வாரவாரம் ஆபாசக் குப்பைகளை விற்று வாசகர்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணம் பிடுங்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் குமுதம் வார இதழ் இந்த வாரம் வழக்கம் போல தன் பார்ப்பன இந்து வெறியை அரசு பதில்கள் மூலம் வெளிக்காட்டியிருக்கிறது. கேள்வி பதில் பாணியில் வெளியாகும் அரசு பதில்களில் இந்த வாரம் சமீபத்தில் பார்த்த வெளிநாட்டுப்படம் என்றொரு கேள்வி? அந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள அரசு ’’சோக்–டி-த-கிக் பாக்ஸர்” என்ற 40 தாய்லாந்து படங்களின் தொகுப்பை அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள படம் ப்ரூஸ்லி வகை படம் என்றும். அந்தப் படத்தில் வருகிற இந்திய இளைஞர் ஒருவரைப் பார்த்து தாய்லாந்து இளைஞர் ’’நீ இந்தியா போகவில்லையா? என்று கேட்க அந்த இளைஞனோ ‘’என் நாட்டில் தீண்டாமைக் கொடுமை அதிகமாக நடக்கிறது என்னை எல்லாம் ஒரு நாய் போல மதிக்கிறார்கள். இந்தியா போவதற்கு பேசாமல் கக்கூஸ் கழுவலாம்” என்கிறாராம்.
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசு ஏனைய 39 டி.வி.டிகளையும் போட்டு உடைத்து விட்டாரம். மேலும் எழுதுகிறார் ‘’நாட்டில் எங்கோ ஒன்று இரண்டு அப்படி நடக்கலாம். அதற்காக தாய்நாட்டை இழவு செய்யலாமா? என்றெல்லாம் கேட்டுச் செல்கிறார் அரசு.
சரி இந்தியாவில் சாதிக்கொடுமையே இல்லையா? சுதந்திர இந்தியாவில் காலம் தோறும் சாதிக் கொடுமையும் சாதீய அடக்குமுறைகளும் நவீன வடிவமெடுத்து உருமாற்றம் அடைந்து வருகிறதே தவிற ஒரு போதும் குறைந்ததில்லை. ‘’இப்ப வெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க” என்கிற மேட்டுக்குடி திமிரும் இந்து பழமைவாத மனமும் ஒன்று கலந்த குமுதத்தின் பார்ப்பன மனமும் இதுதான். அரசு குறிப்பிட்ட தய்லாந்து திரைப்படத்தில் வருகிற இளைஞர் சொன்னது எத்தனை யதார்த்தமான உண்மை. இந்திய இந்துச் சமூகத்தின் கொடூரமான சாதி வெறித் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்ல முடியாமல் எத்தனையோ ஆயிரமாயிரம் தலித்துக்கள் உள்ளுக்குள் வதைபட்டுக் கொண்டிருக்க தன் மீது சாதி வெறி ஆண்டைகள் திணித்த கொடுமைகளிலிருந்து தப்பித்து தயாலாந்தில் வாழும் ஒருவனுக்கு அது சுதந்திரமல்லாமல் வேறென்ன?
மேலும் தாய்லாந்தை பாலியலில் தொழிலின் கூடாரம் என்று வர்ணிக்கிற அரசு. தனது அலுவலக ஊழியர்கள் ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகரோடு போலீசில் அலைந்ததும். குமுதம் கூடாரத்திற்குள் நடக்கும் பாலியல் ஓரினச் சேர்க்கை வன்முறைகள் பற்றி குமுதல் ஊழியர்களே இணையதளங்களில் எழுதவில்லையா? ஆக அமெரிக்காவின் பாலியல் சொர்க்கமாக தாய்லாந்து முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது இதுதான் உண்மை. ஆனால் சாதிக் கொடுமையிலும், தீண்டாமைக் கொடுமைகளிலும் இந்தியாவை விட , குமுதத்தை விட தாய்லாந்து எவளவோ மேல். என்பது எல்லோருக்கும் தெரியுமே?
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, தேசிய இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களிலும் சரி தலித்துக்கள் பங்கெடுத்ததே இல்லை. காரணம் சமூக இயக்கங்கள் என்று சொல்லப்படும் எல்லா இயக்கங்களுமே இடதுசாரி இயக்கங்களைத் தவிர்த்து தலித்துக்களை புறந்தள்ளியே வளர்ந்தன அல்லது அவர்களை பார்வையாளர்களாக வைத்து போராட்டத்தை கட்டு எழுப்பின. பேச்சளவில் தீண்டாமை, சமூக நீதி என்று பேசியவர்கள் ஒப்புக்குக் கூட தலித்துக்களை அதில் சேர்த்துக் கொள்ளவும் இல்லை அதிகாரம் அவர்களை சென்றடையவும் விட்டதில்லை. இன்றைய தமிழ் கலாசாரத்தில் ஒரு தலித்தின் பங்கு என்ன என்ற கேள்வி எழுமானால் மலக்குழிக்குள் இறங்கி ஏறுவதைத் தவிற தலித்துக்களை தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லும் ஜல்லிக்கட்டிலோ, அல்லது கோவில் திருவிழா நிகழ்வுகளிலோ அவர்களை ஏற்றுக் கொண்டதா தமிழ் சமூகம்.
தேசிய இயக்கங்களுக்கு மாற்றாக உருவான திராவிட இயக்கம் என்று சொல்லப்படும் முற்போக்கு வலது சாரி இயக்கம் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அது தமிழ் மக்களிடம் பெற்றுக் கொண்ட அதிகாரத்தையும் இன்று அனுபவிக்கிறவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள மேல் தட்டு வர்க்கம்தான் என்னும் போது இன்றைய திராவிட இயக்கத்தில் தலித்துக்களின் பங்கு ஏது என்ற கேள்வியும் எழுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 20 -க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி தலைவர்களை அழைத்துச் சென்று கருணாநிதியைச் சந்தித்து ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மனுக் கொடுக்கிறார். கருணாநிதியோ பார்ப்பனக் கலைகளை நிறுவன மயப்படுத்த பரதமுனிவர் என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அதை வைத்து தமிழ் மக்களின் நாட்டிய இசை மரபை மறுக்கும் பார்ப்பன சாதி வெறி நாட்டிய பெண்மணியுமான பத்மா சுப்ரமணியத்துடன் சேர்ந்து பரத முனிவருக்கு இசைக் கோவில் எழுப்ப தீவீரம் காட்டுகிறார். எம்.ஆர்.ராதா வழிவந்த திராவிட இயக்கம் எஸ்,வீ. சேகரிடம் தஞ்சமடைந்த கதை இதுதான். ஆக நிலப்பிரவுத்துவ பண்ணை மனோபாவத்தை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாத பிற்படுத்த ஆதிக்கசாதி வெறியர்கள் பார்ப்பனர்களோடு தற்காலிக கூட்டு வைத்துக் கொண்டார்கள். கேட்பதற்கு நாதியற்ற தலித்துகளோ காயர்லாஞ்சியிலும், மீனாட்சிபுரத்திலும், திண்ணியத்திலும், குண்டூரிலும், மண்டைக்காட்டிலும், கொடியங்குளத்திலும், தாமிரபரணியும் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச ஒரு தலைமை இல்லாத நிலையில் முற்போக்கு காட்டி மேலெழுந்து வந்த திராவிட இயக்கம் என்று சொல்லப்படும் திமுகவோ மாவட்டம் தோறும் சாதி வெறியர்களின் கட்சியாக மாறி தேர்தல் தோறும் பெரும்பான்மை சாதி எதுவோ அந்தச் சாதியில் உள்ள பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறது.
திராவிட இயக்கம், பார்ப்பனக் கூட்டு, இந்தியாவில் நிறுவனமயப்பட்டு வரும் பார்ப்பன இந்துப் பண்பாடு, அதை தூக்கி நிறுத்தும் நீதித்துறை, கலாசார ரீதியில் நிறுவப்படும் மன்னர் கால மதிப்பீடுகள் என எல்லாம் சேர்ந்துதான் பார்ப்பன குமுதம் ஆசிரியருக்கு இப்படியான ஒரு பதிலை எழுதத் தூண்டுகிறது. நாடெங்கிலும் குடும்ப கௌரவம், மத கௌரவம், சாதி கௌரவம் என்னும் பெயரில் கொல்லப்படுகிறவர்களில் பெரும்பலானவர்கள் தலித்துக்களே, ஒரு ஜெயேந்திரன் கைது செய்யப்பட்ட போது எழுத்தாளர் அசோகமித்திரன் ‘’பார்ப்பனர்கள் யூதர்களைப் போல நடத்தப்படுவதாக” பார்ப்பனத் திமிரில் பேசினார். ஆனால் ஊர் ஊருக்கு நடக்கும் சாதிக் கொலைகளை மறைத்து குமுதம் எங்கோ நடைபெறுகிற நிகழ்வு என்கிறது. முற்போக்கு பேசும் மனித உரிமை ஆர்வலர்கள் இனியும் குமுதத்தில் எழுதுவார்களா? குறைந்த பட்சம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்களா?