Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தலும்! தமிழ்பேசும் மக்களும்!! ஒட்டகத்துக்கு …அலையும் கூட்டமைப்பும்!!!:எஸ்.ஜி.ராகவன்

சபாநாவலனின் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கட்டுரையில் வந்த பின்னூட்டம் ஒன்றில்  “உண்ணியில் உள்ள குறைபாடுகள் பற்றி விலாவாரியாக அலசப்படும் . உண்ணியை எப்படி அகற்றுவெதென்பது மட்டும் சொல்லப்பட்டிருக்காது” என்ற ஓர் வாசகரின் கருத்தின் பாதிப்பே இக்கட்டுரை ஆகும். அப் பின்னூட்டக்காரரின்  ஆதங்கம் தமிழ் பேசும் மக்கள் அனைவரினது ஆதங்கமும் ஆகும். ஆம் வழிமுறைகளும்,  தெரிவுகளும், மூலோபாயங்களும் அற்று தெருவோரத்தில்  இன்னும் இன்னும் அனாதைகளாய் நாம்…… அலைகிறோம் (உண்ணியை அகற்ற  வழியற்று) ஆனால் எஜமானர்கள் எம்மை பொறுத்து இருக்கட்டாம் அவர்களின் தலைவன் உ(…..)ண்ணியை அகற்ற இந்தியாவில் இருந்து வருகிறாராம், என்ற பீடிகையுடன்  மாத்திரம் தற்போதைய களநிலவரம் “நகர்ந்து செல்ல வைக்க படுகிறது”.

அதுவரையில் நாம்  முடிந்த  வரை உண்ணியை அகற்றும் வழிமுறையை தேடி  வில்லங்கப்படுவோம். எனவே வாசகர்கள் சலிக்காது வாசிக்கவும்.

(இத் தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில்  முக்கியமா? இல்லையா?! என்ற விவாதம் கூட எழும். ஒற்றைச் சொல்லில் இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கு இத் தேர்தல் முக்கியமே.)

இலங்கையின் ஜனாதி பதி தேர்தலில்  யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் நான் நாலு வகையான சிந்தனைகளை அல்லது  எத்தனிப்புகளை அல்லது அவ தானங்களை  வைத்திருந்தேன்.

  1. மகிந்தவை ஆதரித்தல் :-

தேவை : வெளி உலகத்தோடு கடும்போக்கு கொள்கையை பின்பற்றும் மகிந்தவின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவர மாத்திரம் வெளி உலகம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தூக்குகிறது. இவ்வாறு மகிந்த சர்வதேச மோதல்களின் விளைபயனை நாம் எமக்கு சாதகமாக திருப்புதல் ( யார் திருப்புவது என என்னிடம் யாரும் திருப்பி கேட்டால் என்னிடம் பதில் இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பு  அத்தைகைய வினைத்திறனுடன் செயல் படுவதாக  இல்லை).

ஒப்பீட்டளவில் மைத்திரியா மகிந்தவா  என்றால்? மூலோபாய  நோக்கில்   மகிந்தவையே நான் தெரிவு செய்வேன். ஏனனெனில் மகிந்தவின் முகம் சிங்களவர்களுக்கு முழுதாக தெரிய வரும் போது ஏற்படும் நிலைமைகள் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையலாம்.

.

  1. மைத்திரியை ஆதரித்தல்.:-

 

தேவை: இன்று  இருக்கக் கூடிய அதிகூடிய இன ஒறுப்பின் வீரியம் ஒப்பீட்டளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பு. (இது என்னிடம் இல்லை).  சர்வதேசம் மைத்திரியின் வரவை எதிர் பார்ப்பதால் அதன் மூலம் நாம் ஏதேனும் காரியம் சாதிக்கலாம்??? எனும் நிலைப்பாடும் சர்வதேசத்தை அனுசரித்து போகும் தேவை தமிழர்களுக்கு உண்டு என்பதாலும், மைத்திரியை ஆதரித்தல். ஆனால் இங்கு காரியம் ஆற்றும் வீரியம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றதா?…… என்ற கேள்விக்கு என்ன பதில்?

ஆனால் மைத்திரியையும் அவர்களின் கூட்டையும் இறந்தகாலத்திலும் நிகழ் காலத்திலும் பார்க்கிறோம் நிலைமை அப்படி இருக்க எதிர்காலத்தை பார்க்கும் படி கூறின்……….

ஆம்! த.தே. கூட்டமைப்பினர்   ஒட்டகத்தின் கொட்டை எப்போது விழும் என அலையும் ஓநாய் போன்று  சதா ஒவ்வொரு ஒட்டகத்தின் பின்னாலும் அலைகிறார்கள். தமிழ் மக்களையும் அலையும் படி கட்டாயப் படுத்துகிறார்கள். ஆனால் அது…. விழாது என்று தமிழ் மக்களுக்கு தெரியும். அப்படி தப்பித் தவறி விழுந்தாலும் அழுகி ஒழுகித் தான் விழும். அதனை கவ்வ நாம் ஒன்றும் ஓ(நாய்கள் ) இல்லை.   அதனை கவ்வ  சம்மந்தனும், சுமந்திரனும் லாயக் கானவர்கள்தான் தமிழ் மக்களாகிய  நாம் அல்ல. சம்மந்தன் ஐயாவும் அவர்களின் காலத்தோரும் எம்மீது சுமத்திய அவச் சுமையை நாமே சுமக்கிறோம். இப்போதுபுதிய எஜமான் சுமந்திரன் கூடவே அலைகிறார். ஒன்றை நினைவிருத்துங்கள்முள்ளி வாய்க்காலுடன் போனது பிரபாகரனும் புலிகளும்  அங்கிருத்த பல மக்களும் தான். ஒட்டுமொத்த  தமிழ் மக்களும் அவர்களின்  சிந்திக்கும் திறனும்  அங்கு புதைக்கப் பட்டதாக கனவிலும் எண்ண வேண்டாம்.

  1. சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை பிரதிபலிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்தல்

 

சிறீதுங்க விஜயசூரிய

தேவை (தீர்வு/உத்தி):- சிறுபான்மை தமிழ் பேசும்  சமூகம் சிறிதுங்கவுக்கு முதல் வாக்கையும் விருப்பு வாக்கினை   நாகமுவவிற்கும் இடமுடியும். இதன் மூலம் 50% வாக்கினை  பெற முடியாத நிலை மகிந்தவுக்கோ மைத்திரிக்கோ  வருமானால் தமிழ் தரப்பும் ஸ்ரீதுங்க, நாகமுவ போன்றோரிடம் இணைந்து எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும். அவ்வாறான கோரிக்கை தமிழ், சிங்கள தரப்புகள் இணைந்து வைத்த கோரிக்கையாகவும் அமையும். (மூன்றாவது  விருப்பு வாக்கு மைத்திரிக்கு அளிப்பதை நான் உசிதமாக கருதவில்லை. சர்வதேச அழுத்தம் ஒன்றை சமன் செய்ய தமிழ் தரப்பு நினைத்தால் மூன்றாவது விருப்பு வாக்கை தமிழ் பேசும் மக்கள் மைத்திரிக்கு இடுமாறு கோரமுடியும்)

  1. தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தின் சார்பில் அவர்களின் உரிமைகளுக்கான கோரிக்கையைவைத்து ஜனாதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருத்தல்

இது காலம் கடந்து விட்ட விடயம். இருப்பினும் அந்த நன்மைகளை மூலோபாயங்கள் உத்திகள் எதுவுமற்ற  தமிழ் தேசிய கூடமைப்பு கைநழுவ விட்டது, அல்லது கைகழுவி விட்டது. கடந்த முறை தேர்தலில் சிவாஜிலிங்கம் தேர்தலில் நின்ற போது கூடமைப்பின் கூத்தையும் மீறி சிவாஜி 37000 வாக்குகளை பெற்றார். இம்முறையும் சிவாஜிலிங்கம் அவ்வாறன கோரிக்கையை வைத்தார். அதனால் அதனை தடுக்கும் பொருட்டு, சுமந்திரன் மிகவும் கீழ்த்தரமான மலிவான கேடுகெட்ட முறையில்  சிவாஜிலிங்கத்திற்கு  எதிராக குற்றச் சாட்டு ஒன்றை முன்வைத்தார். அது மகிந்தவிடம் 45 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகள் பொது எதிரணிக்கு (மைத்திரிக்கு) செல்லாமல் தடுக்க பார்கிறார் எனச் சொன்னமை. இங்கு இந்த படித்த கனவான் சுமந்திரனிடம் ஒரு கேள்வி மகிந்தவிடம் வாங்கிய 45 கோடியை வாங்கிய சிவாஜிலிங்கம், தான்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் மகிந்தவை ஏமாற்றி விட்டாரா? ……

சுமந்திரன் போன்றவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வைத்திருக்கும் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பயன்படும் கட்சியாக இருக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் தேவைகளுக்கு பயன்படுகின்ற கட்சியாக இருக்கவேண்டிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் தவிர்ந்த  மற்றவர்களுக்கு பயன்படும் கட்சியாக இருக்கிறார்கள்.

மூலோபாயங்கள் எதுவும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஆக இதுதென்னிலங்கைக்கு ஆன தேர்தல் இதில் பேரின வாத கட்சிகளுக்கு வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம்  நாம்  இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

நாம் எமது  கோரிக்கைகளை முன்வைத்து எமது நியாயங்களை தேசிய, சர்வதேசிய பரப்புக்கு நகர்த்த முடியாமல் போவது ஏன்? அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் கபடதாரிகள் யார்?

திட்டமிடப்பட்ட கூட்டு இனப் படுகொலையை இனப் படுகொலை என்று தமிழ் மக்கள் உரத்துச் சொல்ல விடாமலும்,  அவ்வாறு சொல்ல முனையும் தமிழ் தரப்பின்   குரல்  வளையை  இந்திய இலங்கை விசுவாசத்திற்காய் நெரிக்கத்துணியும் அல்லது  விட்டுக்கொடுக்கத்  துணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்தினரை நம்பியா, இம்முறையும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது குரலை எமது கோரிக்கைகளை சொல்லாமல் கைநழுவ விடப் போகிறோம்?

எமது ஆதரவு மகிந்தவுக்கா அல்லது மைத்திரிக்கா என்பதை நாம் சம்மந்தன் வந்தவுடன் அறிவிப்போம் என்கிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவானது தமிழ் மக்கள், முதல் வாக்கை ஸ்ரீதுங்க ஜயசூரியவுக்கும் , இரண்டாவது விருப்பு வாக்கை நாகமுவக்கும், ஏதாவது தகுந்த மூலோபாயம் இருப்பின் மூன்றாவது விருப்புவாக்கை  மைத்திரிக்கு அல்லது மகிந்தவுக்கோ வாக்களிக்கவும் கோர முடியும்.

இங்கே பிறிதொரு சமூக ஆர்வலர்  – சாந்தி சச்சிதானந்தம் – அவர்களின் கட்டுரையொன்றின் ஒரு பகுதி ஒன்றையும் இணைக்கிறேன். அவர் சொல்ல வரும் விடயங்களும்  தமிழ் பேசும் மக்களையும் அவர்களை வழிநடத்துபவர்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கையுடன்.

ஆட்சி மாற்றம் வரலாம், தமிழ் மக்களுக்கு சாதகமான சில சூழ்நிலைகள் உருவாகலாம். இந்த சந்தர்ப்பங்களை இலாபகரமாக உபயோகித்துக்கொள்வதற்கு தமிழர்          மட்டும் தமது மூலோபாயங்களைக் கொஞ்சமேனும் மாற்றிக் கொள்ளாமல் அன்று 1950களில் இருந்தபடியே இருக்கலாமா? ஆனால், தமிழ் தேசியக்       கூட்டமைப்பினரிடம் தமிழ் மக்களின் தலைமை இருக்கும்வரை அது அப்படித்தான் இருக்கப் போகின்றது. அவர்களுக்குள் புதிதாக சிந்திக்கக்கூடிய புதிய             தலைமுறையினர் இல்லை என்பதுடன், அவர்கள் உள்ளெடுக்கும் நபர்களும் சிங்கள தலைமைகளுடன் கெஞ்சிக் கூத்தாடி ஏதோவொரு உடன்பாடு             காண்பவர்களாகவே இருப்பார்கள். தமிழ் மக்கள் தமது நாட்டில் சிறுபான்மையினர், அவர்கள் பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு முக்கியமற்ற ஸ்திர      நிலையில் இருக்கும் ஒரு நாட்டில் வாழுகின்றனர். இந்த இரு பிரதிகூலங்களையும் கணக்கில் கொண்டு தகுந்த மூலோபாயங்களை முன்னெடுக்கும் தலைமைத்துவத்தினைத் தமிழ் மக்கள் உடனடியாகத் தேடாவிடில்,  இப்பொழுது கட்டியிருக்கும் எமது கோவணத்தினையும் இழக்க வேண்டி நேரிடும்.     என    குறிப்பிடுகிறார் சாந்தி சச்சிதானந்தம்.

எனவே ,  இந்த தேர்தல் குறித்து, இத் தேர்தலில் தமிழ் மக்களின் மூலோபாயங்கள் நிறைந்த  பொது  நிலைப்பாடு குறித்தும்  இன்னும் பலரது கருத்துக்கள்,         கட்டுரைகள்,         ஆய்வுகள்,   வரவேண்டும். அவை  துல்லியமான முறையில் தமிழ் பேசும் மக்களை சென்றடைய வேண்டும்.  நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய பொது முடிவை எடுக்க வேண்டும் என்பதையும் அதை எவ்வாறு, எப்படி வேகமாக  வெகுஜனப்  பரப்பில் கொண்டு சென்று தமிழ் பேசும் மக்கள்          ஒரு பொது முடிவினை           ஆதரித்து அதன் படி செயல்பட ஊக்கமளிக்கவேண்டும் என்பதிலும் இனிஒரு வாசகர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும்.

S.G.Ragavan –  Canada

 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றியஉரை.
சனாதிபதி தேர்தலில் என்ன செய்திட வேண்டும்? : பழ றிச்சர்ட்
Exit mobile version