கிளிநொச்சி மாவட்டத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்திருக்கும், வைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக வேறு எவரையும் அழைக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக உள்ளதுடன், அவ்வாறு வேறு நபர்கள் அழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் தனது அடியாட்களைக் கொண்டு மிரட்டியோ, பணத்தினை வழங்கியோ, அச்சுறுத்தியோ தனது காரியங்களைச் சாதித்து வருகின்றார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த திங்கட்கிழமை இரண்டு வருடங்களாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு, கிளிநொச்சி விவசாயிகளின் காலபோக பயிர்ச்செய்கைக்காக இரணைமடுக்குளம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைபெற்றாலும், இந்நிகழ்விற்கு வடமாகாண விவசாய அமைச்சர் வரவழைக்கப்படவில்லை.
மாறாக இந்நிகழ்வில், சிறிதரன், குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
விவசாய அமைச்சர் கலந்துகொள்ளாமை தொடர்பாக இரணைமடு கமக்கார அமைப்பின் தலைவராக இருக்கும் சிவமோகன், ‘இந்நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரையோ, புளொட் அமைப்பைச் சேர்ந்த விவசாய அமைச்சரான சிவனேசனையோ அழைத்தால் சிறிதரன் குழம்புவார் என்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்கனவே கிளிநொச்சியில் உள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற வைரவிழாவிற்கு வடமாகாண கல்வி அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு அழைப்பிதழ் வெளியாகிய நிலையில் அதிபரை மிரட்டியதுடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து பாடசாலைக்கு கட்டடம் ஒன்று கட்டித் தருவதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் கூறி தன்னையே பிரதம விருந்தினராக அழைக்கவேண்டுமெனவும் அச்சுறுத்தியிருந்தார் என்பதுடன் அந்நிகழ்வில் தானே பிரதம அதிதியாகவும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட மக்களை முட்டாளாக்கும் சிறிதரன் போன்றவர்கள் வெகு விரைவில் மக்களால் ஓரங்கட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதுடன், மக்களுக்குச் சேவையாற்ற நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறிதரன் போன்றவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாகவே செயற்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.