
தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெருத்த வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்தப் பாடசலைக்கு நிர்வகிக்கின்ற நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை அப்படியே திரும்ப நினைவுபடுத்துகின்றனர். அதுவும் 80களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்றனர். ஆண் வாத்தியார்களுக்குப் பிரம்பையும், பெண்களுக்கு சுடுதண்ணிப் போத்தலையும் களட்டிவிட்டால் யாழ்ப்பாண வாத்திமார்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது.
பெரும்பாலானவர்கள் பாட்டி வடை சுட்டு விற்ற கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குடி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா என்று நான் கேட்டு வைத்தேன். கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும் என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.
அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் பிளாஷ் பாக்லில் வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.
இன்னொரு குழந்தை தீபாவளி நாளில் எப்படி எல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்று கூறி வைத்தது. இன்னும் ஒரு குழந்தை தமிழின் பெருமையையும், ஆறுமுக நாவலரையும் பற்றிப் பேசியது.
குழந்தைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்ட ஒரு சூழலை அவர்கள் மீது திணித்து அவர்களை யாழ்ப்பாணத் தமிழர்களாக்கி மகிழும் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் திமிருக்கு தமிழ்க் கல்வி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
தாம் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளில் கூட, அரச பாடசாலைகளில் , கல்வி கற்பதற்கு நவீன முறைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். நவீனமொழிகள் என்று அழைத்துக்கொள்ளும் ஐரோப்பிய மொழிகளைக் அந்த மொழி பேசாத குழந்தைகளுக்குக் கற்பிபதற்கு ஐரோப்பியர்கள் நாளந்தம் புதிய உக்திகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மொழி மீதான விருப்பை உருவாக்கும் வகையில் புதிய வழிமுறைகள் எல்லாம் கையாளப்படுகின்றன.
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கூட ஆங்கிலம் கற்பிக்கும் போது லண்டனிலிருந்து ஈலிங்கிற்கு தாமதமாக வந்த புகையிரதத்தைப்பற்றிப் போதிப்பதில்லையே.
ஐரோப்பிய நாடுகளில் சந்திக்கும் நாளந்தப் பிரச்சனைகளைக் கூட தமிழ் மொழியில் கதைகளாக மாற்றி குழந்தைகளுக்குப் போதிப்பது போன்ற சிறிய உக்திகளைக் கூட இவர்கள் கையாளாத பழமைவாதிகள்.
தமிழ் கற்பித்தல் தான் இப்படி என்றால் அவர்களின் அடுத்த கனவு கர்நாடக சங்கீதம். பாடுவதற்கு ஆர்வமற்ற குழந்தைகள் கூட பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க தெலுங்குக் கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
யாழ்ப்பாண உயர்குடிகளின் மையவாதம் தான் இந்தப் பாடசாலைகளும் அவற்றில் துன்புறும் ஒன்றுமறியாக் குழந்தைகளும்.
அண்மையில் கொரிய பாடசாலை ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. சனிக்கிழமைகளில் நடக்கும் அந்தப் பாடசாலையில் மொழி கற்பிக்க ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள், முதலில் ஆங்கிலத்திலெயே கொரிய கலாச்சாரம் உட்பட ஏனைய நாடுகளின் கலாச்சரங்களையும் கற்பிக்கிறார்கள். சிந்து வெளி நாகரீகம் எல்லாம் கூட கற்பிக்கிறார்கள். பின்னர் மாணவர்களுக்கு ஒரு விருப்பு ஏற்பட்டதும் கொரிய மொழிகளின் சில பகுதிகளை அவர்களே உருவாக்கிய கதைகளின் ஊடாகக் கற்பிக்கிறார்கள்.
இது முழுமையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் ஒரு திட்டமிடல் இருக்கிறது என்பதே இங்கு உண்மை.
யாழ்ப்பாணத்தைப் பெயர்த்துவைத்து அழகு பார்க்க எண்ணினால் தமிழை அல்ல தமிழில் பொதிந்திருக்கும் அழுக்குகளையே அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.