Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா

இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளை மறைக்கும் காலச்சுவடும் குட்டிக் கேபியும்!

சிறுபான்மைத் தேசிய இனம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதற்குப் பின்னால், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பாசிசம் நிலை பெறுவதற்குப் பின்னால், இனச்சுத்திகரிபின் பின்னணியில், நாள்தோறும் பட்டினியால் மரணித்துப் போகும் சிங்களத் தொழிலாளர்களின் பின்னணியில் ஒரு பிரச்சார வலைப் பின்னல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாம் தலித்தியம் பேசுகிறோம், முஸ்லீம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம், பின்நவீனத்துவப் பையன்கள் என்று அழகிய “கதையாடல்கள்” உலக மக்களை ஒரு பிரச்சார வரம்புக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.
ஈழத்தின் இனப்படுகொலையை முன்வைத்து தெற்காசிய மக்கள் மத்தியில் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான உணர்வலைகள் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள ஆரோக்கியமான சூழ்லில் இந்தப் பிரசார வலை ‘புதிய விசையோடு’ முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அன்னா ஹசரே ஊழல் நடக்கிறது என்று சாகும் வரை சாகாமல் உண்ணா விரத நாடகம் போடுவார். மங்காத்தா மக்கள் கூட்டம் அவரின் பின்னால் அணிதிரளும். இந்தியாவின் பெரும்பகுதி உணவின்றிச் செத்துக்கொண்டிருக்கிறது என்று மறு கேள்வி கேட்டால் ஊழலுக்கு எதிராகப் போராடுவது தவறா என்பார்கள். தலித் அடையாளத்திற்காக அமரிக்க நிதி நிறுவனங்களிலிருந்து பணம் பெற்று தன்னார்வப் போராட்டம் நடத்துகிறோம் என்பார்கள். சாதியால் ஒடுக்கப்படுவதைவிட அமரிக்க அடிமையாக வாழலாம் என்பார்கள். வன்னி அழிந்துகொண்டிருந்த போது ராஜபக்சவிடம் சென்று சாதிக்காகப் போராடுகிறோம் என்று மனுக்கொடுக்கும் ஆங்கிலம் பேசும் மேல்தட்டு புத்திசீவிகளின் பிரச்சார வலைப்பின்னல் எல்லாத் தளத்திலும் பரந்து விரிகிறது.கேள்விகேட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது தவறா என்பார்கள்.
தன்னார்வக் கொடுமைக்காரர்கள் அரசுகள் மக்களைப் பிய்த்துத் தின்றாலும் அரசுகளோடு முரண்பட்டுக்கொள்ள மாட்டார்கள். ஏகாதிபத்தியங்கள் குறித்துப் பேசமாட்டார்கள். இவர்களின் பிரச்சார வலைப் பின்னல் அழிக்கப்பட வேண்டிய அபாயகரமான “ஜனநாயகம்”.
இந்த ஜனநாயகத்தின் தமிழ் நாட்டின் நுளைவாசல்களில் காலச்சுவடு என்ற பார்ப்பன பதிப்பகமும் ஒன்று. ஈழப் போராட்டம் என்றாலே கிரிமினல்களின் போராட்டம் என்று கொக்கரித்த தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் கர்த்தாக்களான சோ, சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.

இதன் இரண்டாம் கட்ட புத்திசீவி முகம் காலச்சுவடு பதிப்பகம். இஸ்லாமிய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவை காலச்சுவட்டின் வரலாற்றுச் சுவடுகள். இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா மட்டுமே எம்மை இரட்சிக்கும் என்று கோளைத்தனமான முன்னை நாள் புலி ஆதரவாளர் ஒருவரின் கட்டுரையைக் காலச்சுவடு பதிப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டின் “புத்திசீவிகளுக்கு” ஈழத் தமிழர்கள் இந்தியாவை வரவேற்பதாக பாலர்பாடம் நடத்தும் யதீந்திரா என்ற எழுத்துலகின் “குட்டிக் கே.பி” இன் கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்.

-மோகன் கதிர்வேல்
==========================================================================================================================================================================
இந்தியா புலிகளை அழித்ததா?
நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு -யதீந்திரா


எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
– Arthur Schopenhauer
1
சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் சமாதானத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்த மதிப்பீடு – (Pawns of Peace – Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka, 1997-2009) என்னும் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 183 பக்கங்களாக விரிந்திருக்கும் மேற்படி அறிக்கையில், 1999இல் நோர்வே ஒரு சமாதான இலகுபடுத்துநராக (facilitator) (அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளால்) அழைக்கப்பட்டதிலிருந்து, 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, அரசால் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் இவ்வறிக்கையில் நேர்த்தியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வெளிவந்திருக்கும் சர்வதேச ஆவணம் என்ற வகையில் இது அதிகக் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.
மூன்று பகுதிகளாக நோக்கப்பட்டிருக்கும் இவ்வறிக்கையில், முதல் பகுதியில் நோர்வேயின் சமாதான இராஜதந்திரம், இலங்கை முரண்பாட்டின் பின்னணியில் சமாதானத்திற்கான முன்னெடுப்பு மற்றும் முரண்பாட்டின் தோற்றப்பாடு ஆகிய விடயங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில், யுத்த நிறுத்தத்திற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குமான முதல் நகர்வு (1990 – 2003), பிணக்குகளும் உடைவுகளும் (2003 – 2006), யுத்தத்தின் வெற்றியும் மனிதநேய அனர்த்தமும் (2006 – 2009) ஆகிய தலைப்புகளிலும் மூன்றாவது பகுதியில் – சமாதான முன்னெடுப்பின் சர்வதேசப் பரிமாணம், சமாதானத்திற்கான மத்தியஸ்தமும் அதில் இடம்பெற்ற மாற்றங்களின் கதையும் சமாதானமும் இல்லை யுத்தமும் இல்லை என்பதான நிலைமைகள், நிதியுதவியும் சமாதானமும், முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளக அரசியல் சிக்கல்கள் ஆகிய விடயங்களும் மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் சில உயர்மட்ட விடயங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பல்வேறு தகவல்கள் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் உலவிக்கொண்டிருந்த விடயங்களாகவே இருக்கின்றன. இந்த அறிக்கை அவ்வாறான தகவல்களின் உண்மைத் தன்மையைத் தற்போது உறுதிசெய்துள்ளது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சமாதான முன்னெடுப்பில் பிரதான இடையீட்டாளராகச் செயற்பட்ட ஒரு நாட்டின் அனுசரனையில் வெளி வந்திருக்கும் ஆவணம் என்ற வகையிலேயே இது அதிகக் கவனத்தைப் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் தொடர்பில் எடுத்தாளப்படவிருக்கும் ஒரு முக்கியமான சர்வதேச அறிக்கையாகவும் இதுவே இருக்கப்போகிறது. ஆனால் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்ற கருத்து, முற்றிலும் புதிய தகவலாகவும் அதேவேளை இந்தியாவே – தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தது என்று வாதிட்டுவரும் தமிழ்த் தேசிய சக்திகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் தகவலாகவும் அமைந்திருக்கிறது. இதைப் பிறிதொரு வகையில் சொல்வதானால் – இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்திவரும் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளைப் பொறுத்தவரையில், மேற்படி அறிக்கை அவர்கள் மெல்லுவதற்குக் கிடைத்த அவல் போன்றது எனலாம். ஆனால் அது உண்மைதானா? புலிகளின் இத்தகையதொரு அவமானகரமான வீழ்ச்சிக்கு இந்தியாவா காரணம்?

இந்த இடத்தில் ஒரு கட்டுடைப்பு விமர்சனம் நமக்குத் தேவைப்படுகிறது. இலங்கை விடயங்களைப் பொறுத்த வரையில், இந்தியா என்பது ஒரு (கலாநிதி ஜயந்த தனபால) புவிசார் அரசியல் நிர்ப்பந்தம் அதேவேளை இலங்கை தொடர்பான விடயங்களில் அது (கலாநிதி பாக்கியசோதி சரவண முத்து) அச்சாணி போன்றது. எனவே நோர்வேயின் அனுசரனையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகளில் இந்தியா ஒரு திரை மறைவுச் சக்தியாக இருந்தது என்பது ஆச்சரியமான விடயமல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போக்கில் இடம்பெற்றுவந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக்கொள்ளாமையின் விளைவுகள்தாம். அத்துடன் விடுதலைப்புலிகள் 1991இல் மேற்கொண்டதொரு வரலாற்றுத் தவறு, இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நிரந்தரமான பிரிகோடாகவும் அமைந்தது. இதன் காரணமாகவே இந்தியா நோர்வேயை முன்தள்ளிப் பின்னிருந்தது.

மேற்படி அறிக்கையை வெளியிட்டுவைத்துப் பேசிய எரிக் ஷொல்ஹெய்ம் நோர்வே என்பது வெறுமனே பிரபாகரனை அணுகுவதற்கான ஒரு தொடர்பாளர் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிட்டதை நாம் இந்த இடத்தில் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்தியாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையில் இருக்கும் பிரிகோடானது, ஒருபோதுமே இந்தியா நேரடியாகப் பிரபாகரனை அணுகுவதை அனுமதிக்காது. ராஜீவ் கொலைக்குப் பிற்பட்ட காலத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் செயற்பட முடியாதவொரு அமைப்பாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், அரசியல் நாட்டம் கொண்ட ஈழத் தமிழ் மக்களை அதிகளவில் உட்கொண்டிருக்கும் நிலைமையக் கருத்தில் கொண்டு தான், இந்தியா தனது மேற்பார்வையில் மேற்கின் தலையீட்டுக்கு ஆதரவு வழங்கியது எனலாம். இலங்கையின் சமாதான முன்னெடுப்பு வெளிப் பார்வைக்கு நோர்வேயின் குழந்தை போன்று காட்சியளித்தாலும் உண்மையில் இதை இயக்கிய சக்தி இந்தியாதான் என்று ஷொல் ஹெய்ம் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதைப் பிரபாகரன் எவ்வாறு கையாண்டார் என்பதைக் கவனிப்பதன் மூலமே நாம் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை விளங்கிக் கொள்ள முடியும்.

2

ஆழமாகப் பார்த்தால் நோர்வேயின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை சமாதான முன்னெடுப்பானது, தோற்றப்பாட்டில் இரண்டாவது இந்திய – இலங்கை ஒப்பந்தம் போன்றது எனலாம். ஆனால் இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு மறைமுக அதிகாரமாகத் தொழிற்பட்டிருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். பிரபாகரனும் 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எவ்வாறு கையாண்டாரோ அவ்வாறே இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி நோர்வே தலைமையிலான முயற்சியையும் கையாண்டிருக்கிறார். முதலாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைச் செயலிழக்க ரணசிங்க பிரேமதாசவைத் தெரிவுசெய்திருந்த பிரபாகரன், நோர்வேயின் முயற்சியைச் செயலிழக்கச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ஷவைத் தெரிவுசெய்தார். எல்லாக் காலத்திலும் ஒரே உபாயம் கைகொடுக்கும் என்னும் பிரபாகரன் கணக்கு இம்முறை தவறாகப்போனது. அவரது தந்திரோபாயம் இறுதியில் அவரையும் பலியெடுத்தது. இதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் விழுந்த கதை. ஆனால் இதை ஏற்றுக்கொள்வதில் தான் நம் மத்தியில் சங்கடங்கள் தொடருகின்றன.

1987இன் இந்திய – இலங்கை ஒப்பந்தம் புலிகளுக்கு எவ்வாறான வாய்ப்புகளை வழங்கியிருந்ததோ குறிப்பிட்ட நோர்வேயின் மத்தியஸ்த காலத்திலும் அதையொத்த வாய்ப்புகளையே புலிகள் அனுபவித்தனர். “அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கே நன்மையளித்தது. இலங்கைப் படைகள் இராணுவத் தங்குமிடங்களுக்குள் முடக்கப்பட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டனர் – பொது விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டனர் – அனைத்திலும் தங்கள் புலிக் கொடியை ஏற்றினர். பாடசாலைகளில் தங்களது பிரச்சாரப் படங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள், ஒரு பொதுவிடயமாக மாறியது. தங்களின் செல்வாக்கை பலப்படுதிக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இது போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அரசத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் ஏதும் வரவில்லை, மாறாக மூன்றாவது இனக் குழுவான முஸ்லிம்களிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியிருந்தது. பின்னர் அரசு – புலிகள் – இரு தரப்பு சமநிலைவலு பிறிதொரு நிலைக்கு மாறியிருந்தாலும், அடிப்படையில் யுத்த நிறுத்த உடன்பாடானது விடுதலைப்புலிகளுக்கே நன்மையளித்தது” – (அறிக்கை – பக்கம் – 79).

அறிக்கை, விபரித்திருக்கும் மேற்படி விடயங்கள் அனைத்தும் பொதுவாக, ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தக் காலத்தில் வாழந்தவர்கள் அனைவரும் நன்கறிந்த உண்மைகள். ஆனால் பிரபாகரன் இந்தக் காலத்தைத் தனது யுத்த முனைப்புவாத அரசியலுக்குப் பயன்படுத்தினாரேயன்றி, மாற்றங்களுக்குட்பட்டுவரும் சர்வதேச நிலைமைகளைக் கருத்திலெடுத்து அரசியல் செய்வதற்கான, மாறுநிலைக் காலகட்டமாகப் பயன்படுத்தியிருக்கவில்லை.

இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போமாயின் – யுத்த நிறுத்த காலத்தில் தனது இராணுவக் கட்டமைப்புகளின் வலிமையைப் பெருக்கிக்கொண்டு, மீண்டும் பொருத்தமானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறுவதே பிரபாவின் திட்டமாக இருந்தது. ஆனால் அந்த வெளியேற்றத்திற்கான முழுப்பழியும் கொழும்பின் மீது விழ வேண்டும். ரணில் விக்கிரம சிங்கவை அரசியல் அரங்கிலிருந்து அகற்றும் பிரபாகரனின் திட்டத்தை, நாம் இந்தப் பின்புலத்திலேயே நோக்க வேண்டும். விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையைத் தடுத்ததன் விளைவாக, மிகச் சொற்பளவான வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையில் வலிந்து தலையிடாமல் இருந்திருந்தால் மகிந்த ராஜபக்ஷவால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்த யதார்த்தத்தை ராஜபக்ஷ நன்றாகவே உணர்ந்திருந்தார். இதனாலேயே அவர், பிரபாகரனுக்குத் தனது நன்றியைத் தெரிவுக்குமாறு எரிக் ஷொல்ஹெய்மிடம் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தத் தகவலை ஷொல் ஹெய்ம் பிரபாகரனிடமும் தெரிவித்திருக்கிறார். (பக்கம் – 55)

“2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவின் வெற்றியானது சமாதான முன்னெடுப்பு மற்றும் அதன் சர்வதேசமயப்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. எவ்வாறிருந்த போதும், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு போதுமே தங்களது மேற்படி முடிவு குறித்து விளக்கமளித்திருக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச வலையமைப்பு தொடர்பான அச்சத்தை ஒரு சாத்தியமான விளக்கமாக முன்வைத்தனர். ராஜபக்ஷவோ மேற்குலகுத் தொடர்பில் மிகவும் குறைவான ஆர்வத்தையே கொண்டிருந்தார். மகிந்த வெற்றிபெறும் நிலையில் விக்கிரமசிங்கவால், சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த முடியாமல் போகும் என்பதே பிர பாகரனின் கணக்காக இருந்தது. ராஜபக்ஷவின் அதிகார வருகை, சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான தேசியவாத அலையாகத் திரும்பியதுடன், விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் தீவிரப்படுத்தியது (பக்கம் – 77).

இங்கு அறிக்கையிடப்பட்டிருப்பது போன்று, பிரபாகரனின் எதிர்பார்ப்பும் அத்தகையதொரு தேசியவாத எதிர்ப்பலை தெற்கில் உருவாக வேண்டும் என்பதாகவே இருந்தது. பிரபாகரன் எதிர் பார்த்தது போன்ற நிலைமைகள் விரைவாகவே தெற்கில் ஏற்பட்டன. மகிந்த ராஜபக்ஷ சமஸ்டி மற்றும் சுனாமிக்குப் பின்னரான கட்டமைப்பு (P-TOMS) ஆகியவற்றை நிராகரித்ததுடன், சமாதான முன்னெடுப்பில் மேற்கு மற்றும் பிராந்தியத் தலையீடுகளை நிராகரிகப்பதாகவும் அறிவித்தார் (பக்கம் – 55).

பிரபாகரனின் கணிப்பில், தெற்கில் தீவிர தேசியவாதத் தலைமைத்துவம் ஒன்றின் வருகையே தனது தமிழீழக் கோட்பாட்டிற்கான நியாயத்தை வழங்கும். இது விடுதலைப் புலிகளின் அடிப்படையான அரசியல் அணுகுமுறை. இது குறித்து நோர்வேயின் அறிக்கை போதியளவு கவனம் செலுத்தியிருக்கவில்லை. பிரபாகரனின் அடிப்படையான அரசியல் அணுகுமுறை எதிரியைப் பேணிக்கொள்வதன் மூலத் தனது இலக்கிற்கான நியாத்தை உருவாக்கிக்கொள்வதாகும். ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருப்பின் பிரபாகரன் ஏதாவதொரு இணக்கப்பாட்டிற்கு நிச்சயம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். அறிக்கை வெளியீட்டின்போது பேசிய ஷொல்கெய்ம் தானும் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட மிலிந்த மொறகொடவும் இணைந்து சமஸ்டித் தீர்வு நகலொன்றை வரைந்ததாகவும் அதை விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியர் (என அழைக்கப்பட்ட – அழுத்தம் என்னுடையது) அன்ரன் பாலசிங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் அது பிரபாகரன் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே எந்தவொரு மாற்றுத் தீர்வையும் பரிசீலிக்கப்போவதில்லை என்ற முடிவிலிருந்தே பிரபாகரன் தனது திட்டங்களை வகுத்திருந்தார். அத்தகையதொரு மாற்றுத் தீர்வை நோக்கிச் செல்வதற்கானதொரு புறநிர்ப்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க இருந்ததன் காரணமாகவே ரணிலை அரசியல்ரீதியாகக் கொலைசெய்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் அரங்கேறியிருந்த விடயங்களுக்கும் தற்போது நோர்வேயின் இணக்கப்பாட்டு முயற்சிகளின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இடையில் அடிப்படையிலேயே சில ஒற்றுமைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

இந்தியப் படைகள் வடகிழக்கில் நிலைகொண்டிருக்கும்வரை தன்னால் முன்னகர முடியாது என்பதை விளங்கிக் கொண்ட பிரபாகரன், (சிங்களத் தலைவரான) ரணசிங்க பிரேமதாசவுடன் கைகோத்துக்கொண்டதன் மூலம் இந்தியாவை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றார். இறுதியில் ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்வில், இலங்கை அனுபவம் ஒரு கரும் புள்ளியானது. பின்னர் அதே பிரேமதாசாவின் அரசியல் வாழ்வையும் அவர்களே முடித்துவைத்தனர். மீண்டும் ராஜீவ் காந்தி பிரதமரானால் தனது தமிழீழக் கனவு நிறைவு பெறாது என்பதைக் கருத்தில் கொண்டே பிரபாகரன் இதைத் திட்டமிட்டிருக்கிறார் என்று ராஜீவ் கொலையின் புலன் விசாரணைக் குழுவின் தலைவரான டி. ஜி. பி கார்த்திகேயன் குறிப்பிட்டிருப்பதை இந்த இடத்தில் நாம் ஒப்புநோக்க முடியும். ரணில் விடயத்திலும் இதே அணுகுமுறையே கையாளப்பட்டிருக்கிறது. ஒரு வித்தியாசம், ரணிலை விட்டுவிட்டு, அவரது அசியல் இருப்புக்கு இலக்கு வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் சகாப்தத்தில், ஒரு விடயம் தங்களுக்குத் தடையென உணரப்படும்போது, அதை அழித்தொழிப்பது அல்லது பிறிதொரு சக்தியைத் தெரிவுசெய்வதன் மூலம் தற்காலிமாகக் குறித்த தடையை அகற்றுவது வழமை. இதுதான் புலிகளின் இறுதி நாட்கள்வரை அவர்களை வழி நடத்திச் சென்ற அரசியல் பண்பு நிலையாகும். இத்தகைய அரசியல் பண்பே புலிகளை நண்பர்களற்ற அமைப்பாகச் சுருக்கியதுடன் அவர்களின் அழிவுக்கும் வித்திட்டது.

3

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவிற்கு இருந்திருக்கவில்லை என்பதை, நோர்வே அறிக்கையை அவதானிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் விடுதலைப்புலிகளை ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டுமென்னும் ஆர்வம் இந்தியாவிற்கு இருந்திருக்கலாம். இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்ற வகையில் தனது அயல்நாடுகளில் சுமூகமான நிலைமை அவசியமென்று கருதியிருக்கலாம். ஆனாலும் அந்த முரண்தணிப்பு எத்தகைய நிலையில் அமைய வேண்டும் என்பதைச் சொல்லும் நாடாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா நிச்சயமாகக் கரிசனை கொண்டிருக்கும் என்பதில் ஜயமில்லை. 80களுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட்ட காலத்திலிருந்து அத்தகையதொரு கொள்கை நிலைப்பாட்டையே இந்தியா கடைப்பிடித்துவந்திருக்கிறது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் அதன் முக்கிய வழிநடத்துநராக இருந்த ஜே. என். தீட்ஷித் அத்தகையதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவே இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் குல்திப் நய்யார் பதிவுசெய்திருக்கிறார். இதை மேலோட்டமாகப் பார்த்தால், மேலாதிக்கம் போன்று தோற்றம் காட்டலாம். ஆனால் இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்ற வகையில் தனது பிராந்திய நலன்கள் குறித்த அக்கறையைப் புறம்தள்ளி விட்டு ஒருபோதுமே அதனால் இயங்க முடியாதென்னும் யதார்த்தத்தை இந்தக் கட்டுரையாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும் தனது நலன்களைப் புறம்தள்ளித் துறவு நிலையில் பிறிதொரு நாட்டின் பிரச்சினையைக் கையாள முன்வராது. இது சர்வதேச உறவுகள் தொடர்பான எளிய உண்மையாகும்.

மேற்படி அறிக்கை பதிவுசெய்திருப்பது போன்று இந்தியாவின் மௌன அங்கீகாரத்துடன்தான் எல்லாம் நடந்து முடிந்தன. இந்தியா மனம் கொண்டிருந்தால் யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவோ சொல்லவோ இல்லை – (பக்கம் – 78). ஆனால் இங்கு நிபந்தனையுடனான எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முயலவில்லை என்பதுதான் விடயம். இந்தியா விடுதலைப்புலிகளை அழித்தொழித்ததாகப் பேசிவரும் சிலர், இந்த அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒரு முக்கியத் தகவலைப் பார்க்க மறுக்கின்றனர்.

“மூன்றாக இருந்த யுத்தத் தவிர்ப்பு வலயங்கள் இரண்டாகச் சுருங்கிய நிலையில், மே 8இல் விடுதலைப்புலிகள் மிகச் சிறியதொரு நிலப் பகுதிக்குள் அகப்பட்டிருந்தனர். மறுதினம், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கடைசிக் கப்பல் வன்னியைச் சென்றடைகிறது. கடுமையான சண்டையால் கப்பலின் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு, ஆயுதக் கழைவு தொடர்பானதொரு வரையப்பட்ட உடன்பாட்டுடன் இணங்கிப்போகுமாறு ஆலோசனை கூறுகின்றார். அந்த ஆவணம் தீவிர – ஆனால் செல்வாக்கு குறைந்த – ஈழ ஆதரவு அரசியல்வாதியான வைகோவின் காதுகளுக்கு எட்டுகிறது. அவர் இது காங்கிரஸ் கட்சியின் தந்திரம் என்று கூறி நிராகரிக்கிறார். நடைபெறவிருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியே வெற்றிபெறும், அது புலிகளைக் காக்கும் என்று ஆலோசனை கூறுகிறார். இந்த வேளையில், இலங்கை இராணுவம் தனது அறுதியும் இறுதியுமான தாக்குதலைத் தொடுப்பதற்குத் தயாராகியிருந்தது” (பக்கம் – 67).

புலிகள் அழிந்துபோக வேண்டுமென்று, இந்தியா விரும்பியிருக்கவில்லை என்பதற்கு இது ஒரு வலுவான சான்று. இந்தத் தகவலை ஏலவே இறுதிக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளாராக இருந்த செல்வராசா பத்மநாதன் அல்லது கே. பி. தனது நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார் (டி. பி. எஸ். ஜெயராஜ் நேர்காணல்) ஆனால் கே. பியின் கருத்தை எவரும் கருத்தில் கொண்டிருக்கவில்லை ஆனால் தற்போது அதை நோர்வே அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் வரலாற்று எதிரிகளான சீனா, பாகிஸ்தான் நாடுகளின் உதவியைக் கொண்டு, கொழும்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்த எத்தனித்த வேளையில், இந்தியா தனது பிராந்திய நலன்களைப் புறம் தள்ளி இயங்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியது என்பதே உண்மை. ஈழ அரசியலில் இன்றுவரை சாபக்கேடாகத் தொடரும் அவலம் என்னவென்றால், அது தன் நோக்கிப் பார்க்கத் தயாராக இல்லாமல் இருப்பதுதான். எப்போதுமே மற்றவர்களை அடிப்படையாகக் கொண்டே நமது அரசில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே, உள்நோக்கிய பார்வைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்த அடிப்படையான அரசியல் குறைபாடுதான் புலிகளின் வீழ்ச்சியை, அவர்களது அரசியல் புரிதலிலிருந்தும் தந்திரோபாயத் தவறுகளிலிருந்தும் நோக்குவதற்கு மாறாக, இந்தியாவை மையப்படுத்தியும் இலங்கை அரசை மையப்படுத்தியும் நமது பார்வைகள் கட்டுண்டுகிடப்பதற்குக் காரணம்.

நாம் நமது நலன்களில் நூறு விகிதம் உறுதியாக இருந்துகொண்டு, மற்றவர்களை எங்களுக்காகக் கீழிறங்குமாறு வாதிடுவது சரியானதா? இது விடுதலைப்புலிகளின் அரசியலிலுள்ள மிகப் பெரிய குறைபாடாகும். இந்தப் புரிதல்தான் இந்திய நலன்களைப் புறம்தள்ளிச் சிந்திக்கும் போக்கொன்று, ஈழத் தமிழர் அரசியலின் பொதுப்போக்காக முன்னிறுத்தப்பட்டதற்கான காரணமாகும். வெளிவிவகாரக் கொள்கையில் எடுத்தாளப்படும் ‘நலன்கள் சந்திக்கும் புள்ளியில்’ (convergence of interests) ஒன்றிணைவது குறித்த பார்வை, புலிகளின் கடந்த முப்பது வருடகால அரசியலில் ஒருபோதுமே இருந்ததில்லை. இந்தப் போக்குதான் எப்போதுமே நமக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டிய இந்தியா என்னும் பெரியண்ணனை மற்றவர்கள் வரிசையில் இருக்கச் செய்தது.

ஆரம்பத்தில் இந்தியாவிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அனுதாபம் இருந்திருக்கிறது. ஆனால் அதைப் புலிகள் இந்தியாவின் பலவீனமாகக் கருதிக்கொண்டனர். இந்தியாவின் பிரபலப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்ஷித்தின் மன நிலையை இவ்வாறு பதிவுசெய்திருக்கிறார்.

“தமிழீழ விடுதலைப்புலிகள்மீது அவருக்குக் கொஞ்சம் பாசமுண்டு. இலங்கையில் தமிழர்கள் தங்களுக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்றளவிற்குத்தான் அந்தப் பாசம். தனி ஈழம் என்ற புலிகளின் நிலைப்பாட்டில் அவருக்கு ஒப்புதல் இல்லை. இலங்கையின் வடபகுதிக்கு சுயாட்சி அளிப்பதை அவர் ஆதரித்தார். (ஜெயவர்த்தனே சொன்னது என்ன? – ஸ்கூப் – பக்கம் – 241)

ஆரம்பத்தில் பிரபாகரனை, இந்தியா எந்தவகையிலும் நிராகரித்திருக்கவில்லை. ஆனால் ஒரு தீர்வுக்குள் கொண்டுவரவே எத்தனித்தது. ஆனால் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் உண்மையான தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் தயாராக இருந்ததாகவே சில பதிவுகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் தேவை ஒரு நடைமுறை ஈழ அரசு (De-facto-State) என்றாலும், அது குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தயாராக இருக்கிறேன் – இவ்வாறு முரசொலி மாறனிடம் ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருக்கிறார் (டி. பி. எஸ். ஜெயராஜ்). வட இந்தியத் தலைவரான ராஜீவ் காந்தியால் இந்தளவு இறங்கிவர முடிந்திருக்கிறது. ஆனால் மறுபுறமாகப் புலிகள் பக்கத்தில் அது குறித்துப் போதுமான நெகிழ்ச்சியோ புரிதலோ இருந்திருக்கவில்லை. இதற்காக இந்திய அமைதிப் படை பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறைகளை, இந்தக் கட் டுரையாளர் ஏற்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என் பதை மறுக்ககவுமில்லை.

தேவை எவருக்கு இருக்கிறதோ அவர்கள் பக்கத்தில்தான் பொறுமையும் நிதானமான அணுகுமுறையும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் புலிகள் தலைமையிலான ஈழத் தமிழர் அரசியல் போக்கில் அத்தகையதொரு பார்வை எப்போதுமே இருந்திருக்கவில்லை. இந்த நிலைமைதான் எங்களுடன் இருக்க வேண்டிய இந்தியாவை மற்றவர்கள் பக்கம் தள்ளியது. உண்மையில், இந்தியாவின் தலையீட்டுக்கு சிங்களத் தேசியவாத சக்திகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதன் உச்சகட்டமாகவே கடற்படை அணிவகுப்பின்போது படைசிப்பாய் ஒருவர் ராஜீவ்காந்தியைத் தாக்க முற்பட்டார். தெற்கின் சிங்களத் தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரையில் அவர்கள், இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு நாடு, அவர்கள் எங்களுக்கு எதிராகவே வந்திருக்கின்றனர் என்றே நம்பினர். ஆனால் புலிகளின் அணுகுமுறையால் இந்தியாவைத் தீவிரமாக எதிர்த்தவர்களே இறுதியில் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்குமளவிற்கு நிலைமைகள் மாறின.

இன்று முற்றிலும் புதியதொரு நிலைமை உருவாகியிருக்கிறது. இது வரை இந்தியாவை நாமும் இந்தியா எங்களையும் நெருங்குவதில் செல் வாக்குச் செலுத்திக்கொண்டிருந்த சில சங்கடங்கள் இப்போதில்லை. இன்றைய சூழலில் ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து இயங்கும் சக்திகள் அனைத்தும், ஈழத் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குள்ள வரலாற்றுக் கடப்பாட்டை வலியுறுத்த வேண்டுமேயொழிய, தேவையற்றவகையில் இந்திய எதிர்ப்பு அரசியலைக் காவிக்கொண்டு திரிவதால், ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்படாத வகையில் ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து, ஒரு புதிய கொள்கை வகுப்பு நமக்குத் தேவைப்படுகிறது.

ஓர் அரசியல் போக்கின் வீழ்ச்சிக்கான காரணங்களை அதன் இயங்கு நிலைக்குள் தேடுவதே சரியானதொரு அரசியல் பகுப்பாய்வு முறையாகும். இன்றைய சூழலில் அவ்வாறான ஆய்வுகளே ஈழத் தமிழர் அரசியலை முன்னோக்கி நகர்த்த உதவும். எனவே தமிழீழ விடுதலைப்புலிகள், தமது வீழ்ச்சிக்கான கருப்பையைத் தமக்குள்ளேயே கொண்டிருந்தனர் என்பதே உண்மை. இந்தியாவிற்கான, இஸ்ரவேலியர்களாக இருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை இந்தியாவிற்கு எதிர் நிலையில் நிறுத்தும் புலிகளின் விஷப்பரீட்சையின் பெறுபேறே முள்ளிவாய்க்கால் முடிவு. இந்தியாவின் ஆதரவின்றி அல்லது அனுசரனையின்றி ஈழத் தமிழர்கள் எக் காலத்திலும் எந்தவொரு தீர்வையும் அடைய முடியாது என்பதே பின் – முள்ளிவாய்க்கால் யதார்த்தமாகும். இதை விளங்கிக் கொண்டு அரசியல் செய்யும் சாணக்கியம் கற்க வேண்டிய காலமொன்றே, தற்போது நம் முன் விரிந்துகிடக்கிறது. கிடைக்கும் ஒவ்வொரு படிப்பினையிலிருந்தும் தமது அடுத்த கட்டம் குறித்துச் சிந்திக்கத் தலைப்படும் எவருமே, எதிரிகள் – நண்பர்கள் என்னும் முரண் சோடிகளைக் காவிக்கொண்டு திரிவதில்லை.

Exit mobile version