
தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்பு யுத்தமும் எழுச்சியும் ஆரம்பத்திலிருந்தே வல்லரசுகளின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அதன் ஒவ்வொரு முற்போக்குக் கூறுகளும் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டு நந்திக கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைந்து போய்விட்டது.
வன்னி இனப்படுகொலை நிகழ்ந்து இரண்டு வருட மௌனத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசினதும் புலிகளினதும் போர்க்குற்றங்களைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை தெற்காசிய அரசியலில் மீண்டும் புதிய அசைவுகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தம்மைத் தகவமைத்துச் செயலாற்றும் உலக வல்லரசுகளின் அடியாள் போன்று தொழிற்படுகின்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை இரு பெரும் முகாம்களை உருவாக்கியுள்ளது.
ஒரு புறத்தில் அறிக்கை வெளியான மறுகணமே, பௌத்த சிங்கள
பண்பாட்டு அழிப்பு, கலாச்சர ஆக்கிரமிப்ப்பு, பௌத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற அனைத்துத் தளத்திலும் தேசிய இன ஒடுக்குமுறை இடைவெளியின்றித் தொடர்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட பெருந் தேசிய நச்சு விதைக்கு ஐக்கிய நாடுகளுக்கும் மேற்கிற்கும் எதிரான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் உரமிடப்படுகின்றது.
இதற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய அமரிக்க எதிர்ப்பு முழக்கத்தை நேரடியாகவே முன்வைக்கின்றது. ரஜீவ் காந்தி, ரணதுங்க பிரமதாச போன்றோரைக் கொலைசெய்வதற்கு அமரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்திக்கொண்டன என்கிறது. இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான கோதாபய ராஜபக்ச இறையாண்மையைப் பற்றிப் பேசுகிறார். பேரினவாதமும் மேற்கு எதிர்ப்பும் இணைந்த நச்சுக்கலவையின் கீழ் அனைத்துப் பேரினவாதக் கட்சிகளும் ஒரு நேர் கோட்டில் இணைந்துள்ளன.
இதன் மறு புறத்தில் தமிழ் இனவாதமும், தேசிய வெறியும்
அப்பாவித்தனமான அறியாமை இருளின் விழிம்பில் வாழ்கின்ற தமிழர்களும் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளும் இணைந்து கொண்ட கோமாளித்தனமான நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இவை அனைத்திற்கும் மேலாக இலங்கையில் பேரின வாதக் கட்சிகள் விரும்பும் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத் தீயிற்கு எண்ணை வார்க்கும் “கைங்கரியத்தை” இவர்கள் தம்மை அறியாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கூறுவது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கையை எதிர்ப்பதற்காவல்ல மாறாக எவ்வாறு பேரினவாதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொள்கிறோமோ அவ்வாறே ஐக்கிய நாடுகளின் பின்னணியையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.
80 களில் இந்திய அரசின் நோக்கத்தையும் அதன் அரசியல் பிபுலத்தையும் புரிந்து கொண்டிருந்தால், முள்ளிவாய்க்கால் வரை நாம் சென்று நந்திக்கடலில் வீரம் செறிந்த ஒரு சந்ததியின் போராட்டத்தைக் கரைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இப்போது வரலாற்றின் மறு சுற்று ஆரம்பமாகிறது, மேற்கின் நலன்களைப் பேணுகின்ற ஐக்கிய நாடுகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக நமது போராட்டம் இன்னொரு அழிவை நோக்கி நகர்த்தப்படுமா என அச்சம் தோன்றுகிறது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நோக்கங்கள்:
1. ஆப்கானிஸ்தானில் கொத்தணிக் குண்டுகளை அறிமுகம் செய்த அமரிக்க நலன்களை தெற்காசியாவில் உறுதிப்படுத்தல்.
2. புதிதாக எழுச்சிகொள்ளும் சூழலில் காணப்படுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை நம்பிக்கைகளை வழங்குவதனூடாகத் தற்காலிகமாக பின்னடைவிற்கு உள்ளாக்குதல்.
3. தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு செழுமை பெற்ற வழிமுறைகளூடாகப் போராட்டம் தொடர்பான கருத்தியல் உருவாகும் சூழலை சிதைவடையச் செய்தல்.
4. சந்தைக்கான சூழலை இலங்கையிலும் அதனைச் சார்ந்து தெற்காசியாவிலும் உருவாக்குதல்.
நிபுணர் குழுவின் அறிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்வதும் அதனை முன்வைத்து புதிய, ஜநாயக – முற்போக்கு அரசியலை வளர்ப்பதும் சமூக அக்கறைகொண்ட ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும்.
1. உலகில் தமிழ்ப் பேசும் மக்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் அணிகளையும் போராட்டக் குழுக்களையும் இணைத்துக்கொள்வதற்கு அறிக்கையின் தகவல்கள் பயன்படுஆன த்தப்பப்டலாம்.
2. புலம் பெயர் நாடுகளின் மனிதப் படுகொலைகளுக்கு எதிரான உலக மக்கள் அபிப்ப்ராயத்தை ஏற்படுத்த அறிக்கை பெரிதும் துணை செய்ய்யும்.
3.உலக மக்களினதும் மனிதாபிமானிகளதும் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்பதற்கும் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயக இடைவெளியை உருவாக்கவும் ஐ.நா அறிக்கை பயன்படும்.
4. இனவாதமின்றிய மக்கள் பற்றுடனான செயற்பாடுகள் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப் பயன்படும்.
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பின்பலத்தில் செயற்படும் ராஜபக்ச குடும்ப ஆட்சி தண்டிக்க்கப்பட போவதில்லை. ஐக்கிய நாடுகளதும் அமரிக்க அய்ரோப்பிய அரசுகளதும் நோக்கமும் தண்டிப்பதல்ல. இவ்வரசுகள் தமது நலனை தெற்காசியாவில் உறுதிப்படுத்திக்கொள்வதே இறுதி நோக்கம். அதற்கான அழுத்தம் அறிக்கையின் ஊடாக வழங்கப்படுகின்றது.
அழிக்கப்படுவதற்கான அரசியலை – தமது வியாபார அரசியல் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட – எந்த அரசு முன்வைத்தாலும் அதற்கு எதிராக மனிதாபிமானிகளும், ஜனநாயகவாதிகளும் முற்போக்கு சக்திகளும் போராடுவார்கள் என்பதை உணர்த்துவது எமது கடமை. நீண்ட அழிவுகள் நிறைந்த போராட்டத்திலிருந்து குறைந்தபட்சம் இதையாவது கற்றுக்கொண்டால் இன்னொரு மூலையில் மக்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதை தடுப்பதற்கான முன் முயற்சியாக அமையும்.