விரைவில் வெளிவரும் இன்றைய முதலாளித்துவ நெருக்கடியும் மூலதனாமும் புதிய உலக ஒழுங்கும் என்ற நூல் ஒரு கூட்டு முயற்சி. இதன் முதலாவது பாகம் முதலாளித்துவ நெருக்கடியின் வரலாற்றுரீதியான பார்வையை முன்வைத்து இன்றைய நெருக்கடியை குறித்த ஆய்வை முன்வைக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் புதிய வர்க்க ஒழுங்கமைப்புக் குறித்து ஆழமான ஆய்வு ஒன்று முன்வைக்கப்படுகிறது. முதலாம் பாகத்திற்கான முகவுரை இங்கு கட்டுரையாக வெளியாகின்றது. இனியொருவில் தொடர்ச்சியாக வெளிவரும் முதலாம் பாகம் கருத்தாளர்களின் காத்திரமான கருத்துக்களோடு பிரசுரிக்கப்படும்.
உலகத்தின் ஒவொரு சந்துபொந்துக்களிலும் நுளையும் ஏகபோக அரசுகள் உலகின் ஒவ்வொரு தனிமனிதனதும் வாசற் கதவுகளைத் தட்டி மிரட்டுகின்றன. மரண பயத்தை மக்கள் மத்தியில் விதைக்கின்றன. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தட்டிக்கேட்டால் அழிக்கப்படுவீர்கள் என்றும், உரிமை கேட்டால் உயிர் பறிக்கப்படும் என்றும், புரட்சி என்றால் புதர்களுள் மரணிக்க வேண்டும் என்றும் அதிகாரவர்கத்தின் கூறுகள் பிரச்சாரம் செய்கின்றன.
1970 களில் உலகின் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் உற்பத்தியின் உபரியை அதிகரித்துக் கொள்வதற்கா ஆரம்பிக்கப்பட்ட புதிய ஒழுங்கமைப்பையே நவதாராளவாதம் என்கிறோம்.
அமரிக்க அரசினதும் அங்கு அளவுக்கு அதிகமாக செல்வத்தைக் குவித்து வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினதும் தலைமையில் உலகம் முழுவதும் வழி நடத்தப்படுவதை அறியாமலேயே பலர் ‘ஜனநாயகத்தின் ஊற்றுமூலமான’ அமரிக்காவிற்காக மாண்டு போனார்கள்.
அமரிக்காவின் தலைமையிலான நவ-தாராளவாதப் பொருளாதார அமைப்பிற்கு முன்னதான மூன்று பொருளாதார அமைப்புக்கள் தோற்றுவித்த சிக்கல்களும், வரலாற்று வழிவந்த முதலாளித்துவத்தின் இயக்கமும் இணைந்து இன்று நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் உலக முதலாளித்துவ அமைப்பை உருவாக்கியுள்ளன. அமரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும் அதன் தலைமையிலான உலக ஒழுங்கிற்கும் ஏற்பட்டுள்ள அமைப்பியல் நெருக்கடி முன்னைய நெருகடிகளோடு தொடர்புடதாயினும் அவற்றிலிருந்து வேறுபட்ட மீள முடியாத பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
இதுவரை காலம், நவ-தாராளவாதப் பொருளாதாரத்தின் கீழ் செயற்கையாகத் தோற்றுவித்த மூலதன இயக்கம் விரல்விட்டெண்ணக்கூடிய மூலதனச் சொந்தக் காரர்களின் நிகர இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஒழுங்குகளையும் கொண்டிருந்தது.
அதிகார ஒழுங்கமைப்பின் தலைமையில் அமரிக்க அரசும் அதன் மேல்தட்டுவர்க்கமும் குறிப்பாக மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் சில குடும்பங்களும்ன் உலகின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கின்றன.
ஏனைய நாடுகளின் மூலதனச் சொந்தக்காரர்கள் அமரிக்க அதிகாரவர்கத்துடன் உறவைப் பேணுகின்ற அதே வேளை தீர்க்க முடியாத நுண்ணிய முரண்பாடுகளையும் கொண்டுள்ளன.
மிகவும் குறுகிய விரல்விட்டெண்ணக் கூடிய அமரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவுத் தளம் சமூகரீதியாகவும் உலகளாவிய தன்மையிலும் பரந்து விரிந்தது. பல உலக அமைப்புக்கள் இவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் செயற்படுகின்றன. பிரதான அமைப்புக்கள் அமரிக்காவை இயங்குதளமாகக் கொண்டவை.
ஏகாதிபத்திய நட்பு அரசுகளை உள் நாடுகளில் உருவாக்குவதே பொருளாதார வன்முறையின் உடனடிவடிவமாகவிருந்தாலும் இது மேலும் சிக்கலான முறைமைகளைக் கொண்டது என்பதை எதிர்வரும் அத்தியாயங்களில் விளக்குகிறோம்.
முதலாளித்துவ நாடுகளை மீண்டும் குடியேற்ற நாடுகளைப் போன்று உருவாக்குவதற்கான அந்த நாடுகளின் மேல்தட்டு வர்க்கத்தின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் அதே வேளை எகாதிபத்தியக் கூறுகளான நேட்டோ(NATO), உலக நாணய நிதியம்(IMF), உலக வங்கி, உலக வர்த்தக மையம்(WTO), ஐக்கிய நாடுகள் அமைப்பு(UN), தன்னார்வ நிறுவனங்கள்(NGOs) போன்றவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது. இவை அனைத்தும் அமரிக்காவின் கையளவு மேல்தட்டு வர்க்கத்தினது இலாபத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே என்பது இறுதி நோக்கமாக அமைகிறது என்பது அருவருக்கத்தக்க வியப்பாகும்.
உபரி இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மூன்றாமுலக நாடுகளின் வளங்களைச் சுரண்டவும், உலகம் முழுவதும் ஊதியப் போட்டியை ஏற்படுத்தி கூலி உழைப்பச் சுரண்டவும், அன்னிய மூலதனத்தின் நேரடி முதலீடுகள் ஊடாக உள்நாட்டின் பண்ட உற்பத்தியைக் கையகப்படுத்தவும் நவதாராளவாத உலகமயமாக்கல் வழியேற்படுத்திக்கொடுத்தது.
இன்று தவிர்க்கமுடியாத நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நவதராளவாத ஒழுங்கின் ஆரம்பமும் முடிவும் ஆராயப்படவேண்டும். முன்னைய உலக ஒழுங்குகளும் அதன் தொடர்ச்சியான இன்றைய நெருக்கடியும் அலசப்பட வேண்டும். நவதாராளவாதம் ஏற்படுத்திய புதிய உற்பத்தி உறவுகள், வர்க்க அடுக்குமுறை, உற்பத்தி சக்திகளின் செயற்கையான வளர்ச்சி என்பன மேலும் தெளிவாக்கப்பட வேண்டும், அடுத்த அத்தியாயங்களில் இவை குறித்த ஆழமான ஆய்வுகளைக் காண்போம்.