1.நம்பிக்கையின்மையின் ஊற்றுமூலம்
இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அரசியல் வியாபாரிகள் சிலர் அதிகாரவர்க்கத்துடனான தமது தொடர்புகளை இறுக்கப்படுத்திக்கொண்டு அழிவரசியலை சமூகத்தின் பொதுப்புத்தியாக மாற்றத் தலைப்பட்டனர். இந்த அழிவுகளின் இடிபாடுகளிடையே மீண்டெழுந்த சமூகப்பற்றுள்ள ஒரு சிலர் ஆங்காங்கே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் போராடிவருவது சில வேளைகளில் தொலைவில் தெரிகின்ற நம்பிக்கையாயிருந்தது.
உலகமயமான, ஒழுங்கமைக்கப்பட்ட அதிகார வர்க்கம் ஐரோப்பா, அமரிக்கா, ஐக்கிய நாடுகள், இந்தியா, சீன என்ற அனைத்து ஏகபோகங்களினதும் ஒருங்கிணைவால் பாதுகாக்கப்படுவதால் எதிர்பியக்கங்கள் இவர்கள் யாருடனாவது சமரசத்திற்கு வருவதனூடாகவே உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற அவ நம்பிக்கை உலகம் முழுவதும் விதைக்கப்பட்டது.
எம்மில் பலர்மத்தியில் உருவாகியிருந்த இந்த அவநம்பிக்கையை நேபாள மாவோயிஸ்டுக்களின் கட்சிப் பேச்சாளரான தினநாத் சர்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்படுத்தியிருந்தேன்.
“சீனாவின் பின்னணியோ, இந்தியாவின் பிரசன்னமோ, மேற்கின் அதிகாரமோ இன்றி வெறுமனே ஆயுதமேந்திய மக்கள் போராட்டங்களூடாக 10 வருடங்களுள் எம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதுவும் இந்திய அரசு தனது நேரடியான குடியேற்ற நாடுபோலவே அனைத்துப் பலத்தையும் தமக்கு எதிராகப் பிரயோகித்த நிலையில் இதனை சாதிக்க முடிந்தது.” என்றார்.
எனக்குச் சற்று வியப்பாகவிருந்தது.
“மக்கள் மீது தீவிர ஒடுக்குமுறையைப் பிரயோக்கும் அரசை வெற்றிகொள்வது என்பது விண்ணைத் தொடும் அசாத்தியச் செயற்பாடல்ல. மக்கள் அனைவரும் அரச அதிகாரத்தின் மீது வெறுப்ப்டைந்திருக்கும் நிலையில் மக்களின் ஒரு பகுதியினரான அரச ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றமடைவார்கள். இராணுவம், காவற்படை, கடற்படை, வான் படை என்ற அனைத்துப் பிரிவினரும் அதிலும் குறிப்பாக அவற்றின் கீழணிகள் புரட்சிக்காரர்களோடு இணைந்து கொள்வர். ”
“புரட்சியின் ஒரு குறித்த நிலையில் அரச ஒடுக்குமுறை தவிர்கவியலாது அதிகரிக்கும் நிலையில் அரச படைகளின் சிதைவை அவற்றின் எஜமானர்களால் தடுக்கமுடியாத நிலை உருவாகும். இவ்வேளையில் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்” என்று அவர் தொடர்ந்தார்.
மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான தத்துவார்த்த அடிப்படை குறித்து மேலும் உரையாடல் தொடர்ந்தது.
2.அரேபிய முன்னுதாரணம்
துனிசியாவில் அரச அதிகாரத்தை நிர்மூலமாக்கிய மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு முன் நகவிலும், எகிப்த்தியப்
அரபியப் போராட்டங்களின் வெற்றியில் மக்கள் நலன் சார்ந்த அரசு நிறுவப்படுவதற்கான தலைமை அங்கு உருவாகியிருக்கவில்லை என்பதெல்லாம் ஒரு புறமிருக்க மக்கள் போராட்டங்களே அரச அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்கான ஒரே வழிமுறை என்பதை இன்னொரு முறை இந்தப் போராட்டங்கள் நிரூபணம் செய்கின்றன.
உறுதியான தத்துவார்த்த வழிமுறையை நோக்கி நிறுவனமயப்படுத்தப்படாத அரபிய நாடுகளின் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டத்தின் வழியாக ஒழுங்கமைக்கப்படவில்லை. சமூகத்தை ஒழுங்கமைக்கும் கட்சியும் அதனை நெறிப்படுத்தும் மக்கள் திரள் அமைப்புக்களும் அங்கிருந்திருக்கவில்லை. எது எவ்வறெனினும் எலவே, இஸ்லாமிய நிறுவனங்களூடாக இணைவுற்றிருந்த மக்களை அதிகாரத்திற்கெதிரான சுயாதீனப் போராட்டங்களை நோக்கி இணைப்பது வசதியான ஒன்றாக அமைந்திருந்தது.
3.வெற்றிக்கான அடிப்படைகள்
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் ஒடுக்கும் தேசிய இனத்தின் அதிகார வர்க்க நலன்களின் கீழ் இனவெறியூட்டப்பட்ட பெருந்தேசிய இனத்தின் அரச ஊழியர்களும் இராணுவமும் புரட்சியாளர்களோடு இணைந்து கொள்வது சாத்தியமற்றது என்பது மற்றொரு எதிர்வாதம்.
பெருந்தேசிய வெறியூட்டப்பட்ட இராணுவம் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிப்பதை தனது சமூகக்கடமையாகக் கருதும் வகையில் அதிகாரவர்க்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சூழல் எதிர்கொளப்பட வேண்டியதே இங்கு பிரதானமானது.
புரட்சிக்கான உறுதியான உழைக்கும் மக்களின் தலைமை வழங்கப்படுகின்ற வேளையில் பெருந்தேசிய வெறி வெற்றிகொள்ளப்படலாம்.
1905ம் ஆண்டில் சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்துசென்று தனி நாட்டை உருவாக்கிய நிகழ்வு இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.
சுவீடனின் அதிகாரத்தின் கீழிருந்த நோர்வே தனியாகப் பிரிந்து சென்ற வேளையில் ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இன அதிகாரத்திலிருந்து பிரிந்து செல்வதை நோர்வே மக்களின் உரிமை என வாதிட்ட லெனின் சுவீடிஷ் மக்கள் போராட்டங்கள் குறித்தும் கோட்டிட்டுக்காட்டுகிறார்.
பிரிவின் போது நோர்வே மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு சுவீடிஷ் இரணுவம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. இந்த இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து சுவீடனில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள் அரசை நிலை குலையச் செய்தது. இறுதியில் தனது ஆக்கிரமிப்புத் திட்டத்தைக் சுவீடன் கைவிட்டது.அழிவுகள் தவிர்க்கபட்டன.
ஈழ மக்களின் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே எமது நண்பர்களை அமரிக்க அதிகார வர்க்கத்தின் அலுவலக அழிவுச் சுவடுகளிலும், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் மத்தியிலும், இந்திய அரசியல் வியாபாரிகளின் வியாபார நிறுவனங்களிலும் தேடியலைந்திருக்கிறோம்.
ஒடுக்கபடுகின்ற தேசிய இனமான தமிழ்ப்பேசும் தேசிய இனங்களின் நண்பர்கள் எமது கொல்லைப் புறத்தில் வாழ்ந்ததை மறந்துவிட்டிருந்தோம். ஒடுக்கப்படும் சிங்கள் மக்களின் பெரும் பகுதியினரை நாம் கண்டுகொண்டதில்லை. இத்தனை அழிவுகளின் பின்னரும், ஒற்றை வேளை உணவிற்கு வழியின்றி வாழ்க்கையைத் தொலைக்கும் சிங்கள மக்கள் தமது நலன்களுக்காவும் குரலெழுப்பும், தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்காகப் போராடும் யாரையும் நிராகரித்திருக்க எந்த வாய்ப்புமில்ல்லை.
சிங்கள மக்களை மட்டுமன்றி, ஏனைய ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் இனங்களைக் கூட எமது எதிரிகளாக்குவதில் மட்டுமே கடந்தகாலத்தில் ஈழப் போராட்ட இயக்கங்கள் வெற்றிகண்டுள்ளன.
பிரபாகரன் வாழ்கிறாரா இல்லையா என்று விவாதிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களை அண்மித்திருக்கிறோம். வெற்றிகொள்வதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்ததில்லை…
மக்கள் போராட்டங்களுக்கு அடிப்படையான இணைப்புச் சக்திகளான மக்கள் அமைப்புக்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது, எங்கிருந்து அவற்றையெல்லாம் ஆரம்பிப்பது, அழிவிலிருந்து மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள வழிமுறைகள் என்ன.. இவை குறித்த அடிப்படைகளைக் கூடச் சிந்தித்ததில்லை..