Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா அறிக்கை – புலி ஆதரவு, அரச ஆதரவு அரசியலுக்கு அப்பால்… : சபா நாவலன்

ஆயிரக்கணக்கான மனித உயிர்களின் மரண ஓலத்தை மேற்கு நாடுகள் தமது அரசில் சுழற்சி முறைக்காக மொழிபெயர்தத போது வெளியானது தான் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை. தொழில் நுட்பம், அதிலும் தகவல் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியின் எல்லைகளை எட்டிப்பிடித்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் மனிதப் படுகொலைகள் அனைத்தையும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் வெளியிடப்பட்டிருக்கும் “மனித உரிமையின் காவலர்களின்?” அறிக்கைகளும் பரிந்துரைகளும், அவர்களின் நோக்கங்களுக்கு அப்பால், இனப்படுகொலையின் வேர்களைச் சென்று விசாரித்திருக்கின்றது.

அறிக்கை சராம்சத்தில் நான்கு வகையான பாத்திரங்களை வினவியுள்ளது.

1. இலங்கை அரசும் அதன் ஆதரவு சக்திகளும்

இலங்கை அரசின் மனித குலத்தின் மீதானதும் மனிதாபிமானத்தின் மீதானதுமான கோரச் சம்பவங்கள் சுட்டிக்காட்டப்படுள்ளன. சிங்கள பௌத்த பேரினவாததின் ஊற்று மூலம் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. இலங்கை அரசிற்கு ஆதரவளித்த நாடுகள் மேலோட்டமாகச் கோடிட்டுக் காட்டப்படுள்ளன.

2. தமிழீழ விடுதலைப் புலிகள்.

தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிப் “புனிதத்தைக்” கட்டமைத்துக் கொண்ட நிறுவனத்தின் சொந்த மக்கள் மீதான வன்முறைகள், மனிதத்தின் மீதான தாக்குதல்கள் சுட்டிக்காட்டப்படுள்ளன.

3. புலம் பெயர் சமூகம்.

புலிகளுக்கு ஆதரவளித்த புலம் பெயர் தமிழர்களின் கண்மூடித்தனமான முட்டாள் தனத்தையும், அடிப்படைவாத கருத்தியலும் அதனூடான குற்றவியல் ஆதரவு நிலைப்பட்டையும் தொட்டுச் சென்றிருக்கிறது.

4. மேற்கு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும்.

தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதி குறுகிய நிலப்பரப்பில் அடைத்து வைக்கப்பட்டு ராஜபக்ச அரசினால், பேரினவாதக் கட்சிகள் அனைத்தினதும் துணையோடு சாகடிக்கப்பட்ட போது ஆயுதங்களை வழங்கிய அரசுகளுக்கும், பார்த்துக்கொண்டிருந்த அதிகாரங்களுக்கும் மேம்போக்கான கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கையின் முடிபுகள்

அடிப்படையில் நான்கு வேறுபட்ட சக்திகள் மேலோட்டமாகப் பகுத்தாராயப்பட்ட போதும், எந்தவகையான முடிந்த முடிபுகளும் முன்வைக்கப்படவில்லை.

1. குறித்த நபர்களோ, நபர்களின் தொகுதிகளோ சம்பவங்களின் சூத்திரதாரிகளாகச் சுட்டிக்காட்டப்படவில்லை.

2. சம்பவங்கள் போர்க்குறங்கள் என முடிந்த முடிபாக கூறப்படவில்லை, போர்க்குற்றங்களாகவும், தண்டனைக்கு உரியனவாகவும் மாறலாம் என்ற அனுமானங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.

நடைபெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னதாக நிறுவப்பட்டு, யுத்தக் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கபட்டுள்ளது. இரண்டு வருடங்களின் பின்னர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிபுணர் குழுவிற்கு நடைபெற்றவை யுத்தக் குற்றங்களா என்பதைக் கூட முடிவுசெய்வதற்கு “நிபுணத்துவம்” இல்லாமல் போனது இறுதி நோக்கத்தின் மீது சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

பொறி வைக்கும் அறிக்கை…

அப்படியே அடுத்த கட்டத்தில் இலங்கை அரசின் இனவழிப்பின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் நிறுவப்பட்டாலும், அவை தண்டிக்கப்படுவதற்கான பொறிமுறை ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் இன்றுவரை இல்லை என்பதே உண்மை. பாதுகாப்புச் சபை, ரஷ்யாவையும், சீனாவையும் மீறி முடிவெடுக்க முடியாது. நிபுணர் குழு ஒத்துக்கொள்வது போன்றே ஐக்கிய நாடுகள் நிறுவனமே புதிய பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளது.

இன்று வரை இலங்கை அரச அதிகாரத்திற்கும், கொலைக்குற்றவாளிகளுக்கும், பேரினவாதிகளுக்கும் தாம் தண்டிக்கப்படுவதற்கான உடனடிச் சாத்தியப்பாடுகள் இல்லை என்பது நன்கு தெரிந்த விடயம்.

அனைத்திற்கும் அப்பால் இலங்கை அரசை மிரட்டி தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குரிய கருவியாகப் பயன்படும் தன்மையை அறிக்கையின் முழுமை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேற்கை நோக்கிய இலங்கை அரசின் நெகிழ்வுத்த்னமையைப் பொறுத்தே ஐக்கிய நாடுகளின் அடுத்த நகர்வு அமைந்திருக்கும் என்பது சந்தேகப்படவேண்டிய ஒன்றல்ல.
இது தவிர, எவ்விதமான அரசியல் வேலைத்திட்டமும் அற்ற பரந்துபட்ட மக்கள் பலம் குறித்தோ அதற்கான சிந்தனைத் தளமோ அற்ற மிகவும் பலவீனமான புலம் பெயர் புலி சார் அமைபுகளையும் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் நிறுத்தி வைத்திருப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் அறிக்கை கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும், இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் மகிந்த ராஜபக்ச அரசு, அதன் ஆதரவு சக்திகள், புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் போன்றவற்றை மேற்கு தனது கட்டுப்பட்டிற்குள் உட்படுத்தி வைத்திருப்பதற்கான ஆயுதமாக நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை காணப்படுகிறது.

ஆக, இலங்கை அரசையும், தமிழ்த் தேசிய அரசியலையும் குறிப்பாக புலிசார் அரசியலையும் தமது தேவைக்காகப் பயன்படுத்தும் தன்மைகொண்ட மிகத் தந்திரமான கூறுகளைக் கொண்ட அறிக்கையே இப்போது வெளியாகியுள்ளது.

அறிக்கையின் பின்னான இலங்கை அரசின் அரசியல்…

சீனா, இந்தியா போன்ற நாடுகளின் எல்லைக் கோட்டை மீறி இலங்கை அரசு நீண்ட தூரம் செல்ல முடியாத நிலையில், சிங்கள பௌத்த உணர்வைத் தூண்டி பேரினவாதத் நெருப்பிற்கு எண்ணை ஊற்றி தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை அரசு செயற்பட ஆரம்பித்திருக்கிறது. மக்கள் ஆதரவுத் தளம் பேரினவாதத்தை நோக்கி விரிவடையும் நிலையில் அனைத்துப் பிரதன அரசியல் கட்சிகளும் அறிக்கைக்கு எதிராகவும் பேரினவாத அரசியலுக்கு ஆதரவாகவும் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. இந்தப் பின்னணியில் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது.

பேரினவாத நச்சு வேர்களை நோக்கிய இயக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிங்களை மக்கள் மத்தியில் இலங்கை அரச பிரசாரம் முடுக்கிவிடப்படுள்ளது. இலங்கையில் கையெழுத்து வேட்டை என்ர பெயரில் சிங்கள பௌத்த உணர்வு துண்டப்படுகிறது.

அறிக்கைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.

பேரூர்ந்துகளின் நடத்துனர்களிடமும், பொதுச் சேவைத் துறையினரிடமும், மக்கள் சேவைத் துறையிலிருக்கும் தனியார் நிறுவனங்களிடமும் கையெழுத்துப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைக் கிராமங்களில் கூடப் பேரூர்ந்து ஓட்டுனர்கள் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தியத்தலாவ முகாமிற்குச் செல்லும் வழியில் தேனீர்க்கடையொன்றில் பலர் கூட்டமாக நின்று கையெழுத்திடுவதைக் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த மலையக இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

அறிக்கையின் பின்னான புலிசார் அமைப்புக்களின் அரசியல்…

இவ்வாறு தூண்டப்படுகின்ற சிங்கள பௌத்த இனவாத அரசியலுக்கு எதிராக தமிழ் இனவாத அரசியலைப் புலி ஆதரவு புலம் பெயர் அமைப்புக்கள் பல முன்வைக்கின்றன. சிங்களவர்கள் இணைந்துவிட்டார்கள் தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து கொள்ளுங்கள் என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஒரு வகையில் சிங்கள மக்களை இன்வாத அரசியலை நோக்கிக் கவரும் கருவியாக ராஜபக்ச குடும்ப அரசிற்கும் ஏனைய பேரினவாதிகளுக்கு மறைமுகமாகத் துணைபோகும் அழிவு அரசியலே இந்த இனவாதம்.

மனிதாபிமானிகளதும், ஜனநாயக முற்போக்கு சக்திகளதும், போராடும் உலக மக்களதும் ஆதரவைப் பெற்றுக்கொள்கின்ற வலிமை ஒடுக்கப்படும் தேசிய இனம், அழிக்கப்படும் மக்கள் கூட்டம் என்ற வகையில் தமிழ்த் தேசிய இனத்திற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. அறிக்கை கூறுகின்ற புலிகளின் போர்க் குற்றங்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பன உலக மக்களிலிருந்து எம்மை அன்னியப்படுத்துகின்றது. இன்றும் முன்வைக்கப்படும் இனவாத அரசியல் இந்த அன்னியப்படுத்தலை ஆழப்படுத்தி இலங்கை அரச பாசிசத்திற்குத் துணை போகின்றது.

செய்யவேண்டியது என்ன…?

அறிக்கை முன்வைக்கும் பொறியிலிருந்து ஒடுக்கு முறைக்கு எதிரான முற்போக்குத் தமிழ்த் தேசிய அரசியல் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், இலங்கை, இந்திய, சீன, மேற்கு அரசுகளுக்கு எதிரான ஜனநாயக, முற்போக்கு, மனிதாபிமான அணிகளோடு இணைந்து தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

உறுதியான திடம் மிக்க வேலைத் திட்டத்தின் அடிப்படையிலும், நியாயமான நோக்கங்களின் பின்னணியிலும் “ஒரு குடையின் கீழ்” ஒருங்கிணைவது என்பது தேவையானதே.

இன்றைக்கு எம் முன்னாலுள்ள உடனடித் தேவை.

1. ராஜபக்ச குடும்ப அரசையும் பேரினவாதத்தையும் உள்நாட்டில் பலவீனப்படுத்தல்.

2. சரவதேச மக்கள் மத்தியில் ராஜபக்ச அரசிற்கு எதிரான அபிப்பிராயத்தை ஏற்படுத்தல்.

அறிக்கை கூறுவது போல் புலிகள் போர்க்குற்றங்கள் குறித்த சுய விமர்சம வெளிப்படையாக முன்வைவைக்கப்படுவதிலிருந்தே ஒடுக்கு முறைக்கு எதுரான தமிழ்த் தேசிய அரசியல் புலிகளின் நடவடிக்கைகள் ஊடாகப் பெற்றிருக்கும் அனாகரீகமான, அவமானகரமான கோர விம்பம் களையப்படவும் பழுதுபார்க்கப்படவும் முடியும். இதனூடாகவே உலக மக்களின் பொதுப் புத்தியை மாற்றத்திற்கு உட்படுத்த முடியும். தவிர, சேகரிக்கப்பட்ட பணம் ஈறான புலிகளின் சொத்து விபரங்கள் பொதுத் தளத்திற்குக் கொண்டிவரப்பட்டு மக்கள் நலனுக்காகவும், மக்கள் சார்ந்த அரசியலுக்காகவும் வெளிப்படைத் தன்மையோடு அது பயன்படுத்தப்பட வேண்டும்.

ராஜபக்ச அரசும் ஏனைய பேரினவாதக் கட்சிகளும் தம்மை நிறுவனப் படுத்திக்கொள்ள சிங்கள பௌத்தப் பேரினவாதத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

இதனை உள் நாட்டில் முறியடிக்க…

1. நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை..ப் பிரசாரப்படுத்த வேண்டும்.

2. ஜே,வி.பி அழிக்கப்பட்ட போது ஒரு லட்சம் சிங்கள் இளைஞர்கள் இலங்கை அரரசால் கொலைசெய்யப்பட்டதை விடக் கோரமாத் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் எனபதை சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும்.

3. இலங்கைப் பேரினவாதம் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரான நஞ்சு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

4. நாம் போர்க்குற்றங்களோடு கூடிய புலிகளின் நலன்களுக்க இல்லாமல் அழிக்கப்படும் அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் குரல் கொடுப்போம் என்பதை தெளிவாகக் கூற வேண்டும். இதற்காக, புலி என்ற அடையாளத்தைத் துறக்க வேண்டும்.

5. ராஜபக்ச தண்டிக்கப்படாவிட்டால் இனிமேல் உலகின் எந்தச் சர்வாதிகாரியும் சாட்சியின்றி அப்பாவி மக்களைக் கொன்றுபோட்டுவிட்டு சுகபோகங்களை அனுபவிக்க நேரிடும் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.

6. முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

புலியெதிர்ப்பு புலி ஆதரவு என்ற எல்லைகளைக் கடந்து…

புலியெதிர்பு அல்லது புலி ஆதரவு என்ற இரண்டு குறுகிய வரம்புகளுக்குள் இயங்கும் புலம்பெயர் அரசியல் சிந்தனை இரண்டு அபாயகரமான எல்லைகளைக் கொண்டுள்ளது. புலியெதிர்ப்பு அரசியல் நேரடியாகப் பேரினவாத அரசிற்கு ஆதரவு வழங்கும் அதே வேளை புலி ஆதரவு மறைமுகமான ஆதரவை வழங்குகிறது.

இவை இரண்டிற்கும் அப்பாலான அரசியலை மக்கள் சார்ந்து உருவாக்கும் பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. கடந்தகாலக் கற்றலுக்காக அறிக்கையைப் பயன்படுத்தும் அதே வேளை அதன் அழிவுகரமான கூறுகளை அகற்றி, மீளமைப்புக்கு உட்படுத்துவதனூடாக புதிய பலம் மிக்க ஜனநாயக, முற்போக்கு சார்பு நிலையைக் கொண்ட புதிய அரசியலை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறான பலத்தில் கால்பதித்துக்கொண்டே ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் தேசிய இன விடுதலைக்காகவும் தன்னுரிமைக்காகவும் தமது போரட்டத்தை முன் நகர்த்த முடியும்.

Exit mobile version