கொல்லப்படுபவர்களைத் தவிர எஞ்சியோரைப் பார்வையிட தமிழக எம்பிக்கள், புலம்பெயர் கனவான்கள், இந்திய சினிமா வியாபாரிகள், முன்னை நாள் புலிகள் என்று ஒரு சக்திமிக்க கூட்டமே புறப்பட்டுவிடும். அவர்கள் மறுபடி மக்கள் கொல்லப்படும் வரை தங்கள் உதவிக்கரங்களை உயர்த்தியபடி காத்திருப்பார்கள்.
கொலைகாரர்கள் அதுவும் அய்பதாயிடம்மக்களைக் சில நாட்களுள் கொன்று குவித்த பாதகர்களுடன் இணைந்து மக்களைப் பாதுகாக்க உறுதி பூண்டிருப்பதாக முன்னை நாள் புலிகளின் முக்கிய உறுப்பினரும் ஆயுதக் கடத்தல்காரருமான கே.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழத்தின் ஆரம்ப கர்த்தாவாகிய இந்த உளவாளியின் சகாக்கள் பெரும் பணச் செலவில் புலம் பெயர் நாடுகளில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்திவிட்டு இடம் தெரியாமல் பதுங்கிக் கொண்டுள்ளார்கள். கே.பி குறித்துத் தங்களின் நிலைப்பட்டு குறித்து மூச்சுவிடவும் மறுக்கும் இவர்கள் புலம்பெயர் நாடுகளில் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்த மாபெரும் கைங்கரியத்தை நிகழ்த்தி முடித்துவிட்டு அமைதியாக உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் இலங்கை இந்திய அரச கூட்டுச் சதியில் ஒரு சிந்தனை கட்டமைக்கப்படுகிறது. மக்கள் அழிக்கப்படுவதை எம்மால் தடுக்க முடியாது. அழிவிலிருந்து தப்பியவர்களுக்கு உதவிசெய்ய மட்டும் எம்மால் முடியும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் ஜெகத் கஸ்பர்,ரவிகுமார், கனிமொழி, பாலு என்று ஒரு மாபியா வலைப் பின்னல் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. அங்கெல்லாம் உருவாகக் கூடிய எழுச்சிகளைக் கட்டுப்படுத்துவதே இவர்களின் ஒரே நோக்கம். இவர்களோடு இப்போது சினிமா வியாபாரிகளும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
இதே சிந்தனை முறை தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் விஷ விதைகளாக விதைக்கப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய வெறியூட்டிய புலி ஆதரவார்கள் யாரும் இது குறித்துப் பேசுவதில்லை. நாம் இப்போது மிகவும் சிக்கலான இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கை இந்திய அரசுகள் உருவாக்க முனையும் இந்தச் சிந்தனைப் போக்கை எதிர்கொள்ள வேண்டியதும் அதற்கு எதிரான எதிர்ப்பியக்கங்களை உருவாக்க வேண்டியதும் சமுகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் இன்றைய கடமை.
இலங்கையில் பேரினவாத அரச அதிகாரத்தின் கீழ் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் விசாரணையின்றிச் சிறை வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கெல்லாம் அரசிற்கு உதவிப் பணம் கூடத் தேவையில்லை. கே.பி என்ற உளவளி தனது நேர்காணலில் சொல்கிறார்,”பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன” என்று.
போரில் ராஜபக்ச அரசு கொத்துக் கொத்தாகக் கொலைசெய்து தெருக்களில் வீசியெறிந்த பிணங்களின் மீது ஏறி நடந்து முகாம்களில் சாட்சியின்றி சிதைக்கப்படும் லட்சக் கணக்கான மக்கள் மனித குலத்தின் சாபக் கேடா என ஒவ்வொரு “மனிதனும்” புலம்பும் வேளையில், இந்த உளவாளியின் நேர்காணல் அருவருப்பை ஏறடுத்துகிறது.
“போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.
இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.” என்கிறார் கே.பி.
இப்படிக் கண்முன்னே தெரியும் உண்மையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு புலம்பெயர் நாட்டு தமிழர்களை அழைக்கிறார் கே.பி.
“எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.
கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.
மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.” -கே.பி
கே.பி நாடுகடந்த தமிழீழத்தை உருவாக்கிய காலத்தில்ருந்தே உரிமைகளையும் மனிதத்தையும் அபிவிருத்தியக் காரணம் காட்டி அழிக்கும் நிகழ்ச்சி நிரலை இலங்கை அரசு தயாரித்துவிட்டது. அவ்வேளையில் இலங்கை சென்று திரும்பிய 24 புலம் பெயர் கனவான்களைக் கொண்ட குழுவொன்றின் பயணம் குறித்து கொன்ஸ்டன்டைன் என்பவரின் விவரணக் கட்டுரையும் கே.பியின் கருத்தையே முன்வைத்தது.
கே.பியின் இலங்கையிலிருந்து வெளிவரும் அரச சார்பு நாளிதழான ஐலண்டிற்கு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம்:
4வது ஈழப் போரின் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?
அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பினர் நடத்திய அதி பயங்கரத் தாக்குதல்தான் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கத்திய சக்திகள் தலைமையிலான அனைத்து நாடுகளும் அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களையும் அபாயகரமானவை என்று அறிவித்தன. இது எங்களது நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது.
அல் கொய்தாவின் அதிவேக வளர்ச்சியால் ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களும் பாதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் ஆயுதப் போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.
பிரிவினைவாத கருத்துக்களைப் பரப்புவதில் பெரும் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. தங்களது உத்தியை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.
அதை அவர்கள் செய்திருந்தால், செய்ய முன்வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய உலக நடைமுறை உள்ளது. இது ஆயுதப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாது. இதை உணர வேண்டும். அதுதான் உண்மையும் கூட.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
மே 19ம் தேதி எனக்கு பிரபாகரன் மரணச் செய்தி கிடைத்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். சர்வதேச மீடியாக்கள் இந்த செய்தியை முரண்பட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. சில மீடியாக்களில் மரணச் செய்தி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வந்தன. நான் பிரபாகரனின் மிகச் சிறந்த நண்பன். இதனால், அவருடைய உயிரிழப்பு குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் எனது பேச்சைக் கேட்டிருந்தால், அரசுடன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்திருந்தால் இது நடந்திருக்காது. இறுதிப் போரில் நடந்தவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாமே கால தாமதமாகி விட்டது.
மே 10ம் தேதி வன்னிக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நான் அரசியல் பிரிவு தலைவர் நடேசனுடன் பேசினேன். ஆனால், ராணுவத் தாக்குதலை தடுக்க முடியும், 3வது தரப்பின் மூலமாக சமரசம் பேச முடியும் என அவர்கள் நம்பினர்.
நாங்களும் கூட பலருடன் பேசினோம். பல அமைப்புகளுடன் பேசினோம். ஐ.நாவுடன் கூட பேசினோம். சில ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமே தோல்வியல் முடிந்தன. இது பிரபாகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாமதத்தால் ஏற்பட்டது. விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.
புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்று மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த நீங்கள் சமீபத்தில் ஒரு என்ஜிஓ அமைப்பை உருவாக்கினீர்கள். அதற்கு என்ன பலன் கிடைத்துள்ளது?
வடக்கு-கிழக்கு மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் என்பது அதன் பெயர். இப்பிராந்தியத்தில் மறு சீரமைப்பு, புதுக் கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்த அமைப்பு தயாராக உள்ளது.
இதன் தலைமை அலுவலகம், வவுனியா, வைரவபுதியன்குளத்தில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக இது பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எங்களது மக்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டுகிறோம்.
இந்தப் போரினால் மக்கள் பெரும் சோர்வடைந்து விட்டனர். எனவே அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். அதில் எந்தவித அரசியலும் கலக்காமல், மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே மேலோங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
ஒரு டாலரிலிருந்து எத்தனை டாலர் வரை வேண்டுமானாலும் நிதியாகத் தாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாதாந்திர அடிப்படையில் இந்த நிதியை அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிதி வசூலை மேற்கொள்வதற்கு வசதியாக சமீபத்தில் வவுனியாவில் உள்ள கமர்ஷியல் வங்கியில் ஒரு கணக்கையும் தொடங்கியுள்ளோம். (கணக்கு எண்ணையும் சொல்கிறார்).
மறு சீரமைப்பு, மறு கட்டுமான நடவடிக்கைகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா?
நான் எதிர்பார்த்ததை விட இப்போது நிலைமை நன்றாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கையை கட்டமைப்பதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும் கூட, இந்த அரசு இதுவரை செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.
அரசையும், ஐ.நா. அமைப்புகளையும், என்ஜிஓக்களையும் தங்களது தேவைகளுக்காக தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை விரைவாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
சமீபத்தில் நான் வடக்குக்குச் சென்றிருந்தபோது, பல நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தனர்.
ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அது சாத்தியமாயிற்று. அதை அவர்களும் உணர்ந்துள்ளனர். எங்களுக்கு உதவ வாருங்கள் என்று தமிழ் மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
சமீபத்தில் இரண்டு பள்ளிகளின் முதல்வர்கள் எங்களிடமிருந்து நிதியைப் பெற்று தமது பள்ளியின் ஏழை மாணவர்கள் தேர்வெழுதவும், கல்விக் கட்டணத்தை செலுத்தவும் உதவியுள்ளனர்.
இப்போது போர் முடிந்து விட்டது. எனவே வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் கூட நாங்கள் வவுனியாவில் உள்ள சுந்தரலிங்கம் தமிழ் மகா வித்தியாலயாவுக்கு ரூ. 50,000 நிதியளித்தோம்.
அதிபர் ராஜபக்சே அரசுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?
பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன.
போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.
இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.
எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.
கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.
மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.
அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
எப்போது முதன் முதலில் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள். அதன் பிறகு கடைசியாக இலங்கைக்கு எப்போது வந்தீர்கள்.?
1980ம் ஆண்டு பிரபாகரனுடன் நான் இந்தியாவுக்கு தப்பி ஓடினேன். என்னை ராணுவம் கைது செய்வதற்காக தேடியது. ராணுவத்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் நான் இலங்கை திரும்பவில்லை. அப்போது ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வந்த காரணத்தால், நாங்கள் ஒரு படகின் மூலம், வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோம்.
டியூஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம்தான் 70களில் என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது 1976 என்று நினைக்கிறேன். அப்போது டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகள்தான் பெரிதான அமைப்புகளாக இருந்தன.
நான் யாழ்ப்பாணம் மகாராஜா கல்லூரியில் படித்தேன். பின்னர் எமது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக படிப்பை விட்டு விட்டேன். எங்களது உரிமைகளை தொடர்ந்து வந்த அரசுகள் புறக்கணித்ததாக நாங்கள் கருதியதால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று எங்கள் முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இந்த அமைதி நிரந்தரமாக வேண்டும் என கருதுகிறோம்.
யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்ததற்குப் பின்னர் அமைப்பின் அரசியல், ராணுவ கொள்கையாளர்கள், பிரபாகரனை அமைப்பிலிருந்து நீக்கினர். அவர் என்னிடம் வந்தார். அப்போது நான் சாதாரண மாணவன்தான். எனது அறையில் நான் பிரபாகரனுக்கு இடம் கொடுத்தேன். அவரைக் கொல்ல பலரும் முயன்றனர். டெலோ தலைவர் தங்கதுரையும் ஒருவர்.
அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
தொடர்புடையவை:
கே.பி இன் இந்தியச் சார்பு நிலையும் இந்தியாவின் இஸ்ரேலும் – July 7, 2009,
கே.பி அரச உளவாளி? : உறுதிப்படுத்தும் ரோகான் குணவர்தன