Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குறியீடுகளின் புனிதம் முன்வைக்கும் அரசியலும் புலிக்கொடியும் : சபா நாவலன்

“தேசியம் அடையாளம் குறித்த புனினதமான விம்பங்களைக் கட்டமைத்து அவற்றை தங்கள் நலனுக்கான மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்” – லண்டனில் அருந்ததி ராய்.

21 ம் நூற்றாண்டின் அழிவு அரசியல் என்பது இவ்வாறான “புனிதமான” அடையாளங்களை அடிப்படையாக முன்வைத்து உருவாகியிருக்கின்றது. அடையாளங்களை உருவாக்கும் செயன்முறை என்பது அனேகமாக அனைத்துத் தளத்திலும் சில படிமுறைகளைக் கடந்து செல்கின்றது. குறிப்பாக இனக் குழுக்களும், மக்கள் பிரிவுகளும், மதப் பிரிவுகளும் அழிவுக்குரிய அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து இந்த அடையாளங்களை உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.

தாம் ஏனையோரிலும் மேலானவர்கள் இதனால் தனித்துவமானவர்கள் இதனால் புனிதமானவர்கள் என்ற தொடர்ச்சியான படிநிலைகளூடாக வளர்க்கப்படும் சிந்தனை இறுதியில் ஒரு அடையளத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த அடையளம் என்பது பின்னதக விமர்சிக்கப்பட முடியாததாகவும், வழிபாட்டிற்குரிய புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் கடமைக்கப்படுகின்றது. இறுதியில் இந்தப் அடையாளம் குறித்த புனிதத்தை சந்தர்ப்ப வாதிகளும், அரசியல் வியாபாரிகளும், மிக இலகுவில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அடையாளம் என்பது பல சந்தர்ப்பங்களில் சின்னங்கள், தனிமனிதர்கள் அவை கட்டமைக்க முனையும் விம்பங்கள் ஆகியவற்றோடு தொடர்புடயது.

இந்த அடையாளம் குறித்த புனிதம் ஹிட்லர் காலத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஜேர்மனிய மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஹிட்லரின் கொடி, சின்னம், வணக்கம் செலுத்தும் முறைமை ஆகிய “புனித்தை” வழிபடும் நிலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்த அடையாளத்தின் பின்னணியில் தாம் மேலானவர்கள், உயரிய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற மக்கள் விரோத அரசியல் சிந்தனை உருவாக்கப்பட்டிருந்தது. ஹிட்லர் தலைமையில் புனையப்பட்ட இந்தச் சிந்தனையை மூலதனமாக்கி மக்களை அழித்தொழித்த வரலாற்றை உலகம் இன்னமும் முற்றாக மறக்கவில்லை.

இந்து தத்துவா என்ற அடையாளமும் இதே பண்புகளைக் கொண்டிருந்தது, இந்துக்கள் புனிதமானவர்கள். ஏனையோர் குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது எதிரிகள் என்பது இவர்களின் மக்கள் விரோதக் கருத்தாக அமைந்தது. இந்து அடையாளம் குஜராத்தில் 2000 அப்பாவி முஸ்லீம்களைச் சாகடித்திருக்கிறது. இந்தியா முழுவதும் பார்பனீய அதிகாரத்தின் காவலனாக அமைந்திருக்கிறது. இவர்கள் காவியுடை, இந்துத்துச் சின்னம், இராமரின் புனித பூமி போன்ற பல்வேறு அடையாளங்களை முன்வைக்கின்றனர்.

இதன் இன்னொரு அடையாள உருவாக்கம் தான் இலங்கைத் தீவை பிணக் காடாக மாற்றிய சிங்கள பௌத்தம் குறித்த புனித அடையாளம். பௌத்த மதத்தின் நவீன காலக் காவலராக இன்றுவரை போற்றப்படும் அனகாரிக தர்மபால என்பவர் கூறுகிறர் “இலங்கை என்ற அழகான தீவு பௌத்தர்களின் புனிதம் நிறைந்த நிலம். இங்கு வாழும் ஏனைய இனங்கள் சிங்கள பௌத்தர்களின் புனிதப்பணிக்கு ஆதரவு நல்க வேண்டும். ஏனைய இனங்களைப் போலன்றி சிங்கள பௌத்தர்கள் ஆரிய இன அடையாளத்தைக் கொண்டவர்கள்” என்று ஆரம்பித்த அனகாரிக்க தர்மபாலவின் கருத்தாக்கம் சிங்கள பௌத்தக் கொடி, புனிதம் நிறைந்த பௌத்த விகாரைகள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டது. இந்த அடையாளங்களை தமது மூலதனமாக்கிக் கொண்ட அரசியல் வியாபாரிகள் நடத்துகின்ற அருவருப்பான வியாபாரம் தான் 60 ஆண்டுகள் இடைவெளியின்றி நிகழ்த்தப்படுகின்ற இனபடுகொலைகளின் சித்தாந்தப் பின்னணி.

இவர்களின் எதிரிகள் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள்.

இவை அனைத்தையும் போன்றே முப்பது வருட பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு விளைவாக நாம் எம்மைச் சுற்றிக் கட்டமைத்துக் கொள்கின்ற அடையாளம் குறித்த புனிதமும் அவற்றின் அரசியல் அழிவும். இன்று கிழக்கு லண்டனில் “தமிழ்ப் பேசும் மக்களின் சொத்தான புனித தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்காற்றுமாறு” தமிழ் இளைஞர்கள் அமைப்ப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான கட்டணம் £10 என்று வேறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்குறித்த அழிவுகளை ஏற்படுத்தும் அடையாளம் குறித்த புனித்தை உருவாக்கி அதனை மூலதனமாக்கும் செயற்பாட்டின் ஒரு குறியீடே இந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு புனிதத்தை முன்வைத்து உருவாக்கப்படும் அடையாளங்களை எந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளும் பயன்படுத்திக்கொள்ளும் அபாயகரமான நிலையை நாம் காண்கின்றோம். குறிப்பாக புலிக் கொடி என்ற “புனித” குறியீட்டை கே.பி போன்ற அரச முகவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் அவரின் எதிர்த் தரப்பும் பயன்படுத்திக்கொள்ளாலாம். ஆக, அதன் பின்னணியிலுள்ள அரசியல் இங்கு முன்னிறுத்தப்படுவதில்லை.

புனித அடையாளங்களை உருவாக்கி, அதன் மாயைக்குள் அப்பாவி மக்களை அடிமைப்படுத்தி அவற்றை மூலதனமாக்கிக் கொள்கின்ற செயற்பாட்டை அடையாளம் காண்பதும் அதற்கு மாற்றன ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஒன்றிணைவும் இன்று அவசியமான அரசியற் செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்களிப்பைக் கோரிநிற்கின்றது. சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளின் குறுகிய அரசியல் நலன்களுக்கு எதிரான போராட்டம் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Exit mobile version