Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுவுடைமை என்றால் என்ன (பாகம் 1) : இராமியா

பொதுவுடைமைத் தத்துவத்தை ஒரு பூச்சாண்டியைப் போல் முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் வெற்றிகரமாகவே உருவகித்து வைத்திருக்கிறார்கள். பலர் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே அச்சப்படுகிறார்கள். இது ஒரு வகை.

இன்னொரு வகையினர் பொதுவுடைமையைக் கண்டு அஞ்சவில்லை என்றாலும் அதைப் பற்றிக் கொச்சையாகப் புரிந்து வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதாவது ஒருவரிடம் இரண்டு பேனா இருந்தால் அதில் ஒன்றைப் பறித்து, பேனா இல்லாதவரிடம் கொடுப்பது; அதாவது பொருள் படைத்தவர்களிடம் இருந்து அதைப் பறித்து இல்லாதவர்களுக்கு அளிப்பது தான் பொதுவுடைமை என்று புரிந்து வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இன்னொரு வகையினரும் உண்டு. பொதுவுடைமைத் தத்துவத்தைப் புரிந்து கொள்வது எளிது அல்ல; அதைப் புரிந்து கொள்ள முடியாது என்று பரப்புரை செய்து அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முயல்பவர்களை ஊக்கம் பெறா வண்ணம் தடுப்பவர்களும் உண்டு. பொதுவுடைமைத் தத்துவம் மட்டும் அல்ல; எந்த ஒரு துறையிலும் எடுத்த எடுப்பிலேயே நிபுணத்துவம் அடைந்து விட முடியாது. அ, ஆ என்று ஆரம்பித்துத் தான் எத்தகைய உயர்நிலைக்கும் அடைய முடியும். அது போல் தான் பொதுவுடைமைத் தத்துவமும்.

இதையும் எளிதாகத் தொடங்கி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதை எளிமையாகத் தொடங்கி வாசகர்களுக்கு அளிப்பது தான் இக்கட்டுரைத் தொடரின் நோக்கம். வாசகர்கள் இதிலிருந்து வினாக்களை எழுப்பினால் அதற்கு ஏற்ப விரிவான விளக்கமான விடைகளை அளிக்க முடியும்.

பொதுவுடைமை தான் என்ன? –

1. புராதன பொதுவுடைமைச் சமூகம்

மனித சமுதாயம் எப்பொழுதும், இப்பொழுது இருப்பது போலவே இருந்தது இல்லை. அது பல காலங்களில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு வளர்ந்து வந்து உள்ளது. அது தன் பயணத்தைப் பொதுவுடைமைச் சமூகமாகவே தொடங்கியது. மனிதன் வேட்டையாடி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது அவர்களில் யாருக்கும் எந்த விதமான சொத்துரிமையும் இருந்தது இல்லை. வேட்டைக் கருவிகள் உட்பட அவர்களிடம் இருந்த அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக இருந்தன. தனியுரிமையைப் பற்றி அவர்களால் கற்பனையும் செய்ய முடியாது இருந்தது.

அந்த சமூகத்தில் இருந்த அனைத்து மனிதர்களும் ஒரே அளவு அறிவுத் திறன் கொண்டு இருக்கவில்லை. வெவ்வேறு அறிவுத் திறன் கொண்டவர்கள், வெவ்வேறு அளவில் உழைப்பை ஈந்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப, பொருட்களைப் பகிர்ந்து கொண்டார்கள். திறமைக்கு ஏற்ற உழைப்பு; தேவைக்கு ஏற்ற பங்கீடு எனும் விதிமுறை சர்வ சாதாரணமாக அமலில் இருந்தது. ஆனால் உழைக்கும் பருவத்தில் உள்ள யாரும் உழைக்காமல் இருக்க முடிந்தது இல்லை. உழைக்காமல் இருப்பதைப் பற்றிக் கற்பனை செய்யவும் முடிந்தது இல்லை.

அச்சமூகத்தில் திருட்டு இல்லை; ஏமாற்று வித்தை இல்லை. மக்களுக்குள் இடையே ஏதாவது பிணக்குகள் தோன்றினால், அவை மூத்தவர்களின் தலையீட்டில், அவர்களுடைய கண்டிப்பில் தீர்த்து வைக்கப்பட்டன. அங்கு அரசன் இல்லை. காவல் துறை இல்லை. அரசு என்ற அமைப்பின் எந்த ஒரு அங்கமும் அங்கு இல்லை.

அச்சமூகத்தினால், தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவையான அளவிற்கு மட்டுமே பொருட்களை ஈட்ட முடிந்தது.

அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தினாலும் முயற்சியினாலும், வேட்டைக் கருவிகளைச் செம்மைப் படுத்தினர். விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்வதைக் கண்டு விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்களின் உற்பத்தித் திறன் வளர்ந்த போது அவர்களால் தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவைப்படும் பொருட்களை விட அதிமான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்தனர்.

இவ்வளர்ச்சி அவர்கள் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மன மகிழ்விற்காக ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைக்க வைத்தது. அது மட்டும் அல்லாமல் சில சோம்பேறிகளுக்கு ‘மற்றவர்கள் வேலை செய்ய, தாங்கள் சும்மா இருக்கலாமே; அப்போதும் அனைத்து மக்களுக்குத் தேவையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படத் தானே செய்யும்’ என்று நினைக்க வைத்தது.

மிகை உற்பத்திப் பொருட்களின் (அதாவது ஒரு சமூகம் பிழைப்பதற்கும் தன் சந்ததிகளை உருவாக்கி, தன் இனம் தொடர்ந்து இப்புவியில் நிலைப்பதற்கும் தேவையான பொருட்களை விட அதிமாக உற்பத்தி ஆகும் பொருட்களின்) அளவு அதிகரிக்க அதிகரிக்க உழைக்க மனம் இல்லாதோரின் ‘சும்மா இருக்க வேண்டும்’ என்ற மனப்பான்மை மேலும் மேலும் வலுவடைந்தது.

இந்நிலையில் உழைக்க மறுக்கும் கூட்டத்தார் மூத்தவர்களின் சொற்களுக்குக் கட்டுப்படாமல் கலகம் செய்து, உழைக்காமல் உண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். உழைக்கும் கூட்டத்தார் இதை எதிர்த்த போது, அவர்களை ஒடுக்க வன்முறையைப் பயன் படுத்தினர். உழைக்காமல் இருப்பதைக் கேவலமாக நினைத்த மக்களை மிகக் கொடூரமாக ஒடுக்கி அடிமைகளாக நடத்த ஆரம்பித்தனர். இப்படித் தான் அடிமைச் சமூகம் தோன்றியது.

(தொடரும்…)

Exit mobile version