Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீமான் – ஒரு எச்சரிக்கைக் குறிப்பு : நிவேதா

சக மனிதன் மீதுள்ள பற்றிலிருந்தே சமூகப்பற்று எழுகிறது. மனிதர்கள் மீதுள்ள பற்றும் அபிமானமுமே ஒருவனை ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது. மக்களின் ஒருபகுதியினரை அடக்கும் நோக்கோடு அதிகாரத்தைப் பங்கு போட்டுக்கொள்வதென்பது ஒரு போதும் விடுதலையைப் பெற்றுத் தராது. இந்தச் சிறிய அடிப்படையிலிருந்தே நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் கண்டுகொள்ளலாம். சந்தர்ப்பவாதிகளையும், ஒடுக்குமுறையாளர்களையும், அரசியல் வியாபாரிகளையும், பயங்கரவாதிகளையும் நண்பர்களாக் கருதும் எந்த விடுதலைப் போராட்டமும் எதிர்ப்புரட்சிகரப் பண்பையே கொண்டிருக்கும்.

ஒரு வகையில் ஈழ விடுதலைக்கான போராட்டம் என்பது அதன் தோற்றுவாயிலிருந்தே எதிர்ப் புரட்சிகரப் பண்பைக் கொண்டிருந்தது.

இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது அவசியமானது மட்டுமல்ல மக்களின் விடுதலைக்காகப் போராடுதல் என்பது புரட்சிகரமானதும் கூட.
ஒரு தேசிய இனம் தனது தேசிய விடுதலைக்காக, அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடுதல் என்பது மனித குல விடுதலையின் ஒரு பகுதி மட்டுமன்றி, அதன் உந்துசக்தியுமாகும்.
மனித விரோதிகளும் சமூகத் துரோகிகளும் மக்களின் விடுதலை சார்ந்து ஒருபோதும் போராடுவதில்லை.

80களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற விடுதலை இயக்கங்கள் வரை இந்திய அரசையும், இந்தியப் பாராளுமன்ற அரசியல் வாதிகளையும் தமது நண்பர்களாகக் கருதினர். இந்தியாவிலே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற எந்த அமைப்பையும் இவர்களில் யாரும் ஏறெடுத்துக்கூடப் பார்த்ததில்லை. வங்க தேசத்தைப் பிரித்துக்கொடுத்த இந்தியா தமிழீழத்தையும் பெற்றுத் தரும் என அப்பாவித் தனமான நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இந்தியப் பிராந்திய நலனின் பிரதிநிதிகளாக ஈழ விடுதலை இயக்கங்கள் உருவாகின. ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அவர்களது பார்வை மாற்றமடைந்தது, எதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் நண்பர்களானார்கள். நண்பர்கள் எதிரிகளாகக் கணிக்கப்பட்டனர். சில வேளைகளில் இந்தியாவை தவிர்த்தால் அமரிக்க நலன்களோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். மனித விரோதச் செயற்பாடுகள் இவ்வாறான அணிசேர்க்கையிலிருந்தே ஆரம்பமாகிற்று.

ஈழத்தில் நிலவிய மக்கள் ஆதரவும், போர்க்குணம் மிக்க இளைஞர்களின் தியாகமும் தெற்காசிய விடுதலைக்கே வித்திடவல்ல, இயல்புகளைக் கொண்டிருந்தது. ஆனல் தமிழ் நாட்டின் அரசியல் வியாபாரிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கே போராட்டத்தின் அணி சேர்க்கை பயன்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன், முத்துவேல்.கருணாநிதி என்று ஆரம்பித்து வை.கோபாலசாமி, நெடுமாறன், தொல்.திருமாவளவன் வரை ஈழ மக்களின், துயரத்தில் தம்மை வளர்த்துக்கொண்டனர். ஜெகத் கஸ்பர் போன்ற வியாபாரிகள் மில்லியன்களை சுருட்டிக்கொண்டு இலங்கை அரசோடு நேரடியாகவே இணைந்து கொண்டனர்.

இவர்களின் வரிசையில் இன்று ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள, ஈழ அரசியலோடு தொடர்புடையவர்களதும் பார்வை சீமான் மீது திரும்புகிறது.

இஸ்லாமிய அடிப்படை வாதமோ, இந்து அடிப்படைவாதமோ, இந்து பாசிசமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மக்கள் விரோதத் அரசியல் கோட்பாடுகள்.

குஜராத் நரேந்திர மோடி என்றால் இந்துப் பயங்கரவாதி என்பது சமூகத்தின் மீது அக்கறையுள்ள எந்த மனிதனுக்கும் மாற்றுக் கருத்திராது. ஆயிரக்கணக்கான குழந்தைகளையும், வயோதிபர்களையும் கொன்றொழித்த சமூக விரோதி மோடி மகிந்த ராஜபக்சேவுக்கு எந்த வகையிலும் குறைவற்ற போர்க்குற்றவாளி. பாலியல் வன்முறை, கொலை, சூறையாடல், இந்து வெறி, மக்கள் மீதான வன்முறை என்று மனித குலம் அவமானப்படும் வகையிலான அனைத்து ஈனச் செயல்களுக்கும் மோடி மொத்த உருவம்.

அறுபது வருடங்களாகத் தமது தலைமகளால் ஏமாற்றப்பட்டு அழிவை மட்டுமே சந்திக்கும் ஈழத் தமிழர்களின் அறியமை இருளுக்கு அத்தனை விடுதலை இயக்கங்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் எங்காவது ஒரு சந்தில் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் தமிழ் நாட்டில் அரசியல் வாதியாக உருவெடுத்த சீமான் மோடியின் அரசியலைப் பாராட்டுவதை என்னென்பது?

மோடியின் ஆட்சி நல்லாட்சி என்று கூறும் சீமானுக்கும் மனிதாபிமானத்திற்கும் என்ன தொடர்பு?

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் சார்ந்த தேசிய விடுதலைப் போராட்டம் என்பதன் அரிச்சுவடியிலேயே மோடிகள் எதிரிகளாகிவிடுவார்களே?

ஆக, சீமான் மறுபடி இன்னொரு அழிவை தனது அரசியல் அரிச்சுவடியிலிருந்து திட்டமிடுகிறாரா? ஒடுக்கப்படும் தேசிய இனம் எச்சரிக்கை அடையவேண்டும்.

Exit mobile version