-பிரபாகரன் இன்னும் உயிருடன்
வாழ்கிறார் என்று தமிழ்நாட்டின் சந்த்தர்ப்பவாதக் கட்சிகள் தொடர் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் இந்த நேர்காணல் மீள் பதிவாதல் பொருத்தமானது என எண்ணுகிறோம்- மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது. தமது அணிசேர்க்கையினூடாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் இப் பிரச்சனையைக் கைவிட்டு அரசியல் வியாபாரப் பேரம் பேசின. இந்த நிலையில் மக்களை நம்பியிருந்த வாக்கு அரசியலுக்கு உட்படாத இடதுசாரிக் குழுக்களின் போராட்டங்கள் மட்டுமே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளையும் மீறி நடைபெற்றன. இவற்றுள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பங்கு குறித்துக் காட்டத்தக்கது. இதன் மாநிலச் செயலாளர் மருதையனின் நீண்ட நேர்காணல் ..
இனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் இப்போராட்டங்களின் எவ்வாறு பங்குவகித்தது?
கிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான நோக்கங்களுக்காக,
1. போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்
2. இது இந்திய மேலாதிக்கம் முன்னின்று நடத்தும் போர் என்பதை அம்பலப் படுத்துவதற்காகவும்,
கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரங்களும் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தியுள்ளோம்.
சென்னையில் இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னால் முதலில் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். இப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்கள் கைது செய்யப்படார்கள். இந்திய மேலாதிக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நோக்கிலேயே இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் வாயிலில் இப் போராட்டத்தை நடத்தினோம். இதே வகையான போராட்டங்கள் ஏனைய மாவட்டப் பகுதிகளிலும், குறிப்பாக திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னதாகவும், ஏனைய நகரங்களில் அரச அலுவலக வாயிலிலும் மறியல், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அனேகமாக எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
இனியொரு: முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழலில் உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?
முத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின்னர், ஓய்வடைந்த நிலையிலிருந்த போராட்டங்கள் புத்துயிர் பெறலாயின. போராட்டங்க ஓய்வடைந்த சூழலில் விரக்தி மனப்பான்மை
ஆறு மாவட்டங்களில் மாணவர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களை நடத்தினோம். சில இடங்களில் சிபி ஐ மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மற்றைய இடங்களில் ஏனய மாணவர் அமைப்புக்கள் எதுவும் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவில்லை. கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அழைத்துவந்து சாலை மறியல் செய்வது, வேலை நிறுதம் செய்வது, ஊர்வலங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.
உண்மையிலேயே முத்துக்குமார் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுத் தான் இந்த முடிவை எடுத்திருந்தார்.
போராட்ட வடிவம் என்ற முறையில் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும், ஈழத் தமிழ் ஆதரவு உணர்வு கொண்டவர்களை அணிதிரளச் செய்வதற்கு முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழல்ஒரு ஆரம்பமாக அமைந்தது.
தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், அவர் பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவளிப்பவர், அவரது மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுகிறார். இந்த சந்தர்ப்பத்தில், நாம் இதனை ஒரு கிளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தோம். திரு வெள்ளையனும் இந்தக் கருத்தில் மிகத் உறுதியுடனிருந்தார்.
மறுநாள் காலையில் அரசியற் கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் உடனடியாக அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நாமும், வெள்ளையனும் இதனை மக்கள் எழுச்சியாக, மிகப்பெரிய ஊர்வலமாகத் தயார்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதை இந்த அரசியள் கட்சித் தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள்.
இனியொரு : ஏன் இவர்கள் இவ்வாறான போக்கை எதிர்த்தார்கள்?
அங்கு மக்கள் கணிசமான அளவு கூடியிருந்தனர். அங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், நாடகங்கள், பாடல்கள் என்று கிளர்ச்சி மனோபாவம் கூடியிருந்தவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.
இவ்வாறான கிளர்ச்சிகரமான சூழ் நிலை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகிவிடும் என்று அரசியற்கட்சித் தலைவர்கள் அஞ்சினர். மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று வெளிப்படையாகவே கூறினர்.
ஆக, புலி ஆதரவாளார்களான மேற்குறித்த தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை விரும்பவில்லை என்பதையே இது சுட்டி நின்றது.
இதன் பின்னர் அரங்கத்தினுள் இந்தத் தலைவகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாமல், கூடியிருந்த மக்களிடம் அபிபிராயம் கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளையன் பின்னதாக வெளியே வந்து ஒலிவாங்கியின் முன்னால் கூடியிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார். இம்மரண ஊர்வலம் குறித்து இரண்டு கருத்துக்கள் இருப்பதாகவும், அதில் முதலாவது உடலை உடனே எடுக்கவேண்டாம், ஓரிரு நாட்கள் வைத்திருந்து மக்களைத் திரட்டிப் பின்னதாக பெரிய ஊர்வலமாக நடத்தலாம் என்று ஆரம்பித்து மற்றைய கருத்தைக் கூற ஆரம்பித்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், முதலாவது கூறியது தான் சரியான கருத்து எனச் சத்தமிட்டு மற்றக் கருத்தைச் சொல்வதற்கே இடம்வைக்கவில்லை.
அப்படியிருந்தும் இரண்டாவது கருத்தை நீங்களே கூறுங்கள் என்று திருமாவளவன் கையில் மைக்கைக் கொடுக்கிறார். அங்கு கூடியிருந்த மக்கள் திருமாவளவனைப் பேசவே அனுமதிக்கவில்லை. அதனால் தவிர்க்க முடியாமல் மக்கள் விருப்பப்படியே இறுதி ஊர்வலத்தை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டனர்.
இதன் பின்னர் திருமாவளவன், நெடுமாறன், பாண்டியன் உட்பட அனைத்துத் தலைவர்களும் அந்த இடத்திலிருந்து அகன்று விடுகிறார்கள்.
இவ்வாறு இறுதி ஊர்வலத்தை எழுச்சி மிக்கதாக நடத்தவேண்டும் என்று எமது தோழர்கள் இவர்களுடன் போராடியது ஒருபுறமிருக்க,இதற்காகப் போராடிய செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள், போன்ற பல தரப்பினர் கூடியிருந்த மக்கள் மத்தியிலிருந்தபோதும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இவர்களெல்லாம் வெளியேறிய பின்னர் இரண்டு நாட்கள் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் திரண்ட பின்னர் எழுச்சிக் குரல்களோடு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது எமது தோழர்கள் ஈழ ஆதரவு வீதி நாடகத்தை நடத்திய வண்ணம் முன்னால் சென்றனர்.
இனியொரு: மற்றைய பாராளுமன்ற வழிக் கட்சிகளும் நீங்களும் நடத்திய போராட்டங்களிடையேயான வேறுபாடு என்ன?
ம.க.இ.க மாணவர்களை அணிதிரட்டி நடத்திய போராட்டங்கள் தவிர தன்னிச்சையாகப் பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல இடங்களில், உதாரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இதற்குத் தலைமை தாங்கிய மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அரச படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களை அணிதிரட்ட முயன்ற எமது தோழர்களை போலிசார் மூர்க்கத் தனமாகத் தாக்கி, குறிப்பாக ஐந்து தோழர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வெளியே எடுப்பதற்காக வக்கீல்கள் போராட வேண்டியிருந்தது.
தவிர, வழக்குரைஞர்கள் போராட்டம் என்பது குறித்துக்
ஈழ ஆதரவுப்ப் போராட்டதை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடத்தியவர்கள் மீது போலிஸ் நடத்திய மூர்க்கமான தடியடிக்கும் ஒரு பின்புலம் உண்டு.
சிதம்பரம் கோவிலில் சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை எமது அமைப்பினூடாக நடத்தி வெற்றிகண்டிருந்தோம். இது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளாக முடியாத ஒரு காரியமாக இருந்து வந்தது. இதற்கான சட்டரீதியான உரிமையை வழக்காடி வெற்றிபெற்றோம். இவ்வுரிமைக்கான நீதிமன்ற ஆணையை இரத்துச் செய்வதற்காக, சுப்பிரமணிய சுவாமிகள் தலையிடுகிறார். இவரை சிதம்பரம் கோவிலில் விசேட பூஜைகளை மேற்கொண்டு, தீட்சகர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.
இனியொரு: இடையில் ஒரு கேள்வி, சுப்பிரமணிய சுவாமிக்கும் ஈழப்பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?
சுப்பிரமணிய சுவாமி தீவிரமான புலி எதிர்ப்பாளர் என்பது ஒருபுறமிருக்க புலிகளைக் காரணம் காட்டியே மொத்த இலங்கைத்
தமிழ் பாடுவதற்கான உரிமையை இரத்துச்செய்யக் கோரி சிதம்பரம் கோவில் தீட்சகர்கள் தாக்கல் செய்த மேன் முறையீட்டில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பிக்கவே அவர் அங்கு வந்திருந்தார். அங்குதான் அவரை வழக்குரைஞர்கள் முட்டையால் அடிக்கிறார்கள். இதனைச் செய்த வழக்குரைஞர்கள், எங்களது தோழர்கள் உள்பட, ஈழமக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள். இதற்கெதிராக நீதிபதிகள், இவ்வாறெல்லாம் நீதிமன்றத்துள் நடந்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்த போது, சுப்பிரமணிய சுவாமிகளை வெளியேறுமாறு முழக்கமிட்டார்கள் வழக்குரைஞர்கள்.
இதையொட்டிய சம்பவங்களுக்குப் பின்னரே போலிசார் தடியடிப்பிரயோகம் நடத்தி மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இச்சம்பவங்களை ஈழப் போராட்டத்தைத் திசை திருப்புவதற்கு அரசு பயன்படுத்திக் கொண்டது.
இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.
இனியொரு: அரசியல் சார்ந்த வேறுபாடு எவ்வாறு அமைந்திருந்தது?
போராட்ட வடிவங்கள் அவை எவ்வளவு போர்க்குணம் உடையதாக அமைந்திருந்தது என்பது ஒருபுறமிருக்க, போராட்டத்தின் நோக்கம், அது என்ன அரசியலை மையப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதில் எனையவர்களுக்கும் எங்களுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது.
முக்கியமாக இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்துவது, ஈழத் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பது, போரை நிறுத்துவது போன்றவற்றிற்கான அரசியலை மையப்படுத்தியே எமது போராட்டங்கள் நடந்தன. ஆனால் எனைய கட்சிகளின் கோரிக்கையானது படிப்படியாக மாற்றத்திற்கு உள்ளாவதாக அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் அவர்களின் கோரிக்கை மனிதாபிமான உதவி, இந்திய அரசின் தலையீடு, சோனியா கருணைகாட்ட வேண்டும், என்றவாறு காலத்திற்குக் காலம் மாற்றமடைவதாக அமைந்திருந்தது.
ஒருகட்டத்தில் கருணாநிதி காங்கிரசோடு கூட்டு என்ற அடிப்படையில் போராட்டத்திலிருந்து விலகிச்சென்ற சூழலில், பலர் இந்திய அரசிற்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு இந்திய அரசிற்கு எதிராகப் பேச ஆரம்பித்த போதும் கூட, தொப்புள் கொடி உறவு, நம்முடைய இனம், நமது இனம் அங்கே செத்துக்கொண்டிருக்கிறது, தமிழன் என்ற காரணத்தாலேயே இந்திய அரசு செவிமடுக்கவில்லை, இவைதான் அவர்கள் முவைத்த சுலோகங்கள்.
அதற்குப் பிறகு இவர்கள் ராஜபக்சேயினுடைய கையாட்கள், சீனாவோடு இலங்கை கூட்டுச் சேர்ந்துள்ளது, இந்தியாவின் கையைப் பலப்படுத்த தமிழர்களுக்கு உதவ வேண்டும், புலிகள் இந்தியாவின் ஆதரவாக மாறுவார்கள், என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
இனியொரு: ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட படுகொலை தமிழகத்தில் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்ததா?
இனப்படுகொலை குறித்து அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது உண்மை. ஆனால் அது தமிழகம் தழுவிய ஒரு அரசிய எழுச்சியை ஏற்படுத்தியது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.
வழக்குரைஞர்களின் போராட்டம் கூட, உதாரணமாக, சென்னையில் ஒரு எண்ணாயிரம் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், அனைவருமே இப்போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும் இதில் முன்னின்று தொடர்ச்சி கொடுத்தவர்கள் ஒரு ஐம்பது பேரளவிலேயே இருக்கும். ஏனையவர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போன்றவற்றைச் செய்திருந்தார்கள். மாணவர்களையும் கூட ஒரு முறை இருமுறைக்கு மேல் அணிதிரட்டுவதென்பது மிக க்கடினமானதாகவே இருந்தது.
இதில் கருணாநிதி அரசின் துரோகமும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஊர்வலங்களில் பங்குகொள்ளக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரித் தலைமையாசிரியர்களை மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என எச்சரித்திருந்தனர். அவர்களே சொந்தப் போறுப்பில் மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ளக் கூடாது என எச்சரித்திருந்தனர். இவ்வாறு கருணாநிதி அரசு போராட்டங்களை முடக்குவதில் தீவிரம்காட்டியது. ஆக, இவ்வாறான தடைகள் துரோகங்களுக்கு மத்தியில் இது மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்தே.
இனியொரு:ஈழ ஆதரவுப் போராட்டங்கள் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்காமைக்கான வேறு ஏதும் புறக்காரணங்கள் உள்ளனவா?
கிளிநொச்சித் தாக்குதல், அந்தத் தாக்குதல் தீவிரமடை ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. அதற்கு முன்பதாக, 2002 இலிருந்து 2006 வரை சமாதானம். அப்போது இப்பிரச்சனை குறித்து யாரும் பேசியதில்லை. போர் தொடங்கிய காலம் முதல், பத்திரிகைச் செய்திகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழப்பிரச்சனை பேசப்பட்டது. ஒரு சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை, அதற்கெதிராக நாம் போராட வேண்டும் என்பது குறித்த ஒரு தொடர்ச்சியான பிரச்சாரம், மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படுவதற்கான பிரச்சாரமும் அதற்கான பின்புலமும் இங்கு அமைந்திருக்கவில்லை.
இங்கு இருக்கக் கூடிய பிரதான கட்சிகள் இப்பிரச்சனையை குறைந்தபட்சம் பேசக்கூட இல்லை.
83 இலிருந்தே, பற்றி எரியும் போது அதைக் குறுகிய காலத்திற்கு கையிலெடுத்துக் கொள்வதென்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தன.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, அவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறையை எதிர்த்து சுயனிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நிறுத்துவது. இவ்வாறான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பது என்பது எந்தக்கட்சியிடமும் கிடையாது.
வை.கோ தனி ஈழம் தான் தீர்வு என்று பேசும் போது அவர் கூட்டு வைத்துக்கொள்ளும் ஜெயலலிதா இப்படிப் பேசினால் காஷ்மீரை பிரித்துக்கொடுக்கத் தயாரா என்று கேட்பார். ப.ம.க ராமதாஸ் தனி ஈழம் தான் தீர்வு என்றும் பேசுவார் அது இல்லை என்றும் பேசுவார். ஒரு இனத்தின் தன்னுரிமை, பிரிந்து போகும் உரிமை என்பதை இவர்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. காஷ்மீருலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களின் போது செலுத்தப்படும் இராணுவத்தின் அடக்குமுறையை ஆதரிப்பவர்கள்.
அவர்களுடைய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பது தான் அவர்களுடைய கருத்து. அந்த அடிப்படையில், இவர்களால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக ஆதரிக்கவோ அதற்கு நியாயமான பங்களிப்பை வழங்கவோ இவர்களால் முடியாது. அதிகபட்சம், தமிழர்கள் என்ற அடிப்படையில் உணர்ச்சி பூர்வமாகக் கிடைக்கக் கூடிய ஆதாயத்திற்காக அவர்கள் ஆதரவளிக்கிறார்கள்.
இனியொரு: ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மத்தியில் உண்டா?
தன்னுரிமைக்கான, சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இக்கருத்தானது ஈழத்தின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து வந்த கருத்து அல்ல. இந்தியாவில், பிரிவினை வாதத்திற்கு எதிராக, பிரிந்து போவதற்கு எதிராக இங்கு செய்யப்பட்ட பிரச்சாரம் இருக்கிறது அல்லவா? அதிலிருந்து தான் இந்த மனநிலை உருவானது.
மக்களைப் பொறுத்தவரையில், ஈழப்பிரச்சனைக்கு அப்பால், தேர்தல் அரசியலின் வழியாக அரசியல் அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அரசியல் அற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதில் பல காரணிகள் பங்காற்றுகின்றன. அதில் முக்கியமாக, தேர்தல் அரசியலில் இவர்கள் பேசும் முறையானது, மக்கள் வாழ்க்கைக்கும் பேசும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற சூழலை உருவாக்கி நிலை நாட்டிவிட்டார்கள். “நீ எஸ்டேட் வாங்கியிருக்கிறாய், நான் வாங்கவில்லை”, “நீ மகனுக்குச் சொத்துச் சேர்த்திருக்கிறாய், நான் அப்படியில்லை” போன்ற மோதல்களின், பட்டிமன்றங்களின் பார்வையாளர்களாகத் தான் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால் மக்களைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும், சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், நீங்கள் உங்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால், வீதி சற்று நன்றாக அமைய வேண்டும், மின்சாரம் கிடைக்கவேண்டும், குழாயில் தண்ணி வரவேண்டும் என்பார்கள்.இதனால் மக்கள் அரசியல் விவகாரங்களிலிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
தவிர, தொலைக்காட்சி, நுகர்வியல் போன்ற கூடுதல் விடயங்கள்.
இவை எல்லாவற்றையும் தவிர, ஈழப்பிரச்சனையை முன்வைத்து, அவர்களுடைய சுயநிர்ணய உரிமை நியாயமானது என்ற அரசியற் திசை நோக்கி மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.
நடைபெற்ற பல போராட்டங்களை எடுத்துக்கொண்டால் கூட, அவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள் என்ற புரிதலை முன்வைத்தே போராட்டங்களும் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வகையில் இந்திய இராணுவத்தை அனுப்புதல் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது கூட மக்கள் அதற்கு ஆதரிக்கும் போக்குகே காணப்பட்டது. இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களைக் காப்பாற்று என்ற முழக்கத்தின் பின்னாலான அபாயத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக அரசியலே இங்கு காணப்பட்டது.
இந்திய இராணுவம் 87 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக தமிழ் நாட்டு மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்தது,?
எமது அமைப்பைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் (IPKF) அனுப்பப்படுவதற்கு முற்பகுதியிலிருந்தே புலிகளின் பாசிசப் போக்கை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம். ஆனால் IPKF இற்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியபோது அப்போராட்டத்தை ஆதரித்து எமது அமைப்பும் (ம.க.இ.க) அது சார்ந்த அமைப்புக்களும் தான் பிரச்சாரங்கள் மேற்கொண்டன.
மற்றவர்களெல்லாம், அதிகபட்சம், அனியாயமாக இந்திய இராணுவச் சிப்பாய்கள் உயிரிழக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தையே அறிக்கைகளாக முன்வைத்தனர். இது ஒரு படையெடுப்பு, இது ஒரு ஆக்கிரமிப்பு என்ற வகையில் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
இனியொரு: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின்னான நிலைமைகள் எவ்வாறு அமைந்தன?
ராஜீவ் காந்தி யின் கொலை தமிழக மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறமுடியது. ஆனால் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தினமணி, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பன ஊடகங்கள், ஈழ எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ராஜீவ் காந்த்க் கொலை என்பது, தமிழ், தமிழினம், திராவிடம் என்பவற்றிற்கு எதிரான ஒரு மூர்க்கமான பிரச்சார நடவடிக்கையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.
பயங்கரவாதம் பிரிவினைவாதம் எனக் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அடக்குமுறை கடுமையாக ஏவிவிடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணிசமான அளவிற்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்.
நாங்கள் மட்டும்தான் ராஜீவ் காந்தியின் கொலைக்காக் கண்ணீர்வடிக்க வேண்டியதில்லை. அவரது ஆட்சியில் ஈழ மக்களுக்குத் துரோகமிழைக்கப் பட்டிருக்கிறது என்று பிரச்சாரம் மேற்கொண்டோம். போலிசாரின் கடுமையான அடக்குமுறை, அடிதடி, சிறைப்பிடிப்பு என்பவற்றிக்கு மத்தியில் நாம் இவ்வாறான ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போது, புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்தக் கொலையை ம.க.இ.க கூடச் செய்திருக்கலாம் என எம்மைக் காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்திருந்தார்.
இனியொரு: எந்த அரசியல் கட்சிகள் இவ்வாறான ஈழத்தமிழ் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தன?
அதில் ஜெயலலிதாவின் பாத்திரம் மிக மிக முக்கியமானது. அவரின் நடவடிக்கைகள் காங்கிரசை விஞ்சியதாக இருந்தது.
இதன் பின்னர் கிளினொச்சி வீழந்த பின்னரும் கூட இங்குள்ள தேர்தல் கட்சிகள், அங்கே எதுவுமே நடக்கவில்லை, இராணுவத்தினரை உள்ளே இழுத்து புலிகள் நசுக்கி விடுவார்கள் என்றே பேசிவந்தனர்.
இனியொரு: தமிழகம் குறித புலிகளின் அரசியல் தமிழ் நாட்டில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்திற்று?
புலிகள் யாருடை அரசியலை, ஆதரவை தமிழ் நாட்டில் விரும்பினார்களோ, கோரினார்களோ அவர்களெல்லாம் ஆளும்வர்க்கக் கட்சிகளாக அல்லது முழு நிறைவான சந்தர்ப்பவாதிகளாகவோ தான் இருந்தார்கள். அவர்கள் தங்களது சந்தர்பவாத அரசியலுக்கு உட்பட்ட அளவில் தான் இதில் பாத்திரமாற்றியிருக்கிறார்கள், ஆற்ற முடியும்.
ஒரு நல்ல உதாரணம், யாழ் கோட்டை புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, பாரதீய ஜனதா வின் ஆட்சி இருந்தது. அப்போது, பா.ம.க, தி.மு,க, ம.தி.மு.க ஆகிய அனைவருமே மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
அப்போது அந்த முற்றுகையைப் புலிகள் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசு தலையிட்டு அதைத் தடுக்கவேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசைக் கோருகிறது. புத்த பிக்குகள் உட்பட பல இலங்கை அரசு சார்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.
இங்கு வந்து இந்திய இராணுவத்தைப் புலிகளுக்கு எதிராக அனுப்புமாறு கோருகிறார்கள். அப்போது கருணாநிதி யூகோஸ்லாவியா போன்ற ஒரு தீர்வை முன்வைக்கலாம் எனக் கூறுகிறார். அதைப் வாஜ்பாய் கடுமையாகக் கண்டிக்கிறார். அப்போது மாறன் பின்வாங்கி அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்கிறார். கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். தனி நாடு ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் முற்றுகையை விலக்கிக் கொள்ளச் சொல்லியும் இந்திய அரசு புலிகளை மிரட்டுகிறது. அந்தத் தருணத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகச் சொல்லிக் கொண்டிருந்த நெடுமாறனின் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இம்மிரட்டலை ஒரு மிகப்பெரிய வெற்றியாகச் சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவாக, தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக இந்திய அரசு தலையிடுகிறது என்ற அரசியல் ரீதியான விமர்சனத்தைக்கூட இவர்கள் முன்வைக்கவில்லை.
இப்படிப்பட்ட மண்குதிரைகள் மீது தான் புலிகள் சவாரி செய்தார்கள். இவ்வான முழுச் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம்பித்தான் தமிழ் நாட்டில் தமது ஆதரவுத் தளத்தை நெறிப்படுத்தினார்கள்.
இந்தமாதிரியான சக்திகள் அவர்களின் சொந்த நலன்களிற்கு ஏற்றவாறே தமது ஈழ அரசியலை நகர்த்திச் சென்றனர்.