சிங்கள பௌத்தம் என்பது வன்முறையற்ற சமூகத்திற்கான பரிணாம வளர்ச்சி என்ற கருத்திற்கு எந்தக் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கவில்லை மாறாக அதன் வரலாற்றுவழி மரபும் அதனைச் சுற்றிய கருத்துக்களும் இனவாத அரசியல் வன்முறையை ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது( Jeyadeva Uyangoda – Preveda 1999 : 3) என்று கூறுகிறார் ஜெயதேவ உயாங்கொட என்ற ஆய்வாளர்.
இலங்கையில் தேரவாத பௌத்தம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அரசியல் தளத்திற்கு நகர்த்தப்படுகிறது என்கிறார் நீல் வோத்தா( Niel De Votta, Sinhala Buddhist nationalist ideology : Implication for politics and conflict resolution : 2010 : 23 ).
தேசியவாதம் அல்லத்து தேசம் குறித்த கருத்துருவாக்கம் என்பது முதலாளித்துவ உருவாக்கத்தோடு தொடர்புடையது. சந்தைப் பொருளாதாரமும் நவீனத்துவமும் தேசிய இனம் சார்ந்த வரலாற்று மனிதனை உருகாக்குகிறது. தேசிய இனங்கள் தனியாகப் பிரிந்து சென்று அரசை அமைக்க வலிமைகொண்ட மக்கள் கூட்டமாகக் கருதப்பட்டது. தேசிய அரசின் அரசியல் வடிவம் முதலாளித்துவ அரசாகவே அடிப்படையில் அமைந்திருக்கும்.
மேற்கிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் முதலாளித்துவ அமைப்பு என்பது எப்போதும் குறைந்த பட்ச ஜனநாயகதிற்கான கட்டமைவுகளைக் கூட எப்போதும் கொண்டிருந்ததில்லை.
ஒவ்வொரு நாடுகளிலும் அதன் புற நிலை யதார்த்ததிற்கு ஒப்ப மதம் சார்ந்த நிறுவனங்களின் ஆளுமை வேறுபடுகின்றது.
இந்தியாவின் பார்ப்பனிய நிறுவனம் சமூகத்தின் ஒவ்வோர் கூறுகளையும் அதன் பழமைவாதக் கருத்துக்களின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கையில் பௌத்த சிந்தனை , மூன்றாம் உலக முதலாளித்துவத்திற்கு அமைய மறுபடி வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு வடிவத்தை கணநாத் ஒபயசேகர போன்ற ஆய்வாளர்கள் “புரட்டஸ்தாந்து பௌத்தம்” என்றழைகின்றனர்.
சிங்கள் பௌத்த கருத்தியலைப் பொறுத்தவரை இரண்டு பிரதான போக்க்குகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக அரசு என்பது சிங்கள பௌத்த நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நிறுவனம். இரண்டாவதாக சிங்கள பௌத்தப் பெறுமானங்களின் அரணாக அரசு செயலாற்றும்.
நீல் டீ வோத்தா பௌத்தம் குறித்த தனது ஆக்கத்தில் அழகாக இதனைக் குறிப்பிடுகிறார். “சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மிக அடிப்படையான தன்மை என்பது இலங்கை என்ற நாடு சிங்கள பௌத்தர்களுக்காகப் பாதுகாக்கப்படுகிறது, சிறுபான்மை இனங்கள் இலங்கையில் வாழ்வது என்பது சிங்கள பௌத்தர்களின் சகிப்புத்தன்மையாலேயே என்ற கருத்தாகும்” என்கிறார்.
சிறுபான்மையினருக்கு எதிரான கருத்து என்பது மட்டுமல்ல சிங்கள பௌத்த வாழ்க்கை முறை அதன் சிந்தனை என்பன கூட பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வளர்ச்சியடைகிறது.
சிங்கள பௌத்தர்கள் உயர்வைக் குறிக்கும் கோட்பாட்டு என்பது “புரட்டஸ்தாந்து பௌத்ததின்” ஆரம்ப கர்த்தா என அழைக்கப்பட்ட அனகாரிக தர்மபாலவினால் உருவாக்கப்படுகிறது.
ஆரியர்கள் உயர்குணமுடையவர்கள் என்றும், பௌத்தர்கள் ஆரியர் என்றும் ஒருவகையான தேசிய வெறி அனகாரிகவினால் சிங்கள
பிற்போக்கான சமூகக் சிந்தனையை மீளமைப்புக்கு உட்படுத்தும் அனகாரிக தர்மபாலவின் ஆரிய பௌத்தப் பெண்கள் குறித்த கூற்று பலரின் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டது.
ஆரியக் கணவன் தனது மனைவிக்கு தனது தாய் தந்தையரை எப்படிப் பராமரிபது என்று பயிற்றுவிக்கிறான். மனைவியின் கடமையும் கட்டுப்படும் குடும்பத்தையும் கணவனையும் எவ்வாறு பராமரிபது என்பதே என்று அனகாரிக தனது சிந்தனையை முன்வைக்கிறார். ( A.Gurugee : Return to righteousness : 1965 :345)
பெண்களின் கடமை என்று 200 விதிகளையும் அதன் உப விதிகளையும் 22 தலையங்களின் கீழ் அவர் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் வாயிலாகவும் பிரசுரங்கள் வழியாகவும் கொண்டு செல்கிறார். முப்பது முக்கிய விதிகளில் வீட்டையும் உடமைகளையும் சுத்தமாக வைத்திருத்தல், மற்றவர்கள் முன்னிலையில் தலைவாரக் கூடாது.. போன்ற விதிகள் அடங்குகின்றன. குமாரி ஜெயவர்தன கருதுவது போல மண்ணின் மகளை ஆரிய மேலாண்மையுடன் உருவாக்க முனைகிறார்.
ஏற்கனவே நிறுவனமயமாகியிருந்த பௌத்த அமைப்புக்கள் அனகாரிகவினால் அதன் மேலாதிக்க உணர்வோடு மறுசீரமைக்கப்படுகிறது. கணநாத் ஒபயசேகர கருதுவது போல் அது கொழும்பையும் அதன் புறநகர்ப் பகுதிகளிலுமுள்ள புதிதாக உருவாகிய மத்தியதர வர்க்கப் பகுதியினரை கவரும் வகையில் உருவாக்கப்படுகிறது. (Obeysegara : Buddhism Transformed : 1988 : 178)
அனாகாரிகவின் சிந்தனை சிங்கள மக்கள் மத்தியில் மூன்று முக்கிய கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் சிந்தனைத் தளத்தில் வளர்த்தது.
முதலாவதாக, இலங்கை என்பது சிங்கள பௌத்தப் பெறுமானங்களைப் பாதுகாப்பதற்கான நாடு; இரண்டாவதாக இந்தப் பெறுமானங்களை குடியேற்றவாத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும்; மூன்றாவதாக சிறுபான்மையினரின் வாழ்வுரிமை என்பது சிங்கள பௌத்தப் பெறுமானங்களைப் பாதுகாப்பதற்காகவே.
இஸ்ரேலில் உருவாக்கப்பட்டது போன்ற அழிவரசியலை இவரது கருத்துக்கள் இலங்கை முழுவதும் தோற்றுவிக்கிறது. சிறிது சிறிதாக இலங்கையின் பிரதான முரண்பாடென்பது பெருந்தேசிய இனமான சிங்கள் தேசிய இனத்திற்கும் தமிழ்ப் பேசும் ஏனைய சிறுபான்மை இனங்களிற்கும் இடையேயான முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது.
இந்த முரண்பாடு இலங்கையில் வாழும் மக்கள் கூட்டங்களிற்கு இடையேயான பிரதான முரண்பாடாக வளர்ச்சியடைகிறது.
இந்த வளர்ச்சியின் பொதுவான நிலை குறித்து நீல் வோத்தா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“அரசியல் பௌத்தம்” மற்றும் சிங்கள பௌத்தத் தேசியவாதம் என்பன சிங்கள பௌத்த தேசியவாதக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. இதுவே சிங்கள பௌத்தர்களின் சமூகத்திலும் அரசமைப்பிலும் மேலோங்கியுள்ளது. இந்தத் தேசியவாதம் சிங்கள பௌத்தத் தேசியவாதம் என்பது ஒருங்கிணைந்த அரசமைபினுள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைக் கோருகிறது. விதிகளையும் சட்டங்களையும் கொண்டு அந்த மேலாதிக்கம் நிறுவனமயப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி நிரலை மறுப்பவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. இந்த சிங்கள பௌத்த தேசியவாதம் சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக, இது குறித்து கேள்வியெழுப்புபவர்களாயினும் எதிர்ப்பவர்களாயினும் அரச எதிரியாகக் கருதப்படுகின்றனர். (Sinhala Buddhist nationalist ideology : Implication for politics and conflict resolution : 2010 : 11)
நீல் வோத்தா தனது ஆக்கத்தில் கருதுவது போல் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பது நிறுவனமயப்படுத்தப்படுள்ளது. இந்த நிறுவனம் நூறாண்டு வரலாறும் வாழ்வும் கொண்டது. இஸ்ரேலிய சியோனிசத்தைப் போல எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத கோரமான அமைப்பு முறையைக் கொண்ட சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் அடிப்படையாகவும் முன் முகமாகவும் திகழ்கிறது.
இந்தியாவில் பேசப்படுகின்ற பார்பனிய தேசியவாதம் அதன் பாசிச பண்புகள் என்பவற்றிலிருந்து சிங்கள பௌத்த மேலாதிக்கவாத்மும் பேரினவாதமும் அவற்றின் உருவாக்கத்தில் வேறுபடுகிறது. சிங்கள பௌத்தம் என்பது இலங்கையில் மட்டுமே காணப்படுகின்ற கோட்பாடு. அதன் மீதான அன்னியர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆகிரமிப்புக் குறித்த பய உணர்வின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்படுகிறது.
யூத மக்களின் அழிவிவு குறித்த பய உணர்வின் அடிப்படையிலேயே இஸ்ரேல் உருவாகிறது. ஆக, சிங்களப் பெருந் தேசியம் என்பது இஸ்ரேலிய சியொனிசத்தின் பண்பியல்புகளையும் கொண்டுள்ளது.
சிறுபான்மையினரின் இலங்கையின் பொதுவான அரசியல் சட்டங்களுக்கு உட்பட்ட உரிமைகள் தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பய உணர்வின் தூண்டிவிடப்படுகின்றது.
தமிழர்களின் உரிமைக்கான முதல் அரசியல் சட்டமாகக் கருதப்படும் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைவிடப்பட்ட வேளையில் கூட சிங்கள பௌத்த பய உணர்வு தூண்டப்பட்டே அதற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அடிப்படைகளிலிருந்து இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களில் தன்னுரிமைக்கான போராட்டம் குறித்த கருத்தும் அவற்றின் எதிர்காலம் குறித்த முன்மொழிவுகளும் உருவாகலாம்.
அதன் முன்பதாக சில முக்கியமான வினாக்களுக்கு விடைகாணப்பட வேண்டும்.
1. முப்பதாண்டு கால குறுந்தேசிய வாதிகளின் விடுதலைப் போராட்டம் பெருந்தேசிய வாதத்தில் ஏற்படுத்திய பாதிப்பு.
2. சிங்கள பௌத்த மேலாதிக்க வாத்த்தினதும் பேரின வாதத்தினதும் இன்றைய நிலை.
3. சிங்கள பௌத்த மேலாதிக்கமும் பேரின வாதமும் தேசிய இனங்களின் இருப்பில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு.
4. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் தேசிய இனங்களின் எதிர்காலமும்.
இலங்கையில் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டத்தைத் திட்டமிடும் எவரும் மேற்குறித்த அடிப்படைகளைக் கடந்தே செல்லவேண்டும்.
Published on: May 07, 2011 @ 20:00 Edit
இன்னும் வரும்…