Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது

Sen Kandiahஇந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர்.

இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்கிறார்கள் என்று கொஞ்சம் இந்தக் கூட்டத்தின் லெவலுக்கு கீழே இறங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

பிரித்தானியாவில் மூன்று பவுண்சுக்கு இரவு பகலாக வேலை செய்த்து செத்துப்போன உடலோடு நாற்பது வயது தாண்டும் முன்னமே நாராய் கிழிந்துபோகிற அகதித் தமிழன் எங்கே, நான்கு லட்சத்தை அத்வானியின் மகள் வழியாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்துவிட்டு சாவகாசமாக வலம் வருகின்ற ‘தேசியவாதி’ எங்கே?

முள்ளிவாய்காலில் நந்திக்கடல் மனித இரத்தத்தால் செங்கடலாகிய 2009 ஆண்டின் மனிதப் பேரவலத்தை ராஜபக்ச அரசு நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தமிழர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். வன்னியின் மரண ஓலம் புலம் பெயர் தேசங்களிலும் எதிரொலித்தது. லட்சம் லட்சமாக தெருக்களில் குழந்தைகளும் பெண்களும் முதியோரும் போர்க்கொடி துக்கினார்கள்.

பிரித்தானியாவில் தெருவெங்கும் தமிழர் போராட்டங்கள் நடைபெற்ற அந்தக் காலப்பகுதி ஈழத் தமிழர் வரலாற்றில் பிரதான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய சிக்கலான காலப்பகுதியாக் அமைந்திருந்தது.

அப்போது அந்தக் காலப்பகுதியை வழிகாட்டியவர்களுள் சென் கந்தையாவும் ஒருவர். சென் கந்தையா பிரித்தானிய லேபர் கட்சியின் முக்கிய தமிழ் உறுப்பினர். புத்தி சீவிக்கும் ஒருவராகக் கருதப்படுபவர். சென் கந்தையவின் வழிகாட்டலில் வன்னியின் முடிவுகளும் கூட அமைந்திருந்தன.

பிரித்தானிய தமிழர் பேரவையின் அக்காலத்தின் பிரதானியான கந்தையா, போரை அதாவது இனக்கொலைய நிப்பாட்டுவதற்காக மேல் மட்டத்தில் டீல் போட்டுக்கொண்டிருப்பதாகச் சொன்னவர்களில் ஒருவர். புலியின் பிரித்தானியப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட சென்.கந்தையாவின் 2002 இற்கும் 2010 இற்கும் இடையில் போட்ட இன்னொரு டீல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

அண்ணளவாக 2010 இல் முள்ளிவாய்காலில் செத்தவர்கள் போக எஞ்சியவர்களை பட்டினிபோட்டு திறந்த வெளிச் சிறையில் அடைத்துவைத்திருந்த காலத்திலேயே மில்லியன் பணத்திற்கான டீலை சென் கந்தையா அவர்களும் அவர் சார்ந்த மேட்டுக் குடியும் இந்திய அதிகாரவர்க்கத்தின் அடியாட்களோடு பேசிக் கொள்கிறது.

மகாராஜா ரவல்ஸ் என்ற பிரித்தானிய நிறுவனம் இந்தியர் ஒருவரால் நடத்தப்படுகிறது. இவர்களின் பணக் கொடுப்பனர் சென். கந்ததையா. மகாராஜா ரவல்ஸ் என்ற குட்டி நிறுவனம் எயர் இந்தியாவின் ரிக்கட் விற்பனைக்கான தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள கனவு காண்கிறது.

அந்தக் கனவை நனவாக்க இடையில் புகுந்துகொள்கிறார் நமது சென். கந்தையா.

மகாராஜா நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் முன்னை நாள் உத்தர் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் அசோக் யாதவ் என்பவரை அத்வானியின் மருமகள் ஊடாக அணுகி அவருக்கு £370,259 பவுண்ஸ்களை கையூட்டாகக் கொடுத்து எயர் இந்தியா ரிக்கட் விற்பனையாளருக்கான பிரித்தானிய தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இடைதரகர் அத்வானியின் மருமகள் கௌரி அத்வானி. யாதவ் தனது இன்னொரு தோஸ்தான விமான பணித்துறை அமைச்சர் ஹூசைன் ஐத் தொடர்பு கொண்டு டீலை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளார்.

இதற்காக கௌரி அத்வானி ஊடாக யாதவ் இற்கு £370,259 ஐ லஞ்சமாகக் கொடுக்க, யாதவ் பணத்தைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிடுகிறார். கௌரி அத்வானி தான் யாதவை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக் பிரித்தானிய நீதிமன்றத்தில் மகாராஜா ரவல்ஸ் வழக்குப் போட சென்.கந்தையா அந்த நிறுவனத்தின் பண வழங்குனராக நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வருகிறார்.

அத்வானியின் மருமகளோடு, இந்திய அரசியல்வாதிகளோடு நடத்தப்பட்ட வியாபாரப் பேரம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து பிரித்தானிய நீதிமன்றத்தில் சென்.கந்தையா குழுவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி இது சட்டவிரோத இலஞ்ச விவகாரம் என வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

£370,259 பணம் மாவீரர் தினத்தில் பூ விற்ற பணமா, ஆயுதம் வாங்குவதற்காக சேர்க்கப்பட்ட பணமா என்ற விவாதங்களில் ஆதாரமின்றி ஈடுபடாமல் நீதிமன்றத்தின் தரவுகளின் படி அரசியல் தொடர்புகள் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளன என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வோம்.

இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து நடத்திய வன்னிப் படுகொலைகளின் போது £370,259 பணத்தை இந்தியக் கொலைகாரர்களிடம் கொடுத்துவைத்துவிட்டு எப்படி மக்களுக்காகப் பேச முடியும் என்பதே முதல் கேள்வி.

இன்று வரைக்கும் பிரித்தானிய தொலைக்காட்சிகளும் ஈழத் தமிழர் தொலைக்காட்சிகளும் ஏனைய ஊடகங்களும் புலிகளின் சார்பில் பேசவல்வராக சென் கந்தையாவை சுட்டிக்காட்ட புலிகள் இன்னும் சாகவில்லை என ராஜபகச பாசிஸ்டுக்கள் தமது வியாபாரத்தை நடத்தி முடிக்கின்றனர்.

வியாபாரிகளின் கரங்களி விழுந்த ஈழத் தமிழர்களின் நியாயமான தேசிய விடுதலைப் போராட்டம் இதே வியாபாரிகளின் பணப்பசியால் முள்ளிவாய்க்காலில் இரத்தமும் சதையுமாக முடிந்துபோனது.

அயோக்கியர்களின் ஆயுதமாக தேசியமும் மத வெறியும் பயன்பட்டுப் போக வெறியூட்டப்பட்ட மக்கள் தெருக்களில் இரத்தமும் சதையுமாகக் கொல்லப்படுகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பு:

http://judgmental.org.uk/judgments/EWHC-QB/2009/%5B2009%5D_EWHC_3218_(QB).html

Exit mobile version