இலங்கையில் 1983 ஜுலையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலையின்போது சிங்களவரிடையே உள்ள பரந்த மனப்பான்மை உள்ளவர் அப்பயங்கர கொடுமைகள் கண்டு குற்ற உணர்வும் வெட்கமும் அடைந்தனர். சில அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மகளிர் குழுக்களும் சமய இயக்கங்களும் மனித உரிமை இயக்கங்களும் இப்பயங்கரச் செயலைக் கண்டு வெட்கமும் துக்கமும் அடைந்தனர். பிஷப் லக்ஸ்மன் விக்கிரமசிங்கா மட்டுமே சிங்கள மக்கள் அனைவரினதும் குற்ற உணர்வை ஓர் உணர்வு பூர்வ கடிதம் மூலம் தெரிவித்தார். அக்கடிதம் பரவலான விளம்பரம் பெற்றது. இவ்வாரம்ப நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு உயர்மட்டங்களிலும் அண்மைய வருடங்களில் வளர்ந்து வரும் இன வன்முறைக்குரிய காரணங்களை விபரித்தனர். அத்தோடு வர்க்க உணர்வின் வீழ்ச்சி பற்றியும் இனவுணர்வின் மேலாதிக்கம் எல்லா வர்க்கத்தினரிடையேயும் வளர்ந்திருப்பது பற்றியும் பலரிடையே பேசப்பட்டு வந்தது.
1883- 1983 வரலாற்றுக் காலகட்டத்தில் இனமுரண்பாடு காரணமாக சிங்கள பௌத்தர்களிடையே ஏற்பட்ட வன்முறை பற்றி ஆராயும் முயற்சியே இதுவாகும். முன்னைய ஆய்வுகளில் கூறப்பட்டபடி இக்காலகட்டத்தில் சிங்கள பௌத்தர்களின் கருத்தியல் தவறான நினைவட்டல்களில் திரித்துக் கூறப்பட்டுள்ளது.
அவற்றின் முக்கிய அம்சங்களை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
1. வரலாற்று பணிக்காகத் தேர்ந்த மக்கள் தாமே எனவும் பண்டைய சிறப்புக்களைக் கொண்ட இனத்தவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்டமை.
2. சிங்களவர் இப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் பூகோளப் பரப்பில் இங்கு மட்டுமே வாழ்பவர். அதற்கும் ஆபத்து வந்துள்ளது எனவும் எண்ணக் கொண்டனர்.
3. சிங்களவர் நீண்டகாலமாகவே கிராமியப் பொருளாதாரத்தில் தாம் சாதாரண விவசாய உற்பத்தியாளர் எனவும் பூமியின் மைந்தர் எனவும் உண்மையான மதம் , ஒழுக்கம் ,சமாதானத்திலும் நம்பிக்கையுடையவர் எனவும் பிற இனத்தவர் பல்வேறு விதமாக ஒடுக்கவும் சுரண்டவும் இடமளித்த அப்பாவிகள் எனவும் தன்னுணர்வு கொண்டமை.
4. சிங்களவர் அல்லாதவரும் பௌத்தரல்லாதவரும் எதிரிகள் என்ற பார்வை பிறர் இரத்தத்திலும் மதத்திலும் அந்நியர் , தந்திரசாலிகள் , பேராசையான உலோபிகள் , எல்லாத் துறைகளிலும் அதர்ம முறையில் போட்டியிடுவோர் , அப்பாவி சிங்கள மக்களின் வேலை வாய்ப்புக்கள் , வாணிபம் , கல்வி வாய்ப்புக்களை பறித்தெடுப்போர் என்ற பார்வை.
மேற்கூறப்பட்ட சில அம்சங்கள் வழமையான கூக்குரல்களே ஆயினும் இப்பொய்மையான கருத்துக்கள் பல்வேறு தவறான விளக்கங்களைப் பெற்று சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நீதிப்படுத்தப் பயன்பட்டன. பல சிங்களவர் இவ்வினக்கலவரங்களை எதிர்பாராத நிகழ்வாகக் கண்ட போதும் சிறுபான்மையினரின் தீவிர எதிர்ப்புக்கு பெரும்பான்மை இனத்தவரின் பதில் நடவடிக்கை என சமாதானம் கூறினர். சிங்களவர் , முஸ்லிம்களிடையே 1915 இல் நடைபெற்ற கலவரம் பற்றி அனாகரிக தர்மபாலா கூறினார். அமைதியை விரும்பும் சிங்கள மக்கள் அந்நியர்களின் அவமதிப்பை இனிமேலும் பொறுக்கமுடியாது எனக் காட்டினார். நாடு முழுவதும் ஒரே நாளில் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டெழுந்தனர். இதற்கு மேலாக சிங்களவர்களில் ஒரு பகுதியினர் இனப்போராட்டத்தை பண்டையப் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கண்டனர். சிங்களவரும் தமிழரும் சரித்திர காலத்து எதிரிகள். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் சிங்கள தமிழரிடை ஏற்பட்ட அரசியல் போராட்டம் , சோழ படையெடுப்பை எதிர்த்த சிங்கள மன்னர்கள் அண்மைய பிரச்சாரத்தில் மீண்டும் உயிரூட்டப்பட்டு புகழப்பட்டனர். 1983 ஜுலைக்குப் பின்னர் சிங்கள கட்சிகளின் தலைவர்களும் குருமாரின் பல அங்கத்தவரும் விடுத்த அறிக்கைகள் இதற்கு சான்றாகும். சுருங்கக் கூறின் இவ்விளக்கம் தற்பாதுகாப்பு வன்முறையென நீதிப்படுத்துகின்றது.
சதிச்செயல் என்ற கோட்பாடு.
முன் கூறியவை போன்று இனக்கலவரத்திற்கு காரணம் இடதுசாரிகளே எனக் குறை கூறி மற்றொரு வாதமும் வைக்கப்பட்டது. 1958 இலும் பின்னர் 1983 இலும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இடதுசாரி தீவிரவாதிகளால் (கிளர்ச்சியாளர்கள் , நக்சலைட்டுக்கள் , பயங்கரவாதிகள்) அரசை வன்முறையால் வீழ்த்துவதற்கு தூண்டிவிடப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. மேலும் 1958 கலவரம் சர்வதேச கம்யூனிச இடதுசாரி கூலிகளால் கிளப்பிவிடப்பட்டது போலவே 1983 இலும் நடைபெற்றது என்றனர். இனக்கலவரத்தின் நோக்கம் ஆளும் வர்க்கத்தின் நிலையை ஈடாட்டம் செய்வது என்ற முடிவுடன் இத்தகைய இனவன்முறை முரண்பாடுகளின் போது அரசிற்கு எதிராக சதி செய்யும் பல்வேறு கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டன. முதலாவது உலக யுத்த வேளையில் 1915 இல் நடைபெற்ற கலவரம் ஜெர்மனியரால் தூண்டிவிடப்பட்டதாக பிரித்தானியர் சந்தேகித்தனர். இலங்கையிலும் வெளிநாட்டுச் சக்திகள் 1983 ஜுலையில் இலங்கை அரசை நிலைகுலையச் செய்யமுயன்றதாகக் கூறப்பட்டது.
இத்தகைய தவறான விளக்கங்களை நாம் எளிதில் ஒதுக்கிவிடலாம். ஆனால் நாம் மேலாதிக்க வெறிக்கும் பலமான சமூக பொருளாதார காரணங்களுக்கும் காரணமான கருத்தியல் ரீதியான உட்பொருளைக் காணவேண்டும்.; அப்பொழுதே சென்ற நூறு ஆண்டுகள் காலமான இனமுரண்பாடுகளின் பின்னணி அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். ஆயினும் இவ்வேளையில் சமூக பொருளாதார யதார்த்தங்களுடன் கருத்தியல்கள் இணைந்திருப்பதையும் கருத்தியல்கள் எவ்வாறு தானியங்கியாக நிலைபெற முடியுமென்பதையும் ஆராயமுடியும்.
சமூக பொருளாதார கருவிகள்
பொருளாதார சமூக பின்னணிப் பார்வை மூலம் இனவன்முறைக்கு முழுமையான விளக்கம் கூறமுடியாது. ஆயினும் இதுவே பிரச்னையை ஆராய்வதற்கு சில முக்கிய ஆதாரங்கள் தரமுடியும்.காலனித்துவ நவகாலனித்துவ சூழலில் உருவாகும் புறச்சூழலிலுள்ள நாடுகளில் முதலாளித்துவம் அதன் சமனற்ற அபிவிருத்தியும் பிற்போக்குத் தன்மையும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சீராக மாற்றமுடியாத தன்மையையும் ஆராய்வது இன முரண்பாட்டை நன்கு தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய முக்கிய அம்சங்களாகும். அத்துடன் ஒவ்வொரு வர்க்கத்தினதும் அரசியல் பொருளாதார உணர்வுகளையும் குறைபாடுகளோடு வர்க்க அமைப்பையும் புரிந்து கொள்வது அத்தியாவசியமாகும். இவர்கள் அரசியல் செல்வாக்கு பெறமுடியாது நிலைகளிலும் நாட்டுவளம் ஏற்றத்தாழ்வாக பகிர்ந்தளிக்கப்பட்ட சூழலிலும் உள்ளனர். இலங்கையின் காலனித்துவ காலத்திலும் பின்னரும் உள்ள பிரதான பிரச்னை,குறை அபிவிருத்தியும் நிலையற்ற பொருளாதாரமுமாகும். வறுமை ,குறைந்தவசதி , துரிதவளர்ச்சியின்மை , வேலையில்லாத் திண்டாட்டம் , பணவீக்கம் ஆகியன சமூக அமைப்பை பல்வேறு வகையில் அச்சுறுத்திய யதார்த்த நிலைகளாகும். இந்நிலையால் பெரும்பகுதி மக்களுடைய அடிப்படைத் தேவைகளையும் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதார பாதுகாப்பும் சமூக அந்தஸ்தும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் வாய்ப்பற்ற மக்கள் முழுச்சமூக அமைப்பையும் எதிர்க்காது தமது துன்ப நிலைக்கு சிறுபான்மையினர் பெற்ற வாய்ப்புக்களே காரணமென்று உணர்ச்சி வசப்பட்டனர். பௌத்தர்களுக்கு வாய்ப்புக் கிட்டாமைக்கு கிறிஸ்தவர்களைக் குற்றம் சாட்டினர். சிங்கள கடைக்காரர் , வணிகர்,சிறுவியாபாரிகள் ஆகியோர் தமது தொல்லைகளுக்கு முஸ்லிம்களும் இந்திய போட்டியாளருமே காரணம் என்றனர். வங்கிக் கடனைப் பெறமுடியாத கஷ்டத்திற்கு செட்டியார்களையும் பட்டாணியர்களையும் குறைகூறி வெறுத்தனர். வேலை வாய்ப்பின்மைக்கு (குறிப்பாக பொருளாதாரமற்ற காலகட்டங்களில்) பெருந்தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் வேலை செய்த இந்தியத் தொழிலாளரை வெறுத்தனர். கல்விக்கும் கௌரவமான தொழில்களுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டு அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை எதிர்த்தனர். சகல விடயங்களிலும் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்பட்ட வாய்ப்பின்மைக்கு சிங்கள மக்களின் சில வகுப்பினர் சிறுபான்மையினரையே கருங்காலிகளாகக் கண்டனர். இம்முறை பிரித்தானியருக்கும் சுதந்திரத்திற்கும் பின்னர் வந்த ஆட்சியாளருக்கும் பிரித்தாளும் கொள்கையை தொடர்வதற்கு இவ்வாறான கருத்துக்கள் எளிதாகப் பயன்பட்டது.
இத்தகைய பின்னணியில் இனக்கலவரத்திற்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டன. குடித்தொகையில் ஒரு பகுதியினரின் பொருளாதார சமூக அதிருப்தியினதும் விரக்தியினதும் வெளிப்பாடே இக்கலவரங்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு மதம் அல்லது இனவேறுபாட்டு பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டது.
1915 ஆம் ஆண்டு கலவரத்தை ஆராயும் போது அது முற்றிலும் சமய சண்டையல்ல , பொருளாதார சீர்குலைவு , பண்டங்களின் விலையேற்றம் , அக்கால அரசியல் நிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்றே கூறவேண்டும். இதே போலவே 1930 களில் நடைபெற்ற மலையாளி எதிர்ப்பியக்கத்திற்கு அவ்வேளை நிலவிய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டமே காரணமாகும். 1983 ஜுலை கலவரத்திற்கும் இவ்வாறே சிலர் காரணம் கண்டனர்.1975-1980 காலகட்டத்தில் தனியார் பகுதியின் மெய்கூலி ஏறக்குறைய இரு மடங்காயிற்று. ஆனால் பணவீக்கத்தினால் 1980-1983 காலகட்டத்தில் நாலில் ஒரு பங்காக இது குறைந்தது. இந்நிலையில் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் திறந்தபொருளாதாரக் கொள்கையால் தமிழ் மக்களே பலன் பெறுகின்றனர் என ஆத்திரமுற்றனர். மேலும் அரசுப் பகுதியில் நுழைய முடியாது தடுக்கப்பட்ட தமிழர் தனியார் பகுதியில் நுழைந்து சுயவேலையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையால் நிலையான கூலி உழைப்போர் ,விலையேற்றத்தால் பாதிக்கப்படுவது போல சுயதொழில் செய்வோர் பாதிக்கப்படவில்லை.இவ் ஒப்பீடும் வேலை வாய்ப்பின்மையுமே சிங்கள மக்கள் 1983 இல் இனவன்முறைக்கு தூண்டிய ஒரு காரணியாக காணப்பட்டது.
1977 பின் ஏற்பட்ட இனக்கலவரம் பகைமை நிலை ஆகியவற்றுக்கு பொருளாதார முறையில் நியூட்டன் குணசிங்கா அவர்கள் விளக்கம் கூறும்போது திறந்த பொருளாதாரக் கொள்கை பல்வேறு குழுக்களையும் சமனற்ற நிலையில் முன்னேறச் செய்தது என்றார்.மேலும் இன அடிப்படையில் வளர்ச்சியும் தேய்வும் ஏற்பட்டதே இனப்பகை வெடித்ததற்குக் காரணமென்றார். இவ்வாய்வில் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் திறந்த பொருளாதாரத்திற்கு மாறியதும் அமைப்பியல் மாற்றத்திற்கு வழிவிட்டது என்றார்.
முக்கியமானது என்னவென்றால்… பொருளாதாரத்தில் ஏற்பட்ட அமைப்பியல் மாற்றமாகும்… அத்தோடு பல்வேறு இன , மத , வகுப்புக்கள் வெவ் வேறு சமூக மட்டத்தில் நின்று போட்டியிடுவதாகும். இப்போட்டா போட்டி கருத்தியல் நிலையில் அரசியல் ஆதரவும் அரசாங்கத்தின் தலையீடும் பெறுகிறது. இந்நிலையில் திடீர் என போட்டா போட்டி விதிகள் முறிவடைய வன்முறை வெளிப்படையாகத் தோன்றுகிறது (குணசிங்கா:1984)
இந்நிலையில் கலவரத்திற்கு காரணமானவர்கள் பட்டினத்தில் வாழும் நகர்ப்புற ஏழைகளும் லும்பன் பகுதியினருமாவார். இவர்கள் நாட்டின் அமைதியின்மையை பயன்படுத்தி தற்காலிக பயனடைபவர்களே. இவர்கள் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி , தெருவுக்கு வந்து முதலாளித்துவ சமூகததின் சட்ட ஒழுங்கு முறைகளை உடைத்து ஓரிரு நாள் தமது சட்டவிதிகளின்படி செயலாற்றுபவர்களே. செல்வர்கள் மேல் தமக்குள்ள சீற்றத்தைக் காட்டி பிறர் சொத்துக்களை தம்முடையதாக்குபவர் ஆவர். இந்நிலை தெற்கு ஆசியாவில் அடிக்கடி அதிகரித்து வரும் செயலாகும். ஏனெனில் இங்கேயே பணக்காரருக்கும் ஏழைக்குமிடையில் பெரும் இடைவெளி உள்ளது.வாய்ப்பு கிட்டாது , ஒதுக்கப்பட்ட பகுதியினர் வகுப்பு வாதப் பிரச்சாரத்தால் கொள்ளை அடிப்பதற்கு லைசென்சு வழங்குகின்றனர்.இக்காலகட்டங்களில் எதிரியாகக் காட்டப்பட்ட சிறுபான்மையினரைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பை ஏழைகள் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்படும் சிறுபான்மையினர் இந்தியாவில் முஸ்லிம் அல்லது சீக்கியராக இருக்கலாம் அல்லது இலங்கையில் தமிழர் அல்லது முஸ்லிம்களாக இருக்கலாம்.
சமூக பொருளாதார காரணிகளே இனமுரண்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன என பொதுவாக கூறப்பட்ட போதும் இனவன்முறை அளவில் கருத்தியலினுடைய பங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டும். கருத்தியல் என்பதற்கு வரைவிலக்கணம் கூறுமிடத்து அவை ஒருங்கமைக்கப்பட்ட முக்கிய நம்பிக்கைகளும் குறியீடுகளும் ஆகும்.இவை ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் சமூக வாழ்வின் யதார்த்த சாரமாகும். சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கைகளையும் குறியீடுகளையும் பண்டைய வரலாற்றுக் காலத்து சிங்கள பௌத்தர்களின் உணர்வுகள் ,பண்பாடுகளின் அமைப்பையும் வளர்ச்சியையும் அத்துடன் காலனித்துவ காலத்திற்கு பிற்பட்ட காலத்திற்கும் உள்ளவற்றை ஆராய்வது இலங்கையின் அண்மைய இனக் கலவரத்தைப் புரிந்து கொள்வதற்கு மிக முக்கிய அம்சங்களாகும்.
சிங்கள மக்களின் உணர்வின் கூற்றுக்களை காண்பதற்கு விழிப்பாக வரலாற்று ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வேளையே அவர்கள் சிந்தனையில் மறைத்திருக்கும் பொய்மை , தவறான விளக்கங்கள் , புராணிகப் போக்குகளை அம்பலப்படுத்த முடியும். ஆனால் பொய்மைக் கதைகளும் வரலாறும் ஒன்றையொன்று இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்ற அறிஞர்கள் அண்மையில் இரண்டையும் பிரித்து இலங்கை வரலாறுக்கு விஞ்ஞான ஆராய்ச்சி வழங்க முற்பட்டபோது துரோகிகளாக, பிற்போக்காளர்களாலும் பழமை விரும்பிகளாலும் கண்டிக்கப்பட்டனர். இவர்கள் முதலாளித்துவ நலன் விரும்பிய வகுப்புவாத அரசியல்வாதிகளாக வரலாற்றை தவறாக தம் செயல்களை நீதிப்படுத்தப் பயன்படுத்துபவர்களாவர். (இனவாதமும் சமூக மாற்றமும் பார்க்க) , இந்நூல் பற்றி அக்டோபரிலிருந்து டிசம்பர் 1984 வரை ஞாயிறு ,திவைன என்ற பிரபல இதழில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது.
இதேநிலையே அண்டைய நாடுகளின் அனுபவமாகவும் இருந்தது. இந்தியாவில் வரலாற்று அறிஞர்களான ரோமிலா தாப்பர் , எச் முக்கியா , பி சந்திரா ஆகியோர் இந்திய வரலாற்றுக்கு வகுப்புவாத விளக்கம் தருவதை எதிர்த்து பள்ளிப்பாட நூல்களைத் திருத்தி எழுதினர். அவ்வேளை இந்து வெறியர்களும் பழமை விரும்பிகளும் அவை முஸ்லிம்களையும் கம்யூனிஸ்டுகளையும் சார்ந்து எழுதப்பட்டதாக கூறி அப்பாட நூல்களை நீக்கும்படி பிரச்சாரம் செய்தனர். இதே போலவே தமிழ்நாட்டிலும் முற்போக்கான அறிஞர்கள் வரலாற்றுப் பொய்மைகளான பாண்டிய , சோழ ஆட்சிகளை புகழாரம் சூட்டியும் வீரச்செயலாக்கிய பொய்மைகளைக் களைந்தனர். (வரலாற்று உண்மைகளில் நின்று புராண இதிகாசத் தன்மையை பிரித்தல்): அத்தோடு திராவிட இயக்கத்தின் அடிப்படையை சமூகப் பொருளாதார ரீதியில் ஆராய்ந்தனர். இவர்கள் எதிரிகளாக கண்டிக்கப்பட்டனர். இலங்கையிலும் க. கைலாசபதி போன்ற தமிழறிஞர்கள் சங்க காலத்தை “பொற்காலம்” எனக் கூறுவதை மறுத்தபோது பிரித்தானிய ஆட்சியை சார்ந்து சாதி மனோபாவமும் கொண்டு நின்ற ஆறுமுகநாவலர் போன்றோரை நலனாய்வு நோக்கில் க.சிவத்தம்பி மீளாய்வு செய்தபோதும் எதிர்ப்புக்கு உள்ளாகினர். ஆன்மீகத் தலைவர் நலனாய்வுக்கு அப்பாற்பட்டவர் என தமிழ் பண்டிதர்களின் கண்டனத்திற்கு உள்ளாகினர். இவ்வாறு இனவாதம் சிங்களவரோ , தமிழரோ , பௌத்தரோ , இந்துவோ பழமையிலேயே ஊறி நிற்கிறது.
இத்தகைய ஆய்வு முறையும் புதுமை விளக்கங்களும் காலனித்துவ சுதந்திர காலகட்டங்களுக்கு விரிவாக்கப்பட வேண்டும்: பிரித்தாளும் ஏகாதிபத்திய தந்திரங்கள் மீளாயப்படவேண்டும்: ஆளும் வர்க்கங்கள் பரவலான ஆதரவு பெறுவதற்காக இனவேறுபாடுகளைப் பயன்படுத்தும் யுக்திகளும் மீளாயப்படவேண்டும். முரண்பாட்டின் கருத்தியல் மூலங்களை ஆராயும்போது கருத்தியலின் தன்னியக்கமும் உணர்வின் வடிவங்களும் பொருளாதார அடிப்படையோடு எவ்வாறு இணைந்துள்ளன என்பதும் விவாதத்திற்கு உரியதாகும். சிலரின் கூற்றுப்படி வேறுபாடு கருத்தியலின் ஒரு கூறாக காணப்படவேண்டும் என்பதாகும். இது பொருளாதார மாற்றத்திற்கு அப்பாற்பட்டதும் பழமையில் வேரூன்றியதும் என்கின்றனர் சிலர்.
மார்க்ஸீஸ இயக்கங்கும், அரசுகளும் வடிவத்தில் மட்டுமல்ல சாரத்திலும் தேசியமாக மாறியுள்ளனர். அதாவது தேசியத் தன்மை.
பெனடிக் அன்டர்சன் என்பவர் சோசலிசம் சாராத உலகத்தில் பொருளாதாரம் அல்லது கருத்தியல் பண்பாட்டு காரணிகளுக்கு ஒருவர் எத்தனை அழுத்தம் கண்டபோதும் இன, வர்க்க உணர்வுகளும் அவற்றிடையே ஏற்படும் பொருளாதார அரசியல் காரணங்களும் கருத்தியல்களும் ஆழமாக ஆராயப்படவேண்டும். முதலாளித்துவத்திற்கு முற்பட்ட காலத்துக்குரிய கருத்தியல்கள் சாதி , மத , இன வேறுபாடுகளின் அடிப்படையானது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இவை மறைந்துவிடும் அல்லது குறைந்துவிடும் என்ற கருத்தும் கவனிக்கப்படவேண்டும்.அபிவிருத்தி அடையும் காலகட்டத்தில் இனவுணர்வு நிலை பெற்று மேலும் வளர்ச்சி அடைவதற்குரிய முக்கிய காரணத்தை அறிந்து கொள்ளவேண்டும். முதலாளித்துவ காலகட்டத்தில் நாட்டில் கல்வி ஊடுருவி நிற்கிறது. விஞ்ஞானம்,தொழிநுட்ப அறிவு பரவலாகி கோட்பாட்டளவில் பகுத்தறிவு பொருளாதாரத்தை மீறி நிற்கிறதா? இலங்கையிலுள்ள இடதுசாரிகள், பரந்துபட்ட தொழிலாளி வர்க்கம் பற்றி புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுண்டு, அனைத்து இனங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தினர் ஐக்கியப்பட்டு தீவிர வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்குமளவில் வர்க்க உணர்வின் மட்டம் வளர்ந்தபோதும் இப்போதும் இனவேறுபாடுகளுக்கு ஏன் அடிமையாயினர்?
இனவேறுபாட்டில் மக்கள் பிரிவது தொழிலாள வர்க்கத்தின் நலனைச் சார்ந்ததல்ல. இனப்பகையை வளர்ப்பதும் வன்முறை வெடிப்புக்களும் முதலாளிகளுக்கும் நலன் தருவதில்லை. இன்றைய திறந்த பொருளாதார தேவைகளிலும் அவற்றின் வெற்றிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சி தருவதாகும். ஆனால் இதே திறந்த பொருளாதார கொள்கையின் பின்னால் நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் சில பகுதியினரே இனவுணர்கை தூண்டி விடுதற்கு பொறுப்பானவர் மட்டுமல்ல, இனப்பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கும் எதிர்ப்பாக உள்ளனர்.இந்நிலையில் முதலாளி , பாட்டாளிகளான இருவர்க்கத்தவரும் இதே நிலையே பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். பழைய பல தேசங்கள் , ஒரு காலத்தில் ஒன்றிணைந்தவை தற்போது தமது எல்லைகளுக்குள்ளே
தேசீயம் , இனவேறுபாடு பற்றி தற்போது நிலவும் பல்வேறு ஆய்வுகளின் குறைபாடு பற்றி அன்டர்சன் கூறும்வேளை தேசீயம் என்ற கோட்பாடு கற்பனையில் தோன்றிய அரசியல் சமூகம் என்றும் ஒருவரை ஒருவர் நன்று அறிந்த குடும்பம், குலக்குடி மாறுபட்டது என்றும் கூறினார்.
சிறிய தேசத்தில் வாழ்பவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கமாட்டார். நேரில் கண்டோ , கேட்டிருக்கமாட்டார் என்பதினாலலேயே கற்பனையானது ஆயினும் சிந்தையில் மட்டும் ஒரே சமூகத்தில் வாழ்பவர் என்ற படிவம் ஒவ்வொருவரது நினைவிலும் உள்ளது. உண்மையில் சமனின்மையும் சுரண்டலும் ஒவ்வொரு சமூகத்திலும் நிலவிய போதும் தோழமையாக வாழ்வதாக எண்ணிக் கொள்கின்றனர். இறுதியில் இத்தகைய சகோதரத்துவமே சென்ற இரண்டு நூற்றாண்டுகளிலும் பல கோடி மக்கள் இத்தகைய கற்பனையான எண்ணங்களுக்காக உயிரை விடுவதற்கு தூண்டியுள்ளது.
அன்டர்சன் மேலும் கூறினார்:
இத்தகைய மரணங்கள் தேசீயம் எழுப்பிய முக்கிய பிரச்னையை நேருக்கு நேராகக் கொண்டு வருகின்றது: அண்மைய வரலாற்றின் (இரு நூற்றாண்டுகளில்) சுருங்கிய கற்பனைகள் இத்தகைய மிகப் பெரிய தியாகங்கள் ஏற்படுத்துவதற்கு காரணம் என்ன?
இதற்குரிய விடை தேசீயத்தின் பண்பாட்டு வேர்களிலேயே ஆரம்பமாகின்றது என அன்டர்சன் நம்புகின்றார்.
(அன்டர்சன் 1983:15-16)
இனவுணர்வை தூண்டிவிடக்கூடிய பலம் பெற்றிருப்பது ஏன்?இவ்விரு வர்க்கத்தவரும் தமது வர்க்கப் பகையினையும் மறந்து ஒரு இனத்தவர் மற்றைய இனத்தவருடன் மோதுவது ஏன்? நாம் விடைகாணவேண்டிய அடிப்படை வினாக்கள் இவையாகும்.
இனவுணர்வு வேறுபாடுகள் இலங்கைக்கு மட்டும் விசித்திரமானது என்று நாம் எண்ணிக் கொள்ளமுடியாது. இனமுரண்பாடுகள் காலத்திற்குக் காலம் இந்தியாவின் பல பகுதிகளில் வெடிக்கின்றனர். மலேசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் 1969 இல் மோசமான வகுப்பு கலவரங்கள் ஏற்பட்டன. இன்று “பூமியின் புதல்வர்கள் ” என்ற கோட்பாடு அவர்கள் வெறுத்த சீனர்களை ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது. புதிதாக சுதந்திரம் பெற்ற பிறநாடுகளில் சிலவற்றை பொல இலங்கையிலும் காலனித்துவத்தின் பின் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி ஆரம்பமாகின்றது. இக்கால கட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் தம்முடைய இனத்தின் தனித்துவத்தையே தேசத்தின் தனித்துவ இனமாக காட்ட முயல்கின்றனர். இலங்கையில் சிங்களவர் போல சூடானில் அராபியரும் கென்யாவில் கிதவுமும் சிம்பாவேயில் சேரனாவும் நைஜீரியாவில், பூலானி இனத்தவரும் தம்மின மேலாதிக்கம் மூலம் தேசீய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முயலுகின்றனர். இந்நிலை பிற சிறுபான்மை இனங்களின் விரக்தியை வெளிப்படுத்திய அதன் மூலம் பெரும்பான்மையினரின் இனவுணர்வு மட்டத்தை உயர்த்தி விடுகின்றது. இத்தகைய போக்கு காலனித்துவ ஆட்சியின் வேளை அடங்கியிருந்த பகைமை , கலவரங்களுக்கும் கொரில்லா யுத்தத்திற்கும் மட்டுமல்ல உள்நாட்டு யுத்தத்திற்கும் இட்டுச் செல்கிறது
இவ்வாய்வின் முற்பகுதிகளில் இலங்கையில் இனப்பகைமை சென்ற ஒரு நூற்றாண்டில் பல்வேறு காலகட்டங்களிலும் தோன்றியதற்கு சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இன தேசிய உணர்வுகளின் தோற்றம் அவற்றிடையே ஏற்படும் மோதல் உணர்வுகளிலும் கருத்தியலிலும் பொருளாதார அரசியல் காரணிகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆழமாகக் கற்பது அவசியமாகும். பெரும்பான்மை வகுப்பினரிடை ஏற்படும் இனவாதம் பற்றியும் இத்தகைய இனவெறி சிறுபான்மையினர் மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் சகல இனத்தவரிடையேயும் உள்ள அறிஞர்களால் ஆராயப்படவேண்டும்.இவர்கள் நல்நோக்கமும் பகுத்தறிவு கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். உயர்கல்வியாளரும் ஆராய்ச்சியாளரும் தாக்குதலுக்கும் ஐயப்பாட்டுக்கும் பொய்ப்பிரச்சாரத்திற்கம் உட்படாத சூழலிலேயே இத்தகைய ஆய்வுகள் பயன்தரத்தக்க முறையில் நடைபெற முடியும்.
இனவாதம் பரந்துபட்ட தொழிலான வர்க்கத்திற்கோ இடதுசாரி கோட்பாட்டின் நலனுக்கோ உகந்ததல்ல என முடிவாக அழுத்தமாக கூறவேண்டும். இலங்கைத் தொழிலாளர்கள் (1890-1930) ஆகிய நாற்பது ஆண்டுகளில் அவர்களது இயக்கங்கள் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்ட கொள்கையையே கொண்டிருந்தன. மறுமலர்ச்சியாளர்கள் சிறுபான்மையினத்திற்கு எதிரான பகைமையை வளர்க்க முற்பட்டபோது தொழிலாளர் ஐக்கியம் குறைக்கப்படவில்லை. 1920 களில் இருந்த தொழிலாள வர்க்க தலைவர்கள் 1930 களில் வகுப்புவாதிகளாய் மாறியபோதும் அடுத்த தசாப்தங்களில் தொழிலாளர் இனவேறுபாடுகளை மறந்து இடதுசாரிகளின் தலைமையில் பல்வேறு தீவிர போராட்டங்கள் மூலம் தமது வர்க்க உணர்வை வெளிப்படுத்தினர். இன்றும் தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான பகுதியினரும் விவேகம் மிக்க பகுத்தறிவாளரும் இனப்பகையால் வீழ்ச்சியடையும் நாட்டை மேலே உயர்த்தி முன்னேறுவதில் உதவ முடியும். தற்போது பகுத்தறிவு தாழ்நிலையில் உள்ளது. ஆரிய இனத்தவர் என்ற ஐதீகமும் விஜயன் வம்சத்தவர் என்ற பொய்மையும் துட்டகைமுனு போல இன வீரபுருஷர்களை உருவாக்குகிறோம் என்ற கூற்று ஆகியவை இன்று புத்துயிர் பெற்றுள்ளன. இவை மீண்டும் இனவெறியைத் தூண்டும் பலமிக்க குறியீடுகளாக உள்ளன.
பத்திரிகைகள் எல்லாம் இனவாதமும் பகட்டான தேசீயக் கொள்கையும் கொண்டவையாக உள்ளன.அதேவேளை சோதிடப் பலாபலன் கூறுவதோடு பேய் பிசாசு கதைகளையும் வெளியிடுகின்றன. குழப்பமேற்பட்ட இக்கால கட்டத்தில் அமைதியின்மையையும் உறுதியின்மையையும் பிரதிபலிப்பதாக தெய்வாம்சம் பொருந்திய மனிதர்களும் பொய்மையான ஆயர்களும் பௌத்தசாமிமாரும் ஆசிரியர்களும் பழமையை போற்றுபவர்களும் சுறுசுறுப்பாக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே போராட்டம் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருக்கும். ஆயினும் நீதி விரைவாகவோ அல்லது சிறிது காலம் தாழ்த்தியோ நிலைபெறும் என நம்புகின்றேன்.
கட்டுரையாளரின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல! இக் கட்டுரை ETHNIC AND CLASS CONFLICTS IN SRI LANKA என்ற ஆங்கில நுhலின் தமிழாக்கமான “இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள் ” என்ற நுhலிருந்து விவாத நோக்கில் மீள் பதிவு செய்யப்படுகின்றது.