Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘கம்யூனிஸ்டு’ க்களின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் – அமெரிக்க ஆதரவு பாசமும் : கு.கதிரேசன்

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் பல அந்தரங்கங்களை விக்கிலீக்கிசில் அடுத்தடுத்து வந்த கேபிள்கள் இந்த கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு நிலையை பகிரங்கப்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தமே இந்திய முதலாளிகளின் நிர்பந்தத்தால் தான் அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை எம்பிக்களை விலைக்கு வாங்கியாவது அரசை காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.

இது மட்டுமல்ல அப்போது இதற்கு மாநாடு போட்டு எதிர்ப்பு தெரிவித்த பி.ஜே.பி யும் கூட அந்த மாநாட்டு தீர்மானத்தை பெரிதாக கண்டு கொள்ளவேண்டாம் , இது மக்களை ஏமாற்ற நாங்கள் போடும் மாநாடு , நாங்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்காவிற்கு பச்சை கோடி காட்டியது, இதை எல்லாம் மிஞ்சும் வகையில் அருண் ஜெட்லி ‘நாங்கள் சந்தர்ப்பவாதிகள்’ பொதுமேடைகளில் பேசுவதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் என்று அமெரிக்க தூதரிடம் சொல்லுகிறார்.

இப்படி காங்கிரசும் , பி.ஜே.பியும் இந்திய முதாளித்துவத்தின் இருவேறு முகங்கள் என்பதும் இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு முதலாளித்துவ சேவை செய்வதும் அசலும் , நகலுமாக அம்பலமாகி இருக்கிறது.

இவர்களோடு சிபிஎம்மும் (CPI(M) ,சிபிஐயும் (CPI) சேர்ந்து கொண்டது தான் அதை ஒரு உண்மையான உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று இதுநாள் வரை நம்பி அந்த கட்சிக்காக உழைத்து கொண்டிருந்த அடிமட்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் நமது எதிரி, அது எந்த வடிவில் இங்கு வந்தாலும் எதிர்ப்போம்’ என்று தொண்டை கிழிய டெல்லி பாரளமன்றத்தில் ஒருபுறம் கத்துவதும், மேற்கு வங்காளத்தில் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு சந்தையை அகலத்திறந்து விடுவதுமான இரட்டை வேடத்தில் நடித்து வந்தது விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது..

அதற்கு பதில் அளித்த புத்ததேவ் இது ஒருபக்கமான உண்மை என்று கூறினார்.

ஆமாம் அதன் மறுபக்கம் அனைவரும் அறிந்ததுதான். உழைப்பவர்களின் தோழன் என்று சொல்லி கொண்டு டாட்டா போன்ற பெரும் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்ததும், தங்கள் நிலங்கள் அநியாயமாக அரசால் பரிக்கப்படுவதை எதிர்த்து போராடிய விவசாயிகளை துப்பாக்கியால் சுடுவதும், முதலாளிகளோடு கை கோர்த்து கொண்டு தொழிலாளிகளுக்கு துரோகம் செய்யும் அதன் தொழிற்சங்கங்களும், கேரளாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானஒருவரை பொலிட் பீரோ உறுப்பினராக கொண்டிருப்பதும், உதட்டளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் மறுபக்கம் இந்திய முதாளித்துவ வர்க்க சேவையும், கள்ளத்தனமாக அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதும், மாபெரும் ஊழல் கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதும், சொத்து சேர்ப்பதும்,பாராளமன்ற அரசியலில் மூழ்கி திளைத்து ஊழல் செய்து கொண்டிருக்கும் சாதாரன முதலாளித்துவ கட்சிகள் தான் தாங்கள் என்பதை தான் மறுபக்க உண்மை என்று புத்த தேவ் சொல்கிறார் போலும் .

இனிமேலும் இந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்யும் இவர்களை உழைக்கும் வர்க்கம் அருகிலையே சேர்த்து கொள்ளாது என்பது தான் யதார்த்தம்.

நாம் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI(M) தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டாலே அதுவே அது கம்யூனிசத்திற்கும் தொழிலாளிவர்க்கதிற்கும் அந்த கட்சிகள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்பிற்கு
கு.கதிரேசன்
cell : 9843464246
advkathiresan@gmail.com

Exit mobile version