Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது-திருமாவளவன் தூக்கிய புதிய காவடியும் உண்மை நிலையும்:மணி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு ‘அம்பேத்கர் சுடர்‘ என்னும் விருது வழங்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகமெங்கும் சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் காலை 9 மணி அளவில் கோயம்பேடு சந்தை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அத்துடன், கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறுகிறது.

 இவ்விழாவில், தமிழக முதல்வர் கலைஞருக்கு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை பாராட்டும் வகையில், ‘அம்பேத்கர் சுடர்‘ என்னும் விருதும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. விழாவில் கலைஞர் கருணாநிதி உரையாற்றுகிறார்.திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணிக்கு ‘பெரியார் ஒளி‘ விருதும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு ‘காமராசர் கதிர்‘ விருதும், கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ‘காயிதே மில்லத் பிறை‘ விருதும், ஞான அலாய்சியஸ்க்கு ‘அயோத்திதாசர் ஆதவன்‘ விருதும் மறைந்த தமிழ் பேரறிஞர் தேவநேய பாவாணருக்கு ‘செம்மொழி ஞாயிறு‘ விருதும் வழங்கப்படுகின்றன.விருதுகளுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் கலைநிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது‘ எனக் கூறியுள்ளார்.
உண்மை நிலை?

சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் விருதை திருமாவளனுக்கு வழங்கினார். கருணாநிதி. அதற்கு பிரதி உபாகரமாக திருமாவளவன் இப்போது கருணாந்திக்கு அம்பேதகர் விருதை வழங்குகிறார். பரஸ்பரம் கொடுக்கல் வாங்கல் நிலையில் வழங்கப்படும் இவ்விருது ஒரு பக்கம் இருந்தாலும் அருந்ததியின மக்களுக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் நீண்ட நாட்களாகவே வெளிப்படையாக எதிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் அருந்ததியின மக்களை தெலுங்கு பேசுகிறவர்கள் அவர்கள் தமிழர்கள் அல்லர் என்றெல்லாம் கூட சொன்னார்கள் சிறுத்தைகள் கட்சியினர். தலித் மக்களுக்காகவும் பழங்குடி மக்களுக்காகவும் நீண்ட காலம் பணியாற்றியதால் இந்த விருது என்று அறிவித்திருக்கும் திருமா இப்போது அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது கருணாந்தி வழங்கியிருக்கும் இட ஒதுக்கீட்டைத்தான்.

சந்தர்ப்பவாத அரசியல் எந்த மேடைகளுக்கு ஏற்றவாரும் திருமாவால் நடிக்க முடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. கருணாநிதியின் தலித் மக்கள் மீதான பற்று பற்றி குறிப்பிடுவதென்றால் எவ்வளவோ பட்டியிலம் போடலாம். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் மக்கள் 19 பேரை அடித்துக் கொன்று தாமிரபரணியாற்றில் வீசியவர் கருணாநிதி. அது தொடர்பான வழக்குகளைக் கூட நடத்த விடாமல் குறிப்பிட்ட ஒரு சாதிப் போலீசைக் காப்பாற்றியவர். உத்தபுரத்தில் வெள்ளாளர்களால் தலித் மக்களுக்கு எதிராக கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரில் ஒரு செங்கலை மட்டும் நீக்கி விட்டு உத்தபுரம் சுவரையே இடித்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கினார் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் திமுகவின் தலைவர்கள் எல்லாம் படையெடுத்து கோபமடைந்த வெள்ளாளச் சாதித் தலைவர்களை சமாதானம் செய்தனர்.

இப்போதும் உத்தபுரத்தில் தலித் மக்கள் அஞ்சி அஞ்சியே வாழ்கின்றனர். தமிழகமெங்கிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பெரியார் திராவிடர் கழகமும் தீண்டாமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே கோவில் நுழைவு உரிமை கேட்டு தலித்துக்கள் போராடும் போதெல்லாம் தமிழக போலீஸ் நுழைந்து தலித்துக்களை தாக்குகிறது. இதை எலலாம் விட சில ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது சுமார் 2,500 மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள் கல்வி கற்றனர். ஆனால் அவர்களை அர்க்கராக்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அத்தோடு அர்ச்சகர் பயிர்ச்சிப் பள்ளியையும் மூடி விட்டது.

 இந்த வழக்கு தொடர்பாக கருணாநிதி அரசு நீதிமன்றத்தில் வைக்கும் வாதமே வருணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக் கொண்டுதான் வாதாடுகிறதே தவிற வருணதர்மமே மனித குலத்திற்கு எதிரானது என்பதாக இல்லை. மேலும் எஸ்.டி., எஸ்.சி ஆணையம் சமீபத்தில் கருணாநிதி மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. தமிழக அரசு தலித்துக்கள் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் மத்திய நிதியை வேறு திட்டங்களுக்கு செலவிடுகிறது மாநில அரசு என்று வெளிப்படையாகவேக் கூறியிருந்தது. சமத்துவ புரம் என்னும் பெயரில் ஊருக்கு ஒதுக்குப் புறங்களில் குடியிறுப்புகளைத் துவங்கி வைத்தார் கருணாநிதி ஆனால் அங்கும் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைதான்.

திராவிட இயக்கமே நாங்கள்தான் என்று இடைவிடாது கூவிக் கொண்டிருக்கும் கருணாநிதி பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதியினருக்கே தன் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரமிக்க பதவிகளைக் கொடுக்கிறார். எந்தெந்த பகுதியில் பெரும்பான்மை ஆதிக்க சாதி எதுவோ அவர்களுக்கே தேர்தலில் சீட்டும் வழங்கப்படுகிறது. அவர்களின் வெற்றிக்காக அந்தந்த சாதி அரசியலை அதிமுகவிட அழகாகச் செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. அவரது சேவைக்காகத் தான் இந்த அம்பேத்கர் விருது.
 
 

 
Exit mobile version