையும். இலங்கை அரசின் பயன்பாட்டிற்கு வழிகோலும் புலிகளின் சிந்தனை முறையைத் தகர்ப்பதற்கான குறைந்தபட்ச அடிப்படை இதுவாக அமையலாம். மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு மனிதன் முன்னாலும் உள்ள அவசர பணியாக இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Exit mobile version