இது குறித்து தினக்குரல் அசிரியர், ‘வடபகுதியில் இடம்பெற்றிருக்கக்கூடிய குற்றச் செயல்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் அங்குள்ள உண்மை நிலைவரத்திற்கு முற்றிலும் மாறானவை என்பதுவும் அமைதி திரும்புவதை விரும்பாத சக்திகளும் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிடுவதில் நாட்டம் கொண்ட சக்திகளுமே அத்தகைய பிரசாரங்களை செய்கின்றன என்பதுவுமே ஜனாதிபதியின் நம்பிக்கையாக இருப்பதை அவர் அன்றைய சந்திப்பின் போது சில சந்;தர்ப்பங்களில் கடுகடுப்பான தொனியில் தெரிவித்த கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது’ எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
அரசும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் தான் இனவாதத்தை உமிழ்கின்றன என்பது இலங்கையின் எந்தப்பகுதியில் வாழ்கின்ற சாதாரண குடிமகனுக்கும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அரசின் குற்றச்செயல்களை பொதுத் தளத்திற்குக் கொண்டுவருகின்ற போதெல்லாம் அது இனவாதமாகச் கருதப்படும் என்பதை நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கின்ற மகிந்த ராஜபக்ச எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறார்.
மேலும், ‘ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் ஊடகங்கள் குறிப்பாக, பத்திரிகைகள் இனவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அத்தகைய கொள்கைகளில் இருந்து விலகி தேசத்தின் ஜக்கியம், இன சௌஜன்யம் மற்றும் அபிவிருத்தி நோக்கிய பயணத்துக்கு உதவக்கூடிய அணுகுமுறைகளைத் தமிழ் ஊடகங்கள் பின்பற்றத் தயாராக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியை விடுப்பவையாகவே அமைந்திருந்தன’ எனவும் தினக்குரல் அசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
மகிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து தமிழ் ஊடகங்கள் மத்தியில் எதிர்வினையினைத் தோற்றுவித்திருக்கிறது.
இக்கருத்தினால் ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் குறித்து கருத்து வெளியிட்டிருக்கிற தினக்குரல் அசிரியர், ஜனாதிபதியின்; இக் கருத்துக்கள் தொடர்பில் ஏனைய மொழிப் பத்திரிகைகள் மறுநாள் செய்திகளை வெளியிட்ட பாணியும் அரசியல் விமர்சகர்களினால் செய்யப்பட்டிருக்கும் அர்த்தப்படுத்தல்களும் தமிழ் ஊடகங்கள் குறித்து ஒரு மோசமான கருத்தமைவை ஏனைய மொழிப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் கட்டமைக்கத்தக்கவை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தினக்குரல் அசிரியர், ‘…(கடந்த காலத்தில்) தேசிய தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக ஜனநாயக வழியில் நின்று குரல் கொடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமை இருந்தது.’ எனவும் ‘போரின் முடிவின் பின்னரான காலகட்டத்தில் தேசிய மீள் நல்லிணக்கத்தில் தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடியதாக அரசாங்கத்திடமிருந்து உருப்படியான அரசியல் சமிக்ஞைகள் காட்டப்படுவதாக இல்லையென்ற தமிழ் மக்களின் மனக்குறையை வெளிக்காட்டும் முயற்சிகளை இனங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை; என்று வர்ணிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது’ எனத் தனது நியாயத்தினை முன்வைத்திருக்கிறார்.
மேலும் ‘துரதிஷ்டவசமான சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக ஜனநாயக ரீதியில் கிளம்புகின்ற குரல்களை, அக்குரல்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படுகின்ற நேர்மையான ஊடகச் செயற்பாடுகளை அல்லது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாடத் தொல்லைகளைப் பகிரங்கப்படுத்தி நிவாரணம் தேடுவதற்கான அக்கறையுடைய முயற்சிகளை பிரிவினைவாத அரசியலின் எச்சமிச்சங்களின் முனகல்கள் என்று வர்ணிக்க முயற்சிப்பது கவலைக்குரியதாகும். இத்தகைய பின்புலத்திலேயே தமிழ் ஊடகங்கள் முகங்கொடுக்க வேண்டியயிருக்கின்ற நெருக்கடிகளையும் சவால்களையும் நோக்க வேண்டியிருக்கிறது’ என தனது கவலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதே வேளை தமிழ் ஊடகங்கள் குறித்து குறிப்பிட்டடுள்ள ‘கோகர்ணன்'( மறுபக்கம்-தினக்குரல்), ‘வன்னி நிலைமைகள் பற்றி ஒரு இடது சாரி தமிழேட்டில் நான் வாசித்தறிந்த சிறு பகுதியைக் கூட நமது நாளேடுகளிலிருந்து பெற முடியாதளவுக்கு நமது ஊடக நிறுவனங்களின் அக்கறை உள்ளது’ என அங்கலாய்த்திருப்பதுவும் இங்கு கவனித்தில் கொள்ளத்தக்கது.