Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் : தோழர் பாலன்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள சிறப்புமுகாம் என்னும் பெயரில் அமைந்துள்ள சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 15 நாட்களுக்கு மேலாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க இந்திய மத்திய மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.

புலிச் சந்தேக நபர்களை அடைத்து வைக்க என ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு முகாம் புலிகள் அழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருவது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

இராணுவத்தை அனுப்பி தமிழீழம் பெற்றுக்கொடுப்பேன் என கூறிய ஜெயா அம்மையாரின் ஆட்சியிலே இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. தமிழர்களுக்காக மீண்டும் “டெசோ” மாநாடு நடத்தும் கலைஞர் கருனாநிதி அவர்கள் நினைத்தால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசு மூலம் இந்த முகாமை மூட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவரோ இது குறித்து வாய் திறக்கவே மறுக்கிறார்.

சிறப்புமுகாம் சித்திரவதைகளை நானும் அனுபவித்திருக்கிறேன். எட்டு வருடங்களுக்கு மேலாக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் மாறி மாறி அடைத்து வைக்கப்பட்டேன். துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட போது நான் எழுதிய கவிதையை தற்போது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் சார்பாக கீழே தருகிறேன்.

சிறப்பு முகாமின்
சித்திரவதைகளினால்
ஒவ்வொருநாளும்
ஆண்டாய் கழியும்
அவ் ஆண்டின் நாட்களோ
நீண்டு தெரியும்!

மத்திய அரசின் தவறா
மாநில அரசின் தவறா
என்பதை நானறியேன்
சிறப்பு முகாமில் வாழும்
யாமறிந்ததெல்லாம்
முகாம் சுவர் வலிது!

சிறப்பு முகாம் ஒரு மூடாத கல்லறை
அப்படியானால் அகதிகள்?
அவர்கள் உயிரோடு இருக்கும் பிணங்கள்.

மேற் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதை நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது (12.01.1995) எழுதிய கவிதையாகும்.

எதிர்வரும் 03.07.2012 யன்று லண்டனில் உள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக சிறப்பு முகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாக அறிகிறேன். மக்களின் எழுச்சி மட்டுமே இந்த சிறப்புமுகாம்கள் மூடவும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறவும் வழி சமைக்கும் என நம்புகிறேன்.

Exit mobile version