உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை.
2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டதாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 30 ஆண்டுகாலம் பல்வேறு படுகொலைகள் சிங்களப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டன.
2004 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் பெருமளவில் சிங்களக் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ராஜபக்ச அரசின் நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைத் தோற்றுவித்தது. இதனால் கொழும்பிலும் மேலும் பல சிங்களப் பிரதேசங்களிலும் நடைபெற்ற சில தாக்குதல்களை இலங்கை அரசே திட்டமிட்டு நடத்தியது. கொழும்பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் வேலைக்குச் செல்லும் ஒருவர் வீடு திரும்புவாரா என்பதே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் அளவிற்கு குண்டுத் தாக்குதல் தொடர்பான அச்சம் பரவிப் படர்ந்திருந்தது.
இதனால் வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு, புலி அழிப்பு என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ராஜபக்ச குடும்பம் மைத்திரிபால சிரிசேன, ரனில், ஜேவிபி , இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சி(முன்னைய ஜே.வி.பி இன் உள்ளணி) போன்ற அனைத்துகட்சிகளதும் ஆதரவோடு நடத்திய இனப்படுகொலை ராஜபக்சவை சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாக்கியது.
ஆரம்பத்திலிருந்தே இந்திய அரசாலும், ஏகாதிபத்திய நாடுகளாலும் தொடர்ச்சியாகக் கையாளப்பட்ட விடுதலைப் போராட்டம் வட-கிழக்குத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் வகையிலேயே கட்டமைக்கபட்டிருந்தது. தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தேசியக் கூச்சலிடும் விதேசிகளும் இத் தனிமைப்படுத்தலில் கணிசமான பங்கு வகித்தனர். இவர்கள் அனைவரும் ஏகதிபத்தியங்களதும் இந்திய அரசினதும் நிகழ்ச்சி நிரலின் அடிபடையிலேயே செயற்பட்டனர்.
இவை சிங்கள மக்களையும், முஸ்லீம் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் போராட்டத்திலிருந்து முழுமையாக அன்னியப்படுத்திற்று.
வன்னி இன அழிப்பு முடிந்ததும் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவைக் கதாநாயகனாக்குவதற்கு இவை அனைத்தும் பெரும் பாத்திரத்தை வகித்தன,
மகிந்த ஜனாதிபதியானதும் ராஜபக்சவின் மீதான போர்க்குற்றங்களைக் காட்டி மிரட்டியே மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும், இந்தியாவும் இலங்கையை சூறையாட ஆரம்பித்தன. இலங்கையின் இராணுவச் செலவின் அதிகரிப்பும், ராஜபக்ச குடும்பத்தின் கொள்ளையும். ஏகாதிபத்திய நாடுகளின் சூறையாடலும் இலங்கையின் சாமனிய மனிதனை இதுவரை கண்டிராத வறுமையின் பிடிக்குள் சிக்கவைத்தது.
சிங்கள மக்கள் தமது வாழ்வாதரத்திற்காக நடத்திய போராட்டங்கள் மீது மிருகத்தனமான இராணுவ ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மூன்று தடவைகள் அமைதிப் பேரணிகள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நட்தப்பட்டது. அன்றாட நுகர் பொருட்களின் விலை பலமடங்காக அதிகரித்தன. சிங்களக் கிராமங்களில் தற்கொலை வீதம் வரலாற்றில் காணமுடியாத அளவிற்கு அதிகரித்தது. போரின் போது உருவாகியிருந்த இராணுவப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, ராஜபக்ச குடும்பத்தின் சூறையாடல் போன்றன இலங்கையின் வறிய மக்களை கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றது. இலங்கை என்ற சிறிய நாட்டில் ஒரு நாளைக்கு 11 பேர் வறுமையால் தற்கொலைச் செய்துகொள்கிறார்கள்.
ஊவா மகாணத் தேர்தலின் வீழ்ச்சி ராஜபக்ச அரசை அச்சத்திற்கு உள்ளாக்கியது. இழந்த செல்வாக்கை மீட்பதற்கு ராஜபக்சவிற்கு வேறு வேலைத்திட்டம் அற்றுப்போன நிலையில் தேர்தலுக்கான திகதி அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 8ம் திகதி 2015 இல் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் சுருக்கமான பின்புலம் இதுவே.
ராஜபக்ச ஜனாதிபதியனதும் அவரின் போர்க்குற்றங்களைக் காரணம்காட்டியே மேற்கு ஏகாதிபத்தியங்களும், இந்தியாவும், சீனாவும் தமது தங்குதடையின்றிய தலையீட்டை ஆரம்பித்தன. கடந்த ஐந்துவருட ஆட்சிக்காலத்தில் இலங்கையின் எல்லா முனைகளிலும் மேற்கு ஏகாதிபத்தியங்களதும் அவர்களின் இலங்கைத் தரகுகளதும் ஆளணிகளும் அடியட்களும் ராஜபக்சவின் ஆசியுடன் நிறுத்தப்பட்டன.
மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கு ராஜபக்சவின் சேவை இத்தோடு தேவையற்றதாகப் போனது. தனக்குத் தேவையான அளவிற்கு ராஜபக்சவைப் பயன்படுத்திக்கொண்ட ஏகாதிபத்திய அரசுகளும், பல்தேசிய வியாபார நிறுவனங்களும், இந்தியாவும், தேவை முடிந்ததும் புதிய ஒருவரை நியமிக்க தீர்மானித்தன.
இனக்கொலை, பல்தேசியச் சுரண்டல் ஆகியவற்றிற்கு ராஜபக்ச ஏற்படுத்திய வெளியை நிர்வகிப்பதற்கு மேற்கு நாடுகளுக்கும் உள்ளூர் தரகர்களுக்கும் சிக்கல்களற்ற நிர்வாகிகள் தேவைப்பட்டனர். அதற்கான தெரிவே மைத்திரிபால சிரிசேன.
மேற்கு நாடுகளின் கணிப்பின் அடிப்படையில், ராஜபக்சவின் இருப்பு,
1. வட-கிழக்கில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தும்.
2. நீண்டகால ஆட்சியென்பது சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் போரட்டங்களையும் தோற்றுவிக்கும்.
3. ராஜபக்சவால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட இராணுவ மற்றும் வர்த்தகப் பரப்பை சீனாவின் தலையீடின்றிப் பயன்படுத்தலுக்கு இடையூறாகும்.
ராஜபக்ச வெளியேற்றப்பட்டல் மேற்கு நாடுகளுக்கு மேலும் சில பயன்கள் உண்டு:
1. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அமைப்புக்களுக்கு ராஜபக்சவைத் தூக்கிலிடுவது மட்டுமே அரசியல். ராஜபக்ச அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டல் புலம்பெயர் அமைப்புக்களுக்கு நினைவஞ்சலிகளை நடத்துவதைத் தவிர வேறு அரசியல் கிடையாது. அதன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் வாழும் போராட்ட சக்திகளைத் தனிமைப்படுத்தி அழிப்பது இலகுபடுத்தப்படும்.
2. ராஜபக்சவை மையமாக வைத்து புலம்பெயர் நாடுகளில் ஏகதிபத்திய எதிர்ப்புணர்வு தமிழர்கள் மத்தியில் வளர்ந்து வருகின்றது. இதனை ஆபத்தானதாகக் கருதும் மேற்கு அதிகாரவர்க்கங்கள் ராஜபக்ச நீக்கப்படுவதை விரும்புகின்றன.
3. புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளும் புலிகளின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் இலங்கையில் முதலிடுவதற்கு தயக்கம் காட்டுவதற்கு ரஜபக்சவின் இருப்பே பிரதன காரணம். ஏகாதிபத்தியங்களின் உளவுப்படைகள் போன்று செயற்படும் புலம்பெயர் வியாபாரிகள் தடையின்றி இலங்கையில் முதலிடுவதற்கு ராஜபக்சவின் அரசியல் நீக்கம் வசதியேற்படுத்தும்.
இதனல் ராஜபக்சவின் ஏகாதிபத்திய அடியாள் என்ற பணியத் தொடர்வதற்கு புதிய முகம் ஒன்று தேவைப்பட்டது. அதுவே மைத்திரிபால சிரிசேன.
ஆக, ராஜபக்ச ஏற்படுத்திய சுரண்டல் அமைப்பையும், இனச்சுத்திகரிப்பையும் தொடர்வதற்கு மைத்திரிபால சிரிசேன ஏகதிபத்திய அரசுகளல் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக நாணய நிதியம் வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புதல் வழங்கியிருந்த கடன் தொகைகளை 2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது. ராஜபக்ச அரசிற்கு நிபந்தனைகளை விதித்தது. ரூபாயின் மதிப்பைக் குறைக்குமாறும், அரச செலவினங்களை குறைக்குமாறும் வற்புறுத்தியது. 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இரண்டு கடன் தொகைகளையும் தற்காலிகமாக நிறுத்தும் முன்பே ராஜபக்ச அரசு கல்வியையும் மருத்துவத்தையும் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது. ஐ.எம்.எப் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தனியார் மயமாக்கலை விரைவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டது.
ஐ.எம்.எப் இனதும் மேற்கினதும் கொள்ளைக்கு ராஜபக்ச உட்பட யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ராஜபக்ச அரசையும் அதன் எதிரணையையு மேற்கு அரசுகளே வழிநடத்தின. ராஜபக்சவை மேற்கு ஏகாதிபத்தியங்களோடு இணைந்து தூக்கில் போடுவோம் என்று புலம்பெயர் தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைவரும் கூச்சலிட்டுக்கொண்ருக்கும் போதே இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நீண்டகால அடிப்படை உரிமைகள் உருவி எடுக்கப்பட்டன.
பிரித்தானியாவில் குடிகொண்டிருக்கும் ஜே.சி.பி, லைக்கா போன்ற பல்வேறு பல்தேசிய நிறுவனங்களின் நிதி வழங்கலில் கோலாகலமாக நடைபெற்ற பொது நலவாய மாநாட்டின் போது கல்வியையும் மருத்துவத்தையும் தனியார்மயப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பிரித்தானியாவின் பல்கலைக்கழகங்களில் ஒன்றான லங்கஷ்யர் யூனிவர்சிட்டி, 180 ஏக்கரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் அப்போதைய பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹக் இனால் நாட்டப்பட்டது. என்ற goldshield-pharmaceuticals மருத்துவ நிறுவனம் இலங்கையின் மருத்துவத்தில் புதிய ஒப்பந்ததின் ஊடாகப் புகுந்துகொணது.
இலங்கையின் மாணர்வர்கள் மத்தியில் எழுசிகள் ஏற்படாதவகையில் வில்லியம் ஹக் தன்னார்வ நிறுவனங்களை ஆரம்பித்துவைத்தார்.
வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னன காலம் முழுவதும் ஏகாதிபதியங்களின் நேரடித் தலையீட்டிற்கான அனைத்து கதவுகளும் தட்டப்படுவதற்கு முன்பே இலங்கை அரசால் திறக்கப்பட்டன.
இனிமேல் அதனை நிர்வகிப்பதற்குரிய அரசும் தேவையானல் மக்களி ஒடுக்கி அழிக்கும் அரசுமே பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்காக இலங்கைக்குச் சென்றிருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக், கொன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரத் தரகர் நிர்ஜ் தேவா ஆகியோர் உட்பட மேலும் சில பிரமுகர்களின் பிரசன்னத்தோடு கொழும்பில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டவர்களில் பிரதானமானவர் ரனில் விக்ரமசிங்க. ராஜபக்சவின் எதிரணித் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரனில் மேற்கின் நேரடிச் செல்வாக்கிற்கு உட்பட்டவர். வில்லியம் ஹக்கின் முதற்பெயரை விழித்து அழைக்கும் அளவிற்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கமானவர்.
இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் மற்றொரு பிரமுகரே நிர்ஜ் தேவா. நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக Distilleries Co. of Sri Lanka Ltd., Aitken Spence Plc, The Kingsbury Plc, Aitken Spence Hotel Holdings Plc (Sierra Leone), MTD Walkers Plc, Melstacorp Ltd., Aitken Spence Hotel Holdings Plc போன்ற நிறுவனங்களில் தேவா நியமிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் ஆரம்பித்து வடக்கின் குடி நீரை நச்சாக்கும் எம்.ரி.டி வோக்கர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் நிர்ஜ் தேவ என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ஜ் தேவா மகிந்தவிற்கு எதிரான அணியின் சார்பில் இன்று செயற்படுகிறார்.
இலங்கையிலுள்ள தரகு முதலாளிகளின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் தம்மிக பெரேரா என்ற வர்த்தகர். ஹேலிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், இலங்கையில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராடிய வெலிவேரிய மக்கள் மீது அரசாங்கப் படைகளை அனுப்பிக் கொலைசெய்வதற்குக் காரணமாக அமைத்தவர் தம்மிக்க பெரேராவே. போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க இலங்கையின் முதல்தர பணக்காரர்.
மேற்கின் முதல்தர தரகு முதலாளியான தம்மிக்க இப்போது யூ.என்.பி இன் ஆதரவாளர். 150 மில்லியன் ரூபாய்களை யூன்.என்.பி தேர்தல் நிதியாக வழங்கியதாக அணியினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளில் உச்சி மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கைகளின் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சியின் உச்சிமாநாட்டிற்கு இலங்கையிலிருந்து ரனில் அழைக்கப்பட்டிருந்தார்.
பிரித்தானியாவிற்குச் சென்ற ரனில் நிர்ஜ் தேவா மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகளின் பிரதானிகளுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபடுகிறார். ரனில் இலங்கைக்குச் சென்றதும் ராஜபக்சவின் தேர்தல் தொடர்பான வதந்திகள் பரவ ஆரம்பிக்கின்றன.
இதே காலப்பகுதியில் கொழும்பின் பாதுகாப்பு இலங்கையின் மத்திய புலனாய்வும் பிரிவிடமிருந்து இராணுவத்தின் கைகளிற்கு மாற்றப்படுகின்றது. இதற்கான ஆலோசனை ராஜபக்ச அரசிற்கு உள்ளிருந்தே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் ராஜபக்ச எதிரணியின் அசைவுகள் இலகுபடுத்தப்படுகின்றன.
புலனாய்வுப் பிரிவு அகற்றப்பட்ட நிலையில் மைத்திரிபால மற்றும் ரனில் போன்றவர்களின் அசைவுகள் கண்காணிக்கப்பவில்லை. இதனால் யாருமே எதிர்பார்க்காமல் திட்டமிட்டு எதிரணி உருவாக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து ராஜபக்ச இன்னும் விடுபட்டாகவில்லை.
டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் மகிந்த ரஜபக்சவின் அரசில் சுகாதார அமைச்சராகப் பதவிவகித்த மைத்திரிபால சிரிசேன பதவி விலகி எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகிறார்.
மைத்திரியுடன் எதிர்க்கட்சிக்கு முதலில் தாவிய அமைச்சர் ராஜித சேனரத்ன என்ற மீன்பிடி அமைச்சர். மகிந்தவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய ராஜித மேற்கு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கான ராஜபக்சவின் அடியாளாகச் செயற்பட்டார்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பொது உறவு நிறுவனமான பெல் பொட்டிங்டரைக் கையாள்வதற்காக ராஜிதவே மகிந்தவால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் மேற்கு ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ராஜித எதிரணியின் முக்கிய உறுப்பினரானார்.
போரை நடத்திய மேற்கு அரசுகளே மனித உரிமை, போர்குற்றம் போன்ற அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தமது ஆளுமைக்கு உட்படுத்தின.
இலங்கையிலிருந்து மனித உரிமைவாதியாகச் செயபட்ட அரசியல் செல்வாக்குமிக்க ஜே.சி.வெலியமுன ஜேர்மனியிலிருந்து இயங்கும் ட்ரன்ஸ்பரன்சி இன்ட்ர்னஷனல் உட்பட பல உரிமை அமைப்புக்களின் முகவர். ராஜபக்ச ஆட்சியில் நீடிப்பதற்கு இதுவரை தனது மறைமுக ஆதரவை வழங்கிய வெலியமுன இப்போது அவரின் எதிரி. தேர்தலில் அரச வன்முறை தலைவிரித்தாடுவதாகவும் தேர்தல் நீதியாக நடைபெறாது என்றும் இப்போது கண்ணீர் வடிக்கிறார்.
இவ்வாறு ராஜபக்சவை இயக்கிய மேற்கின் நிறுவனங்களின் அத்தனை பிரதிநிதிகளும், அடியாட்களும் தரகர்களும் இன்று மத்திரிபால சிரிசேனவின் ஆதரவாளர்கள்.
இலங்கையின் தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மின்சாரம், கட்டுமானத் தொழில், விவசாயம், ஆடைத் தொழில் ஆகிய அனைத்துத் துறைகளும் மேற்கினதும் அதன் தரகர்களதும் நேரடிக் கட்டுப்பாட்டினும் உள்ளது. இத்தரகர்களில் பொதுவாக அனைவருமே முன்பு ராஜபக்சவின் ஆதரவாளர்கள். இப்போது மைத்திரியை ஜனாதிபதியாக்குவதன் பின்புலத்தில் செயற்படுகின்றனர்.
மேலும் ஆழமான பல்வேறு தரவுகளும் தகவல்களும் மேற்கு ஏகாதிபத்தியங்கள் மகிந்தவின் சேவையை நிறைவு செய்து மைத்திரியை நியமிக்க முற்படுகின்றன என உறுதிசெய்கின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சியில் அடிப்படை வாழ்வாதாரங்களைக்கூட இழந்து நிற்கும் மக்கள் மைத்திரிபால சிரிசேனவிற்கு வாக்களிக்கும் நிர்பந்தத்தை நோக்கி வலிந்து தள்ளப்பட்டுள்ளனர். ராஜபக்சவிற்கு எதிரான மக்களின் வாக்குகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு இலங்கை முழுவதும் மைத்திரிபாலவிற்கான ஆதரவு பெருகிவருகின்றது.
எது எவ்வாறாயினும் இத் தேர்தலில் யார் தோல்வியடைந்தாலும் வெற்றிபெறுவது ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசுமே.
இந்த நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்ற ஆய்வில் முன்னணி சக்திகளும் இடதுசாரிகள் என்று தம்மைக் கூறும் போலிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதெல்லாம் இடதுசாரிகள் அதனோடு தொற்றிக்கொள்ள, மக்கள் மத்தியிலான செயற்பாடுகளைத் தன்னார்வ நிறுவனங்களே மேற்கொள்ளும். திட்டமிடப்பட்ட இச்சமன்பாடுகள் சந்தைப்படுத்தலுக்கான அல்லது சுரண்டலுக்கான சூழலை உருவாக்குவதற்கான ஏகாதிபத்தியத் தந்திரோபாயமாகும்.
1. மகிந்தவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோருபவர்கள்:
இந்த நிலையில் மகிந்தவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இனப்படுகொலைக்கும் பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் வாக்களிக்கக் கோருபவர்களே.
2. மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோருபவர்கள்:
அடிப்படையில் மகிந்தவின் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இனவழிப்பைத் தொடர்வதற்கும், இலங்கையில் ஏற்கனவே மகிந்தவால் உருவாக்கப்பட்டுள்ள நவகாலனித்துவ சுரண்டல் அமைப்பை நிர்வகிப்பதற்கும் ஏகபோக அரசுகளால் நியமிக்கப்பட்ட ஒருவரை ஆதரிப்பது என்பதே இதன் உள்ளர்த்தம். தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு மைத்திரிபாலவை ஆதரித்தால் அதன் கருத்தியல் புரிந்துகொள்ளக் கூடியதே. அதிகாரவர்க்க அரசியல் தவிர்ந்த வேறு எதையும் அறியாத வாக்குப் பொறுக்கிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வெறு எதுவும் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மக்களா பேரினவாதிகள என்ற தெரிவுகளுக்கு இடமில்லை. மைத்திரியா மகிந்தவா என்ற எல்லையை அவர்கள் தாண்டமுடியாது.
சாரிசாரியாக அழிக்கப்படும் மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகள் என அறிவித்துக்கொண்டு பேரினவாதி ஒருவருக்கு வாக்களிக்கக் கோரவேண்டிய நிலையில் அவலத்துள் வாழ்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். அதற்கான அவர்கள் கூறும் அபத்தமான நியாயங்கள் பேரினவாத அரசியலை நியாயப்படுத்துகிறது.
இதுவரைக்கும் தெகிவள பகுதியில் தமிழர்களின் வாக்குகளுக்காக தேசியவாதிகளின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட விக்கிரமபகு கருணரத்ன, இப்போது மைத்திரியுடன்! பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் விக்கிரமபாகு என்ற ட்ரொஸ்கிஸ்ட் ஒரே மேடையில் அமர்ந்து ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார். நாட்டின் ஒருபகுதிச் சிறுபான்மையினருக்கு ஜனநாயகத்தை மறுக்கும் மைத்திரிபால விக்கிரமபாகுவிற்கு ஜனநாயகவாதியகத் தெரிகிறார்.
3. தேர்தலைப் நிராகரிக்கக் கோருபவர்கள்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே இக்கருத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் நியாயமாகத் தென்படும் இக்கருத்து மைத்திரிபாலவின் வாக்குப்பலத்தைச் சிதைக்கும் என்பதும் வெளிப்படையானது, மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டமும், தேர்தலுக்கு மாற்றான வழிமுறைகளையும் முன்மொழிந்தால் இக்கோரிக்கை வலுவானது மட்டுமல்ல தேவையானதுமாகும். எந்த மாற்றுத் திட்ட்மும் இன்றி மைத்திரிபாலவைப் பலவீனப்படுத்துங்கள் என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும்.
கஜேந்திரகுமாரிடம் சில முழக்கங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் உணர்ச்சிவசப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் இந்த வெற்று முழக்கங்கள் எந்தப் பயனும் அற்றவை. வன்னி அழிப்பு முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னரும் குறைந்தபட்டச வேலைத்திட்டத்தை முன்மொழிவதற்குக் கூட இக்கட்சிகள் முன்வரவில்லை. ஆக, தேர்தலைச் சுற்றியே இயங்கும் இவர்களின் அரசியல் வழிமுறை ஒடுக்கப்படும் தேசிய இனம் சார்ந்ததல்ல. தேர்தலை நிராகரிப்போம் இவர்கள் முன்வைக்கும் கருத்து மாற்றுத் திட்டங்களற்ற வெற்று முழக்கங்களே.
4. இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்பவர்கள்:
இவர்கள் இரண்டு வேறு வேட்பாளர்களை நிறுத்தியுள்ள்னர். முதலாவதாக, முன்னிலை சோசலிசக் கட்சி என்ற இனவாதக் கட்சி இதுவரையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்ததில்லை. ஆக, இக்கட்சியிடம் தேசிய இனங்கள் தொடர்பாகவோ அன்றி ஒடுக்கப்படும் சிங்கள மக்களை அணிதிரட்டுதல் தொடர்பாகவோ எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பது வெளிப்படை. பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குள் புதைந்து சிதைந்துபோன வாக்குப் பொறுக்கிகளின் இக்கட்சி சேடமிழுக்க ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. சுய நிர்ணைய உரிமையை என்ற அடிப்படை ஜனநாயகத்தை மறுக்கும் இக் கட்சி மக்களின் உரிமை குறித்துப் பேசுவது வேடிக்கையானது.
அடுத்த வேட்பாளர், சிறீதுங்க விஜயசூரிய. ட்ரொஸ்கியக் கட்சியான ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரான சிறீதுங்கவிற்கு ஜனாதிபதித் தேர்தல் அனுபவம் இது முதல் தடவையல்ல. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 35405 வாக்குக்களைப் பெற்று மூன்றாமிடத்திற்குச் சென்றவர்.
சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரும் சிறீதுங்க தமிழ்ப்பேசும் மக்கள் சார்ந்த ஒருபகுதியினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வார் என்பது வெளிப்படையானது. இத்தேர்தலில் புறக்கணிக்கத்தக்க மகிந்தவிற்கு எதிரான வாக்குகளில் ஒருபகுதி சிறிதுங்கவை நோக்கிச் செல்லும். வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதரவோடு, விக்கிரமபாகுவைப் போன்று ஒருசில ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள சிறீதுங்கவிற்கு ஆரம்பப் புள்ளியாக அமையும்.
2005 ஆம் ஆண்டில் மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் வெற்றிடமான நிலையில் வாக்குக்கேட்ட சிறீதுங்க 10 வருடங்களின் பின்பும் அதே நிலையில் காணப்படுகிறார். இனிமேலாவது வெகுஜன வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்பதும். அதனூடாகப் பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றை நிறுவிக்கொள்வதும் ஜனாதிபதித் தேர்தலை விட சிறீதுங்கவிற்கு முக்கியமானது.
சிறீதுங்கவின் முன்னாலுள்ள பணி சிங்கள் மக்களை அணிதிரட்டுவதும், சமூக மாற்றத்திற்காகவும் அதன் ஒரு பகுதியான சிறுபான்மைத் தேசிய இனங்களில் அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமைக்காக அவர்களைப் போராடப் பயிற்றுவிப்பதுமே. தேர்தல் வழிமுறைகளைக் கண்டுகொள்ளாது, மக்களை அணிதிரட்டிப் போராடினால் எதிர்வரும் 10 வருடங்களில் சிறீதுங்க தேர்தலில் வாக்குப் பொறுக்க வேண்டிய நிலை ஏற்படாது.
இத் தேர்தல் உணர்த்தும் மறைக்க முடியாத உண்மை என்னவென்றால் இலங்கையில் சிங்கள மக்களுக்கோ அன்றி தமிழ் மக்களுக்கோ அரசியல் தலைமைகள் கிடையாது என்பதே. மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் தேர்தல் ஜனநாயகத்திற்கு அப்பால் மக்களின் புதிய ஜனநாயகத்திற்கான குறைந்தபட்சத் திட்டத்தையாவது முன்வைக்க வேண்டிய தேவை எம்முன்னால் உள்ளது. இத்தேர்தலில் வாக்குக் கேட்கும் எந்தக் கட்சியிடமும் இக் குறைந்தபட்ச வேலைத் திட்டங்கள் இல்லை. வெற்று முழக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்குக் கேட்பதற்கான வெளியை தேர்தல் என்ற தலையங்கத்தில் பெருந்தேசியவாதக் கட்சிகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதானதும், உழைக்கும் மக்கள் மீதானதுமான யுத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்துவதே இன்று எம் முன்னாலுள்ள தேவை.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வெளியான குறிப்பிடத்தக்க கருத்துக்கள்:
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றியஉரை.
சனாதிபதி தேர்தலில் என்ன செய்திட வேண்டும்? : பழ றிச்சர்ட்