Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்காலில் பிரபாகரன் தனக்கு வைத்த கொள்ளி : பாண்டியன் தம்பிராஜா

=கீர்த்தி  கட்டமைக்க  முனையும் விம்பம் – ஒரு எதிர்வினை=

வன்னிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கும் மனித நேயம் மிக்க சாதாரண புலிப் போராளிகளுக்கும் சிங்கள கிராமங்களில் இருந்து வறுமையின் காரணமாக இந்த யுத்தத்தில் ஈடுபட்டு மரணித்த இராணுவ வீரர்களுக்கும் முதல் அஞ்சலியை செலுத்துவோம்.

கீர்தியின் கட்டுரைக்கு எதிர்வினை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற சமூகக் கடமை புலி- புலி எதிர்ப்பு என்ற எல்லைக்கு அப்பால் சிந்திக்கும் அனைவருக்கும் உண்டு.

கட்டுரையாளர் புலித்லைமை மேல் சில விம்பங்களை உருவாக்க முயற்சிக்கிறார். முதலில் புலித் தலைமையானது குறிப்பாக பிரபாகரனும் தமிழ் மக்களின் இந்த எழுச்சி போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கு முதன்மைப் பொறுப்பு வகிக்க வேண்டியவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு எழுதியிருந்தால் இந்த கட்டுரையில் எள்ளவேனும் அர்த்தம் இருந்திருக்கும்.

ராணுவ ரீதியில் பிரபாகரன் ஒரு சிறந்த தந்திரோபாயம் மிக்கவர் அல்ல என்பது புலியில் இருந்த அடுத்த கட்ட தலைவர்களுக்கு தெரியும். எந்தத் தத்துவார்த்த அரசியல் நோக்கமுமின்றி மக்களை அணிதிரட்டி மக்கள் சார்ந்த போராட்டமாக முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் வெற்றிபெற்றதாக வரலாறிலில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு என்பது வெறுமனே தோல்வி என்ற எல்லையையெல்லம் கடந்து பேரினவாதம் நடத்திய மனிதப் பேரழிவாகவே நாம் கருத முடியும். குறுகிய நாள் எல்லைக்குள் குறுகிய நிலப்பரப்பில் உலகின் அனைத்து விதிகளை எல்லாம் சிதறடித்துஇ ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட மனிதப் பிணங்களை வீழ்த்திய இந்த அழிவிற்கு பிரதான காரணங்களில் ஒன்று பிரபாகரனை அவரது துதிபாடிகள் கடவுள் அளவிற்கு உயர்த்தியதாகும்.

தவறாக வழி நடத்தப்பட்ட போராட்டம் என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், ஒரு தலைமையானது சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காவிடின் என்ன நடக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் எமது மக்களின் அழிவாகும்.

கேபி காஸ்ரோ நெடியவன் கொடியவன் போன்ற எல்லாம் பேசவல்ல அதிகாரிகளை பிரபாகரன் இவர்களின் எந்த அரசியல் சாணக்கியம் இராஜதந்திர கற்கைகளின் அடிப்படையில் நியமித்தார். பிரபாகரன் மேல் இவர்கள் காட்டிய (போலி) விசுவாத்தை தவிர வேறு எந்த தகுதிகளும் இவர்களுக்கு தந்திரம் மிக்க இந்த உலகத்தை வென்றெடுக்க இல்லை.

மனித நேயம் திறமை மிக்க போராளிகளை எல்லாம் காவு கொடுத்து விட்டும் நல்லெண்ணம் கொண்ட மாற்று இயக்க உறுப்பினர்களை கொலை செய்தும் நாட்டை விட்டு துரத்தி விட்டும் சண்டித்தனமாக போராட்டத்தை நடத்திய புலித்தலைமையின் அழிவிற்கு வேறு யாரையும் பொறுப்பாக்க முயல வேண்டாம். புலித்லைமையின் இந்த சண்டித்தன போராட்டத்தால் தமிழ் தேசியம் என்பது ஏதோ கேட்கக் கூடாத பேசக் கூடாத பொருளாகி எமது மனதை இன்றும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

நடுத் தெருவில் நாய்கள் நிணம் புசிக்க எத்தனை போராளிகள் புலிகளால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மகிந்த ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகாரம் தமிழ்ப்பகுதிகளை புற்றுநோய் போல அழித்துக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் புலிகள் போராட்டத்தைத் தவறாக வழிநடத்தியதும் ஒரு காரணம் என்பதைப் பற்றி கீர்த்தி மூச்சுக்கூட விடவில்லை. நாம் சார்ந்த சமூகத்தின் எதிர்கால விடுதலையை குறித்துச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதனூடாகவே முன்னோக்கிச் செல்ல முடியும் அவற்றை நியாயப்படுத்துவதனூடாக அல்ல!

கட்டபொம்மன்,சங்கிலியன் காலத்து  வீரத்தைப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டியவர்கள் நாங்கள், சாகடிக்கப்பட்ட தமிழ் மக்களையெல்லாம்  மறந்து புலிகளின் வீரத்தை பேசி மகிழ்வதை எப்போ நிறுத்தப் போகிறோம்?

தமிழ் மக்களின் இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக பேரழிவே ஏற்பட்டது. எனவே தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுக்கும் அதே வேளையில் இனவாத அரசினாலும் புலிகளாலும் அழிக்கப்பட்ட எம்மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து நினைவு கூருவதோடு தவறுகாளிலிருந்து கற்றுக்கொள்ள உறுதிகொள்வோம்.

Exit mobile version