Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

அவர்கள் வரித்துக்கொண்ட வழியும்இ புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை.

ஒரு புறத்தில் இலங்கை அரசின் பெருந்தேசிய வாத ஒடுக்கு முறை அத்தனை தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரையும் பாதித்தது. இன்று உருவாகியிருப்பது போல் அந்த ஒடுக்குமுறை வெளிப்படையான இராணுவ சர்வாதிகார ஒடுக்குமுறையாக இல்லாதிருப்பினும் அதன் நச்சுவேர்கள் அனைத்துத் தளத்திலும் பரந்திருந்தது. பண்பாடு,கலாச்சாரம், கல்வி, சமூக உறவு, அரசியல்,பொருளாதாரம் என்ற அனைத்து சமூகம் சார்ந்த அம்சங்களுள்ளும் பேரினவாதம் புகுந்து கோரத் தாண்டவமாடியது.

இலங்கை என்ற குட்டித் தீவு தமிழ்ப் பேசுகின்ற சிறுபான்மையினர் வாழ முடியாத நிலப் பகுதி என்பதை பெருந்தேசிய வாதிகள் தமது துப்பாக்கிகளை உயரே தூக்கிக் குரல் கொடுத்த போது சிரம் தாழ்த்தியவர்களா இவர்கள்? நாமும் வாழ்ந்து காட்டவேண்டிய நமது சொந்த நிலம் என தன்னம்பிக்கையோடு முன்வந்தவர்கள்.

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் இனிவரும் பதிவுகள் எங்கும் குறிப்பான சந்தர்ப்பங்களில் வெளிவருமாயினும் அவர்கள் தொடர்பான ஆரம்பக் குறிப்புகளைச் சுருக்கமாக தருகிறேன்.

பிரபாகரன் : துரையப்பா கொலைச் சம்பவத்திலிருந்து எமக்கெல்லாம் ஒரு கதாநாயகன் போன்று உருவாகியிருந்த பிரபாகரன் தனது பதினேழாவது வயதுமுதல் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகள், சரணடைவுகள் இன்றிப் போராட வேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்டிருந்த இவர் தூய இராணுவ வழிமுறைக்கு அப்பால் எதையும் சிந்திததில்லை. சுபாஸ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார். தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும் இருந்ததில்லை. இந்த மூவரும் இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான் காரணமாக இருந்தது.

இராணுவ நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார். ஆங்கில நூல்களைக் கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஊடாக வாசித்து அறிந்து கொள்வார். ஆயுதங்களைக் கையாள்வதில் திறமைபெற்றவர். தாக்குதல் சம்வங்கள் நிகழும் போது துணிகரமாகச் செயற்படுபவர். உமாமகேஸ்வரன் தலைவராக இருந்த வேளையிலும் கூட முடிவுகளை முன்வைக்கும் தலைமைத்துவம் பிரபாகரனிடமே இருந்தது. அனைத்தையுமே இராணுவ ஒழுக்கப் பிரச்சனையாக முன்வைக்கும் பிரபாகரன் இவ்வெhழுக்க முறைகளை மீறுவோரை துரோகிகளாகக் கருதினார். இராணுவ ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் துரோகிகள் அழிக்கப்பட்டார்கள். தனது சொந்த நலனுக்கான அழிப்பு என்பதைவிட இராணுவ ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான செயலாகத் தான் இவற்றைக் கருத முடியும். முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த பிரபாகரன் அரசியல் வழிமுறைகள், மக்கள் அமைப்புக்கள், வெகுஜன முன்னணி போன்ற எந்த வழிமுறைகள் ஊடாகவும் போராட்டத்தை உருவமைப்பது குறித்துச் சிந்தித்ததில்லை.

பிரபாகரனின் இலகுவான சமன்பாடு என்பது தமிழ் மக்கள் இராணுவ ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள் பலமான ஒழுக்கமான இராணுவத்தைக் கட்டமைத்து மட்டுமே விடுதலையடைய முடியும் என்ற வரையறைக்குள்ளே அமைந்தது.

செல்லக்கிளி: செல்லக்கிளி ஒரு நல்ல உழைப்பாளி. மத்தியதர வர்க்கத்தின் கீழணியைச் சார்ந்த இவர் உடலுழைப்பில் உறுதிவாய்ந்தவர். ஆயுதங்களைக் கையாள்வதில் மிகத்திறமையானவர். பெருமளவில் படித்திராத செல்லக்கிளி ஆயுதங்கள் தொடர்பான நல்ல அறிவைப் பெற்றிருந்தார்.வேட்டையாடும் திறமை கொண்ட செல்லக்கிளி செட்டியின் உறவினராவார். குறும்புத்தனம் மிக்கவர். எம்மத்தியில் இருந்தவர்களுள் பிரபாகரனை ஒருமையில் அழைப்பவர் செல்லக்கிளி ஒருவர்மட்டுமே. சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி நடந்துகொண்டாலும் செல்லக்கிளி மீது அனைவரும் அன்பு வைத்திருந்தோம். உரம்மிக்க இன்னொரு போராளி. கல்வியங்காடு இவரது சொந்த இடமாயினும் உடையார்கட்டிலேயே தோட்டம் செய்து வாழ்ந்தவர் செல்லக்கிளி. இலங்கை அரச படைகளுக்கு எதிரான தாக்குதலின் போது 1983 ஆம் ஆண்டு யுலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியில் மரணமடைந்தார். இவரது மரணம் தொடர்பாக வேறுபட்ட குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன.

பேபி சுப்பிரமணியம்: தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து அரசியலுக்கு வந்தவர். புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவர். தீவிர எம்.ஜீ.ஆர் ரசிகன். இயக்கம் பிளவுப்பட்ட காலத்தில் கூட பிரபாகரனோடு இருந்தவர். மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளைச் சேர்ந்த இவர் காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

குலம்: குலம் எனது பால்ய நண்பனும் எனது ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் ஆரம்ப்பத்திலிருந்தே எம்மோடு பங்களித்தவர். அவ்ரோ விமானக் குண்டு வெடிப்பின் பின்னர் சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். மிக நேர்மையான போராளி.இன்றும் கூட இயக்கத்திற்காக கடனாளியாகிப் போன ஒருவர் இவராகத் தான் இருக்கமுடியும். இன்றுவரை தனக்காக எதையுமே சேர்த்துக்கொள்ளாத அர்ப்பண உணர்வு மிக்கவர். தன்னை முழுமையாக இயக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்தவர். மத்தியதர வர்க்க குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இயக்கத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று ஆரம்பத்தில் மேற்கொண்ட முடிவிற்கு இணங்க இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலிருந்த கொள்கைப் பிடிப்பாளன். பிரபாகரன் திருமணம் செய்துகொண்ட போது கூட கடுமையாக விமர்சித்தவர். உறுதிமிக்க போராளி. ஏனையோருக்கும் நம்பிக்கை தரவல்ல மனோவலிமையுள்ளவர்.

நாகராஜா: காங்கேசந்துறையைச் சேர்ந்தவர். துரையப்பா கொலை மேற்கொள்ளப்பட்ட வேளையில் இவரது ரியூசன் நிலையத்திலேயே பிரபாகரன் உள்பட பலரும் தங்கியிருந்தனர். அதற்குரிய அனைத்துச் செலவுகளையும் மிகுந்த இராணுவ அடக்குமுறைகளின் மத்தியில் மேற்கொண்ட நாகராஜா உற்சாகமான போராளி. மத்தியதர வர்க்கக் குடும்பப் பின்னணியைக் கொண்ட நாகராஜா பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை பார்தவர். பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பியவர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்தவர் நாகராஜா. வீ.பொன்னம்பலம் என்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் பின்னாளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டவருடைய அனுதாபி ஒப்பீட்டளவில் அரசியல் ஆர்வமுடையவாராயிருந்தார். தந்தையற்ற குடும்பத்தைச் சார்ந்த இவரின் உழைப்பிலேயே முழுக்குடும்பத்தையும் பராமரிக்க வேண்டிய நிலையிலிருந்தாலும் போராட்ட உணர்வோடு எம்முடன் தீவிரமாக உழைத்தவர்.

விச்சு : லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்து கொண்டவர். எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் பேசத்தெரிந்த போராளிகளுள் இவரும் ஒருவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னதாக லண்டனிலிருந்து செயற்பட்ட சார்ல்ஸ் போன்றோரின் கருத்துக்களோடு உடன்பாடுகொண்டு இயக்கச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டவர்.

ராகவன்: ஆரம்ப காலத்திலிருந்தே புலிகளோடு தொடர்பு நிலையிலும். உறுப்பினராகவும். தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்தவர். காலத்திற்குக் காலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்து பின்னர் இணைந்து கொள்வதுமாக இருந்த இவர் மிகுந்த மனிதாபிமானி. மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் எனது ஊரைச் சேர்ந்தவர். முதலில் பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். என்னோடு இவரும் ஆரம்பத்திலிருந்தே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் இவர் கல்விகற்றுக்கொண்டிருந்தார்.

ஜோன் என்ற சற்குணா : வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர் பிரபாகரனின் தூரத்து உறவினர். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். புளியம் குளம் பண்ணை இருந்த இடம் இவருக்குச் சொந்தமானதே. அரசியல் ரீதியான உணர்வுகளால் உந்தப்பட்டு இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் என்பதை விட ஆரம்பத்தில் பிரபாகரனின் தனிப்பட்ட தொடர்புகளூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்திலிருந்து பண்ணைகளில் தன்னை அர்ப்பணித்து வேலைசெய்த இவர் மிகவும் உறுதியான போராளி.

கறுப்பி என்ற நிர்மலன்: முதல் முதலில் பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்காக நான் பலருக்காகக் காத்திருந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்த ஒரே ஒருவர் நிர்மலன் தான். சற்றுக் கருமை நிறம் உடையவராதலால் செல்லக்கிளி தான் இவருக்குக் கறுப்பி என்று பெயர்வைக்கிறார். யாழ்ப்பாண நகரத்தைச் சேர்ந்த நிர்மலன் மிகுந்த விழிம்புனிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பேரவையுடன் முன்னதாக இவருக்குத் தொடர்புகள் இருந்தது. அர்ப்பண உணர்வுமிக்க போராளி இவர். இன்று வாழ்விழந்து பரிதாபகரமான நிலையிலிருப்பவர்களுள் இவரும் ஒருவர்.

சித்தப்பா : லொறி ஒன்றில் சாரதியின் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னதாக இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே எம்மோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்தவர். பற்குணம் ஊடாக பிரபாகரனிற்கு பழக்கமானவர். அவரூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பற்குணம் கொலையுண்ட செய்தி இவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. சுதுமலையைச் சேர்ந்த இவர் அன்னிய நாடொன்றில் இப்போது வாழ்கிறார். பெரிதாக எழுத வாசிக்கத் தெரியாதவராயினும் கிளித்தட்டு விளையாட்டில் மிகத் திறமை வாய்ந்தவர். தொலைக் கிராமங்களில் இருந்து கூடக் கிளித் தட்டு விளையாட்டிற்காக இவரைத் தேடி வந்து அழைப்பவர்கள பலர்.

தங்கா : கூட்டணியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளராக இருந்து இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கூட்டணியின் மிக முக்கிய உறுப்பினரின் சகோதரர் இயக்கம் பெரிதாகிச் சுய செயற்பாடுகள் அதிகரிக்க இயக்கத்திலிருந்து தானாகவே விலகிக் கொண்டார்.

நிர்மலன். சித்தப்பா. சற்குணா போன்ற மூவரினதும் பங்கும் அர்ப்பணிப்பும் இன்றும் எனது எண்ணங்களைத் துரத்துகிறது. பண்ணைகளில் இருண்ட காடுகளின் மத்தியில் தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். கொடிய வன விலங்குகள் தனிமை வறுமை அனைத்துக்கும் மத்தியில் போராட்ட உணர்வோடு உறுதியாக வாழ்ந்திருக்கிறார்கள். சுகாதாரம் மருத்துவம் போன்ற வசதிகளின்றி பல நாட்கள் நோயால் வாடியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தால் போராட்டத்தை வழிநடத்தும் பெரும் தலைவர்களாகியிருக்க முடியும்.

மாணவர்பேரவை தீவிரமாக உருவான வேளையில் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்தவர்கள் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஆங்கிலம் பேசும் கனவான்கள் என்று ஒரு பெரிய கல்விகற்ற இளைஞர் கூட்டமே பங்களித்திருந்தது.

அவர்களின் சட்டரீதியான உணர்ச்சிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக எம்மால் முன்னெடுக்கப்பட்ட போது இந்தப் படித்த இளைஞர்கள் எவரையுமே காண முடிவதில்லை. தான் தனது குடும்பம் தாம் சார்ந்த சமூகமும் அதன் மத்தியிலான அந்தஸ்து என்ற சமூக வரம்புகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

சற்குணா. நிர்மலன். சித்தப்பா போன்ற இளைஞர்கள் தமது ஒவ்வொரு அசைவையும் இளைஞர் பேரவையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாக்கிய உணர்ச்சித் தீக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

பண்ணைகள் பெருகி இயக்கம் ஓர் அமைப்பு வடிவை தகவமைத்துக் கொண்ட வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான தொடர்பு முற்றாகவே அற்றுப் போயிருந்தது.

பாலா : உரும்பிராயைச் சேர்ந்த இவர் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக சிறிய கடை ஒன்றை வைத்திருந்தவர். கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். உரும்பிராய் கொலைச் சம்பவத்தின் பின்னர் எம்மோடு முழுமையாக இணைந்து கொண்டவர்.

உமாமகேஸ்வரன் : தெல்லிப்ப்ளையைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுள் இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த மிகச் சிலருள் இவரும் ஒருவர். நேர்மை மிக்க இவர் தாக்குதல்களில் முன்நிற்கும் துணிச்சல் நிறைந்த போராளி. நில அளவையாளராகச் தொழில் பார்த்துக்கொண்டிருந்த உமாமகேஸ்வரன்இ தனது தேசிய அரசியலிலான ஆர்வத்தையும் செயற்பாட்டையும் மாணவனாக இருந்த காலப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார். தமிழ்ப் புதிய புலிகளாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் எம்மோடு இணைந்து கொண்ட உமாமகேஸ்வரன்இ இதற்கு முன்னதாக அகதிகளுக்கு உதவும் மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். புலிகளில் இணைந்து கொண்ட சில காலங்களிலேயே பிரபாகரனின் சிபார்சின் அடிப்படையில் மத்திய குழுவில் அமைப்பின் தலைவராகத் தெரிவுசெய்யப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சாந்தன் : கொழும்பில் இருந்து எம்மோடு இணைந்து கொண்டவர் படித்த மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர் இவர். இயல்பாக ஆங்கிலம் பேசக் கூடிய இவர் தான் பிரபாகரனுக்கு ஆயுதங்கள் குறித்த ஆங்கிலப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவார். எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைமைப் பண்புடைய ஒருவர். ஓரளவிற்கு வசதியான நகர்புறக் குடும்பச் சூழலிலிருந்து எம்மோடு இணைந்து கொண்ட சாந்தன் பண்ணை வாழ்க்கைக்காக எப்போதுமே முகம் சுழித்ததில்லை. அனைவரோடும் உணர்ச்சிவயப்படாமல் அன்போடு பழகும் தன்மை படைத்தவர்.
எமது காலை உணவு மிளகாய்த் தூளோடு பிசையப்பட்ட தேங்காய்த் துருவலும் பாண் துண்டுகளும் மட்டும் தான். இதுவே பல மத்தியதர வர்க்க இளைஞர்களுக்குக் கசப்பான அனுபவமாக அமைந்திருந்தது. அதுவும் தட்டுப்பாடாகும் நாட்களும் இருந்ததுண்டு. சாந்தன் இந்த உணவை எந்ததத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார். மிகுந்த மனிதாபிமானி. அவ்ரோ விமானக்குண்டு வெடிப்பின் போது சிங்கள மக்கள் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்று ராகவன் என்னோடு சேர்ந்து சாந்தனும் எதிர்த்தரர்.

குமணன் என்ற குணரத்தினம் : கோண்டாவிலைச் சேர்ந்த வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நிர்வாகத் திறனும் அர்ப்பணமும் மிக்க ஒரு போராளி. பண்ணைகளுக்குச் சென்றுவருதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் எனக்கு உதவியாகச் செயற்பட்டார். கோண்டாவிலில் பிரபாகரனுடைய தொடர்பாளர் ஒருவரின் ஊடாக இயகத்தில் இணைந்து கொண்டவர். இயக்கத்தில் இணைவதற்கு முன்னர் கல்விகற்றுக்கொண்டிருந்தவர்.

திருகோணமலைத் தொடர்புகளைக் கையாண்டவ்ர் குமணன் தான். திருகோணமலையில் பயஸ் மாஸ்டர் என்ற இடது சாரித் தத்துவங்களோடு ஈடுபாடுகொண்ட ஒருவரோடு குமணனுக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. திருகோணமலையில் இருந்தவர்களுக்கு பயஸ்மாஸ்டர் தனது தத்துவார்த்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். புலிகள் பிளவுற்ற வேளையில் புதிய பாதையில் பிரதான பாத்திரம் வகித்தவர். குமணன் பாத்திரம் குறித்த தனியான பகுதியில் இவர் குறித்து மேலும் பேசலாம். இவர் புலிகளால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

மாதி: இவர் கொழும்பிலிருந்து வந்து இணைந்து கொண்ட இன்னொருவர். பின்னர் பண்ணை ஒன்றிற்குப் பொறுப்பாக இருந்தவர்.

பண்டிதர் : கம்பர்மலையைச் சேர்ந்த இவர் மிகுந்த தமிழுணர்வு மிக்கவர். ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் பேச வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வமுள்ளவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைப் பேச்சுக்களின் போது காசியானந்தனுக்கு இரத்தப் பொட்டு வைத்தவர். இவர் இணைந்து கொண்ட காலத்திலிருந்தே பண்ணைகளில் வாழ்ந்தவர். மிகுந்த பொறுப்புணர்வு படைத்தவர். இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டவர்.

 

சுந்தரம்: சுழிபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் எளிமையான போராளி. காந்தீயம் அமைப்பில் அகதிகளுக்கான வேலைகளில் ஈடுபட்டவர். எப்போதும் அரசியலுக்காகவும் புலிகள் அமைப்பிற்காகவும் தொடர்ச்சியாக உழைத்தவர். தனக்காக எந்த வசதியையும் எதிர்பார்ப்பவரல்ல. இடதுசாரியான எம்.சி.சுப்பிரமணியத்தோடு தொடர்புகொண்டிருந்த சுந்தரம் பின்னதாக தேசியப் போராட்ட உந்துதலால் புலிகளில் இணைந்து கொண்டார்.புலிகளிலிருந்து விலகிய பின்னர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை பதிப்பித்திக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டவர் தலைமைப் பண்பு மிக்க போராளியான சுந்தரம் ஆயுதப் பயிற்சியிலும் திறமை வாய்ந்தவர். 1982 தை 02ம் நாள் யாழ் சித்திரா அச்சகத்தினுள் வைத்து பின்னிருந்து சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
 

ரவி அல்லது பரா : புலோலி வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவராக இருந்ததால் பொலிசாரால் தேடப்பட்ட ரவி பின்னதாகப் புலிகளோடு இணைந்து கொண்டார். தேடப்படுகின்ற காலப்பகுதிகளில் டொலர்.கென்ட் பாம் போன்ற காந்தியப் பண்ணைகளில் தலைமறைவாக இருந்தவர். முத்தயன் கட்டுக் பண்ணைக்குரிய நிலம் ரவியினுடையதே. சண்டிலிப்பாயைச் சேர்ந்த ரவி இப்போது அன்னிய நாடொன்றில் வாழ்கிறார். உமாமகேஸ்வரனின் தொடர்புகளூடாக புலிகளில் இணைந்து கொண்டவர்.

மாத்தையா அல்லது சிறி : மிகவும் வறிய மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த மாத்தையா பொலிகண்டி மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர். வறுமை நிழலோடு தனது பிள்ளைப் பருவத்தைக் களித்தவர் தற்பெருமையற்ற அனைவரோடும் சகஜமாகப் பழகவல்ல போராளி. வல்வெட்டித் துறையில் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் இல்லை.

கிட்டு, பிரபாகரன் போன்றோர் மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள ஆயினும் மீன்பிடித் தொழிலை வாழ்கையாக கொண்டவர்களாக இல்லை பிரபாகரனின் தொடர்புகளின் ஊடாகவே புலிகளில் இணைந்துகொண்ட மாத்தையா பிரபாகரனின் அதீத மரியாதை உடையவராகக் காணப்பட்டார். மிகவும் விசுவாசமான உறுதிமிக்க போராளி. மாத்தையா அல்லது சிறி குறித்த விரிவான பதிவுகள் இன்னும் தொடரின் ஏனைய சம்பவங்களோடு வரும்.விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக 80 இன் இறுதிப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மாத்தையா பின்னர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டார்.

கிட்டு : இந்தியக் கடற்பரப்பில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட கிட்டு எம்மோடு பண்ணைகளில் வேலை செய்த இன்னுமொரு போராளி. இவர் துடிப்பான இளைஞன். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மத்தியதர வர்க்க சமூகப் பின்னணியைக் கொன்டவராகும். இவரின் நடவடிக்கைகள் காரணமாக நான் இவர் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இவரப் பண்ணையிலிருந்து வெளியேற்றிய சம்பவமும் எனது நினைவுகளுக்கு வருகிறது. பண்ணைகளில் வழங்கப்படுகிற உணவின் தரக்குறைவிற்காக எனையவர்களுடன் மோதிக்கொள்வார். ஒரு கால அட்டவணைப் படி ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் சமையல் வேலைகளில் ஈடுபடுவார்கள். பண்ணைகளில் நபர்களின் தொகையைப் பொறுத்து சில சமயங்களில் மூன்றுபேர் கூடச் சமையலில் ஈடுபடுவார்கள். இந்த வேளைகளிலெல்லாம் போராளிகளிடையே பிரச்சனை எழுவதும் அதனை சமாதானப்படுத்துவதற்காக எனது நேரத்தின் ஒருபகுதியைச் செலவிடுவதும் வழமையாக இருந்தது.

குமரப்பா : புத்தகங்களை வாசிப்பதும் புதியவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம்மிகுந்த எம் மத்தியிலிருந்த சிலருள் இவரும் ஒருவர். தனக்குச் சரியெனப்பட்ட கருத்தை முன்வைக்கும் திறமையுள்ளவர். பிரபாகரனது அதே உரைச் சேர்ந்த இவர் அவரை தனது ஊர்க்காரார் என்று கூடப்பார்க்காமல் விமர்சிப்பவர். மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட வறிய குடும்பத்தைச் சார்ந்தவர் இவர்.இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த காலப்பகுதியில் சிறையில் சயனைட் வில்லைகளை உட்கொண்டு தற்கொலைசெய்து கொண்டவர். புலிகளில் பிளவு ஏற்பட்ட வேளையில் எந்தப்பக்கமும் சாராது விலகியிருந்த குமரப்பா 83 இனப்படுகொலையின் பின்னரே மறுபடி புலிகளில் இணைந்து கொண்டார்.

சங்கர் : பண்டிதரின் ஊரான வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள கம்பர்மலையைச் சேர்ந்த சங்கர் பண்டிதராலேயே புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர். உறுதியான போராளி. புலிகள் மீதான மிகுந்த விசுவாசத்தோடு செயற்பட்டவர். நிர்மலாவின் வீட்டிற்கு தகவல் சொல்லச் சென்ற வேளையில் இராணுவத்தால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டவர். பின்னர் இந்தியாவிற்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு மரணமானவர்.

காத்தான் : உமாமகேஸ்வரனுடைய தொடர்புகளூடாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கராத்தே பயிற்சிபெற்ற இவர் உடல் உறுதியும் மனோவலிமையும் மிக்கவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னதாக உமாமகேஸ்வரனின் தலைமையிலான புளொட் அமைப்பில் இணைந்து கொண்டவர் இலங்கை இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டவர்.

பீரீஸ் : வடமராட்சியைச் சேர்ந்த இவர் வள்ளிபுரம் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்து நிர்வகித்தவர். வறிய குடும்பத்தைச் சேர்ந்த பீரீஸ் புலிகள் பிளவுபட்ட போது இயக்கத்திலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டவர்.இப்போது எங்கு வாழ்கிறார் எனத் தெரியவில்லை.

இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இராணுவ அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இவர்கள் தேசிய உணர்வு மிக்க உறுதிமிக்க போராளிகளாகக் காணப்பட்டனர்.

யோகன்(பாசி) : பண்டிதர் தான் இவ்வாறான போர்குணம் மிக்க ஒருவர் மட்டக்களப்பில் இருப்பதாக எங்களுக்குத் தெரியப்படுத்தினார். காசியானந்தனோடு இவருக்குத் தொடர்புகள் இருந்தது. காசியானந்னைத் தொடர்புகொண்டால் யோகனைத் தொடர்புகொள்ள முடியும் என்று அறிந்து கொண்டு அவரூடாக யோகனைத் தொடர்புகொண்டு இணைத்துக் கொள்கிறோம். நாகராஜாவும் உமாமகேஸ்வரனும் மட்டக்களப்பிற்குச் சென்று யோகனோடு இன்னும்  இருவரை சேர்த்து எமது பண்ணைகளுக்கு அழைத்து வருகின்றனர். மரைக்காயர், பவானந்தன்  ஆகியோரும் எம்மோடு இணைந்து கொள்கின்றனர். யோகன் பின்னர் புலிகளோடு தீவிரமாகச் செயற்பட்டவர். பவானந்தன் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகிப் போனவர். ஏனைய இருவர் குறித்த தகவல்கள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.
இதன் பின்பதாக காந்தன் இந்திரன் என்ற வேறு இருவரும் கிழக்கிலிருந்து எம்மோடு இணைந்து கொண்டனர். காந்தன் மிக உற்சாகமான போராளி புலிகளின் பிளவின் போது ஒதுங்கியிருந்தாலும் 83 படுகொலைகள் ஏற்படுத்திய உணர்வலைகளின் தொடர்ச்சியாக மறுபடிசென்று புலிகளோடு இணைந்துகொண்டவர்.

மனோ மாஸ்டர் : பண்ணைகள் விரிவiடந்த காலப்பகுதியில் எம்மோடு இணைந்து கொண்டவர்களுள் மனோமாஸ்டர் குறிப்பிடத் தக்கவர். பின்னதாக இவரின் விரிவான பங்களிப்பு விபரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மனோ மாஸ்டர் உறுதியான பொறுப்புணர்வுள்ள போராளியாகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகப் படிப்பை தொடராமல் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பண்ணைகளை நிர்வகிப்பதில் என்னோடு இணைந்து செயற்பட்ட இவர் திருகோணமலை,மட்டக்களப்புப் பகுதிகளின் பண்ணைத் தொடர்புகளை பேணுவதில் முக்கிய பங்கு வகித்தவர். கம்பர்மலையைச் சேர்ந்தவர்.

இவர் புலிகளில் இணைந்து கொண்ட சில நாட்களிலேயே மார்க்சிய நூல்களைப் படிக்குமாறு எமக்கு முதலில் கூறியவர். ஆளுமை மிக்க மனோமாஸ்டர் ஜெயாமாஸ்டர், ஜான் மாஸ்டர் போன்றோரோடு மார்க்சிய விவாதங்களில் ஈடுபடுவதாகக் எனக்குக் கூறியிருந்தார். 84 நான்காம் ஆண்டளவில் பிரபாகரனின் உத்தரவின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார்.
 

ஜான் மாஸ்டர் : குமணனுடன் ஆரம்பத்தில் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர் பின்னதாக மனோமாஸ்டர் திருகோணமலைக்குச் சென்றுவரும் காலகட்டத்தில் அவரோடு அரசியல் ரீதியாகவும், நடைமுறை விடயங்களிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஜான்மாஸ்டர் மிகவும் உறுதியான மார்க்சியக் கருத்துக்களோடு உடன்பாடு கொண்டிருந்த போராளி. வாசிப்பதில் ஆர்வம் மிகுந்த கொண்டிருந்ததாக குமணன் கூறியிருக்கிறார்.பின்னதாக உமாமகேஸ்வரன் தலைமையிலான புளட் அமைப்பில் இணைந்து கொண்டவர்.

ஜெயச்சந்திரன் என்ற பார்த்தன் : பயஸ் மாஸ்டரின் வழியாக மார்க்சியக் கருத்துக்களில் ஆர்வம் மிக்கவராக இருந்தவர். புளட் அமைப்பில் இணைந்து கொண்டு அரச படைகளால் கொலை செய்யப்பட்டவர். ஆளுமை மிக்கவரென குமணன் கூறியிருக்கிறார்.
தவிர மைக்கல் மகேஸ் போன்றோர் திருகோணமலையைச் சேர்ந்த தொடர்பாளர்களாக இருந்தனர். கிழக்கு மாகாணத்தோடு எனக்குத் நேரடியான தொடர்புகள் இன்மையால் முழுமைப் படுத்தப்பட விபரங்களை அனுபவங்களூடாகத் தொகுக்க முடியாதுள்ளது.

 

நெப்போலியன் : புலிகளின் பிளவிற்குப் பின்னர் உருவான பாதுகாப்புப் பேரவை என்ற விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர் மிகுந்த ஆர்வமுள்ள போராளி. மனோமாஸ்டரின் தொடர்புகளூடாக வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுள் ஒருவர். ஈரோஸ் இயகத்தால் மலையகப் பகுதிகளில் நெப்போலியன் கொலை செய்யப்பட்டார்.
அழகன் என்ற ஒருவரும் நெப்போலியனோடு இணைந்து அழகனும் பாதுகாப்புப் பேரவையில் இணைந்தார். பாதுகாப்புப் பேரவைக்கு முன்னதாக இயக்கம் பிளவடைந்த வேளையில் புதிய பாதையில் இணைந்து செயற்பட்டனர். பாதுகாபுப் பேரவை முதன் முதலில் கிழக்கில் காவல்நிலையம் ஒன்றைத் தாக்கியழித்தது என்பதைக் குறிப்பிடலாம்.

அழகன் : முத்தயன்கட்டுப் பண்ணையிலிருந்து விவசாயத்தில் ஈடுபட்டார். அழகன் பாதுகாப்புப் பேரவையின் ஆரம்பகாலங்களில் மார்க்சிய நூல்களோடு கொழும்பிற்குப் பயணம்செய்த வேளையில் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்களை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரச படைகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவே அனைவரும் கருதுகின்றனர்.

இன்னும் வரும்…

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

Exit mobile version