இன்று ஊடகம் என்றாலே வெறும் பொழுது போக்கு சாதனமாக பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.ஒரு சிலரே அதை செய்தி அறிந்து கொள்வதற்கான சாதனமாக மட்டும்புரிந்து கொண்டுள்ளனர்.ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள புகழ்பெற்ற ஊடக விமர்சர்கரும் மொழியியலின் தந்தையுமானஅறிஞர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறுவதிலிருந்து துவங்குவோம்.
எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம்? எந்த மாதிரி யான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை பொறுத்தே ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய முடியும். அதாவது சமூகத்தை ஜனநாயகமாகவோ சர்வாதிகாரமாகவோ மாற்றுவதில் ஊடகமானது தீர்மானகரமான பங்காற்றுகிறது .
ஒரு சமூகம் அது ஜனநாயக சமூகமாக இருக்க வேண்டுமானால் மக்கள் தங்களை நிர்வகித்துக்கொள்ளும் வழிமுறைகளில் பங்கேற்பதற்கு அனைத்து வழிமுறைகளும் இருக்க வேண்டும் அதற்கான தகவல்கள் இலவசமாகவும் சுதந்திரமாகவும் கிடைக்க வேண்டும் இதுதான் ஜனநாயகம் ஆகும்.இதற்கு எதிரான நிலை .
மக்கள் தங்களை நிர்வகித்துக் கொள்வதை தடுப்பது.அதற்கான தகவல்களை வெட்டிச் சுருக்கியும் குறுக்கியும் தருவது.முழுமையான தகவல்கள் பெறவிடாமல் கட்டுபடுத்துவது.
இதன் மூலம் மக்களை அதிகாரத்திலுள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுவது.
ஊடகத்தின் மூலம் மக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விட முடியும் என்பதற்கு உலக வரலாற்றில் நடந்த இரண்டு உதாரணங்களை இங்கே காண்போம்.
1916ல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது
அத்தனை ஊடகங்களும் அனைத்து வித பொய்ப் பித்தலாட்டஙகளை கையாண்டு போர் வெறியை மக்களிடம் உருவாக்கின. ஆறே மாதத்தில் மக்கள் போர் வெறியர்களாக மாறினர்.உலகினை காப்பாற்ற வேண்டுமானால் ஜெர்மானிய மக்களை கைகால் வேறாக வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்று வெறியுடன் மாறினர்.
ஊடகம்தான் சமாதானத்தை அமைதியை விரும்பிய மக்களை இரத்த வெறி பிடித்த போர்வெறியர்களாக மாற்றியது .
இரண்டாவது வரலாற்று நிரூபணம் – ரசியாவில் புரட்சி வெற்றி பெற்றது .அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சிவப்பு வண்ணம் குறித்தும் தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டது.இதன் விளைவாக பல தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன.ஊடகத்தின் சுதந்திரமும் கருத்துச்சுதந்திரமும் ரத்து செய்யப்பபட்டது. இந்த இரண்டு வரலாற்று சம்பவங்களும் இட்லரின் கோயபல்சின் வெற்றிகரமன ஊடக பிரச்சாரத்திற்கு முன்னரே நடைபெற்றவை.
இதன் வெற்றியை முன்வைத்தே இட்லர் கோய பல்சை வைத்து வரலாற்று புகழ்மிக்க பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டான் என்பதை சாம்ஸ்கி குறிப்பிடுகிறார்.
இந்த இரண்டு உதாரணங்களையும் இங்கு விரிவாக குறிப்பிட்டதன் நோக்கமே தமிழகம் எத்தகைய அபாயத்தை நோக்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.மேலும் முக்கியமாக ஊடகமாக அதிலும் காட்சி ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது அதன் மூலம் யாரைஸயம் எப்படியும் மாற்றிவிட முடியும் என்பதை உணரவுமே இந்த வரலாற்று உதாரணங்கள்.
இப்போது தமிகத்தின் மிகப்பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்து விட்ட சன் டிவி மற்றும் கலைஞர் டிவி ஊடகங்களை பார்ப்போம்.
முதலாக ,இந்த ஊடகங்கள் எந்த நோக்கத்தோடு யாரால் நடத்தப்படுகின்றன ? அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து விட்டு திரும்பிய பேரன் கலாநிதி மாறனுக்கு பொழுது போக்கிற்கான வேலைவாய்ப்பாக கட்சிப் பணத்தில் பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது.அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்பட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்பட்டது.
80 களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட தொடங்கிய நேரம். உலக சந்தைகளின் ஒருங்கிணைப்பு நடைபெற்று கொண்டிருந்த காலம் . எந்த நாட்டவரும் எந்த நாட்டிலும் தொழில் தொடஙகலாம் அனுமதிகள் சட்டஙகள் மற்றும் உரிமங்கள் தேவையில்லை என் நாடுகளின் கதவுகள் தாராளமாக திறந்து விடப்பட தாராளமயமாக்கல் கொள்கைகள் அநேகமாக அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட துவங்கிய காலத்தில் பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் மிக விரிவான விளம்பரங்களும் தொடர்பு முறைகளும் அந்தந்த நாட்டுக்கு மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ப தேவைப்பட்டன.
பன்னாட்டு கம்பெனிகளின் சரக்குகளுககு விளம்பரங்களுக்கு அந்தந்த மொழியிலேயே தொலைக்காட்சி சேனல்கள் தேவைப்பட்டன.பன்னாட்டுக்ககம்பெனிகளின் ஒரு சரக்கு உலகம் முழுவதும் விற்கப்பட வெறும் பொருளாதார உலகமயமாக்கல் மட்டுமின்றி பண்பாட்டு உலகமயமாக்கலும் அவசியமாகும் .
அதாவது இந்திய அளவில் பல மொழி பேசும் தேசிய இனத்தின் கலாச்சார வேறுபாடுகள் பன்னாட்டுக்கம்பெனிகளின் சரக்குக்ளை விற்பதற்க இடைஞ்சலாக உள்ளன.எனவே வளமான தேசிய இன பண்பாட்டு வேறுபாடுகளை அழித்து ஒரே மாதிரியான மேற்கத்திய பண்பாட்டுடன் ஆங்கிலக்கலப்புடனான் பண்பாட்டு பரப்பல் மேற்கொள்ளப்பட வேண்டும் .இதைத்தான் எல்லா சேனல்களும் செய்கின்றன.
எல்லா சேனல்களிலும் வெள்ளைத்தோல் சிகப்பழகு தொப்புள் தெரியும் ஜீன்ஸ் உடை பீசா உணவு உள்ளிட்ட துரித உணவு, நுனி நாக்கு ஆங்கிலம் கலந்த மொழி பேசுவதுதான் சரக்கு விற்பனைக்கு சௌகரியமான ஒன்று என்பது பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார யுத்தி.
பன்னாட்டு மூலதனத்தின் இந்த தேவைகளை அமெரிக்க வார்ப்பும் இயல்பிலேயே தீவிர கம்யூனிச எதிப்பாளருமான கலாநிதி சரியாக புரிந்து கொண்டார்.(அத்துடன் அவர் முதல் முதலாக சன் டிவியை தொடங்கியதால் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பரசந்தையை கைப்பற்றுவதும் எளிமையாகிற்று. தனியார் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் அடிப்படை ஆதாரங்கள்
தொலைக்காட்சியின் உயிர்நாடியாக இருப்பது விளம்பரங்கள்தான்.எனவே விளம்பரங்களுக்கு எதிரான விடயங்களோ கம்பெனிகளுக்கு எதிரான விடயங்களோ எதுவுமே தொலைக்காட்சி சேனல்களில் இடம் பெற வாய்ப்பே இல்லை.இங்கு விளம்பரங்களுக்குத்தான் நிகழ்ச்சிகளே அன்றி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்கள் அல்ல.நாட்டின் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தையையும்(பெருந்தன்மையுடன்தான்) வழங்குவது பெப்சியாகவோ அல்லது யூனிநாராக இருக்கும்.எனவே அதிகமான சந்தையைக்கொண்ட(பார்வையாளர்களைக்கொண்ட)ஒரு நிகழ்ச்சிக்குத்தான் கம்பெனிகள் விளம்பரதாரர்களாக இருப்பர்.
எனவே முழுமையாக செய்தி உட்பட விளம்பரதாரர்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படும்.என்வே சமூக சிந்தனையாவது பெரியார் மொழியில் சொன்னால் வெங்காயாமாவது,இங்கு எப்போதும் இலாப நோக்கம்தான்,விளம்பரத்திற்குத்தான்.
விளம்பரங்களுக்கான கட்டணம் வினாடிக்கு இவ்வளவு எனவும் ஒரு நாளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையையொட்டி பிரைம் டைம் பாதி பிரைம் டைம் கால் பிரைம் டைம் (மாலைநேரம்,பிற்பகல் மற்றும் காலை நேரம் ) என பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
வலிமையான அரசியல் அதிகார பலத்துடன் முதன்முதலாக தனியார் தொலைக்காட்சியாக களமிறங்கிய சன் டிவியின் இலாபம் பத்தாண்டுகளுக்கு முன்னதாக சில நுறு கோடிகளாக இருந்தது, இப்போது பல ஆயிரம் கோடிகளைத்தாண்டி விட்டது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.இன்று சன் டிவி நெட்வொர்க்கில் 95 மில்லியன் குடும்பங்களை(ஒன்பதரைக்கோடி) சென்றடையும் 20 சேனல்கள்உள்ளன.
வெளிநாடுகளில் வாழும் தென்னிந்தியர்களைக் அதிகம் கொண்டஅமெரிக்கா,கனடா,சிங்கப்பூர், மற்றும் மலேசியாஇலங்கை,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து போன்ற 27 நாடுகளிலும் சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு எட்டுகிறது. 45 எஃஎம் வானொலி நிலையங்களை வைத்துள்ளனர்.கூட்டாக 1.2 மில்லியன் விற்பனை கொண்ட 2 நாளிதழ்கள்,4 பருவ இதழ்கள்,5.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் சன் டைரக்ட் டி.டி.எச் சேவை,கேபிள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை கையில் வைத்திருக்கும் 90 கோடி ரூபாய் புரளும் சுமங்கிலி கேபிள் விஷன் என்ற கிளை நிறுவனம்.இவ்வளவு நிறுவனங்களோடு 2007 முதல் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத் தொழிலும் இறங்கியுள்ளது. (திரைப்படத்துறையிலுள்ள ஆதிக்கம் குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்)சன் நெட் வொர்க்கின் மொத்த மதிப்பு ரூ 1000 கோடி.
மும்பை பங்குச் சந்தை இணையதளம் அளித்துள்ள தகவலின்படி
சன் நெட் வொர்க்கின் மொத்த பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 18 ஆயிரத்து 307 கோடி.சன் குழுமத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூபாய் 464 ஆகும்.சமீபத்தில் விமானப் போக்குவரத்து துறையிலும் நுழைந்திருக்கிறது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 37.7 விழுக்காடு பங்குகளை வாங்கி இருக்கிறது.இன்று இந்திய அளவில் அதிலும் தனியார் துறையில் அதிக சம்பளம் ஈட்டும் மூத்த நிர்வாகி கலாநிதி மாறன்தான்.அவரது சம்பளம் ரூ 37 கோடிரூபாய் ஆகும்.
ஆக,ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சன் நெட் வொர்க் இன்று ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டுக்கம்பெனியாக வளர்ந்துள்ளது என்பது வெளிப்படையானது. சன் டிவி நெட்வொர்க் பன்னாட்டு மூலதனத்தின் உறுதியான கூட்டாளியாக அதன் பண்பாட்டு ஆன்மாவாகவும் செயல்படுகிறது.அது மக்களின் பார்வையில் அவர்களுக்கு சாதகமாக அதிலும் தமிழர்களுக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும் என்று நினைப்பதும் எதிர்பார்ப்பதும் எவ்வளவு பாமரத்தனமானது?
கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக ஈட்டும் சன் டிவி நெட்வொர்க் என்ற பன்னாட்டுக் கம்பெனியின் உண்மை முகத்தை அதாவது அதன் பண்பாட்டு முகத்தை காண்போம்.
உலகமயமாக்கலின் கொள்கைகளின் உருட்டு திரட்டு
சன் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையான பொழுது போக்கு சார்ந்த நிகழ்ச்சிகளாக உள்ளன.அதில் 80 விழுக்காடு சினிமா சார்ந்தவை. மீதி யுள்ளவை நகரஞ்சார்ந்த மேட்டுக்குடி மக்களினால் தயாரிக்கப்பட்டு அவர்களின் பார்வையில் முன் வைக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகம் என்பது வெறும் பொழுது போக்கிற்கான விடயம் அல்ல .ஊடகத்தின் மூலமாக நல்ல கருத்துகளை கூறி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மிக சொற்பமான அளவில் அரசல் புரசலாக வாதங்கள் நடந்து வந்தன.சன் டிவி வந்த பின்னர் அந்த பார்வையையே முற்றிலுமாக ஒழித்து கட்டி ஊடகம் என்பதை மாற்றுக்கேள்விக்கே இடமில்லாத ஒரு பொழுது போக்கு தொழிற்சாலையாக மாற்றியது.
இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிகழ்ச்சிகளும் இல்லை ,நிகழ்ச்சிகளில் இடமுமில்லை.இங்கு சிகப்பழகும் வெள்ளைத்தோலும் கவர்ச்சியும்தான் இடம்பெறுவதற்கான தகுதி என்ற நிறவெறி இனவெறி மற்றும் சாதியம் கலந்த பார்வையே உள்ளது .வெயிலில் உழைத்து கருத்துப்போன முகங்களுக்கு இங்கு இடமில்லை.
கிராமங்களில் மிகப்பெரிய அளவில் மரணங்கள் நிகழ்ந்தால் அல்லது விசித்திரமான மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டாலோதான் கிராமப்புற மனிதர்கள் சின்னத்திரை வெளிச்சத்திற்கு வருவார்கள். கருப்பு நிறத்தை உடையவர்கள் சாதாரண தோற்றம் உடையவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களால் சாதனைகளை படைத்த பெரிய திரை உலகில் நடைபெற்ற எந்த மாற்றங்கள் சின்னத்திரை உலகில் நுழையக்கூட முடியவில்லை.
நிறத்தில் அப்படி ஒரு பாகுபாடு காட்டப்படும்போது சாதி யப்பாகுபாடு என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.துப்புரவுத் தொழிலாளி நிலைக்கு மேல் எந்த தலித் மக்களுக்கும் இடம் இருந்ததில்லை.அவர்கள் நிகழ்ச்சி தயாரிப்பில் இடம் பெறுவது நினைத்து பார்க்க முடியாதது.
25 ஆண்டுகளுக்கு முன்னதாக வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் அட்டைபடங்களில் ஆபாசப்படங்கள் போட்டதற்கு எதிர்ப்பு போராட்டஙகள் நடத்தப்பட்டு அப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டன எ
இன்று அதை விட பல மடங்கில் ஆபாச நடனங்களுடன் திரைப்பட விழாக்களை ஒளிபரப்பி வருகிறது.பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் சன் டிவியின் கொள்கை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மாறியதே இல்லை. எப்படியும் வாரம் ஒரு திரைவிழாவோ பாராட்டு விழா அல்லது முதல்வருக்கு பாராட்டு விழா நடந்தால் அதன் ஒளிபரப்பு உரிமையை பெறுவதில் கலைஞர் டிவிற்கும் சன் டிவிக்கும் கடும்போட்டியே நடைபெறுகிறது.
கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆடவரெல்லாம் ஆட வரலாம் என்ற வெளிப்படையான ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி கடும் கண்டனத்திற்குள்ளாகி அந்நிகழ்ச்சியை கைவிட்டது நினைவுக்கு வரலாம். சன் டிவியின் ஆபாசக் கலாச்சாரத் தொழிற்சாலையின் உற்பத்தியை பற்றி மக்களுக்கு இன்னும் விரிவாக கூற வேண்டிய அவசியமே இல்லை.நித்யானந்த விவகாரம் குறித்த அதன் நீலப்பட ஒளிபரப்பு ஒன்றே போதும்.
சரி,பெரும்பான்மையான மக்களான விவசாயிகள் ,தொழிலாளர்கள் தலித் மக்கள் ஆகியோருக்கு சன் டிவியில் இடம் பெறுவதில்லை என்றால் யார் தான் அதில் இடம் பெறுகிறார்கள் ? வேறு யார் .நடிக நடிகைகள்தான்அதில் சந்தேகமே வேண்டாம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சன் டிவியின் தொடக்க நாளிலிருந்தே எனலாம்,அது தீபாவளி,பொங்கல் கிருத்துமஸ்(ரமலானுக்கும் பக்ரீத்திற்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது வேறுவிடயம்)சுதந்திர நாளாக இருக்கட்டும் அல்லது எந்த நாளாக இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் தமிழ் மக்கள் தரிசனம் செய்வது ஏதாவது சினிமாக்காராக இருப்பார்கள்.ஒரு நாடு என்றோ மக்கள் என்றோ சினிமாக்காரர்களைத்தான் சன் டிவி கருதுகிறது.ஆதாரம் வேண்டுமென்றால் நீங்களே சோதித்து பாருங்கள். குடியரசு தினத்தன்று குடியரசு நாளின் பெருமை குறித்து அசினோ நயன்தாரவோ பேட்டி அளித்து கொண்டிருப்பார்கள்அதே போல தமிழர் திருநாளன்று தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தமன்னா கலந்துரையாடிக் கொண்டிருப்பார். இந்த பண்பாட்டு ஆதிக்கமும் சீரழிவும் இத்தோடு சன்டிவி நிறுத்திக்கொள்கிறதா?மற்ற பரிமாணங்களை வரும் இதழ்களில் காண்போம்…..,
இன்று நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள நமது பரீசிலினையை 20 ஆணடுகளுக்கு முன் செல்வோம்
(தொடரும்)