ஊடகங்களில் போலியான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. பல்தேசிய நிறுவனங்களால் நடத்தப்படும் கிரேக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஆதரவான கிரேக்கர்களின் கருத்துக்களைப் மட்டும் வெளியிட்டன.
ஐரோப்பிய ஜனநாயாகம் என்ற மாயை கிரேக்கத்தின் சர்வசன வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்துபோன ஐந்து நாட்களுக்குள்ளாகவே தகர்ந்துவிட்டதாக சதீஸ் கோவலாக்கிஸ் வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரித்தானியாவில் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பேராசியராகக் கடமையாற்றும் சதீஸ் கோவலாகிஸ் சிஸ்ரா கட்சியின் மத்திய குழு உறுப்பினர்.
கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; 18 தொடக்கம் 24 வயதானவர்களில் 85 வீதமானவர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
இன்று 07.07.215 நடைபெற்ற பேச்சுவாத்தையில் கிரேக்கத்திற்கு கடன்வழங்க எந்த அடிப்படையும் கிடையாது என ஜேர்மனிய அரசு அறிவித்துள்ளது. மக்களைச் சூறையாடுவதற்கு கிரேக்க அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே கிரேக்க அரசிற்கு ஆதரவு வழங்கப்படும் என்பதில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாகவுள்ளன. கிரேக்க அரசை தமது நாட்டின் மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயற்படுமாறு கூறுகின்றன. அதனை ஜனநாயகம் என அழைத்துக்கொள்கின்றனர்.
கிரேக்க மக்கள் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கின்றனர் என்றும் வறுமையை எதிர்கொள்ளப் போகின்றனர் என்றும் பல்தேசிய வர்த்தக ஊடகங்கள் தமது பிரச்சாரத்தைத் தொடர்கின்றன. தமது வறுமை அதிகரிக்கும் என மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக தாம் தொடர்ந்து பல்தேசிய நிதிப் பயங்கரவாதிகளின் கொள்ளையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறுகின்றனர். அதனால் மக்களின் வாக்களிப்பு சோசலிசப் புரட்சிக்கான முன்னுரை என்பதை ஐரோப்பிய அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்கிறது.
இதனால் இரண்டு முக்கிய வேலைத்திட்டத்தை ஏகாதிபத்திய அரசுகள் முன்வைக்கின்றன.
முதலாவதாக சிஸ்ரா கட்சியை வலதுசாரி முதலாளித்துவ அடியாட்களின் கூடாரமாக மாற்றுவதற்குச் சதி செய்வது.
இரண்டாவதாக, கிரேக்க மக்களைப் பழிவாங்கும் வகையில் மீண்டும் மக்களைக் கொள்ளையடிக்கும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது.
உலகம் முழுவதும் கிரேக்க மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் பல்லாயிரக்கணகான மக்கள் கலந்துகொள்கின்றனர்.
கிரேக்கத்தை மேலும் சூறையாடுவதைத் தவிர, ஏனைய ஐரோப்பிய நாடுகளும் கிரேகத்தைப் பிந்தொடரலாம் என்ற அச்சமும் ஐரோப்பிய அதிகாரவர்க்கத்திடம் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது.
ஒரு வார எல்லைக்குள் நடைபெற்ற வாக்களிப்பு உலக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தைக் குலுகியுள்ளது. ஐரோப்பிய உழைக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கை வித்துக்களை விதைத்துள்ளது. கிரேக்கத்தின் சிஸ்ரா அரசிடம் உறுதியான அரசியல் வேலைத்திட்டம் என்ற எதுவும் கிடையாது எனினும் கிரேக்க மக்கள் ஐரோப்பிய மக்களின் முன்னேறிய பிரிவினராகத் தம்மை அறிவித்துள்ளனர்.
உலகத்தின் ஒரு எல்லையில் சமூகத்தின் பெரும்பகுதி அழிவுகளிலிருந்து தம்மைச் சுதாகரித்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அதன் மற்றொரு முனையில் பின் தங்கிய சமூகத்தை தொடர்ந்து பாதுகாத்துப் பேணிக்கொள்ள அதன் தலைமைகள் முயல்கின்றன.
கிரேக்கத்தின் ஒரு சில நாட்கள் உலகம் முழுவதும் அதனை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து அவர்கள் போராடத் தயாராகவிருந்தது தான் காரணம்.
முள்ளிவாய்க்காலில் அழிப்பு நடைபெற்ற போது உலகத்தில் யாரும் திரும்பிப்பார்க்க முடியாத அளவிற்கு தமிழர்களின் பிற்போக்கு பழமைவாதத் தலைமைகள் நடந்துகொண்டன.
இனவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஏகாதிபத்தியக் கூலிகளாகவும் தம்மை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்திய அதே தலைமைகள் இலங்கை அரசின் அழிப்பின் பின்புலத்தில் செயற்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் ஒட்டுக்குழுக்கள் போன்று செயற்பட்டன. மாபியாக் குழுக்கள் போன்ற சாயலைக் கொண்டிருந்தன. தம்மைச் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், நேர்மையான விமரசனங்களை முன்வைக்கவும் தவறி மக்களை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றன.
அவர்கள் இன்றும் தொடர்கின்றனர். தம்மைத் தாமே தலைமைகள் எனக் கூறிக்கொண்டு மக்களை அழிக்கத் துணைசெல்கின்றனர். உலக மக்களிடமிருந்து போராட்டத்தை அன்னியப்படுத்தி அதிகாரவர்கத்திடம் அதனை ஒப்படைத்துள்ளனர்.
இனவழிப்பு நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்து சென்ற பின்னரும் பழமைவாத வலதுசாரிக் குழுக்கள் பாராளுமன்ற ஆசனங்களுக்காக மோதிக்கொள்ள புலம்பெயர் குழுக்கள் அதனைப் £10 பற்றுச்சீட்ட்டிற்கு விற்பனை செய்கின்றன.
ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச் சூழ்நிலை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்ட முன்னேறிய மக்கள் அணியை ஈழத்தில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலையை மாற்றுவதற்காக தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைமைகளும், புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் களமிறக்கப்பட்டன. அது ஈழத் தமிழ்ச் சமூகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக பின் தங்கிய நிலையிலேயே வைத்துள்ளது.