Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்

நான் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட வேளையில் என்னோடு சுந்தரம், குமரப்பா, மாதி ஆகியோரும் சென்னை நோக்கிப் பயணமாகின்றனர்.வேதாரண்யம் கடற்பகுதி ஊடாக இந்தியா சென்றடைந்த நாம் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பின்னதாக சென்னை வந்தடைகிறோம். இந்த இடைவெளிக்குள் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு பெரிதாகிறது. அவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்படுகின்றன. அவர் இப்போது யாரையும் சந்திப்பதில்லை. அவர் எம்.எல்.ஏ விடுதியிலேயே தங்கியிருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பின்னர் அவர் அங்கிருந்தபடியே சம்பவம் தொடர்பாக நான் உட்பட்ட மத்திய குழுவினர் நித்தலின்பனார் இல்லத்தில் உமாமகேஸ்வரனிடம் இது குறித்து விளக்கம் கோருவதென முடிவாகிறது. இவ்வேளையில் அன்டன் பாலசிங்கமும் எம்முடன் இருக்கிறார். மத்திய குழு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்ட அதே வேளை இன்னுமொன்றையும் நாம் ஒழுங்கு செய்துகொள்கிறோம். உமாமகேஸ்வரன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாது முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் வாதிட்டால் அவரை அன்றே கொலைசெய்துவிடுவது என்றும் தீர்மானிக்கிறோம். பிரபாகரனால் முன்மொழியப்பட்டு எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் ஒழுங்கு செய்யப்படுகின்றனர்.

சுந்தரம் அப்போதுதான் என்னோடு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேர்ந்திருந்தார். உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகிவிட சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் சைதாப்பேட்டை பாலத்திற்கு அருகாமையில் வைத்துக் கொலைசெய்வதாக ஏற்பாடாகிறது.

உமாமகேஸ்வரனை உணர்வுமிக்க போராளியாகத் தான் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர். இராணுவத் தூய்மைவாதத்தில் ஊறிப்போன எனக்கு உமாமகேஸ்வரனின் நடவடிக்கை துரோகமாகத் தான் தென்பட்டது. அனைத்திற்கும் மேலாக உமாமகேஸ்வரனிற்கு தனது ஊரில் ஒரு காதலி இருந்தார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்ததால் அவர்மீதான வெறுப்பு அதிகமாகியிருந்தது. அவரையே உமாமகேஸ்வரன் பின்நாளில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபாகரன், நான், நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகிய அனைவரும் உமாமகேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

சென்னையின் வெம்மை சுட்டுக்கொண்டிருந்தது. மிக நீண்ட நேரமாகியும் உமாமகேஸ்வரன் அங்கு வந்து சேரவில்லை. அவர் இனிமேல் வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தாகவேண்டியாயிற்று. அவர் வரவில்லை. நாங்கள் மட்டுமல்ல கொலைசெய்வதற்குத் தயாராக நின்றவர்களும் ஒருவகையான கலக்கத்துடன் திரும்பிவிடுகின்றனர்.

உமாமகேஸ்வரன் அன்று அங்கு வந்திருந்தால் அப்போதே பிரபாகரன் அனுப்பியவர்களால் கொலை செய்யப்பட்டிருப்பார். அதிஷ்டவசமாக அவர் அன்று உயிர்பிழைத்துக் கொள்கிறார். பின்நாளில் நடந்தவற்றை வைத்து அனுமானிக்கும் போது சுந்தரம் தான் உமா மகேஸ்வரனுக்கு கொலைத் திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையானதாகவே தெரியவந்தது. இதனால் தான் உமாமகேஸ்வரன் அங்கு எதிர்பார்த்தபடி வரவில்லை என்பது பலரும் பின்னர் ஊகித்துக்கொண்டார்கள்.

இந்த வேளையில் அன்டன் பாலசிங்கம் இந்த விடயம் பெரிதுபடுத்த வேண்டிய ஒன்றல்ல என்று ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் பேசிய போதும் நாம் அனைவரும் பிரபாகரன் கூறுவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். உமாமகேஸ்வரன் வராவிட்டாலும் விளக்கமளிப்பதற்காக ஊர்மிளா அங்கு சமூகமளித்திருந்தார்.அன்டன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரை இந்தப்பிரச்சனை முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய ஒன்றல்ல என எம்மிடம் கூறிய போதும் பிரபாகரனுக்கு எதிராகப் பேசுவதற்கு அவருக்குப் போதிய துணிவு இருந்திருக்கவில்லை.

இதே வேளை பிரபாகரனுடன் படகில் இந்தியாவிற்கு வந்த சந்ததியார் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் எம்மிலிருந்து ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார். நான் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் என்னை அழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார். எனக்கெல்லாம் பிரபாகரன் கூறுவதே சரியானதாகப்பட்டது. நானும் தனிமனிதத் தூய்மைவாதக் கண்ணோட்டத்திலேயே வளர்ந்தவன். மைக்கல் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பிரபாகரன் செய்வதெல்லம் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்காகவும் என்றே நம்பியிருந்தவன். பதினேழு வயதுச் சிறுவனாக உணர்ச்சி வேகத்தில் பிரபாகரன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இலங்கை அரசை அதிரவைக்கும் வெற்றியைக் கொடுத்தது. அப்போது ஏற்பட்ட நம்பிக்கை எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிறைவேற்றி ஒரு பலமான இராணுவத்தை உருவாக்கிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

பிரபாகரனும் அவரைத் தொடர்ந்து நாமும் துரோகி,எதிர்ப்புரட்சிக்காரன்,சமூகவிரோதி என்று எண்ணுபவர்களை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கிவிடுதல் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தோம். இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.

எம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கான வேலைத்திட்டம் குறித்துக்கூட யாரும் சிந்திததில்லை. எந்த அரசியலுமின்றி சிறிய இராணுவ வெற்றிகளினூடாகக் கிடைத்த நம்பிக்கையை மட்டுமே எமது தொடர்ந்த வேலைமுறையாக்கிக் கொண்டோம். முப்பதாண்டுகால புலிகளின் வரலாற்றையும் கூட இந்தச் சிந்தனை முறைதான் தீர்மானித்தது. சில இளைஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு எதிராக இளைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கோபம் கொண்டு போராட முன்வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்துவது அபாயகரமானது.

இலங்கையில் சண்முகதாசன் தலைமையில் ஒரு தத்துவார்த்தப் போராட்டமே எமக்குத் தெரியாமல் எமக்கு வெளியில் நடந்து கொண்டிருந்தது. அவர்களெல்லாம் அனைத்தையும் இழந்து போராட முன்வந்த எம்மை நெறிப்படுத்த வேண்டும் என்றோ எம்மோடு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றோ கிஞ்சித்தும் முயற்சித்ததில்லை. பாலசிங்கத்தின் வரவு கூட எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. எமது தவறுகளை நியாயப்படுத்துவதிலிருந்தே அவரின் அரசியல் ஆரம்பிக்கிறது.சந்ததியார் கூறியதெல்லாம் எனக்கு ஒரு அரசியல் சார்ந்த கருத்தாகப் படவில்லை. ஏதோ உமாமகேஸ்வரனுடைய நண்பர் என்ற அடிப்படையில் அவரை நியாயப்படுத்துகிறார் என்றே கருதினேன்.

இப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் அவருக்குத் தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். அவர் வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் மார்க்சிய வகுப்புக்களை நடத்துகிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்றெல்லாம் பல கனதியான விடயங்கள் குறித்துப் பேசுவார். அவை யாருக்கும் புரிவதில்லை. குமரப்பா, சாந்தன் ஆகியோர் அக்கறையாக குறிப்புக்கள் எடுத்து அவற்றைப் படிப்பார்கள். எனக்கு எதுவும் புரிவதில்லை. பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர் அவரின் வகுப்புகளுக்கு வருவதே கிடையாது.

அன்டன் பாலசிங்கத்தை நாங்கள் எல்லாம் அண்ணா என்றுதான் அழைப்போம். மிக எளிமையாக அழகாகப் பேசவல்லவர். அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார். பிரபாகரன் கூட அவர் மீதான ஆழமான மதிப்பு வைத்திருந்தார்.

உமாகமகேஸ்வரன் கொலையிலிருந்து தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக நானும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, நான் ஆகியோரே விவாதிக்கிறோம். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.

இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க நாங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் அவரை எச்சரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்பப்படுகிறது. நான் சந்ததியாருடன் முன்னமே நீண்ட நேரம் பேசியிருந்தமையால் எனக்கு அவருடன் பேசுவதற்கான வெளி ஒன்று இருந்தது. நான் அவரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறேன். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட அவரிடம் இருந்தது. அதுகுறித்தும் என்னிடம் பேசினார்.

நாங்கள் உங்களைக் கொலைசெய்யமாட்டோம் ஆனால் நீங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறோம் என நான் கூறி அவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறோம்.ஒரு தனிமனிதனின் அரசியல் உரிமையை ,பேச்சுரிமையை நாங்கள் கையிலெடுத்துக்கொண்டோம். நூறு கருத்துக்கள் மோதட்டும், நூறு பூக்கள் மலரட்டும் என்ற அழகான கவிதையின் ஆழம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு கருத்தையே கண்டு பயந்துபோய் கொன்று போட்டுவிடுகிற அளவிற்குக் கோழைத் தனமாக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள பல நாட்கள் கடந்திருக்கின்றன.

எம்மிடம் விடுதலை உணர்வு இருந்தது. அதற்கான வழிமுறைகளை நாங்கள் தனிமனிதத்தூய்மை வாத உணர்வின் அடிப்படையிலிருந்தே கட்டமைத்துக்கொண்டோம். தூய்மையானவர்களாகக் எம்மை நாமே கருதிக்கொண்டோம்.அதையே பிரகடனப்படுத்திக் கொண்டோம். போராட்டத்தின் முன்னோடிகளான நாம்தான் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உறுதியுடன் நிற்கின்றோம்.எம்மிடம் தூய்மையும் நேர்மையும் ஆழப்பதிந்து கிடக்கின்றது. இவற்றிற்கெல்லாம் யார் எதிர் வந்தாலும் அவர்கள் எம்மைப் பொறுத்தவரை துரோகிகளே. அழிக்கப்பட வேண்டியவர்களே.

மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி இப்போது எமது கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம் செய்கிறார்

 

இன்னும் வரும்..

 

பாகம் பதின்நான்கை வாசிக்க..  பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

Exit mobile version