Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை காலி(Galle) இலக்கிய விழா – நம்பிக்கை தரும் எதிர்க்குரல்கள் : சபாநாவலன்

உலகத்தின் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மனிதப்பிணங்களுள் புதைத்துவிட்டு தெற்காசியாவின் தென்கோடியில் அரசியல் தர்பார் நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரச பாசிசம். அடிப்படை உரிமைகள் குறித்துச் சிந்திக்க முற்படுகின்ற மனிதனைக்கூட காணாமல் போனவனாக, தேசத் துரோகியாக மாற்றுகின்ற வல்லமை பெற்றிருக்கின்றது ராஜபக்ச அரசு. மூன்று தினங்களுள் ஐம்பதாயிரம் அப்பாவி மனிதர்களை, தமிழ்ப் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக நந்திக் கடலோரத்தின் கிராமங்களில் கனரக ஆயுதங்களோடு கொன்றுபோட்ட இலங்கை அரசு, உலகின் அனைத்து அரச பயங்கரவாதங்களையும் விஞ்சியிருக்கின்றது.

ஜனநாய முகம்காட்டும் அனைத்து உலக வல்லரசுகளின் மௌனத்தின் மத்தியில், ஐக்கிய நாடுகள் அண்ணார்ந்து பார்த்கொண்டிருக்க இந்திய அரசின் துணையோடு, சீனாவின் ஆசியோடு இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்து இன்னும் இரண்டு வருடம் முழுமையடையவில்லை. அமரிக்கா உலகின் பொதுப்புத்தியாகக் கற்றுக்கொடுத்த “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ” என்ற தலையங்கத்தின் ஒவ்வொரு உள்ளார்ந்த அர்த்ததையும் புரிந்துகொண்டு, அப்பாவி மக்களை அழித்து உலகின் ஒவ்வொரு மனிதனையும் அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது இலங்கையரசு.

அப்பாவிகளை அழித்துப் போரை முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர், முழு இலங்கையையும் இராணுவ மயமாக்க ராஜபக்ச சர்வாதிகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், உரிமைவாதிகள், அரசியலாளர்கள் என்று இலங்கை அரசை விமர்சிக்க எண்ணும் ஒவ்வொருவரும் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள், காணாமல் போகிறார்கள் அல்லது கொலைசெய்யபடுகிறார்கள். இயலுமானவர்கள் கொலைக் கரங்களிலிருந்து அன்னிய தேசங்களுக்குத் தப்பியோடியிருக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இன்னும் ஆயிரக்கணக்கனோர் காத்திருக்கிறார்கள்.

உலக அரச பயங்கரவாத்திற்கு அதீத நம்பிக்கையும், முன்னுதாரணத்தையும் வழங்கியிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் குறைந்தபட்ச ஜனநாயக்ப் பெறுமானங்களையாவது மக்கள் மீளமைக்க வேண்டும் என்பதில் மக்கள் பற்றுள்ள அனைவரும் உறுதி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் “சரவ்தேச தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற இலங்கை அரசிற்கு ஜனநாயகச் சாயமிடுகின்ற நிகழ்வை இலங்கை அரச ஆதரவாளர்களின் ஆதரவோடும் பங்களிப்போடும் சென்ற மாதம் நடத்தி முடித்திருக்கின்றனர். இந்த மாநாட்டிற்கு எதிர்வினையாற்றிய இனியொரு, தேடகம், சமூக அசைவிற்கான எழுத்தியக்கம், புதிய திசைகள் போன்ற அமைப்புக்கள் கூட்டறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தன.

இந்த நிலையில் ஜனவரி மாதம் 20ம் திகதி ஆரம்பித்து பத்து நாட்கள் காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) இனக்கொலைக் குற்றவாளிகளின் மண்ணில் இலங்கை அரச ஆதரவுப் போக்குடையோர் ஏற்பாடுசெய்துள்ளதற்கு எதிரான கண்டனம் உலக முற்போக்கு எழுத்தாளர்களின் மத்தியிலிருந்து மேலெழுந்தது நம்பிக்கை தருவதாக அமைகிறது.

ஆரவாரமின்றி திரை மறைவில் ஜனநாயக நாடு ஒன்றின் சாதாரண நாளாந்த நிகழ்வு போல ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கிய விழாவிற்கு எதிரான கண்டனங்கள் அருந்ததி ராய், தாரிக் அலி, நாஓம் சொம்ஸ்கி போன்ற போர்குணம் மிக்க குரல்கள் ஒலிப்பது, ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றுகளாகும்.

அமரிக்கா, நெதர்லாந்து, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசு சார் நிறுவனங்களின் ஆதரவோடு நடைபெறும் விழா நமது எதிரிகளை தெளிவாக இனம்காட்டியுள்ளது.

எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பும்(Reporters Without Borders), ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பும்(Journalists for Democracy in Sri Lanka (JDS)) இணைந்து விழாவிற்கு எதிராக விடுத்த அறிக்கை அருந்ததி ராய், சொம்ஸ்கி, தாரிக் அலி போன்றவர்களால் கையெழுத்திட்டு ஆரம்பிக்கப்பட்டடுள்ளது.

இவர்களின் எதிர்ப்பியக்கத்தை இவ்வாறான நிகழ்வுகளின் பின்னணியிலுள்ள இலங்கை அரசின் அரசியலைப் புரிந்து கொள்ளும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் ஆதரிக்க வேண்டும்.

இவ்விரு அமைப்புக்களதும் கையெழுத்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் இணைந்து கொள்ளும் இணைய முகவரி:

 http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html?lang=en&var_confirm=LNyKxTiv#sp39355

Exit mobile version