Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

புளொட் தலைமைத்துவத்தின் அராஜகப் போக்குகளுக்கு எதிராக அவ்வியக்கத்திலிருந்த பலர் செயற்பட முனைந்த வேளைஇ நீங்கள் தொடர்ந்தும் புளொட் அமைப்பில் இணைந்தே இருந்தீர்கள். இதற்கான அரசியல் நியாயங்கள் என்ன?

விஜய் – இலங்கை

நண்பரே, உட்கட்சி போராட்டம் என்பது இயக்கத்தின் தவறான போக்குகளுக்கு எதிராக உள்ளிருந்து போராட்டம் நடாத்துவதே அன்றி , தவறுகளைக் கண்டு ஒதுங்கிச் விலகிச் சென்று வெளியிலிருந்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவதல்ல என்றே நினைக்கின்றேன். உள்ளிருந்து நடத்தப்படும் உட்கட்சிப்போராட்டம் தோல்வி நிலையை அடையின் ; அப்போது இயக்கத்தைவிட்டு வெளியேறி மக்கள் மத்தியில் தவறுகளையும், தவறுக்குரிய இயக்கத்தையும் அம்பலப்படுத்துவதோடு, மக்களின் துணையோடு இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்தவேண்டும். இது இரண்டாம் கட்டம்.

அதே நேரம் ஒரு இயக்கத்தின் அனைத்து தவறான போக்குகளுக்கும் மூலமாகவும், துணையாகவும் இருந்துவிட்டு தங்களின் அதிகாரங்கள் செல்லுபடி அற்றதாக மாறும் தருணத்தில், இயக்கத்தைவிட்டு விலகிகச் சென்று இயக்கத்தின் அனைத்துத் தவறுகளையும் , தங்களைத் தவிர்ந்த ஏனைய ஒரு குறிப்பிட்ட நபர்களின் மீது சுமத்துவது உட்கட்சிப்போராட்டம் அல்ல. இது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.

நண்பரே, நாம் இவ் விடயம் பற்றி வெளிப்படையாகப் பேசுவோம்.

“புளொட் தலைமைத்துவத்தின் அராஜகப் போக்குகளுக்கு எதிராக அவ்வியக்கத்திலிருந்த பலர் செயற்பட முனைந்த வேளை” என்று நீங்கள் குறிப்பிடுவது நேசன், கண்ணாடிச் சந்திரன் இவர்களைக்கொண்ட தீப்பொறி குழுவினர் என நான் நினைக்கின்றேன்.

புளொட்டின் தவறுகளுக்கு எதிராக வெளியேறியவர்களாக காட்டிக் கொண்ட ‘’தீப்பொறி’’ குழுவில் இருந்த தோழர்கள் புளொட்டினுள் தாங்கள் நடாத்திய உட்கட்சிப் போராட்டம்தான் என்ன? ஒவ்வொரு காலகட்டதிலும் புளொட்டின் எல்லாத் தவறுகளிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு – இவர்களுக்கும்கூட. தளத்தில் அதிகார மையம் இவர்கள் கையில் இருந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? இவர்களின் அதிகார துஸ்பிரயோகங்களும், நடத்தைகளும் தவறுகளின் வளர்ச்சியாய் ‘’பெருவீக்கம்’’ அடைந்ததையும் நாம் அறிவோம். உண்மையில் உட்கட்சிப்போராட்டத்தை நடாத்துவதற்கு எவ்வித தார்மீகமும் இவர்களுக்கு கிடையாது நண்பரே. இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருப்பின் இவர்களின் பின்னால் பலபேர் வெளியேறி இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட நபர்களைவிட இவர்களின் பின்னால் யாருமே செல்லவில்லை.

அத்தோடு மக்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடமைப்பாடும் அவர்களுக்கு இருக்கவில்லை. எங்களுக்கு கடமைப்பாடும், பொறுப்புணாச்சியும் இருந்தது. குறிப்பாக எனக்கு அது அறமாகவும் -கடமையாகவும் இருந்தது. வடகிழக்கில் என் கால்பதியாக் கிராமங்கள் மிகக் குறைவென்றே கூறுவேன். ஒவ்வொரு கிராம மக்களிடமும், தோழர்களிடமும் புளொட்டைப் பற்றிய நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் நான் விதைத்துள்ளேன். நூற்றுக்கணக்கான தோழர்கள் பின்தளம் சென்றார்கள். என் கிராமத்திலிருந்து மாத்திரம் சுமார் 90 பேர் பின்தளப் பயிற்சிக்காக சென்றார்கள். இவர்கள் எல்லோருக்கும் பொறுப்புச் சொல்லவேண்டிய தார்மீகக் கடமை எனக்கு இருந்தது. தவறுகளைக் கண்டு இயக்கத்தைவிட்டு ஓதுங்கவோ, ஓடவோ என்னால் முடியாது. புளொட்டின் உட்கட்சிப்போராட்டத்திற்கு ஊடாக மாற்றங்களை கொண்டுவரமுடியுமென நம்பினேன். இதனாலேயே தளத்திலிருந்த அனைத்து தோழர்களோடும் சேர்ந்து உட்கட்சிப்போராட்டத்தை தள மாநாட்டை நடாத்தினோம்.

1986 பெப்ரவரி மாதம் கந்தரோடையில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக மாநாடு நடைபெற்றது. வடகிழக்கிலிருந்து முக்கியமான அனைத்து தோழர்களும் கலந்துகொண்டார்கள். விவாதங்களும், உரையாடல்களும் மிக ஆரோக்கியமாக நடந்தன. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்திற்குரிய அமைப்பு வடிவத்தைப் பெறுவதற்கான அடிப்படையை உருவாக்குவதில் மாநாடு வெற்றிபெற்றது என்றே கூறவேண்டும். தனிநபர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக, அராஐகத்திற்கு எதிராக மாநாடு மிகக் கடுமையான கண்டனங்களையும், அதற்கெதிரான செயல் திட்டங்களையும் வகுத்தது. உண்மையிலேயே தோழர்கள் மீதும், மக்கள் மீதும், விடுதலை மீதும் நம்பிக்கை வைத்திருந்தால் தீப்பொறி குழுவினர் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருப்பார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதுவல்லவே. அதிகாரப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியே அவர்களை விலக வைத்தது. வேறொன்றும்மல்ல.

இயக்கங்களால் பல வங்கிகள் கொள்ளையடிக்கப்படன. ஆனால் நீங்கள் எல்லோரும் கற்றன் நசினல் வங்கி கொள்ளையை மாத்திரம் கதைப்பதற்கு காரணம் என்ன? இந்தக் கொள்ளைக்கும் றயாகரனுக்கும் என்ன தொடர்பு ?.

குமார்

இலங்கையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளில் மிகப் பெரிய பெறுமதியுடைய வங்கிக் கொள்ளை ஹற்றன் நஷனல் வங்கிக் கொள்ளையாகும். அன்றைய நிலையில் சுமார் இருபது கோடி பெறுமதியான நகைகளும் , பணமும் கொண்டதாக இது இருந்தது. இதில் 75 வீதமானவை தங்க நகைகள் ஆகும். இக் கொள்ளையைச் செய்தது மிகச் சிறிய இயக்கமான என்.எல்.எப் .ரி ஆகும். இக் கொள்ளையின் பின் இவ் இயக்கம் பல்வேறுகாரணங்களால் இயங்க முடியாமல் போயிற்று. இதனால் இவ் நகைகளும் பணமும் என்னவாயிற்று என்ற கேள்வி பலரிடமும் இருந்தது.அது இன்றுவரை தொடர்கிறது. இதனாலேயே இவ் வங்கிக் கொள்ளை பற்றிய உரையாடல்- கேள்விகள்- சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படுகிறது.

இனி இரயாகரனுக்கும் இவ் வங்கிக் கொள்ளைக்குமான தொடர்பு பற்றி பார்ப்போம்.

நான் பிரான்ஸ் வந்ததன் பின்பே எனக்கு இரயாகரனுடனான தொடர்பு ஏற்பட்டது. இக் காலங்களில் இரயாகரன் பற்றியும், இவ் வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட நகைகள், பணங்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் என்னை வந்தடைந்தன. இவற்றை இரயாகரனின் மிக நெருங்கிய உறவினர்களும், என்.எல்.எப் .ரி தோழர்களும், நண்பர்களுமே தெரிவித்தார்கள். இது பற்றி இரயாகரனிடம் வினவிய போது இவ் நகைகளுக்கும், பணத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் ; தன்மீது கொண்ட கோபத்தினால் இவ்வாறான வதந்திகள் வருவதாகவும் சொன்னார். அத்தோடு நகைகளும், பணமும் ஐயர் என்பவரிடம் (ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் எழுதிய கணேசையர்) பத்திரமாக இருப்பதாகவும், அவரே இவற்றிற்கு பொறுப்பென்றும் கூறினார். இக் காலங்களில் ஐயரோடு எனக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.

இதன் பின் காலப்போக்கில் இரயாகரனை நோக்கி இக் குற்றச்சாட்டுக்கள் ஆதார பூர்வமாக சிலபேரால் முன் வைக்கப்பட்டபோது ; இரயாகரன் வங்கிக் கொள்ளைப் பணத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு செலவு செய்ததாக எழுதினார். உண்மையில் இது எனக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் கொடுத்தது. இது உண்மைக்கு புறம்பான செய்தியென்று பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான மாணவர்களும் குறிப்பிட்டார்கள்.  இதன் பின் ஐயரோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. ஐயரிடம் இவ் வங்கி கொள்ளை நகைகள், பணங்கள் பற்றி விசாரித்தேன். தனக்கும் இவற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை   என்றும் ; தீப்பொறி குழுவினருக்கு கொடுப்பதற்காக இரயாகரனிடமிருந்து ஒரு கோர்லிக்ஸ் போத்தல் அளவு கொண்ட நகைகளையே தான் பெற்றுக் கொண்டதாகவும், அவற்றை தீப்பொறி குழுவினருக்கு கொடுத்ததாகவும் கூறினார்.

ஐயரோடு எனக்கு நெருங்கிய உறவு  இல்லை. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் ஊடாகவும், அவரோடு உரையாடியதிலிருந்தும் அவர் உண்மை சொல்பவராகவே நான் கருதுகின்றேன்.

அதே நேரம் வங்கிப்பணம், நகை தொடர்பாக வெளிவரும் செய்திகளை நாம் ஊதாசினம் செய்துவிட முடியாதும் உள்ளது. உதாரணமாக இரயாகரன் இவற்றை பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தன் நெருங்கிய சகாக்களின் மூலம் வர்த்தக முயற்சிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், தோழர் செந்திவேல் அவர்களின் புதிய ஜனநாயக கட்சிக்கும், குமார் குணரத்தினத்தின் சமஉரிமை இயக்கத்திற்கும் சிறிய தொகைப் பணம் கொடுக்கப்பட்டதாக இரயாகரன் பக்கதிலிருந்து இப்போது சொல்லப்படுகிறது. இவ் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மையாயின் இது மிகவும் வரவேற்கப் படவேண்டியதொன்று. மக்களின் பணம், நகை போன்ற சொத்துக்கள் தனிநபர்களின் வாழ்க்கைக்கு பயன்படுவதைவிட பொதுவிடயங்களுக்கு, மக்கள் நலன்களுக்கு பயன்படுவது நல்லதே. அப்படியாயின் இரயாகரன் வெளிப்படையாக இதனை மக்கள் மத்தியில் வைக்கவேண்டும்.

அப்சல் குருவின் மரணதண்டனையை எதிர்க்கும் பலர் ( நீங்கள் உட்பட) பேரறிவாளன், முருகன், நளினி மீது சுமத்தப்பட்ட மரணதண்டனையை ஏன் எதிர்ப்பதில்லை. அவர்கள் தமிழ் உணர்வாளர்கள் என்பதாலும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதினாலுமா ?

உமாபதி

என் தொடர்பான உங்களின் அபிப்பிராயத்தை முன்வைத்தமைக்கு நன்றி நண்பரே. ஆனால் அது தவறானது . நளினி ,பேரறிவாளன், முருகன் போன்றவர்களின் மரணதண்டனையோடு, உலகத்திலுள்ள அனைத்து மரணதண்டனைகளுக்கு எதிராகவும் என் கருத்துக்களை தொடர்ச்சியாக நான் பதிவு செய்துவந்துள்ளேன். தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் பற்றிய என் விமர்சனங்களின் அடிப்படையை வைத்தே என் தொடர்பான இந்த அபிப்பிராயத்திற்கு நீங்கள் வருவதாக நான் நினைக்கின்றேன்.

நண்பரே, மரண தண்டனையை , மனித உரிமைகளோடு தொடர்புபடுத்தியே நான் பார்க்கின்றேன். ‘உயிர்வாழ்தல்’ என்பது மிகவும் அடிப்படையான மனித உரிமையாகும். மரணதண்டனை, ’’பழிக்குப் பழி’’ என்ற நீதிவழங்களின் ஓரங்கமாக இருப்பது மனித குலத்திற்கு அருவருப்பானதும் வேதனையானதுமாகும். சட்டமானது ஒருவரின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதத்தை வழங்கவேண்டுமேயன்றி, மாறாக எந்தச் சூழலிலும் உயிரைப்பறிப்பதற்கு துணை நிற்க முடியாது. இது மனித உரிமைகளுக்கு முரணாணது. இதனாலேயே அனைத்து மரண தண்டனைகளையும், படுகொலைகளையும் நான் எதிர்த்தும், கண்டித்தும் வந்துள்ளேன். இதன் அடிப்படையிலேயே புலிகள் பற்றிய என் விமர்சனங்களும், கருத்துக்களும் அமையப்பெறுகின்றன.

இன்று தமிழ் நாட்டில் நளினி ,பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரணதண்டனைக்கு எதிராக குரல்கொடுக்கும் கோபாலசாமி ,நெடுமாறன், இராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்றவர்களின் மனித உணர்வுகளை நான் மதிக்கின்றேன். அதற்கு என் ஆதரவும் உண்டு. அதே நேரம் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட, மரணதண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள், பெண்கள், குழந்தைகள், புத்திஜீவிகள், படைப்பாளிகள், மனித உரிமைவாதிகள், இடதுசாரிகள் ,ஜனநாயக சக்திகள், ஊடகவியலாளர்கள் இவர்களைப்பற்றி இந்த மனிதர்கள் வாய் திறக்காமல் இருந்ததன்- இருப்பதன் காரணம் என்ன?

உண்மையிலேயே மரண தண்டனைக்கு எதிராக நேர்மையாக போராடுபவர்களாக, குரல் கொடுப்பவர்களாக இவர்கள் இருந்திருப்பார்களாயின் புலிகளின் மரணதண்டனைகளுக்கும், படுகொலைகளுக்கும் எதிராக இவர்கள் குரல்கொடுத்திருப்பார்கள். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல. இவர்கள் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும், மரணதண்டனைகளையும் சித்திரவதைகளையும், மனித உரிமை மீறல்களையும் மெளனமாக வரவேற்றவர்கள்- கொண்டாடியவர்கள். பல தருணங்களில் அவற்றிற்கு நியாயம் கற்பித்தவர்கள்.

இவர்கள் புலிகளைவிட ஆபத்தானவர்கள் -கொடியவர்கள். இவர்கள் நளினி, பேரறிவாளன் ,முருகன் போன்றவர்களின் மரணதண்டனையை எதிர்ப்பதற்கு எவ்வித தார்மீகமும் அற்ற பச்சை வியாபாரிகள். இதனை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். வெறுமனவே எங்களை குற்றம் சாட்டுவதனால் இந்த அயோக்கியர்கள் புனிதர்களாகிவிடப்போவதில்லை.

Exit mobile version