Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்

நோம் சொம்ஸ்கியின்(Noam Chomsky) நூலான Manufactured Consent இல் ஊடகம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஊடகங்களில் கருத்துக்களாகவும் செய்திகளாகவும் வெளிவருகின்றன என்று கூறுகிறார். உலகத்தின் எந்த பிரபல ஊடகதை எடுத்துக்கொண்டாலும் ஏகபோக ஆளும் வர்க்கங்களின் மேலிருந்த கட்டுபாட்டின் உள்ளேயே இயங்கும் நிலை காணபடுகின்றது.

இணையச் செய்திகள், தொலைக்காட்சி செய்திகள், விளம்பரங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் என்ற அனைத்தும் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வியாபித்திருக்கின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தை முதலில் திட்டமிடும் நுளைவாசலாக ஊடகங்களாகவே அமைகின்றன. குழந்தைகளை வைத்து வியாபாரம் நடத்தும் விஜை டிவி ஆகட்டும், ரிபெக் விளம்பரம் செய்யும் எக்ஸ் பக்டர் ஆகட்டும் உலகத்தை கேவலமான நுகர்வுக் கலாச்சாரத்தின் இருளுக்குள் அழைத்துச் செல்கிறது.

உப்பின் விலை அதிகரிக்கும் போது மக்கள் வாழ்க்கைச் செலவு குறித்துச் சிந்திக்கிறார்கள் . கோபமடைகிறார்கள் அரசுக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள். ஆக, உப்பிலும் அரசியலும் போராட்டமும் உள்ளடங்கியிருக்கிறது. அதன் மதிப்பு, உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், இலாபமடையும் பல்தேசிய முதலாளிகள் என்று இன்னும் ஆயிரம் கோட்பாட்டு விடயங்கள் உப்பின் உள்ளே கூடப் பொதிந்திருக்கின்றது.
இன்று ஊடகங்களில் மக்கள் அரசியல் என்பது வெறுமனே பிரேகிங் நியூஸ் கலாச்சாரமாக மாறிப் போய்விட்டது.

முகநூல் என்று தமிழ் விற்பன்னர்கள் பெருமையாக மொழிபெயர்த்துள்ள பேஸ்புக் இந்த பிரேக்கிங் நியூசின் புதிய வடிவம். மக்களின் சிந்தனையை எப்படி மாற்றியமைப்பது என்ற அரசியலை ஊடகங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளின் முன்னர் சர்வதேசியம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மறைந்திருந்தது உழைக்கும் மக்களின் சர்வதேசியம். இது உலகத் தொழிலாளர் குறித்து கார்ல் மார்க்சின் சிந்தனையிலிருந்து உருவாகி சர்வதேசியம் என்று வளர்ந்து உலக மக்களின் சிந்தனையில் வேரூன்றியிருந்தது. இன்று சர்வதேச சமூகம் என்றால் மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசுகளின் கூட்டு என்று எந்தத் தயகமும் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு ஊடகங்கள் மாற்றியமைத்துவிட்டன.

”ஜனநாயகம்’ என்றால் மேற்கு நாடுகள் சொல்லித் தருகின்ற ஒருவீதமானவர்கள் சுந்ததிரமாக வாழ்வதற்கான அரசியல் முறைமை. ஜனநாயகம் என்ற சொல்லை ஊடகங்கள் கடத்தி வைத்து அது உலகமக்களுக்கான அரசியல் ஆட்சி என்ற சிந்தனையை உருவாக்கிவிட்டது.

சமூக வன்முறை, பாலியல் வக்கிரத்தனம், சமூகங்களிடையேயான வெறுப்புணர்வு போன்றவற்றுடன் பொழுதுபோக்கு வியாபாரத்தையும் இணைத்துக்கொண்டால் இன்றைய பல்தேசிய வியாபார ஊடகத்தத்தை வரையறுக்கலாம். இந்த ஊடகங்களின் சிந்தனையை அடுத்த மட்டத்தில் விரிவாக்குவதையே பெருபாலான இணைய ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்து முடிக்கின்றன.

இஸ்லாமிய மதம் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் இன்று மறுபடி சுந்ததிரமான விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. எல்லா விவாதங்களும் எப்படி அந்த மதத்தை நவீனமயப்படுத்துவது என்பதிலிருந்தே ஆரம்பித்தன. சில காலங்களின் பின்னர் ஐரோப்பிய இஸ்லாம் ‘புத்திசீவிகளும்’ தாம் இப்போதெல்லாம் நவீனமயமாகிக்கொண்டிருப்பதாகச் சாட்சிகூறினார்கள். இனிமேல் தங்களைத் தவறாகப் பார்க்கக் கூடாது என்றார்கள். இதன் பின்னர் இன்னும் ‘நவீனமயமாகாத’ மத்திய கிழக்கு நாடுகள் மீது கொலைவெறித் தாக்குதல்களை அமரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் கட்டவிழ்த்துவிட்டன.

பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடுவதாக மார்தட்டிக்கொள்ளும் அமரிக்காவின் சுந்திர வியாபார(Free market) ஜனநாயகத்தை உமிழும் ஊடகங்கள், லத்தீன் அமரிக்க அழகி தன்னுடைய காதலனுடன் உறவுகொண்ட காட்சியை காணொளியாக வெளியிட்டு அதுகுறித்த விவாதங்களை முடுக்கிவிட்டன.. அருவருப்பான அந்தப் பாலியல் வக்கிரம் சாதாரண குடும்பங்களில் நாளந்த விவாதமாகியது . அது சமூகத்தின் பொதுப் புத்தியானது. எக்ஸ் பக்டரில் முக்கால் நிர்வாணமாகப் பாடிய பதினைந்து வயதுப் பெண்ணைப் பார்த்து இன்னும் உடைக்குறைப்புச் செய்யவேண்டும் என்று நடுவர் கூறியபோது பத்துவயதுக் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக பார்வையாளர் கூட்டம் கைதட்டியது. திட்டமிட்டு விதைக்கப்படும் இந்த வன்முறைகளுக்குள்ளும், வக்கிரங்களுக்குள்ளும் சமூகம் புதைந்து போயிருக்கிறது.

இதையே இந்தியா போன்ற நாடுகளில் இந்துவாவின் துணையோடு மிகக்கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். . நித்தியானந்தா என்ற பாலியல் சாமியாரின் பாலுறவுக் காட்சிகளை நக்கீரன் இதழ் தனி இறுவெட்டுக்களாக விற்பனை செய்தது.

இவ்வாறான ஒரு அரசியல் கலாச்சாரம் மேற்கில் மட்டும் முற்றுகையிட்டு நிலைகொண்டதல்ல;, வெறும் காட்சி ஊடகங்களோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. வறுமையில் மனித சமூகம் மடிந்துகொண்டிருக்கும் ஆசிய ஆபிரிக்க நாடுகளையும் இது மின்னல் வேகத்தில் பற்றிக்கொண்டது. பல்தேசிய நிறுவனங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் செய்தி முகவர் நிறுவனங்கள் வறிய நாடுகளின் உள்ளூர் செய்திகளின் பண்பையும் தீர்மானித்தன. ஏகாதிபத்திய ஊடகப் பொறிமுறையைப் பற்றிக்கொண்டன.

இந்தக் கலாச்சாரம் உருவாக்கப்பட்ட பின்னர் மக்கள் ரசனையை இணையங்கள் உள்வாங்க வேண்டிய தேவை உருவானது . பார்வையாளர்களின் எண்ணிக்கை விளம்பரங்களை ஈர்க்கும் நிலையில் வன்முறைக்கும், பாலியல் வக்கிரங்களுக்கும் பழகிப்போன வாசகர்களுக்கு ஏற்ப இணையங்களும் தம்மைத் தயார்படுத்தின.
இதையே உலகில் புரட்சிகரமான போராட்ட சூழலில் வாழும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட ஊடகங்களும் உள்வாங்கிக்கொண்டன கிசுகிசுக்கள், சமூக வன்முறை, பாலிய வக்கிரம் ஆகியவற்றின் கலவையாக ஊடகங்கள் மாற்றமடைந்தன.

சமூகத்தின் பொதுவான பிற்போக்குத்தனத்திற்கு தீனி போடுகின்ற-அதனை எதிர்த்துக் குரல்கொடுக்காத சமூக வன்முறை என்பது அவர்களின் விளம்பர வியாபார நலனுக்குத் தேவையானதாகியது. மறுபுறத்தில் பல்தேசிய நிறுவனங்கள் உருவாக்கிய ஊடகக் கலாச்சாரம் இதனோடு இணைந்து கொண்டது. இதுவே ஊடகங்களின் மாதிரி வடிவமானது.

இவற்றை நிராகரித்து புதிய புரட்சிகர ஊடகக் கலாச்சரத்தை நிறுவப் போராடுகின்ற , சமூகத்தின் பொதுப்புத்தியை அதிகாரவர்க்கத்திற்கு எதிராக மாற்ற எண்ணுகின்ற ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஏனைய ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அதிகாரவர்க்கம் சார்ந்தவர்களுக்கு எதிரான போராட்டத்தை பல்வேறு தளத்திலும் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் புரட்சிகர அரசியல் தலைமையற்ற சூழலில் அது சாத்தியமானதா என்ற கேள்விகளும் கூடவே எழுந்தன.

இன்று

1. விளம்பரங்களை நம்பி வியாபாரிகளினதும் பல்தேசிய நிறுவனங்களதும் நலன்களின் அடிப்படையில் இயங்கும் ஊடகங்கள்.
2. தன்னார்வ நிறுவவங்களின் பணமுதலீட்டில் இயங்கும் ஊடகங்கள்.
3. பணம்படைத்த மாபியா அரசியல் வலைப்பின்னலுக்குள் இயங்கும் ஊடகங்கள்.

என்பவையே சமூகத்தின்ன் பொதுப் புத்தியைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கின்றன.

எது எவ்வாறாயினும், செய்திகளையும் அவலங்களையும் முன்வைத்து வியாபாரம் செய்கின்ற ஊடகங்கள் ஈழப் போராட்டத்திலும் புகுந்துகொண்டன. நீண்டகாலமாக புலம் பெயர் இணையங்கள் பின்பற்றிய இந்த மாதிரி ஆனந்தவிகடனுக்கு ஒன்ன்றும் புதியதல்ல. அதன் ஒரு வெளிப்பாடாகவே ஆனந்தவிகடன் என்ற இந்துத்துவ பத்திரிகை முன்னைநாள் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் குறித்து எழுதிய புனைவு.

சோதிடத்தில் ஆரம்பித்து மரணச் சடங்கு வரைக்கும் அகோரமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் புலம் பெயர் ‘புரட்சிகர’ ஊடகங்கள் பாலியல் கலவையாக இன்று வரை கொடுத்த மாதிரியை ஆனந்தவிகடன் ஒருபடி மேலே நகர்த்தியுள்ளது.
சமூகத்தால் நிராகரிக்கப்படும் முன்னைநாள் போராளிகளின் அவலங்களுக்கும் மரணங்களுக்கும் மத்தியில் சாதித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர் கனவான்களே அவலங்களில் பணம் தேடும் ஆனந்தவிகடன்களையும் வளர்த்து அழகுபார்த்தவர்கள். அதன் சிந்தனை வழிமுறையை உள்வாங்கிக் கொண்டவர்கள்.

போராளிகளை முன்வைத்து பாலியல் வக்கிர வியாபாரத்தை நடத்தும் ஆனந்தவிகடன் போன்ற அப்பட்டமான வியாபார ஊடகங்கள் மாற்று அரசியல் ஊடகங்களால் பிரதியிடப்பட வேண்டும். எண்பதுகளில் ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்கங்களும், மக்களும் கண்டது பேரினவாத அரசின் இராணுவ ஒடுக்குமுறையை மட்டும்தான். இன்று இனச்சுத்திகரிப்பாக அது பலமடங்கு வளர்ச்சியடைந்து நாளந்தம் மக்களைச் சூறையாடுகின்றது. ராஜபக்சவிற்குப் பதிலாக இன்னொரு அமரிக்க கைப்பொமை ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரத்தான் போகின்றது.

இதற்கு எதிராக மக்கள் தவிர்க்கமுடியாமல் போராட உந்தப்படுகிறார்கள். மக்களின் போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக முன்னேறுவது தவிர்க்கமுடியாத நிகழ்வாக இலங்கை அரச பாசிசம் மாற்றிக்கொண்டிருக்கிறது. போராட முன்னேறும் மக்களை ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் அமைதியாக இருங்கள்’ என்று கூறும் புலம்பெயர் தலைமைகள் போராட்டத்தை அழித்தவர்களோடு கூட்டம்போட்டுக் கூத்தாடுகிறது. மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்குகிறது.
ஆந்தவிகடன் போன்ற வியாபாரி ஊடகங்களுக்கு எதிரான மாற்றை இவர்களால் எப்படி முன்வைக்க முடியும்?

Exit mobile version