Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் (பாகம் 2)

LTTE_Flag

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் பின்னர், பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சுரண்டல், வலுப்பெற ஆரம்பித்தது. அதன் காரணமாக அனேகமான நாடுகளில், பொது மக்கள், வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வெறுப்படைந்த மக்கள், உலகம் முழுவதும், உயர் சமூகங்களுக்கு எதிராகவும், அரசுகளிற்கு எதிராகவும் போராட ஆரம்பித்தனர். இதனை எதிர்கொள்ள, பல்தேசிய நிறுவனங்களினால் இயக்கப்படும், அமெரிக்கா தலைமையிலான ஏகபோக அரசுகள், அந்நிறுவனங்களின் உதவியுடன், அந்நிறுவனங்களின் சுரண்டலுக்கான வெளியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக, புத்திஜீவிகளை பணிக்கு அமர்த்தியதன் ஊடாக, பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தின.

இதன் ஒரு பகுதியாக, மக்களின், சமூக மற்றும் அரசுகளிற்கு எதிரான‌ கோபத்தைத் தணிக்கும் நோக்கில், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும், தன்னார்வ நிறுவனங்கள் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன‌. ஒரு மந்தமான, “அரச மற்றும் அதிகார எதிர்ப்புணர்வுடனான” சித்தாந்ததை, முன்வைத்து, அடிமட்ட அளவில், ஒரு அமைப்பைக் கீழிருந்து உருவாக்கி, மக்கள் மத்தியில் இருக்கும், சமூக மற்றும் அரசுகளிற்கு எதிரான‌ கோபத்தைத் தணிக்கும், ஒரு கருவியாகவே, தன்னார்வ நிறுவனங்கள் ( NGO ) உருவாக்கம் பெறுகின்றன. இந்நிறுவனங்கள், தமக்கு தேவையான அரசுகளை, தேர்ந்தெடுக்கும் தன்மை கொண்டதாக, இன்று மாற்றம் பெறும் அளவிற்கு, ப‌லம் பெற்றுள்ளதுடன், இவை மக்களை தாம் பிரதினிதித்துவப்படுத்துவதாக கூறுவதுடன், தம்மை அரசுகளிற்கு எதிரான, மக்கள் சார்பானவை, என்பதாக காட்டுவதன் ஊடாக, தாங்களே, மக்களை அடக்கி ஆளும் தன்மை பெற்று, இயங்கி வருகின்றன. இவ்வாறாக, மக்கள் மட்டத்திலிருந்து, உருவாகும் அமைப்புக்களுக்கான இணை மூல உக்தியை, வடிவமைத்து, அதற்கு ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றினை கொண்டு நடத்தும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களும், நிதி வழங்குவதன் ஊடாக, தாமே மக்களை ஆண்டு கொண்டு, மக்களை முட்டாள்களாக்கி வருகின்றன.

சந்தை மூலதனச் சுரண்டல்களுக்கும், சர்வாதிகார ஆட்சி முறைகளிற்க்கும், எதிராக‌, புதிதான‌ பாதையை பிரதினிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, திரைமறைவில், மக்கள் அறியாது, பல் தேசிய‌ நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து சிறிது பணத்தினை பெற்று, தமது சுய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டு, அறிக்கைகளை, அந்நிறுவனங்களிற்கு சார்பாக எழுதுவதன் ஊடாக, மக்களை முட்டாள்களாக்குவதுடன், தாமே மக்களை பிரதினிதித்துவம் செய்யும் அளவிற்கு உயர்ந்து, தம்ம அரசின் அடியாளாக இல்லது, மக்களின் நண்பனாக அடையாளப்படுத்துவதன் ஊடாக, தம்மை பிரதினிதித்துவப்படுத்தும் நிறுவனங்களின், சந்தைகளை மையமாக கொண்ட‌ மூலதனச் சுரண்டல்களை, எதிர்மறையில் வலுப்படுத்தலே, இத் தன்னார்வ நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் ஆகும்.

ஈழத்தில், தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டம், ஒரு கட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் சந்தைப் பொருளாதார நோக்கங்களுக்கு, சவாலாக அமைய ஆரம்பித்திருந்தது. அமைதி பேச்சுவார்த்தை எனும் பெயரில், தாங்கள், ஈழத்தில் கால் பதிக்கும் வேலைத்திட்டத்துடன், ஆயுதப் போராட்டத்தை அழித்து, தம்மை மக்களின், காவலராக காட்டிக்கொண்டு, அங்கு இடம்பெறப்போகும் அழிவுகளை, கண்டும் கணாதது போல் இருந்து கொண்டு, தம்மையே, பொது நிலையாக நம்பி, மக்களை தம் பின்னால் மட்டும் நிற்கவைத்து ஏமாற்றும் யுக்தியினை கடைப்பிடித்து, தங்கள் கைகளை, பலப்படுத்தி கொண்டு, தம்மை மக்கள் அறிந்து செயற்பட்டால், வரும் தீவினைகளை எதிர்பாராது, இயங்கி வரும், இவ் அரச சாரா நிறுவனங்கள், தங்களை ஒரு போதும் ஏற்காத சில அரசுகளை, போலி காரணங்களை ஊடகங்களில் பரப்புவதன் ஊடாக, தம்மை நியாயப்படுத்தி, தாங்களே சரியானவர்கள் என்பதினை புரியவைப்பதாக, கங்கணம் கட்டி இயங்கி, அரசுகளை, தமது எஜமானர்களின் உதவி கொண்டு, அழித்து, அவர்களின் நிறுவன‌ங்கள் ( எஜமானர்கள் ) நினைப்பதை செய்து முடிக்கின்றன. இதற்கு, லிபிய மக்களின் மீது நடத்தப்பட்ட யுத்தம், சான்றாக அமைவதுடன், அவற்றின் பலத்தையும், எடுத்து கூறி நிற்கின்றன.

பொதுவாக, தன்னார்வ நிறுவனங்கள், (NGO) அரச சாரா நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தம்மை, ஒரு போதும் அரசுக்கு எதிரானவை என்று அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. இதனூடாக அரசு மற்றும் அரசியல் இயக்கங்களை கைவசப்படுத்திக்கொண்டு, அரசுகளின் உதவிகளை பெற்று, தாமே தமது கொள்கைகளை, அரசுகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளின் துணை கொண்டு, திணிப்பதின் ஊடாக, தங்களை, அரசுகளின் நட்பாளர்களாக காட்டிகொண்டு, மக்களின் உண்மையான பிரதிநிதிகளை தாமே நிர்ணயிப்பதன் ஊடாக, தம்மை வெளி உலகிற்கு, பொதுவானவர்கள் என்பது போல் காட்டி கொண்டு, தாங்களே, அரசுகளிற்கு ஆதரவான சக்திகளாகவும், எதிரான சக்திகளாகவும், பிரதினித்துவப்படுத்திக்கொண்டு, தம்மை பல்தேசிய நிறுவனங்களிற்கு சார்பானவர்கள் என்பதனை வெளிக்காட்டாது, தாமே, தங்களை நிர்ணயிப்பதுடன், தங்கள் அடையாளங்களை மறைக்கும் முகமாக, தங்களுக்கு நிதி வழங்கும், நிறுவன‌ங்களின் பெயர்களை மறைக்கும் விதத்தில், கோப்புகளை தயார் செய்வதனூடாக, தமக்கு தேவையான தகவல் பெட்டகங்களை மக்களிடம் இருந்து மறைப்பதுடன், தங்களை மக்கள் இனங்காணாது இயங்குவதுடன், தாங்கள் விரும்பிய சகல செயற்பாடுகளையும் செய்துகொண்டு, தங்களின் அரசியலிற்கு எதிரான, அரசு, அரசியல் இயக்கங்கள் மற்றும் விடுதலை இயக்கங்களை, அழிப்பதுடன், அவற்றை தம்மால் இனங்காணப்பட்ட உதவியாளர்களின் துணைகொண்டு, பிரதிபடுத்துவதுடன், தம்மை யாரும் இனங்காணா வலை அமைப்பிற்கு உட்படுத்தி, மிகவும் நுட்பமான செயற்பாட்டின் உதவியுடன் செயற்பட்டு, மக்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழித்து, தமது எஜமானர்களின் நிறுவனங்களை மையப்படுத்திய, உலகமயமாக்கல்களுக்கு சேவை செய்துவருகின்றன.

2002 ஆம் ஆண்டு, மாசி மாதம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தற்காலிக யுத்த நிறுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற, சமாதான பேச்சுவார்த்தையை மையப்படுத்தி, நோர்வே அரசு, தமது நிதியில் இயங்கும், தன்னார்வ நிறுவனமான, நோரட் எனும் தன்னார்வ நிறுவனத்தை, தமது கட்டுக்குள் இருந்து இயங்கும், Christian Michelsen Institute (CMI) எனும் பொது நிறுவனத்தின் உதவியுடன், தங்களை மையப்படுத்திய இன அழிப்பிற்கு தயார்படுத்தும் வகையிலான, பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பயிற்சிகளை வழங்கி, அதனை வன்னிப்பகுதிக்குள், தம்மை நம்பி இயங்கும், சில தமிழ் செயற்பாட்டாளர்களின் உதவியுடன் அனுப்பியது மட்டும் அல்லாமல், தம்மை சமாதானத்தின் ஊடாக தமிழீழத்தை பெற்று தருபவர்களாக விடுதலை புலிகளை நம்ப வைத்ததன் ஊடாக, அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அமைந்து, தாங்கள் சமாதானத்திற்காக மாத்திரமே இயங்குவதாக கூறி, தங்களை எவரின் சந்தேகத்துக்கும் இடமில்லாது, தமது சந்தேகத்திற்கு இடமற்ற செயற்பாட்டின் ஊடாக, தமது பணிகளை, முன்னெடுப்பதற்கான அனுமதியை, புலிகளிடம் இருந்து பெற்றதும் அல்லாமல், தமக்கு எதிர்ப்பினை தெரிவித்த சிலரினை, பணம் கொண்டு விலைக்கு வாங்கும் சில உத்திகளை பயன்படுத்தியும், சிலரை இலங்கை புலனாய்வு பிரிவினரின் துணை கொண்டு கொலை செய்தது மட்டும் அன்றி, தாங்களே, தம்மால் இனங்காணப்பட்ட சிலரின் உதவிகளை கொண்டு புலிகளை அழிக்கும் முக்கிய பணியினை ஆரம்பித்து வைத்தனர். இருந்த போதிலும், சமாதானத்தினை எதிர்த்த, இனவாதிகள் மத்தியில், இந்நடவடிக்கை பலத்த எதிர்ப்பினை எதிர்கொண்டது. அது மட்டும் அல்லாமல், தாங்கள் இனவாதத்தை இல்லாதொழிப்பதற்கு, தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாக, பொய்யான‌ வாக்குறுதிகளை, புலிகளுக்கு அளித்துவிட்டு, இலங்கை அரசிற்கு, பல்வேறு உத்திகளை பயன்படுத்தி, உதவிகளை வழங்கியது மட்டும் அல்லாமால், தாங்களே புலிகளை அழித்து, இலங்கையை, புலிகள் இல்லாத சமாதானமான ஒரு சுபீட்சமான நாடாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்ப உதவுவதாகவும் கூறி, இனவாதிகளை மறைமுகமாக கைக்குள் போட்டுக்கொண்டு, தமது சுரண்டல்கள் நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன், வெற்றியும் கண்டனர்.

நோர்வே நாட்டினை பொறுத்தவரை, தமது எஜமானர்களான, அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிய‌தற்கு இணங்க, தமிழ‌ர்களின் விடுதலை போராட்டத்தை அழிப்பதிலும், சகல இனங்களிற்கும் உரித்தான, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் சுத்திகரிப்பதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமையான இலங்கை நாட்டினை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது. மறுபுறத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சதி நடவடிக்கையை சரிவர‌ புரிந்துகொள்ளும் அரசியல் வலு இருந்திருக்கவில்லை. இதனால் புலிகள், அவர்களின் சதி வலைக்குள் அகப்பட்டு, முப்பது வருடங்கள், போராளிகளின் தியாகத்தால் கட்டமைக்கப்பட்ட, இயக்கத்தினை இழந்ததுடன், அவர்களை மட்டும் நம்பியிருந்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், இக்காலப்பகுதியில், இந்திய மாவோயிஸ்டுக்கள், தன்னார்வ நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை வெளியிட்டனர். இவ்வறிக்கை, ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிர‌லான, சமாதான பேச்சுவார்த்தை எனும் சதி வலையில் சிக்கியிருந்த புலிகளின் கைக்கு, சென்றடைந்திருப்ப‌தற்கான சந்தர்ப்பங்கள் மிக‌ குறைவாகும்.

சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததும், இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட, “வன்னி சேவைய” என்ற உள்ளூர் தன்னார்வ நிறுவனத்தை, அகற்றிய நோர்வே அரசு, அதனை தனது நிறுவனங்களால் பிரதியிட்டது. அதே சமயத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், ஊடுருவும் நடவடிக்கையும், மறு புறத்தில், தமிழ் செயற்பாட்டாளர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. சமாதானப்பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை முழுவதும், நூற்றுக் கணக்கான தன்னார்வ நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், Christian Michelsen Institute (CMI) என்கிற தன்னார்வ நிறுவனமே, வன்னிப் பகுதியில் முதலில் பணியில் ஈடுபட அனுமதிக்க‌ப்பட்ட தன்னார்வ நிறுவனமாகும். இந்த நிறுவனம், 1997ஆம் ஆண்டிலிருந்து, சமாதானம் என்ற கொள்கையினை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளில் தலையிடுவது மட்டுமன்றி, போராட்டங்களை அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. நோர்வே அரசின், நோரெட் என்ற நிதிவழங்கும் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும், இந்த நிறுவனம், வன்னியில், உதவி ஆய்வு என்ற பெயரில் உட்புகுந்த‌து. சமாதானத்திற்கான புறச்சூழலை ஏற்படுத்துவதுடன், அரச அமைப்புக்களையும், புலிகளையும் தமது கட்டுக்குள் கொண்டுவருவதுடன் ஊடாக‌, இரு தரப்புக்களுக்குள்ளும் தமது உறுப்பினர்களை உட்செலுத்தி, இரு அமைப்புக்களிற்குள்ளும் தமது ஆதிக்கத்தை செலுத்துவதன் ஊடாக, இரு பக்கங்களையும் சீரழித்து, அதன் கட்டமைப்பினை அழிப்பதன் ஊடாக, தமக்கு தேவையானவற்றை சாதிப்பதே, இவ் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மிக முக்கிய பணியாகும்.

இந்நிறுவனத்தின் ஆதரவுடன், ஒஸ்லோவில் ஒரு ஒன்று கூடல் நடத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டு, நடைபெற்ற அவ் ஒன்று கூடலில், இலங்கையில் சமாதானத்தினை நிலை நாட்டுவது எனும் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பேசப்பட்டது. அவ்வேளையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட‌ சமாதான நடவடிக்கைக்காக, நோர்வே அரசு, 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. பத்தொன்பது நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அரச துறை உதவிச் செயலாளரான, ரிச்சார்ட் ஆர்மிதாஜ்ஜும் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பல பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ( ரிச்சார்ட் ஆர்மிதாஜ் இன் ஊடுருவலும், காட்டிக்கொடுத்த தமிழர்கள் குறித்தும், தனியான பகுதியில் ஆராயப்படும். )

புலிகளின் தலைமை பேச்சுவார்த்தை இணைப்பாளராகச் செயற்பட்ட, அன்டன் பாலசிங்கமும், உரை நிகழ்த்திய, அந்நிகழ்வை, நோர்வேயின் துணை வெளியுறவு அமைச்சர், விதார் கல்சிசன், தலைமை தாங்கினார். அவ் ஒன்று கூடலின் முடிவில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அமெரிக்கா, நோர்வே, பிரித்தானியா ஆகிய நாடுகளிடையேயான கூட்டம் ஒன்று, மூடிய அறைக்குள் நடைபெற்றது. இந்த அனைத்து சந்திப்புக்களிலும், அன்டன் பாலசிங்கத்துடன், சுதாகரன் நடராஜாவும் பிரதானமாக கலந்துகொண்டார். வெளிப்படையாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உரையாற்றிய ரிச்சார்ட் ஆர்மிதாஜ், புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும், வன்முறையை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அக்கூட்டம் நடைபெற்று முடிந்த மறு நாளே, தமிழ் கார்டியனில், கட்டுரை எழுதிய சுதாகரன் நடராஜா, ரிச்சார்ட் ஆர்மிதாஜின் புகழ் பாடினார்.

சுதா நடராஜா

அதேவேளையில், ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் தன்னார்வ நிறுவனமான பேர்கோப் பவுண்டேஷன் (Berghof Foundation (Germany))இல், சுதாகரன் நடராஜா கடமையாற்றிக்கொண்டிருந்ததுடன், பேர்கொப் பவுண்டேஷனுக்காக மோதலைத் தவிர்த்து, புலிகளை ஜனநாயகப்படுத்துவது எப்படி, என்பது தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அத்துடன், தனது மேற்படிப்பிற்காக, சர்வதேசப் பாதுகாப்பு, உலக ஆட்சி தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. சுதாகரன் நடராஜா எனும் இச்செயற்பாட்டாளர், ஆயுத மோதல், பயங்கரவாதத்தை அழித்தல், ஆயுதக் குழுக்களும் யுத்தத்திலிருந்து சமாதானத்திற்கான மாற்றமும், புலம்பெயர்ந்தவர்களை அணிதிரட்டுதல் (armed conflict, terrorism proscriptions, armed groups and war-to-peace transition, diaspora mobilisation, ) ஆகிய துறைகளில் பேர்கோப் பவுண்டேஷன், ஆசியா பவுண்டேஷன், ஐரோப்பிய ஆணையகம் போன்றவற்றின் நிதியுதவியில், ஆய்வுகளையும் நடத்தியுள்ளார். அத்துடன் பேர்கோப் பவுண்டேஷனின் நிதியில், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக, “புலம்பெயர் தமிழர்களை போராட்டத்திலிருந்து மாற்றுவது” குறித்த ஆய்வினையும் நடத்தியுள்ளார்(இணைப்பு). இதில் இருந்து, பேச்சுவார்த்தை காலத்தில், பிரித்தானியாவில் அன்டன் பாலசிங்கத்தின் அலுவலகத்தில், அவரின் உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்த சுதாகரன் நடராஜா, அங்கு பேர்கோப் பவுண்டேஷனின் பிரதிநிதியாகவே, உட் செலுத்தப்பட்டிருக்கிறார் என்பதனை, புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

புலிகளை, சமாதானப் பேச்சவார்த்தையில் ஆரம்பித்து, நந்திக்கடலின் மணற்படுக்கைகள் வரை அழைத்து வந்து, மக்களுடன் சேர்த்து, இனக்கொலை இராணுவத்திற்கு இரையாக்கிய நிகழ்வின் ஆரம்பம், 2002 இலேயே ஆரம்பிக்க‌ப்பட்டுவிட்டது. பேர்கோப் பவுண்டேஷனின் நோக்கம் “ஆயுதங்களை களைதல், மக்கள் அணிகளை உடைத்தல், இராணுவக் கட்டமைப்பை குலைத்தல்” என்பவையாக இருந்தது. ( பக்கம் 121, Recolonisation; Susanthatha Goonathilake). “ஆயுத மோதலைத் தவிர்ப்பதற்கான திட்டம்” ( The Berghof Handbook for Conflict transformatio) என்ற பேர்கோப் பவுண்டேஷனின் கையேட்டில், அதன் நோக்கம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அக்கையேட்டில், ஆயுதப் போராட்டங்களை இடை நிறுத்தி, அவற்றை தன்னார்வ நிறுவனங்களின் கைகளில் எப்படி ஒப்படைப்பது என்பது பற்றிய‌ திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, “மோதலைத் தவிர்த்து சமாதானத்தை உருவாக்குவதற்கான முயற்சி” என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( ” The past two decades have seen a marked increase in conflict prevention and peacebuilding activity on all levels, involving, among others, local activists, international civil society organisations and diplomats. Training in conflict resolution or management skills has become an important part of such conflict prevention and peacebuilding activity.” )

புலிகளின் ஆயுதப் போராட்டத்தை, தன்னார்வ நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதற்கான திட்டத்தினை மையமாக வைத்தே, பேர்கோப் பவுண்டேஷன், புலம்பெயர் நாடுகளில் உள்ள புத்திஜீவிகளின் உதவியுடன், வன்னியில் தலையிட்டதுடன், இறுதி யுத்தத்தினை நடாத்தி மாபெரும் அழிவிற்கும் வித்திட்டது. பேர்கோப் பவுண்டேஷனின் அத்திட்டத்தின் உதவியுடன், புலிகள் பலவீனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கை இனவாத‌ அரசு, இன அழிப்பு நடத்துவதற்கான வழிகளைத் திறந்துவிடுவதே அதன் முக்கிய‌ நோக்கமாகும். ஆனால் புலம்பெயர் நாடுகளில் இருந்து, இயங்கும் சில‌ தமிழ் அமைப்புக்கள், அத்திட்டத்தின் உதவியுடன், தங்கள் திட்டப்படி சகலதும் நடக்கும் இடத்து, தாமும், மக்களின் இழப்பினை காரணமாக காட்டுவதன் ஊடாக, தமிழ் ஈழம் என்கிற இலக்கை விரைவில் அடைய முடியும் என்று கனா கண்டனர் என்பதுடன், மக்களையும், புலிகளையும் இவ் அழிவினை நோக்கி நகர்த்தி சென்றது, வருத்தத்திற்கு உரிய செயலாகும்.

 2004 ஆம் ஆண்டிலே, முழுவீச்சுடன் தனது நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பித்த பேர்கோப் பவுண்டேஷன், புலம் பெயர் தமிழர்களைக் கையாள்வதற்கும், அவர்கள் ஊடாக வன்னியில் புலிகளைக் கையாள்வதற்கும், பல தரப்பட்ட நபர்களை பயன்படுத்தி, திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலம்பெயர் நாட்டிலிருந்து, மிகத் திறமையாக உள்வாங்க‌ப்பட்ட சுதாகரன் நடராஜாவைப் பின் தொடர்ந்து, பலர் பேர்கோப் பவுண்டேஷனின் சார்பில் பணியாற்ற ஆரம்பித்தனர்.

வன்னியில் புலிகளின் தலைமையுடன் 2002 ஆம் ஆண்டு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சுதாகரன் நடராஜா புலம்பெயர் நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவாளராகச் செயற்படுகிறார். இந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழு, பிரித்தானிய தமிழ் சங்கம் என்கிற பெயரில் இயங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கதுடன், இவ்வமைப்பு போராட்டத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட நிதிகளை மோசடி செய்ததாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது . ( https://en.wikipedia.org/wiki/British_Tamil_Association )

( பேர்கோப் பவுண்டேஷன் மற்றும் ஏனைய தன்னார்வ நிறுவனங்கள், எவ்வாறு திட்டமிட்டன என்றும், அவற்றில் சுதாகரன் நடராஜா போன்றவர்களைத் தொடர்ந்து ,உட்சென்ற தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான ஆய்வு, அடுத்த பகுதியில் வெளியாகும். இத்தொடர்களில், தன்னார்வ நிறுவனங்களின் அரசியலும், அழிப்பும் தொடர்பாகவே ஆராயப்படுகின்றது. தனி நபர்கள் அவற்றின் குறியீடுகளே தவிர, ஆய்வுகள் அவர்களை மையப்படுத்தியவை அல்ல.)

முன்னைய பதிவு:

புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…

http://pcr-project.insct.org/2012/01/23/the-politics-of-transformation-the-ltte-and-the-2002-2006-peace-process-in-sri-lanka/
http://tamilnation.co/conflictresolution/tamileelam/norway/021202sutha.htm
http://www.academia.edu/12438184/The_Hybridity_of_Liberal_Peace_States_Diasporas_and_Insecurity
https://www.soas.ac.uk/staff/staff63937.php

Click to access boc31eBPS.pdf

http://www.berghof-foundation.org/de/publikationen/category/handbook-1/
தொடரும்…

Exit mobile version