Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“அன்னை” சோனியாவின் கருணை பெற்ற சுரேன் சுரேந்திரன் : சத்தியமூர்த்தி

வன்னியில் இரத்தம் பெருக்கெடுத்து நந்திக்கடலை செந்நிறமாக்கிய அந்த நாட்களை நாம் எங்கோ பழைய கனவாகத் தொலைத்திருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது. எத்தனை முதியோர்? பச்சிழம் குழந்தைகள்?? கர்ப்பிணித் தாய்மார்???.. இரசாயனக் ஆயுதங்கள், விண்ணைப் பிழந்து பொழிந்த விமானக் குண்டுகள், கண்ணுக்கெட்டாத தொலைவிலிருந்து பொழிந்த தரைப்படை தாக்குதல்கள்.. இத்தனையும் புலிகளின் பிரசன்னத்தைக் காரணம் காட்டி மட்டுமே நடந்திருக்கிறது.

இதற்கெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து எதிர்பார்த்த உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன. புலம் பெயர் நாடுகளில் மக்களின் கொந்தளிப்பு காற்றோடு கலந்து காணாமலாக்கப்பட்டது.

மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டனர். லட்சோப லட்சம் உலக மக்கள் ஓவென அண்ணார்ந்து பார்த்துக்க்கொண்ட்ருக்க ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்கள் மூன்று நாட்களில் துடிக்கத் துடிக்கக் இரத்தமும் சதையுமாய்ப் முள்ளிவாய்க்காலின் மண்ணில் சாகடிக்கப்பட்டனர்.
செத்துப் போனவர்களைச் சாட்சியின்றி உருக்கிவிட்டு மனிதாபிமானமாக நடந்துகொண்டதாக அத்தனை இலங்கைப் பேரினவாப் பேய்களும் பீற்றிக்கொள்கின்றன. கொன்று குவிக்கப்பட்டவர்களின் இரத்தவாடை இன்னும் வீசிக்கொண்டிருக்க கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், சித்திரவதை, காணாமல் தொலைதல், கைதிகளின் அவலம் என்ற அத்தனை உரிமை மீறல்களையும் இலங்கை அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இதனையும் நடத்தி முடித்த தலைமைச் சூத்திரதாரியை கௌரவிக்க அவனின் அத்தனை இயல்புகளையும் கொண்ட இந்திய அரசு முடிவுசெய்கிறது. ஆம், காமன்வெல்த் போட்டிகளை நிறைவு செய்ய மனிதப் படுகொலையை முன்நின்று நிகழ்த்திய “மாமனிதர்” மகிந்த ராஜபக்சவை இந்திய அரசு அழைத்துக் கௌரவிக்கிறது.

காஷ்மீரிலும், நாகாலாந்திலும், மத்திய இந்தியாவிலும் எத்தனை வன்னிகள்? அத்தனை சிக்கல்களையும் நேர்கோட்டில் தீர்வுகாணச் வழிகாட்டிய மகிந்த ராஜபக்சவை தலைமை விருந்தினராக அழைத்த “அன்னை” சோனியா காந்தியின் கண்களில் தான் எத்தனை கருணை.
புலம் பெயர் நாட்டு “ஏகப் பிரதிநிதி” களில் ஒருவரான சுரேன் சுரேந்திரன் “அன்னை”யின் கண்களில் கண்ட கருணை.

உலகத் தமிழர் பேரவையின் “அதிபர்” சுரேன் ஈழத் தமிழர்கள் சார்பாகப் பேசத் தகுதி பெற்று, சோனியா காந்தியின் கருணையைப் பெற்று ஊடகங்களில் இந்திய ஆதரவுப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அழகைக் கண்டு அண்ணன் கே.பி கூடப் பரவசமடைந்துவிடுவார் போலிருக்கிறது.

போர் அல்லது இனப்படுகொலை முடிந்ததும் இந்தியாவின் துணையின்றி நாம் இத்தனை சாகசங்களையும் நிகழ்த்திக்காட்டியிருக்க முடியாது என்று மகிந்த நட்சாட்சிப் பத்திரம் வழங்குகிறார். தமிழ் நாட்டில் வரக்கூடிய எழுச்சியைக் கூட இந்திய அரசுடன் இணைந்து நாடகமாடி முறியடித்துவிட்டதாக கோதாபய ராஜப்கச முன்மொழிய இந்தியா வழி மொழிகிறது. எங்கெல்லாம் இலங்கை அரசிற்கு எதிர்ப்பு உருவாகுமோ அங்கெல்லாம் “அன்னை” சோனியாவின் கருணைக் கண்களோடு இந்திய அரசு பிரசன்னமாகி அபயமளிக்கும்.

ஒநாய்கள் போல இலங்கையை சூழ்ந்து படுகொலைகள் முடிந்து போகும் வரை காத்திருந்த இந்தியப் பெரு முதலாளிகள், வட – கிழக்கை இலங்கை அரசோடு இணைந்து சூறையாடுகிறார்கள்.

சுரேன்,

இலங்கை அரச பேரினவாதிகளுக்கு இந்தியா நண்பன், உங்களுக்கும் இந்தியா நட்பு சக்தி ஆனால் இலங்கை அரசிற்கு நீங்கள் எதிரி என்கிறீர்களே சுரேன்! மனிதன் பாதி மிருகம் பாதி விளங்க முடியா சமன்பாடாகிப் போனீர்களே!

பல தடவைகள் தான் தமிழர்களின் பக்கம் என்று சோனியா சொனதைக்கேட்டுப் புழகாங்கிதமடைந்தீர்களாமே? ஆக, மொத்த தமிழ்ச் சமூகத்தையுமா கொலைகாரர்கள் ஆக்கப்பாகிறீர்கள்?

தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதைக் கண்டு சோனியா துயர் கொண்டுள்ளதாக அழுத்திக்கூறும் நீங்கள் அவரே அந்த ஒளிப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக வேறு சாட்சியம் சொல்கிறீர்கள். அவரது அரச படைகள் தனது எல்லைக்குள்ளேயே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துகின்ற பெண்களின் வீடியோக்களை அவர் பார்க்க எத்தனித்தால் எஞ்சியிருக்கும் “அன்னையின்” மொத்த வாழ்நாளுமே போதாதாகிவிடும்.

நீங்கள் சார்ந்த GTF உம் நீங்களும் பேசிய தமிழ்த் தேசியம் இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களையும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர்களையும் காட்டிக்கொடுத்திருக்கிறது.

நாம் எமது போராட்ட வரலாறு முழுவதும் ஆயிரமாயிரன் காட்டிக்கொடுப்புக்களைச் சந்தித்திருக்கிறோம். எமக்காகக் குரல் கொடுத்தவர்களையும் காட்டிக்கொடுக்கும் தமிழ் மக்களின் “ஏகப் பிரதிநிதி”யான உங்கள் குருதிபடிந்த கரங்களை இனிமேல் கொலைகரர்களோடு மட்டும் குலுக்கிக் கொள்ளுங்கள்.

பிபிசி தமிழோசைக்கு சுரேன் சுரேந்தர் வழங்கிய நேர்காணல்:

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110319_gtfworshipssonia.shtml

Exit mobile version