தென்னாபிரிக்காவின் உதவி ஜனாதிபதி சிரில் ராமபோசா மீண்டும் இலங்கையில் சில மணிநேரங்கள் தரித்து நின்று ஜப்பானை நோக்கிப் பயணமானார், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஜப்பானுடன் பேச்சு வார்த்கை நடத்தச் சென்ற வழியில் ராமபோசா இலங்கையில் தரித்து நின்றார். நேற்று 22/08/2015 இலங்கையில் சில மணிநேரங்கள் தரித்து நின்ற ரமபோசா யார்? இலங்கையில் இவரின் அக்கறை என்ன?
பல்தேசிய வியாபாரியான ராமபோசாவின் இன்றைய பெறுமதி 675 மில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் கணிப்பிட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் விரல்விட்டெண்ணக்கூடிய பண முதலைகளுள் ராமபோசாவும் ஒருவர், தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்கான போராட்டம் வெறும் ஆட்சி மாற்றமாக முடிவடைந்ததில் ராமபோசாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் முடிவில் திடீரென முளைத்த பணக்காரர்களுள் இவரும் ஒருவர். ராமபோசா சந்துக்கா குறுப் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனத்தின் தலைவர். மூலவளங்கள், வங்கி, தொலைத் தொடர்ப்பு, காப்புறுதி போன்ற பணம்புரளும் துறைகளில் முதலிட்டு நடத்திவரும் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவரும் ராமபோசாவே.
தென்னாபிரிக்காவின் ஊழல் அரசின் முக்கிய புள்ளிகள் பலர் அந்த நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள்.
16ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 ஆம் ஆண்டு மரிக்கான என்ற இடத்தில் கூலி உயர்வும் கோரி அமைதி வழிப்போராட்டம் நடத்திய தென்னாபிரிக்கத் தங்கச் சுரங்கத் தொழிலாள்கள் 34 பேர் போலிசாரால் சுட்டுப் பகுகொலை செய்யப்பட்டனர். பல நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தென்னாபிரிக்கப் போலிஸ் நடத்திய வெறியாட்டத்தில் களத்தில் கொல்லப்பட்ட 34 பேரைத் தவிர 78 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு முன்பதாக சிரில் ராமபோசா அமைதிப் போராட்டம் நடத்திய தொழிலாளர்களைக் அருவருக்கத்தக்க கிரிமினல்கள் எனப் பெயரிட்டு அழைத்தார். அதனைத் தொடந்து தங்கச் சுரங்கத்தின் நிர்வாகம் வேலை நிறுத்ததைத் தடுத்து நிறுத்த கிரிமினல் தொழிலாளர்களுக்கு எதிராகப் போலிஸ் நடவடிக்கை எடுக்குமாறு கோரியது.
உலகம் முழுவதும் தென்னாபிரிக்க அதிரடிப் போலிசின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நிலைமைகளைத் தற்காலிகமாகக் கையள்வதற்காக தென்னாபிரிக அரசு கண்துடைப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு ராமபோசாவைக் குற்றமற்றவர் எனத் தீர்பு வழங்கியது.
தென்னாபிரிக்காவின் ராஜபக்ச என்று அழைகக் கூடிய வியாபாரி இன்று இலங்கையில் சமாதனத் தூதுவராக வலம்வருகிறார்.
அதற்கு ஒரு படி மேலே சென்ற உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் ராமபோசா, இபிராஹிம், மேயர் போன்றோரின் இலங்கை வருகையை அறிந்து மகிழ்சியும் உற்சாகமும் அடைகிறோம் என அறிக்கை விடுக்கிறார்.
தனது வியாபார வெறிக்காக அப்பாவித் தொழிலாளர்களைக் கொன்று போட்ட போர்க்குற்றவாளி ராமபோசாவை கைதட்டி வரவேற்றது ஒடுக்கப்படும் தமிழர்களின் பிரதிநிதி என அழைத்துக்கொள்ளும் சுரேன் சுரேந்திரனும், எம்.ஏ.சுமத்திரனும் என்பது அவமானகரமானது.
அதுமட்டுமன்று இலங்கையில் இந்த வருட டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் புலம்பெயர் திருவிழாவையும் தென்னாபிரிக்காவே ஏற்பாடு செய்கிறது.
மங்கள சமரவீர- சுரேன் சுரேந்திரன் – சுமந்திரன் ஆகியோர் லண்டனில் இணைந்து நடத்திய திரை மறைவுக் கூடத்தையும் தென்னாபிரிக்காவே முன்நின்று ஒழுங்கு செய்திருந்தது.
ராமபோசா போன்ற கொலைகாரர்களுக்கு இலங்கையிலும் தமிழ்ப் பேசும் மக்களிலும் உண்மையன அக்கறை உண்டு என்பதை சுரேனும் சுமந்திரனும் நம்பக் கோருவதை மரிக்கானாவில் மாண்டுபோன தொழிலாளர்களின் ஆவி கூட மன்னிக்காது.
சிரில் ராமபோசா என்ற போர்க்குற்றவாளி தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தலையிடக் கூடாது என்று தென்னாபிரிக்க தூதரகங்களின் முன்பாகப் போராட்டம் நடத்துமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது இலங்கைத் தமிழர் காங்கிரஸ், பிரித்தானியத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளை நோக்கி இனியொரு… சார்பில் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்.
தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காக மட்டுமன்றி, மக்கள் பற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், உலகத் தமிழர் பேரவையையும், தேசியத்தை அழிக்கும் ஏகாதிபத்தியங்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.