Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரட்டைத் தேசியமும் புதிய சூழலுக்கான மார்க்சியப் பிரயோகமும் : லெனின் மதிவானம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டைத் தேசியம் குறித்து நான் இனியொரு இணையத் தளத்தில் எழுதிய கட்டுரை பல தளங்களிலிருந்தும் வட்டாரங்களிலிருந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகின. அநேகமானோரின் குறிப்புகளில்களில் கோட்பாடு ரீதியான விமர்சனங்களை விட தனிமனித தாக்குதல்களே முனைப்புற்று இருந்தன. இருப்பினும் சில கருத்துக்கள் நம்பிக்கைத் தரக் கூடியனவையாக அமைந்திருந்தன என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. இந்த பின்னணியே இரட்டை தேசியம் குறித்து மேலும் சில குறிப்புகளை வேண்டிய தேவையை உருவாக்கி உள்ளது.

வர்க்கங்களாக பிளவடைந்திருந்த ஐரோப்பிய சமூகத்தில் சமூதாய மாற்றத்தின் பின்னர் புதிய புதிய வர்க்கங்கள் தோன்றின. எடுத்துக் காட்டாக ஆண்டான் அடிமை சமூகம் ஒழிக்கப்பட்ட பின்னர் நிலவுடமையாளர்கள் – விவசாயிகள் எனவும், நிலவுடமை சமூகவமைப்பு சிதைந்த பின்னர் முதலாளி – தொழிலாளி வர்க்கங்களாகவும் மாற்றமடைந்து வந்துள்ளதை உணரலாம். இங்கு முதலாளித்துவம் என்பது தேசிய வடிவில் தமது வர்க்க கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டது. தோழிலாளி வர்க்கப் புரட்சி என்பது வர்க்கங்களை இல்லாதொழிப்பதற்கான போராட்டமாக அமைகின்றது. அதனால் அது தேசியத்திற்குள் புரட்சியை முன்னெடுப்பதாக அமைந்திருக்கின்றது.

முன்னதாய் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பகுதியாயிருந்த தேசியப் பிரச்சனை சோவியத் ருசியா உருவாகிய பின்னர் சோஷலிஸத்தின் ஒரு பகுதியாக மாறியிருந்தது. சோவியத் யூனியனின் தகர்வின் பின்னதாக இன்றைய உலகமயமாதல் சூழல் தேசியத்தை உலகமேலாதிக்கவாதத்தின் நலன்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் நிலை தோன்றியுள்ளது என்பது வேறு விடயம்

ஆனால் எங்களுடைய சாதிய சமுகத்தில் சமுதாயமாற்றங்களின் போதும் பழைய சாதிமுறை புதிய வர்க்க உறவுகளுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது. இங்கு நிலவுடமை சமூகவமைப்பு மாற்றமடைந்தாலும் பிராமனர் சில சமயங்களில் பிராமணர் – வெள்ளாளர் சார்ந்த கூட்டாகவும் அதிக்கம் நிலவி வருவதை அவதானிக்கலாம்.

ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை ஆதிக்கம் செலுத்தியதால் ஏற்பட்ட முரண்பாடு இது. புதிய உற்பத்தி முறை உற்பத்தி உறவுக்குள்ளும் சாதியம் ஆழமாக தாக்கம் செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.

இந்தியா முழுமையையும் தேசமாக ஒன்றுத்திரட்ட முனைந்த பிராமணர்கள் (காங்கிரஸ்) தலித் மக்களின் விடுதலை சார்ந்தும் தீண்டாமையின் கொடூரத்திற்கு எதிராகவும் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. இத்தகையதோர் சந்தர்ப்பத்தில் தான் அம்பேத்கர் போன்றோர் காங்கிரஸிற்கு எதிராக ஆங்கிலேயருடன் சேர்ந்து இயங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அது தலித் தேசியமாக இருநத்து. “இன்றுவரை இந்திய இயக்கங்களில் பல இரட்டை தேசிய பிளவுடன் கூடிய இரண்டக நிலையுடையவனாகவே உள்ளன. அம்பேத்காரோ, பெரியாரோ ஏகாதிபத்திய சக்கிகளிடம் விலைப் போனவர்களல்ல. தாம் பிரததிநித்துவப்படுத்திய மக்களுக்காக எதிர்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்கள்.இன்று உலகமயமாதலின் கையூட்டில் தொண்டு நிறுவனமாக இயங்கித் திவீர தலித்தியம் பேசும் சிலரோ மக்கள் விடுதலைக்கு விரோதமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி என்றென்றும் இழிவுப்படுத்தலுக்குள் உழல்வதற்கே வழிகோலுகிறார்கள். தலித் மக்களின் விடுதலை இவர்களுக்கு அவசியமில்லை. ஆண்டாண்டுகால அவமதிப்புகளைப் பேசியே இவர்கள் பிழைப்புவாதத்தை முன்னெடுக்க முயல்கின்றார்கள். பிராமணியம் மக்களை சாதிகளாய்ப் பிளவுப்படுத்திச் சுரண்டலை பேண எந்தளவுக்கு முயல்கிறதோ, ஆதேயளவுக்கு தலித்தியம் எதிர்தளத்தில் இயங்கியவாறு அதே சாதிப்யவாதப் பிளவுப்படுத்தல் தவறையே இழைக்கிறது. இது உலகமயமாதலுக்கு ஆட்படும் அம்சமாகும்.(ந.இரவீந்திரன், சாதி தேசம் பண்பாடு, புதுவிசை, இந்தியா, இதழ்- 2010-யூன்,) 1940 களில் காந்தி “வெள்ளையே வெளியேறு“ என்ற கோசத்தை முன் வைத்து தராளவாத அரை பிராமணித்துவ தேசியத்தை இயக்கச் செயற்பாடாக முன்னெடுத்த போது அம்பேத்கரையும் கடந்து மக்கள் அவ்வியக்கத்தில் இணைந்தனர்.

1942 ஆண்டு மந்திரிசபை உறுப்பினராக இருந்த அம்பத்கர் 1945ஆம் ஆண்டு இடப்பெற்ற தேர்தலில் தோல்வி அடைகின்றார். ஆங்கிலயருடன் இணைந்து தலித் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட அம்பேத்கர், ஆங்கிலயர் குறித்த விமர்சனங்களையும் முன் வைக்க தவறவில்லை. மறுப்புறத்தில் காங்கிரஸ் மீதான வெறுப்புக் கொண்டிருந்தமையும் நியாயப்புர்வமானது.

இத்தகைய சூழலை கவனத்தில் கொள்கின்ற போதுதான் இரட்டைத் தேசியத்தை நாம் புரிந்துக் கொள்ளல் அவசியமானதாகின்றது.

சுதந்திர போராட்டம் இந்திய மக்களின் அளப்பரிய தியாகங்களோடு முன்னேடுக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் அதிகாரங்களைப் பகிர்வதில் இந்திய மக்கள் சக்திகள் தமது வலுவைப் பிரயோகித்தனர். விடுதலையுணர்வு சார்ந்த போராட்டங்கள் முனைப்புறும் போக்கு தீர்மானிக்கும் சக்தியாக அங்கு இருக்கவில்லை.

இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரே மக்கள் விடுதலை உணர்வு சார்ந்த போராட்டங்கள் முனைப்படைந்தன. இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக இலங்கைத் தேசியம் விழிப்புணர்வை மேற்கொண்ட போது உலகின் இரு மேலாதிக்க வாத நாடுகளையும் சாராது அணி சேராக் கொள்கையில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. இந்தியத் தமிழிலிருந்து இலங்கைத் தமிழ் பெறும் தனித்துவக் குணாம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக தேசிய விழிப்புணர்வு சார்ந்த இலங்கைத் தமிழ் எமது மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் போராடும் பண்பை வெளிப்படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் உயர் சாதிய வர்க்க சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அக்கறைக் கொண்ட போது கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான தேசிய பிரச்சினைக்காக போராடினார்கள். தலித் தேசிய உணர்வுக்கு எதிரியாகவே உயர்சாதி தமிழ்த் தேசியம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.

சாதிய தகர்ப்புப் போராட்டமாக முனைப்புற்ற அந்த தலித்தேசியம் இலங்கையின் பல்வேறு தரப்பு மக்களினதும் ஆதாரவை தனது பக்கம் அணித்திரட்டிக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் அதிகாரச் சாதியினர் மத்தியிலிருந்து அந்த சாதிய தகர்ப்பு போராட்டம் ஆதரவை பெற்றிருந்தது.

இந்திய – இலங்கை வரலாற்றில் அது ஒரு பிரத்தியேக அனுபவம். இந்தியாவில் எங்குமே இதுவரை சாதிய தகர்ப்புக்காக அனைத்து சாதியினரும் ஐக்கியப்பட்டு போராடி சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஒரு சாதியினர் அடக்கு முறையாளருக்கு எதிராக போராடினால், அடுத்த ஒரு ஒடுக்கப்பட்ட சாதியினர் கூட அதனை ஆதரிக்காத நிலைதான் அங்கே காணப்படுகின்றது. அம்பேத்கரை அவரது மஹர் சாதியினர் மட்டுமே பின்பற்றியிருந்தனர்.

யாழ்ப்பணத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் இவ்வகையில் அனைத்து சாதியினரையும் ஐக்கியபப்டுத்திய போது, யாழ் வெள்ளைத் தேசியம் தலித் தேசியத்திற்கு எதிராக செயற்பட்ட சூழலில் இரட்டைத் தேசியம் கோட்பாடு குறித்து அறிய வேண்டிய சூழலை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கு தலித் தேசியம் மார்க்சிய வழிக்காட்டலில் சர்வதேச உணர்வுக் கொண்டதாக முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவில் தலித் தேசியம் முழுவதும் எதிர்த் தேசிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உலகமயமாதல் சக்திகளுக்கு காட்டிக் கொடுக்கும் பாத்திரத்தை வகிக்கின்றது.

இத்தகைய வரலாற்றுச் சூழலில் இலங்கையில் பேரின சக்திகளும் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் உரிமை மீறல்களையும் இனவொடுக்குமுறைகளையும் மேற்கொண்ட போது இனவாதம் பிரதான முரண்பாடாக உருவெடுத்தது. ஆனால் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமானது துரதிஸ்டவசமாக ஆண்ட பரம்பரை மீண்டும் கையேற்பதற்கான வெள்ளாள தேசியமாக முன்னெடக்கப்பட்டது. இப்போராட்டம் தமிழ் தேசியமாக இருந்த போதினும் பரந்துப்பட்ட ஐக்கிய முன்னணிக்கு அது இடம்கொடுக்கவில்லை.

இன்று இலங்கையில் இனவாதம் என்பது பல்வேறுநிலைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மறுபுறத்தில் போர்கால இசைவாக மறைந்திருந்த சாதி மக்கள் மத்தியில் பல்வேறு வடிவங்களில் வேர் கொண்டு கிளைப்பரப்பி வருகின்றது. போராட்டங்கள் யாவற்றிலும் சாதியம் என்பது தள்ளி வைக்கப்பட்டிருந்தது போல, தமிழ் தேசிய போராட்டத்தின் போதும் சாதியம் என்பது தற்செயலான சில நெகிழ்வுப் போக்குகளைக் கொண்டிருந்தது. இந்த சூழலில் தான் சாதியத்தை தகர்த்த கூடிய தலித் தேசியமும் தமிழ் மக்களின் சுயநிர்னய உரிமைகான தமிழ் தேசியமும் முற்போக்கான திசையில் முன்னெடுத்து செல்லப்படல் வேண்டும். இவ்விடத்தில் இவ்விரு தேசியமும் அது சார்ந்த குறுகியகால நீண்டகால தந்திரோபாய திட்டங்களை வகுக்கின்ற போது இரட்டைத் தேசியம் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது. இரட்டைத் தேசியம் குறித்த சமூகமாற்ற செயற்பாடானது இன்று நம் மத்தியில் காணப்படுகின்ற இன, மத, மொழி, சாதி, பாலின முரண்பாடுகள் அனைத்திற்கும் எதிரான போராட்டமாக திகழ வேண்டும்.

தமிழ் அனுபவம் என்ற வகையில் வள்ளுவம், பெரியாரியம், பாரதியம் என்பனவும் இந்திய வாழ்முறையை கூர்மைப்படுத்திக் காட்டுவனவாக உள்ளன. பௌத்த எழுச்சியும் பக்திபேரியக்கமும் விடுதலைப் போராட்டத்தில் காந்தியம் வகித்த பாத்திரமும் இந்திய புரட்சியில் பண்பாட்டுப் புரட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குவதைக் காட்டுவனவாக உள்ளன. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் தீர்க்கமான அரசியல் புரட்சி சமூகமாற்த்தையும் பண்பாட்டு மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இனக்குழு முறை முழுமையாக தகர்வுறாது வர்க்க சமூகமாற்றத்துக்கு ஏற்ப சாதியமாக்கப்பட்ட இந்தியச் சமூகத்தில் பண்பாட்டுப் புரட்சியே அரசியல் – சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இச்தகைய யதார்த்தப் பின்னணிலேயே இரட்டை தேசியம் நிசர்சனமாகியுள்ளது.

புதிய சூழலுக்கான மார்க்சியப் பிரயோகம்

மார்க்சியத்தை இன்றைய யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சியம் என்பது எல்லாக் கால கட்டத்திற்கும் எல்லா சூழலுக்கும் பொருத்தமான திட்ட வட்டமான தத்துவத்தையோ வேலைத்திட்டத்தையோ முன்மொழியவில்லை. அது ஒவ்வொரு வரலாற்றுக் காலங்களிலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான திசை வழியைக் காட்டி நின்றது என்பதை நாம் புரிந்து செயற்பட வேண்டியுள்ளது.

எமது பண்பாட்டுச் சூழலில், காலமாற்றத்திற்கும் புதிய பொருளாதார சூழலுக்கும் ஏற்றவகையில் பல புதிய புதிய கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பல பாரம்பரியங்களும் பழைய சிந்தனைப் போக்குகளும் காலத்திற்கு ஏற்றவகையில் மீட்டெடுக்கப்படுகின்றன. அம்பேத்கர், இரட்டை மலைசீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் முதலானோர் இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் முக்கிய தத்துவவாதிகளாவர்.

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்தமையால் தமது பண்பாட்டு விருத்திக்கு இருந்த தடைகள் குறித்த புரிதல் அவர்களிடம் இல்லாமலில்லை. ஆளும் சாதியினரது மீட்டுருவாக்கம் வேத வேதாந்த சார்பாக அமைந்தது போல அயோத்திதாசரது மீட்டுவாக்கம் இல்லை. இடைக்காலத்தில் வேத வேதாந்த வழி திரிக்கப் பட்டுவிட்டது என அவர்கள் வருந்த, தாம் அடக்கப்பட்டதால் முந்திய மேலான நிலையிழந்தோம் என்ற உணர்வு சார்ந்து சிந்தித்து செயற்பட்ட அம்பேத்கர், அயோத்திதாசர், இரட்டைமலை சீவாசன் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இத்தகைய பண்பாட்டு மீட்டுருவாக்கம் இரு நிலைப்பட்ட போக்குகளை தத்துவார்த்த தளத்தில் ஏற்படுத்தியுள்ளன. ஒன்று மார்க்சியத்தை நிராகரிக்கும் வகையிலும், அதனை தகர்க்கும் வகையிலும் ஆதிக்க சக்திகளால் மேற்கொள்கின்ற தத்துவார்த்த போராட்டம். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸின் தலைமையிலும் அதன் போக்குகளிலும் பிராமணியத்தின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டமையினால் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் ஆங்கில காலனித்துவாதிகளை ஆதரித்து நின்றதுடன் தாம் சார்ந்த மக்களுக்கான விடுதலை மார்க்கமாகவும் அதனைக் கருதினர்.

மறுபுறத்தில் காங்கிரஸ் தலைமையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களை இணைக்க தவறியதுடன், அவர்கள் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க தவறியது. இதன் விளைவாக இந்திய தேசிய விடுதலைப் போராட்டமானது நண்பன் யார்? எதிரி யார் ? என்பதனை சரியாக இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்ட சூழலில், பாரதி இவ்விரு முரண்பாடுகளையும் சரியாக இனங்கண்டார். தன் காலவோட்டத்தின் உயிர்நாடிகளைப் புரிந்துகொண்டு செயற்பட்டமையே பாரதியின் முக்கிய ஆளுமையாக அமைந்தது.

இவ்விடத்தில், கியூபாவின் பண்பாட்டு புரட்சியை ஒப்பு நோக்குவது பயன்மிக்கதாகும். கியூப தேசிய விடுதலைப் போராட்டமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் அனைவரையும் தன்னுள் இணைத்திருந்தது போல, கறுப்பின மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது. இத்தகைய தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததில் ஹொஸே மார்த்திக்கு முக்கிய இடமுண்டு. பண்ணையடிமைத்தனத்தை தகர்ப்பது மற்றும் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலைபெறுவது எனும் இரட்டை தேசியம் குறித்த மார்த்தியி குறித்த மார்த்தியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பனை அன்றைய கியூபா புரட்சியின் முன்னணி தலைவர்கள் சிறப்பாகவே கவனத்திலெடுத்தனர்(உண்மையில் இரட்டைத் தேசிய பிளவு என்ற நடைமுறைச் செயற்பாடு சாதியச் சமூகத்திற்குரிய யதார்த்தம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்).

”கியூபப் புரட்சிக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கிய சிந்தனையாளர் ஹொஸே மார்த்தி” என பிடல் காஸ்ட்ரோவும், ”இந்த நாட்டில் தேச எல்லைகளைக் கடந்து எதையேனும் பேசவோ செய்யவோ வேண்டுமென்றால், நாம் மார்த்தியின் வார்த்தைகளையும் அவரது முன்னுதாரணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்” என சேகுவேராவும் சரியான திசையில் இனங்கண்டிருந்தனர்.

இந்திய சூழலில் இத்தகைய வரலாற்றுப் பாத்திரத்தை வகித்த பாரதியின் இரட்டை தேசியம் குறித்த தெளிவை, இந்திய தேசிய விடுதலையின் முன்னணி தலைவர்கள் கவனத்திலெடுக்க தவறியமையே கியூபா விடுதலைப் புரட்சி அடைந்த வெற்றியை இந்திய தேசிய போராட்டம் எட்ட முடியாமல் போனது. இதுவரையும் இந்திய சூழலில் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாதிருப்பது துரதிஷ்டவசமான தொன்றாகும். இது தொடர்பில் ந. இரவீந்திரன் பின்வருமாறு குறிப்பிடகின்றார்:

ஐரோப்பிய வர்க்கமுறையை அப்படியே பிரயோகிக்க முனைந்தது தோல்வியடைந்ததைப் போன்றே, சாதிச்சமூகம் என்பதற்காக தலித்தியவாதத்தையும் பிரயோகித்தமையும் தோல்வியே தழுவியுள்ளது. மார்க்ஸ், லெனின் ஆகியோரது எழுத்துக்களில் முடங்கிவிடாமல் மார்க்சிய – லெனினியைச் சிந்தனை முறையைக் கற்றுக்கொண்டு நமது சாதியச் சமூகத்துக்கு அமைவாகப் பிரயோகிப்பது அவசியம்.

அந்தவகையிலும் சாதியத்தகர்ப்பின் பொருட்டும் உழைக்கும் மக்களாகவே மிகப்பெரும்பான்மையினரான தலித் மக்கள் உள்ளமையாலும் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாகியுள்ளது. அதேவேளை பல்வேறு சாதிப்பிரிவினரும் பாட்டாளிவர்க்கமாக உள்ள காரணத்தாலும், ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சமத்துவ சமூகம் படைப்பதும் சாதிபேதங்களை ஒழிப்பதும் அதனூடாக மட்டுமே சாத்தியப்படும் என்பதாலும் மார்க்சிய – லெனியைக் கற்றலை புதிய நோக்கில் ஆழப்படுத்துவது அவசியமாகும். (மே.கு.கட்டுரை)

அந்தவகையில் இன்று மார்க்சியம் என்பது இந்த சூழலில் தன்னை புனரமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றது. அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன் முதலா னோரிடமிருந்து போர்க்குணத்தை கவனத்திலெடுக்கின்றதன் மறுபுறத்தில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய போராட்டத்தின் முற்போக்கான பாத்திரத்தையும் (அதன் வரையறைக்குட்பட்ட அளவில்) நாம் கவனத்திலெடுக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்திற்கு வழிகோலக்கூடிய புதிய பண்பாட்டுப் புரட்சி வடிவங்கள் நடைமுறைவாயிலாக கண்டறியப்படுவது அவசியப் பணியாகியுள்ளது. இக்காலத் தேவையைக் கையேற்கத்தக்கது. வர்க்கமாக, முன்னணிப் படையாக தொழிலாளிவர்க்கத்தை வளர்த்தெடுக்கும் வரலாற்றுக் கடமையின் ஒருப் பகுதியாகவே இரட்டைத் தேசிய போராட்டம் அமைந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பிரமாண்டமான வெற்றிகளை பெற்று சாதனையை நிலைநாட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த நூற்றாண்டிலும் அதனை விட பிரமாண்டமான வெற்றிகளை பெறுவதற்கு இந்த காலம் குறித்த சுய விமர்சனத்துடன் செயற்படுவோமாக.

Exit mobile version