Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்கள் படுகொலை – அழிவு சக்திகள் களத்தில் : சபா நாவலன்

அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம் 2020 ஆம் ஆண்டு உலகத்தின் அரசியல் படமாக்கல் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற அறிக்கையில் ஒப்புதல் வழங்கியிருப்பது போல இப்போது மக்கள் எழுச்சிக்கான காலம் உருவாகிவிட்டது. இதுவரைக்கும் மன்னர் ஆட்சியும் சர்வாதிகார ஆட்சியும் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்த அரேபிய நாடுகளின் சமூக அமைப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் ஏகோபித்த மக்கள் எழுச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் நிகழக்கூடும் என எதிர்வு கூறப்பட்ட எழுச்சிகளெல்லாம் இப்போது கண்முன்னே நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறுகிய காலத்துள் மக்களைச் சூறையாடிய பல் தேசிய நிறுவனங்களின் நிர்வாகப் பிரதிநிதிகளான அரபுச் சர்வாதிகாரிகளும் மன்னர்களும் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

அமரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி அங்கு பெரும் மக்கள் எழுச்சிகளைத் தோற்றுவிகும் சாத்தியப்படுகளை உருவாக்கும் என்று பைனாசியல் ரைம்ஸ் ஆசிரியர் கருத்து கடந்த மாதம் எதிர்வு கூறியிருந்தது. அரேபிய நாடுகளைக் கையாள்வதிலும், போராட்டங்களைத் திசைதிருப்புவதிலும் மேற்குலகம் தோற்றுப் போகுமானால், ஐரோப்பிய அமரிக்க நாடுகளின் இருப்பே கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகும்.

இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.

1. ஏற்கனவே முதலீடுகளை மேற்கொண்டுள்ள பல்தேசிய நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். 

2.  உலக முதலாளிகள் எதிர்பார்க்க்கின்ற “சந்தைப்படுத்தலுக்கான சூழல்” பாதிப்படையும்.

தமிழ் நாட்டு மீனவர் கொலைகளின் பின்னணியிலும் இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களின் அரசியல் பொதிந்திருக்கிறது எனபது வெளிப்படையான ஒன்று.

இந்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தில் மற்றும் “அமைதியான” உற்பத்திச் சூழல் போன்றவற வியாபார நலன்களிற்கு தமிழ் நாட்டு மீனவர்கள் தடையாக அமையலாம் என்ற அடிப்படையில் ஏழை மீனவர்கள் மீதான உளவியல், இராணுவ யுத்ததைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறன இலங்கை இந்திய அரசுகள்!

வன்னிப்படுகொலைகளின் போது இலங்கை இந்திய அரசுகளைச் சார்ந்திருந்த அத்தனை பிற்போக்கு  அணிகளும் இப்போது மீனவர் படுகொலையின் கோரத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.

இன்றுவரை இலங்கைக் கடற்படை 500 வரையான மீனவர்களைக் கொன்றுபோட்டிருகிறது, அதுவும் கரையோரங்கள் வரைக்கும் மீனவர்களைத் துரத்திவந்து கொலைசெய்திருக்கிறது.

புலிகள் இருந்தவரை மீனவர்கள் கொலைசெய்யபடுவதற்கு அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற காரணத்தை, இலங்கக் கடற்படையோ இலங்கை அரசோ பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்ததில்லை. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் எல்லைப் பிரச்சனை என்பது பிரதான குற்றச்சாட்டக முன்வைக்கப்படுகிறது. 

 பேரின வாதத்தால் வெறியூட்டப்பட்ட இலங்கைக் கடற்படையின் கொலைவெறிக்கு இரையான ஈழத் தமிழ் மீனவர்களின் தொகை இந்திய மீனவர்களை விடப் பல மடங்கு அதிகமானது.

 ஆக, கொலைகளின் பின்னணியில் தொக்கு நிக்கும் அடிப்படை நோக்கங்கள் இலங்கை, இந்தியக் கடற்பகுதியை வியாபாரத்திற்குரிய “அமைதி” ப்பிரதேசமாக்குவதே எனப்தை யாரும் சந்தேகிக்க முடியாது.

இலங்கையில் இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் தெற்காசியாவில் புதிய மாற்றங்களோடு மேலெழும் என்பது தவிர்க்கவியலாத சமூகப் புறநிலை.  

இலங்கை இந்திய ஆளும் வர்க்கங்கள் இதையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. நாளாந்தம் அதிகாரவர்க்கத்தின் வியாபாரப் பசிக்கும் அதன் மறுவடிவமான பேரினவாத்த்திற்கும் இரையாகிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராத்தின் அவசியம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது.

வன்னியிலும், கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் எதிர்கால எழுச்சியை அழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் அத்தனை இராணுவ நகர்வுகளும் தமிழக மீனவர்கள் கொலைகளோடும் தொடர்புடையது. இலங்கை இந்தியக் கடற்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதென்பது தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்பது வெளிபடையானது.

மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுகின்ற நிலங்கள் வியாபாரத்திற்குரிய “அமைதிப்” பிரதேசமாக்கப்பட்டு பன்நாட்டு நிறுவனங்களின் தேவைக்கு வழங்கப்படுவது இலங்கையின் நாளந்த நிகழ்வு. இவ்வாறுதான் ஏழை மீனவர்களிடமிருந்தும் பறித்தெடுக்கப்படும் கடற்பிரதேசங்கள் பன்நாட்டு நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் தாரைவார்க்கப்படும்.

மீனவர் கொலைகள் அவர்கள் மீதான உளவியல் யுத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஒரு புறத்தில் அவர்களை அனாதரவானவர்ள் என்ற பய உணர்வை ஏற்படுத்தித் தனிமைப்படுத்தலும் மறு புறத்தில் அவர்களை இலங்கை மீனவர்களுக்கு எதிரான கொடியவர்களாகச் சித்தரிப்பதும் இலங்கை இந்திய அரசுகளின் புதிய அரசியல் தந்திரோபாயங்கள்.

இந்து பத்திரிகை, தமிழ் நாட்டின் அதிகாரவர்க்கம் சார்ந்த புத்திசீவிகள், இலங்கை அரச துணைக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், புலம்பெயர் லும்பன்கள் இணைந்த அணிவகுப்பொன்று இந்த நோக்கத்திற்காகக் களமிறங்கியுள்ளது.
தமிழக மீனவர்கள் கோரமாகக் கொலைசெய்யப்படுவது குறித்துப் பேச வரும் போதெல்லாம் எல்லை தாண்டி மீன்பிடித்தல் குறித்துப் பேசுவதே முதன்மையானது என்று இவர்கள்  கூக்குரலிடுகின்றனர்.

புலிகளின் ஜனநாயக மறுப்புத்தான் இலங்கையின் தேசிய இன அடக்குமுறைக்குக் காரணம் என்று எதிர்ப்பியங்களைச் சீர்குலைக்க முனைந்த அதே முகங்கள் மறுபடி களத்தில் இறங்கியிருக்கின்றன.

எது எவ்வாறாயினும், தமிழக மீனவர்களது போராட்டஙகள் இம்முறை தமிழ்த் தேசியவாத வியாபரிகளிடமிருந்து புதிய அரசியல் சக்திகளின் ஆளுமைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிகின்றது. இவையெல்லாம் புதிய நம்பிக்கைகளைப் போராடும் சக்திகள் மத்தியில் விதைக்கிறது.

இது மாற்றங்களுக்கான காலம். அரபு நாடுகளிலிருந்து, தெற்காசியா வரைக்கும் மக்கள் அதிகார வர்க்கங்களின் அரசியல் தந்திரோபாயங்களை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் சார்ந்த அரசியல் தலைமையின் இல்லாமையே போராட்டங்கள் திசைதிருப்பப்  படுவதற்கான அடிப்படைக்காரணம். மாறாக,  தெற்காசியாவின் சமூகப் புறச் சூழல் நீண்டகாலப் போராடப் பாரம்பரியத்தையுடையது. மாற்றங்கள் நேர்மறையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் :
தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

Exit mobile version