Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

  ( இனியொருவில்  செம்ரெம்பர் 4ல் வெளிவந்த தோழர் சி.கா. செந்திவேலின் பேட்டியைத் தொடர்ந்து வாசகர்களின் ckse10பின்னூட்டக் கேள்விகள் பல வந்தன. அவற்றுக்கு தோழர் சி.கா. செந்திவேல்  வழங்கிய பதில்கள் இங்கே தரப்படுகின்றன.)
 
   பின்னூட்டக் கேள்வி: உலகமயமாதலின் உற்பத்தி உறவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும்? தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு?
 
 தோழர் சி.கா. செந்திவேல் : உலகமயமாதல் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையினைத் தமது ஏகபோக மூலதனத்தின் மூலம் விரிவுபடுத்தி அதனை உறுதிப்படுத்துவதற்கான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலாகும்.  அதன் அடிப்படையில் கடந்த முப்பது ஆண்டு காலப் பகுதியில் அதன் உற்பத்தி உறவுகள் நவ தாராள பொருளாதாரம் என்பதன் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. பல்தேசிய நிறுவனங்களின் மூலதன விரிவாக்கல், தனியார்மயம், தாராள சந்தை, நுகர்வுத் திணிப்பு, போன்றன பரந்த உலகமயமாக்கம் பெற்றுள்ளன.  அதேவேளை, நாடுகளின் வளங்களை வாரிச் செல்லல், குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டல், பெருலாபம் குவித்தல், தேசியப் பொருளாதாரத்தை சிதைத்தல், சுயசார்புக் கொள்கைகளை அழித்தல் என்பன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
 
நவீன தொழில் நுட்பமானது உலகமயதாலுக்கு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.  இவற்றுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பண வாரியிறைப்பு மூலமான அரசியல் நீக்க நடவடிக்கைகளும், சமூக பண்பாட்டுச் சீரழிவுகளும் தொடரப்படுகின்றன.  இவற்றுக்கு இசைவானவையாகக் கருத்தியல் தளத்தில் பின்-நவீனத்துவம் தாராள அரசியல், என்பன பரப்புரை செய்யப்பட்டு வர்க்கப் போராட்ட அரசியல் மாக்சிசம், சோசலிஷம் என்பன மறுக்கப்படுகின்றன.  அதே வேளை, இன மத மொழி பிரதேச வேறுபாடுகளினதும் தேசியத்தின் பெயராலும் உருவாக்கப்படும் மோதல்கள் யுத்தங்களாக மாற்றப்படுகின்றன.  அரசாங்கங்களுக்கும் விடுதலையின் பெயரிலான போராட்டங்களுக்கும் நேரடி, மறைமுக ஆயுத விற்பனை செய்வதுடன் ராணுவத் தலையீடுகளையும் மேற்கொள்ளலும் தொடர்கிறது. இவை யாவும் சமகால உலக முதலாளித்துவ மூலதன விரிவுக்கும் உற்பத்திக்கும் அதன் உறவு முறைகளுக்குமாக ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நவகொலனிய அமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலேயாகும்.

மேலும், சந்தைப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவப் போட்டியையும் பெருலாபம் குவிப்பதையும் குறியாகக் கொண்டதாகும். இது மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கிலான உற்பத்தியையும் நுகர்வையும் நிராகரித்து, தனிநபர்கள் லாபத்தைப் பெருக்கிப் பணம் குவிக்கும் வழிமுறைகளிலேயே செயற்படுகிறது.  இதற்கு மாறாக, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய சோசலிஷப் பொருளாதாரம் தோற்றம் பெற்று வளர்ந்து வந்தது. ஆனால் முதலாளித்துவம் பல வழிகளிலும் அதனை முறியடித்து தோல்வியுறச் செய்து விட்டது. சந்தைப் பொருளாதாரத்தை நிராகரித்து வந்த முன்னாள் சோசலிஷ நாடுகள் எனப்பட்டவை கூட, இன்று இச் சந்தைப் பொருளாதாரத்தில் பங்கு கொண்டு தமது சோசலிஷப் பொருளாதாரத்தைப் பலியிட்டு விட்டன. இதற்கு உதாரணமாக நாம் காணக் கூடியது தான், முன்னைய சோசலிஷ சீனாவின் சோசலிஷப் பொருளாதாரமும் தற்போதைய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மீதான சீனாவின் மாற்றமடைந்த நிலைப்பாடுமாகும். 
 
எனவே முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரமே இன்று உலகப் பொருளாதார ஒழுங்காக அமைந்து ஆதிக்கம் பெற்று நிற்கிறது. இச் சந்தைப் பொருளாதாரப் போட்டி மனப்பான்மை மக்கள் மனங்களின் திணித்துப் பதியவைக்கப்பட்டு எங்கும் எதிலும் போட்டியும் குறுக்குவழிகளும் எப்படியாவது தனித்தனியே ஈடேற்றம் காண்பது என்ற வரிசையில் மக்களை நிறுத்தியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய முதலாளித்துவ அரசுகள் ஏகாதிபத்திய உலகமயமாதலால் உள்வாங்கப்பட்டதுடன் அதன் தேசியத் தன்மைகள் கழுத்து நெரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையில் தெளிவாகக் காணமுடிந்துள்ள அதே வேளை, பின் தங்கிய உலக நாடுகளின் தேசிய அரசுகள் எனப்பட்டவற்றுக்கும் அதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
 
 தேசிய அரசுகள் மட்டுமன்றி தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் எனத் தம்மைக் கூறிக்கொண்டு அரங்கினில் மேற்கிளம்பித் தேசிய குணாம்சங்களை வெளிப்படுத்திய விடுதலை அமைப்புகள் கூட ஏகாதிபத்திய அரவணைப்புக்கு  உள்ளாகி உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குத் தம்மை இரையாக்கிக் கொண்டன. இதற்கும் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் அனுபவமாகி உள்ளன. அதே வேளை, இவ் உலகமயமாதலின் நச்சுத்தனங்களை எதிர்த்து நிற்பதில் குறிப்பிட்ட தேசிய சோஷலிச அரசுகள் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியும் வருகின்றன என்பதும் கவனத்திற்குரியதாகும். 
 
மேலும் தேசத்தின் விடுதலைக்கு தேசிய முதலாளித்துவம் அவசியம் என்பதும் தேசிய முதலாளித்துவம் இன்றி தேச விடுதலை சாத்தியமில்லை என்பதும் தவறான கருதுகோள்களாகும். ஏனெனில், தேசிய முதலாளித்துவம் ஊசலாட்டம் மிக்கதும் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்யக் கூடியதுமாகும்.  எனவே வர்க்கப் போராட்ட அடிப்படையில் அணிதிரளும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பிற உழைக்கும் மக்களும் தமக்கான விடுதலையைத் தேசிய முதலாளித்துவத்திற்குப் பின்னால் இழுபட்டுச் சென்று வென்றெடுக்க முடியாது. தமக்குரிய தேச விடுதலையைத் தமது சொந்தத் தலைமையைக் கட்டியெழுப்பி தமக்கான பாதையில் மக்களை அணிதிரட்டிப் போராடியே வென்றெடுக்க முடியும்.
 
   பின்னூட்டக் கேள்வி: தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அவசியமானதா? தேசிய இயக்கங்கள் தேவையா?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : வரலாற்று ரீதியான இலங்கையின் இன்றைய யதார்த்தம், இத் தீவு நாடு பல்லினத் தேசியங்கள் வாழும் நாடென்பதும் இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் வாழ்ந்து வருவதுமாகும்.  இங்கு பிரிவினையை ஏற்படுத்தி எந்தவொரு தேசிய இனமும் வாழமுடியாது. ஆனால், தேசிய இனங்கள் தம்மை எதிர் நோக்கி நிற்கும் பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து சுயநிர்ணயத்தை வென்றெடுப்பதற்குப் போராட முடியும். போராடவும் வேண்டும்.
 
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் மூன்று தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சியை முன்னிறுத்திய தமது கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டும்.  இவை ஒன்றை ஒன்று நிராகரிக்காத நிலையிலும் ஆளும் வர்க்கத்தால் பிளவுபடுத்தி மோத வைக்கும் சூழ்ச்சிக்கு உட்படாதவாறும் தமக்குள் ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியமானதாகும். எனவே தேசிய இனப் பிரச்சினை கூர்மையடைந்துள்ள நிலையில் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாத அவசியப்பாடாக அமைகிறது. இதுவே இலங்கையின் இன்றைய யதார்த்தமாக உள்ளது.
 
 
 பின்னூட்டக் கேள்வி : தமிழ் மக்களின் புதிய போராட்ட மார்க்கம் எது?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : தமிழ் மக்களின் பேரில் முன்னெடுத்த முன்னைய போராட்டங்கள் யாவும் தோல்வி கண்டுவிட்டன. ஏனெனில் உறுதியான வெகுஜனப் போராட்டம் தமிழர் தலைமைகளால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றப் பாதைக்கும் அராஜகங்கள் நிறைந்த  ஆயுதப் போராட்டத்திற்கும் அப்பாலான புரட்சிகர வெகுஜனப் போராட்டமே புதிய மார்க்கமாக அமைய முடியும். இப் போராட்டத்தின் மையமும் பலமும் பரந்துபட்ட மக்கள் சக்தியாக மட்டுமே இருக்க முடியும். கொள்கை வகுப்பதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மக்களின் பங்களிப்பு அடிப்படையானதாக அமைய வேண்டும்.  தம்மை எதிர் நோக்கும் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராகத் தாமே முன்னின்று போராடுபவர்களாக மக்கள் இருக்க வேண்டும். தமிழர் மேட்டுக்குடி வழிவந்த உயர் வர்க்கத் தலைவர்கள் வகுக்கும் கொள்கைகளாலோ அல்லது இளைஞர்களின் தோள் வலிமையை மட்டும் நம்பிய சிறு முதலாளியப் போராட்டங்களாலோ தமிழ்த் தேசிய இனமோ ஏனைய தேசிய இனங்களோ தமக்கான விடுதலையைத் தேடிக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
 
 
 பின்னூட்டக் கேள்வி : 9 /11க்குப் பிந்திய உலக ஓழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் பயங்கரவாதமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை சாத்தியமாக்குவது எப்படி?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியம் 9 /11ன் பயங்கரவாதத் தாக்குதலையும் அதன் காரணமாகக் கொல்லப்பட்ட சுமார் மூவாயிரம் வரையான மக்களின் அகால முடிவையும் தனது உலக மேலாதிக்கத்திற்கான பாதைக்கு உரமாக்கிக் கொண்டது. அதனை வைத்தே தனது ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அப்பட்டமாகவே தனது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து கட்டவிழ்த்துக் கொண்டது. அத்துடன் உலகின் ஒவ்வொரு நிலையிலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டச் சக்திகள் ஒடுக்கப்படுவதற்கு உரிய சர்வதேச சூழல் உருவாக்கப்பட்டது.
 
இங்கே நாம் தூர நோக்கிலும் வரலாற்று வளர்ச்சி மீதான நம்பிக்கையிலும் மக்கள் தான் தீர்க்கமான வரலாற்று உந்து சக்தி என்ற உண்மையிலும் இருந்தே ஏகாதிபத்தியத்தையும் அது காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விட்டு வரும் பரப்புரைகளையும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நீண்டகாலத்திற்கு உலக மக்களை ஏமாற்றவோ அடக்கவோ முடியாது. ஒவ்வொரு நாட்டினதும் ஒடுக்கப்படும் மக்கள், தமது நியாயமான போராட்டங்களை மக்கள் போராட்டங்களாக உரிய தந்திரோபாயங்களுடன் முன்னெடுப்பதில் உறுதியாக முன்னேறும் போது, பயங்கரவாதம் என்ற பதத்தின் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.  அப்போது பயங்கரவாதம் என்று பரப்புரை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதகமான சூழலை உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குச் சாதகமானதொன்றாக மாற்றிக் கொள்வார்கள். இது கடினமானதொன்றாயினும், மக்கள் முன்னேறிச் செல்லும் போது ஏகாதிபத்தியத்தால் நின்று பிடிக்க முடியாது போய்விடும். அப்போது, ஏகாதிபத்தியம் உட்பட எல்லாப் பிற்போக்காளர்களும் இறுதியில் காகிதப் புலிகளாகி விடுவர் எனத் தோழர் மாஓ சேதுங் கூறியது சாத்தியமாகிவிடும்.
 
 
பின்னூட்டக் கேள்வி : கேணல் கருணா ஜனநாயக அரசியலுக்கு வந்து தேசிய அரசியலில் தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகும் நிலை உலக அரசியலுக்குப் புதிய படிப்பினையும் முன்னுதாரணமும் என்று சொல்கிறார் சுகன். இது குறித்து தங்கள் பார்வை என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : இதில் எந்தவிதமான படிப்பினையையும் முன்னுதாரணத்தையும் காண முடியவில்லை. அதேவிதமாக ஆயுதம் தூக்கி நின்றவர்கள் ஏற்கனவே அரசாங்கங்களுடன் இணைந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் வருகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தும் கிழக்கில் இருந்தும் கருணா பதவி பெற்றிருப்பது தான் ஒரே வேறுபாடாகும். கடந்த காலங்களில் பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளில் இருந்து அவ்வப்போது அமைச்சுப் பதவிகளில் அதன் கட்சிகளில் அங்கம் பெற்று வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவரே கருணாவாவார். இதனால் தேசிய இனப் பிரச்சினையையும் பேரினவாத ஒடுக்குமுறையையும் எதிர்நோக்கி நிற்கும் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்காது. அத்தகைய நிலைப்பாடு, தனிமனித ஈடேற்றத்திற்கும் சலுகைகளுக்கும் உதவக் கூடும். அதனை ஆளும் வர்க்கம் நன்கு பயன்படுத்திக் கொள்ளவே செய்யும்.
 
 
பின்னூட்டக் கேள்வி  : “புலிகளின் அரசியல் தோல்வி, ஆசிய நாடுகளில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாளி வர்க்கம் நாடு தழுவிய வகையில் மீண்டும் இணைவதற்கு கிடைத்த வாய்ப்பு” எனத் தன்னை இடதுசாரியாகக் காட்டி வரும் தமிழரசன் கூறுகிறார். இது குறித்து தங்கள் பார்வை என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : இலங்கையில் புலிகள் இயக்கம் தோல்வி கண்டுள்ளமை மேற்குலக நாடுகளுக்கு கவலை தரக்கூடியதாக உள்ளதே தவிர, ஆசிய நாடுகளுக்கு கிடைத்த வெற்றி எனக் கொள்ள முடியாது. ஏனெனில் மேற்குலகம் திரை மறைவில் இருந்தே புலிகளுக்கான ஆதரவை வழங்கி வந்தது.  அதே வேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் போதியளவிற்கு ஆதரவைக் கொடுத்தும் வந்தது. உலக மேலாதிக்கத்திற்கான நிலையில் அமெரிக்காவிற்கும் பிராந்திய மேலாதிக்கத்திற்கான நிலையில் இந்தியாவிற்கும் இடையிலான மறைமுகப் பொருளாதார அரசியல் ராணுவப் போட்டியில் புலிகளின் தோல்வி அமெரிக்க மேற்குலகிற்கு இலங்கையைப் பொறுத்து ஒரு பின்னடைவு மட்டுமே. அதே வேளை இந்தியா இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதில் வெற்றி நிலையைப் பெற்றுள்ளது. இதனை வைத்து இலங்கையில் தொழிலாளி வர்க்கம் மீண்டும் ஒன்றிணைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று கூறுவது மேலோட்டமானதேயாகும்.
 
இலங்கையில் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு வேட்டு வைத்த காரணிகள் பலவுள்ளன.  அதில் பிரதானமானது பேரினவாத முதலாளித்துவ ஒடுக்குமுறையாகும். அதனைத் தவறான நிலைப்பாட்டிலிருந்து குறுந் தமிழ்த் தேசியவாதமாக முன்னெடுத்த சகலரும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் குலைத்தவர்கள் தான். ஏன், பேரினவாத ஒடுக்குமுறையின் அக்கம்பக்கத் துணையாக இருந்த பாராளுமன்ற இடதுசாரிகளும் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்குக் கேடு விளைத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாத வரை, தேசியவாதத்தை மூலதனமாகக் கொண்டுள்ள அனைத்து உயர் வர்க்க சக்திகளும் தோற்கடிக்கப்படாத வரை, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனைப் புலிகளின் தோல்வியால் மட்டும் மீட்டுவிடமுடியும் என்பது யதார்த்தத்தை மீறிய கற்பனை மட்டுமே.
 
 பின்னூட்டக் கேள்வி : இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா ஐ.நா.வில் வாக்களித்தது குறித்து, அதன் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவாதமானது எனத் தமிழ்த் தேசியவாதிகள் விமர்சனம் முன்வைக்கிறார்கள். இது குறித்து உங்கள் பதில் என்ன? அதே வேளை, கியூபாப் புரட்சியின் ஆதரவாளரான பிரஞ்சு மாக்சியர் ரெஜி ரெப்ரே “இனித், தேசியத்துடன் இணையாத சோசலிஷம் உயிர்வாழ முடியாது”  எனக் குறிப்பிட்டதை முன்னிலைப்படுத்தி தேசியவாதத்தின் அவசியம் பற்றிப் பேசப்படுவது பற்றிக் கூறுங்கள்.
 
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : கியூபா சோஷலிச நாடாகிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் பின்தங்கிய நாடாகவே இருந்து வருகிறது. அதே வேளை, ஏகாதிபத்திய நலகொலனித்துவப் பிடிக்குள் இருந்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் ஏகாதிபத்திய உள்நோக்கங்களுக்கு உதவும் வகையில் சர்வதேச அரங்கில் கியூபா எந்தவொரு நிலைப்பாட்டையும் வகிக்க முடியாது என்பது சரியானதேயாகும்.
 
 இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அமெரிக்க மேற்குலகம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் நோக்கம் உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதேயாகும். எனவே கியூபா இலங்கைக்கு ஆதரவாக நின்றமை அமெரிக்க மேற்குலக உள்நோக்கங்களை முறியடிக்கும் வகையிலேயேயாகும். தமிழ்த் தேசியவாதிகள் எப்போதும் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டுடனேயே இருந்து வந்துள்ளனர் . அந்த வகையில் கியூபா பற்றிய அவர்களது விமர்சனம் அர்த்தமற்றதாகும்.
 
அடுத்து “இனித், தேசியத்துடன் இணையாத சோசலிஷம் உயிர்வாழ முடியாது” என்ற ரெஜி ரெப்ரேயின் கூற்று எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். சோஷலிசத்துடன் இணைந்த தேசியம் தான் உயிர் வாழ்ந்துள்ளதே தவிரத், தேசியத்துடன் இணைந்த சோஷலிசம் இறந்து போனதையே வரலாறு கண்டுள்ளது. கியூபாவின் தேசியம் சோசலிசத்துடன் இணைந்து கொண்டதாலேயே இன்றுவரை உயர்வாழ்வதுடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோசலிசமாக விருத்தி பெற்றும் கொண்டது. அதன் பாதையில் வெனிசுவேலா முதல் தென்னமெரிக்க நாடுகள் பலவும் பயணித்து வருவதையும் காணமுடியும். முன்பு கிழக்குலகில் சீனாவிலும் வியட்நாம், கொரியா போன்ற நாடுகளிலும் தேசியம் சோசலிசத்துடன் இணைந்தே வெற்றி பெற்று உயிர் வாழ்ந்தமை வரலாற்று உண்மையாகும். எனவே தேசியம் உயிர்வாழ்வதற்கு ஏகாதிபத்தியமா அல்லது மாக்சிசமும் சோசலிசமுமா தேவை என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் தீர்மானிக்கட்டும்.
 
 பின்னூட்டக் கேள்வி : “ஃபிடல் காஸ்ரோ அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை…. ஃபிடல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்”; என்ற வாதம் பற்றிச் சர்வதேசியவாதியான உங்களின் மறுமொழி என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல் : ஒரு நாட்டினதும் கட்சியினதும் தலைவர் முதலில் தனது நாட்டினதும் மக்களினதும் நலன்களில் இருந்து தான் எதனையும் தொடங்க வேண்டும் என்பது சரியானதேயாகும். அதே வேளை, அத்தகைய நிலைப்பாடு உலக மக்களின் நலன்கள் தேவைகளுக்கு உகந்ததாகவும் இருப்பது அவசியம். அந்த வகையில் ஃபிடல் காஸ்ரோ தனது நாட்டு நலன்களுக்காக மட்டுமன்றி உலக மக்களின் நலன்களுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்துள்ளார். அவரதும் கியூபாவினதும் நிலைப்பாடு, உலகின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் பக்கமே இருந்து வருகின்றது. ஃபிடலின் எழுத்துக்களை உரைகளை ஆழமாகவும் ஆர்வத்துடனும் படிப்போருக்கும் அவதானிப்போருக்கும் அவை நன்கு புரியக் கூடியதாகும்.
 
 இது அவரவர் கொண்டுள்ள உலக நோக்கின் பாற்பட்டதேயாகும். மாக்சிச உலக நோக்குடைய ஒருவரால் வர்க்கப் போராட்ட அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகித் தெளிவான முடிவிற்கு வரமுடிகிறது. அவ்வாறு இல்லாதவர்கள் பழைமைவாத நிலவுடைமை வழிவந்த கருத்தியற் சிந்தனைகளிலான உலக நோக்கின் அடிப்படையில் விடயங்களை அணுகி நிற்க நேர்கிறது.  இவ்விரு உலக நோக்குக்களினதும் வழியாகவே ஒருவர் சர்வதேசிய வாதியாக இருப்பதும் மற்றவர் தேசியவாதியாக அதற்கும் அப்பால் குறுந்தேசிய வாதியாக நின்று விடயங்களை அணுகுவதும் நிகழ்கிறது. இதனையே சுகன், யசீந்திரா என்போர் மட்டுமன்றி ஏனையோரின் உரையாடல்களிலும் காணமுடியும். இத்தகையவர்கள் எந்த உலக நோக்கின் அடிப்படையிற் புதிய சிந்தனைகள் தமக்குத் தேவை என்று கூறுகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வியாகும்.

Exit mobile version