நவீன சமூகவியல் ஆய்வு உக்திகளில் சமூக நினைவாற்றல் (Social memory) என்பது தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது.சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் குறித்த சம்பவம் தொடர்பான மக்களின் கூட்டு நினைவுத்திறனே சமூக நினைவுத் திறனாகும்.
அரசியல் மாற்றங்கள் குறித்த இவ்வாறான நிகழ்வுகளின் நினைவுக் காலம் மக்கள் மத்தியில் மிகக் குறுகியதாகவே காணப்படுகிறது. கூட்டு நினைவாற்றல்(Collective Memory) அல்லது சமூக நினைவாற்றல் என்பது தனிமனிதனின் நினைவுத் திறனிலிருந்து மாறுபட்டு சமூக நிகழ்வுகளை உருவாக்குகின்றது. அரசியல் வாதி ஒருவர் முன்வைக்கும் கருத்துக்களின் குறித்த இந்த நினைவாற்றலின் வாழ்வுக்காலம் (Lifetime) என்பது பொதுவாகக் குறிகியதாகவே காணப்படுகிறது.
உதாரணமாக இலங்கையின் அரசியலில் மிகக் சிக்கலான காலகட்டமான மகிந்த அரசு நிகழ்த்திய வன்னிப் படுகொலைகளைக் காணலாம். இக்காலப்பகுதியில் மங்கள சமரவீர போன்ற அரசியல் வாதிகள் மகிந்த அரசின் மனித உரிமை மீறல் குறித்தும், தமிழ் பேசும் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது குறித்தும் பேசினார். அவரின் அரசியல் தளம் ஒரு முற்போக்கு ஜனநாயக வட்டத்தை முன்வைத்துக் உருவமைக்கப்பட்டிருந்தது.
ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே அதன் இதே இனப்படுகொலையின் இன்னொரு சூத்திரதாரியான சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறார் அவர்.
சமூக நினைவாற்றல் குறித்த ஆய்வுகள் இன்றெல்லாம் தன்னார்வ நிறுவனங்களின்(NGO) அடிப்படைப் பயன்பாட்டுக்கு உட்படுகிறது. சமூகத்தின் விரக்தி மற்றும் எதிர்ப்புணர்வு போராட்டத்திற்கான ஆதாரமாக மாற்றம்பெறும் அசைவுகளைக் கையாள்வதற்கான ஆய்வுகளில் ஒன்றாக இது பயன்படுத்தப்படுகிறது. போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் நோக்கித் வளர்ச்சியடைய வல்ல சமூக நினைவாற்றலின் வாழ்வுக்காலம் முதலில் கணிப்பிடப்படுகிறது.
இவ்வாழ்வுக் காலத்தை நீடிக்கும் புறக்காரணிகள் கண்டறியப்படுகின்றன. இறுதியாக இப் புறக்காரணிகளை மழுங்கடித்து சமூக நினைவாற்றலின் வாழ்வுக்காலத்தை குறுகியதாக்கி, எதிர்ப்பரசியலைச் சீர்குலைத்து அரசின் அதிகார மட்டத்திற்கு சேவைசெய்தலே இத் தன்னார்வ நிறுவனங்களின் இறுதிப் பணியாகிறது.
சமூகத்தின் அரச அதிகாரத்திற்கு எதிரான மக்களின் நினைவுத்திறனை கணித்துக்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் அதனைக் கட்டுப்படுத்தவும், அதன் வாழ்வுக்காலத்தைக் குறைக்கவும் புதிய சமூக உதவித் திட்டங்களை முன்வைக்கின்றன.
வன்னி இனப்படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் அனர்த்தம். உலகின் மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும், இடதுசாரிகளையும் உலகின் புதிய ஒழுங்கமைவின் கோரம் குறித்து சிந்திக்கவைத்த நிகழ்வு.
இதன் பின்னரான அரசியல் மாற்றங்க்ள், புதிய அரசியல் சக்திகளின் வரவு, புதிய ஒழுங்கு குறித்த பார்வை என்பன எல்லாமே தன்னார்வ நிறுவனங்களையும், உலகின் நீண்டகால சந்தைப் பொருளாதாரத்தின் நிலையான தன்மை குறித்துத் துயர்ப்படும் ஏகபோகங்களையும் இலங்கையின் பக்கம் நோக்கிக் கவனத்தைத் திருப்பியுள்ளது.
ஒரு புறம் தன்னார்வ நிறுவனங்கள் புற்றீசல் போல இலங்கை அரசியலின் சகல மட்டத்தையும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. மறுபுறத்தில் உலக வல்லரசுகள் தத்தமது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்திவைத்துள்ளன.
முள்ளி வாய்க்காலில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகளின் சரணடைவின் போது பேச்சுக்களில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேருவை இலங்கையிலிருந்து அமரிக்க அரசே பாதுகாத்து சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியாவிற்குக் கொண்டுவந்தது என்று இனியொருவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த சாட்சிகளில் ஒருவராக அவர் பயன்படுத்தப்பட முடியும் என்ற ஒரே காரணத்தினாலேயே அவர் பாதுகாக்கப்பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கப்படதாக அபிபிராயப்படுகிறார். “ராஜபக்ச அமரிக்காவுக்கு இன்னும் பிரச்சனை கொடுத்தால் அமரிக்கா அவரை விட்டுவைக்காது” என்கிறார் அவரது மொழியில்.
இன்றய இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியிலுள்ள அரசியல் என்பது போரின் வெற்றி தொடர்பானதும் சிங்களப் பேரின வாதத்தின் வெற்றி தொடர்பானதுமான சிங்கள சமூகத்தின் நினைவுத் திறனைப் பாதுகாப்பதும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் நினைவுத் திறனை அழிப்பதிலிருந்தும் தான் கட்டியமைக்கப்படுகிறது.
பௌத்ததின் புனிதம் குறித்த வரலாற்றுவழிவந்த சமூக நினைவுத்திறனின் கால அளவை நீடிப்பதற்குரிய அனைத்துப் புறக் காரணிகளையும் உள்வாங்க்கொள்ளும் சிங்கள பௌத்த பாசிச அரசியல் என்பது, பின் காலனியப் பகுதி முழுமையும் இலங்கையில் இரத்த ஆற்றை ஓடவிட்டுள்ளது.அவர்களில் யார் சிறந்த பௌத்த மேலாதிக்கவாதி என்பதை நிறுவுதலும் சிங்கள மக்களை அச்சிந்தனையை நோக்கி வளர்த்தலும் தான் அவர்களின் அரசியல். மறுபுறத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பது தமிழ் பேசும் மக்களின் அழிவிலிருந்தே கட்டமைக்கப்படுகிறது.
ஒடுக்குமுறையாளர்கள் தமது இரத்த வெறியாட்டத்தையெல்லாம் நிகழ்த்தி முடித்த பின்னர், தமது ஒடுக்குதல் சார்ந்த நினைவாற்றலை முற்றாக அழித்து மறுபடி அழிப்பிற்காகத் தம்மைத் தயார்படுத்திக்கொள்தலே அரச அதிகாரத்தின் அரசியல் வழிமுறை. இலங்கைத் தேர்தலில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் தமது அரசியலாக வரித்துக்கொண்ட இரு எதிர் முகாம்களும் இந்த செயன்முறையைத் தான் நமது சமூகத்தின் மீது திணிக்க முற்படுகின்றன. சந்திர நேரு குறிப்பிடும் அமரிக்க ஏகாதிபத்தியமும், தென்னாசியாவின் துருவ வல்லரசான இந்தியாவும் இதே சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சிந்தனையின் நினைவுத்திறனைப் பேணுதலிலிருந்தே தமது ஆதிக்கத்தைக் கட்டமைத்துக்கொள்ள முனைகின்றன.
வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியும், அதிகார முறைகளும் இதே அரசியல் பின்னணியைத் தான் முன்னிறுத்துகின்றன.
இலங்கை இனப்படுகொலை முற்போக்கு அறிவுசார் பகுதிகளின் உரைகல். ஒடுக்குமுறையின் புதிய வடிவங்களை வெளிப்படையாகப் புரிய வைத்திருக்கிறது. உலகின் மனிதாபிமானிகளையும், இடதுசாரிகளையும், தமிழ்ப் பேசும் இலங்கை மக்களையும், தமிழகத்தின் உணர்வாளர்களையும், முற்போக்கு அணியையும் ஒடுக்கு முறையின் கோரத்தை உணரவைத்திருக்கிறது.
தன்னார்வ நிறுவனங்களின் பிடியிலோ, தேர்தல் அமைபின் தந்திரோபாய வலையிலோ அமிழ்ந்து சீரழிந்து செல்லாமல், மக்களின் நினைவாற்றலை அரச ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தை உருவமைக்கும் வழிமுறையாக மாற்றும் அரசியல் தளம் பலப்படுத்தப்பட வேண்டும். இரண்டு பிரதானமான போர்க் குற்றவாளிகள் பெற்றுக்கொள்ளும் அரசியல் அங்கீகாரம் நிராகரிக்கப்பட வேண்டும். கொலையாளிகள் பங்குபெறும் அரசியலும் தேர்தலும் நிராகரிக்கப்படுவதற்கான பிரச்சாரம் இலங்கையிலும் உலகம் முழுமையிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதனூடாக மட்டுமே ஒடுக்குமுறைக்கெதிரானதும், இனப்படுகொலை குறித்ததுமான நினைவாற்றல் பேணப்பட வாய்ப்புண்டு.