Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழ விடுலைப் போராட்டம் – “மறைக்கப்பட்டவைகளின்” உயிர்ப்பு : அசோக் யோகன்

இவ்வாறான தொடர் ஒன்றை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை நான் எப்பொழுதும் கொண்டிருக்கவில்லை. என் நண்பர்களும், தோழர்களும் எங்களது போராட்ட வரலாற்றின் பக்கங்களின் குறிப்புக்களை எழுதவேண்டுமென்று பல முறை கேட்டுக்கொண்டபோதும் நான் இதைப்பற்றிய எந்தவித அக்கறையும் அற்றவனாகவே இருந்துவந்துள்ளேன். இவ்வாறானதொரு வரலாற்றுத் குறிப்புக்களை எழுதுவதற்கான வல்லமையும் ஆற்றலும் தேடலும் என்னிடம் இல்லையென்பது எனக்கு தெரியும். இது பற்றி , என்னைக் கே ட்டுக்கொண்ட தோழர்களிடமும் நண்பர்களிடமும் கூறியும் வந்துள்ளேன். என்னைவிட ஆற்றலும் தேடலும் கொண்ட என் தோழர்களை இவ் வரலாற்றை எழுதும்படி ஊக்கப்டுத்தி னேன். தோழர்கள் எவரும் முன்வரவில்லை. வாழ்க்கை நெருக்கடி களுக்குள் அவர்கள் சிறைப்பட்டிருந்தனர். அத்தோடு, என்னைப்பற்றியும் எம் தோழர்கள் பற்றியும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின்பால் கடந்த காலங்களிலும் நிகழ் காலங்களிலும் எழுதுகின்றவற்றை பற்றி நான் பொருட்படுத்தாமை கொண்டேயிருந்தேன். அவற்றை புறக்கணிக்கவும் செய்தேன் .

எம்மை அறிந்த எம்மக்களும், தோழர்களும், நண்பர்களும் எம் போராட்ட வாழ்வு பற்றியும், எவ்வாறானதொரு வாழ்வை எம் மக்களுக்காக தேர்வு கொண்டோம் என்பது பற்றியும் நன்கு தெரிந்தே இருந்தனர் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் . எனவே புலம்பெயர்ந்த சூழலில் ‘யாழ்ப்பாண மையவாத அதிகார மேட்டுமை தனங்களின் ‘ வெளிப்பாடாய் “வரலாறு” என்ற பெயரில் இவர்கள் எழுதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் எங்களை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பதையும் உணர்ந்துள்ளோம். அதே நேரம் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாய் நயவஞ்சகமாக, தந்திரமாக கட்டமைக்கப்படும் ” புனைவுக் கதைகளுக்கு” எமது எதிர்வினை ஆற்றலின் மூலம் உண்மை நிகழ்வுகளை வெளிப்படுத்தாவிடின் இப் பொய்யர்களின் “கதை கட்டல்கள் ” சரித்திர சான்றுகளாகி எதிர்காலத்தில் நம்பகத் தன்மையைப் பெற்றுவிடும் என்ற அபாயத்தையும் நாம் நன்குணாந்துள்ளோம்.

ஈழ விடுலைப் போராட்ட வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சக்திகளின் போராட்ட வரலாற்று சான்றுகளும், அடையாளங்களும், ஆவணங்களும் மறைக்கப்பட்டு எவ்வாறு இவர்களால் திரிவுபடுத்தப்படுகின்றன, எவ்வாறு தங்களுக்குரிய அடையாளங்களாக உருமாற்றப்படுகின்றன என்பதற்கு இவர்கள் எழுதுகின்ற இந்த “வரலாறுகள்” சாட்சியம் பகிர்கின்றன. இவற்றை மெளனம் கொண்டு பார்ப்பதன் மூலம் உண்மையான வரலாற்றிற்கும், எம் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த, இழந்த எம் தோழர்களுக்கும் நாம் செய்யும் வரலாற்றுத் துரோகமாக இது அமைவதோடு, இவர்கள் செய்யும் வரலாற்று மோசடிகளுக்கும் நாம் துணைபோகின்றவர்களாகவும் ஆகிவிடுகின்றோம்.

எமது போராட்ட வரலாற்றில் எம் ஒவ்வொருவரிடமும் வரலாற்றின் பதிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. எமது வாழ்வின் சோகம், வாழ்க்கை போராட்டம் இவற்றின் காரணமாக இவைகளை பதிவுகளாக்க முனைப்பின்றி பின் நின்றுவிடுகின்றோம். எமது போராட்ட வரலாற்றில் சிறிய செய்திகள் கூட எமது சமூகத்தின் உண்மையான வரலாற்றை வெளிப்படுத்துவதற்கு பெரும சான்றாக அமைந்துவிடும்.

அரசியல் போராட்ட மற்றும் இனவரையியலிலும் சிறிய சிறிய தரவுகளும் கூட உண்மைக்குப் புறம்பாக அமையும்போது அது வரலாற்றின் ஆய்வின் திசைவழியையே மாற்றிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடுகின்றது. இதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் அவசியமாகின்றது.

இத் தொடர் குறிப்புக்களை எழுதுவதன் ஊடாக எமது போராட்ட வரலாற்றுக்கு, என்னால் பெரிதாக வரலாற்றுச் சான்றுகளாய் எதையும் அளித்துவிடமுடியாதென்பதை உணர்கின்ற அதே வேளை, நான் எழுதுகின்ற இக் குறிப்புக்கள், எமது போராட்ட வரலாற்றைத் திரிவுபடுத்தும் மோசடித் தனங்களில் இருந்து, உண்மை சார்ந்த புதிய திசைவழியை நோக்கிய வரலாற்றை நகர்த்த உதவ முடியுமென்று நம்புகின்றேன்.

என் எழுத்துக்கள் எமது இயக்க அரசியலின் தோல்வி கண்டு விரக்தியுற்று ஒதுங்கி இலங்கையில் வாழும் என் நண்பர்களுக்கும், என் தோழர்களுக்கும் எவ்வாறன பாதிப்புக்களை கொடுக்கும் என்ற பயமும் பதட்டமும் என்னிடம் உள்ளது. ஒரு காலகட்டத்தில் என் மீதான தனிப்பட்ட நம்பிக்கைகளின்பாலும், நான் சார்ந்த அமைப்பின் கொள்கைகளோடும் நம்பிக்கை கொண்டு சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையோடு என்னோடு இணைந்து தங்கள் வாழ்வை தொலைத்த தோழர்கள் அநேகம். இவ்வாறான தோழர்களுக்கு பெரும் நம்பிக்கைகளை விதைத்தவன் என்ற வகையிலும், அவர்களின் இன்றைய வாழ்வின் துயரங்களுக்கு, சோகங்களுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமானவன் என்ற வகையிலும் இத் தொடர் ஊடாக மன்னிப்புக்கோரி நிற்கின்றேன். இத் தொடர் மூலம் மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் துயரத்திற்குள் தள்ளிவிடுவேனோ என்றும் அஞ்சுகின்றேன். எனவே என் குறிப்புக்களில் இலங்கையில் வாழும் நண்பர்களின் தோழர்களின் பெயர்களை தவிர்க்க நினைக்கின்றேன். அவர்கள் விரும்பும் பட்சத்தில் பெயர்களை பயன்படுத்துவேன்.

நான் எழுதப்போகும் இக் குறிப்புக்கள் என் நேர்மையின்பால் உண்மை நிலைகளோடு எழுதப்படுகின்றனவாகவே நான் உணர்கின்றேன். இதில் எவ்வித ஒழிவு மறைவுகளோ, திட்டமிடல்களோ இல்லையென்பதை உளப் பூர்வமாக தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன். இக் குறிப்புக்களில் தவறான செய்திகள் ,கருத்துக்கள் அமையின் அவற்றின் மீதான ஆரோக்கியமான விமர்சன கருத்தாடல்களை எதிர்நோக்கி நிற்கின்றேன். இதன் மூலம் ஆதார பூர்வமான உண்மை சார்ந்த விமர்சன உரையாடல் ஒன்றை எதிர்கொள்ளவும் விரும்புகின்றேன்.

இக் குறிப்புக்களை, பிரான்சிலிருந்து வெளிவந்த ‘ஓசை’ என்ற இதழில் 1993 கடைசி காலங்களில் நான் எழுதி வந்த “துடைப்பானின் குறிப்புக்களிலிருந்து” ஒரு சிறு பத்தியை நினைவில இருத்தி முடிக்கின்றேன். மீண்டும் உரையாடலை தொடர்வோம்.

…முரண்பாடுகள் அற்ற காலம் இனிமையானது. சக இயக்க நண்பர்களின் தோழமையும் அன்பும். இன்று அம்மாவின் நினைவுகளோடு இவர்களும்…

இத் தோழமைகளினால் என் வீடும் அடிக்கடி பொலீஸ் தொந்தரவுக்குள்ளாயிற்று.

என் கிராமம் வித்தியாசகரமானது.

உறவினர்களின் முணு முணுப்பும் வேண்டா வெறுப்பும். புன் சிரிப்போடு அம்மா.

அது ஓர் போராட்டம் மிகுந்த இனிய காலம். ‘இறைவனின்’ மரணம். அம்மாவின் கண்களில்…… நான் மெளனமாய்.

முதன் முதலாய் அம்மா….. அதன் பின் அம்மா மெளனியாய். வீட்டில் இருத்தல் என்பது கடினமாய் முழுமையாய் நான்…

.1983 கடைசிப் பகுதி. அம்மாவின் பார்வையில் நான்.

மெலிந்து சோர்ந்து நரைகண் முதுமையாய் . அம்மாவா அது ! என் நினைவும் வாழ்தல் பற்றிய பயமும் அம்மாவை கவ்விற்று.

வரட்டுச் சிந்தனைகளோடு அதன் ஆதிக்கங்களோடு நான். எனினும் அம்மாவின் நினைவுகள் அடிக்கடி.

கனமாய் கடிவாளம்.

பத்துவருடங்கள் இலையுதிர் காலமாய் … 1993 பாரீஸ் ‘பாலைவனத்தில்.’ தனிமையில் நான்.

எனினும் அம்மாவின் இதமான நினைப்புக்கள் என் நெஞ்சில்.
சென்றவாரம் செய்தி. என் நினைவுகளோடு அம்மா. இறுதிவரை வரட்டுத்தனமாய் நான் தொடர்புகள் அற்று.

“போராட்டம் மனிதர்களை நிறையவே பழிவாங்கிவிட்டது. என்னைப்போல் வரட்டுத்தன மனிதர்களையும் உற்பத்தியாக்கி” .

(அம்மாவின் செய்தி கேட்டு ஆகஸ்ட் 23 .1993. இரவு 9.30 )

நான், இனிவரும் காலங்களில் எழுத முனையும் இக் குறிப்புக்கள் அம்மாவுக்கும், எம் இயக்கத்தால் கொலை செய்யப்பட்ட ‘இறைவன்’ என்ற இறைகுமாரனுக்கும்…

நன்றி.
தோழமையோடு
யோகன் கண்ணமுத்து (அசோக்)
ashokyogan@hotmail.com
00 33 1 43 63 17 69

 
அசோக் எழுதும் தொடர் பதிவின் மேல்வந்தது முற்குறிப்பு..
எதிர்வரும் வாரத்தில் தொடர் ஆரம்பமாகும்..
Exit mobile version