Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்கனின் ஈழக் கப்பல் லேட்டாகலாம் போடுங்கள் வோட்டு : ஈழ மாறன்

us-navy-shipஇரு தினங்களின் முன்னர் தேர்தலில் நிற்கும் கட்சிகள் தொடர்பாக நான் தெரிவித்து வரும் கருத்துக்களில் கஜேந்திரன் பொன்னம்பலத்தின் கட்சி தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்களுடன் முரண்படுகின்ற அதே வேளை நான் வெறும் பார்வையாளன் மட்டும் தான் என்றும், முனைப்பாக இருக்கும் விடயங்களைக் கையில் எடுத்து அரசியலை முன்னகர்த்துபவரே நடவடிக்கையாளர் என்றும் என் நண்பர் ஒருவர் முகநூல் உள் பெட்டியில் வந்து கூறினார்.

அந்த அடிப்படையில் கையேந்திர பொன்னம்பலம் உடனடி பிரச்சனைகளை தன் கட்சியின் பிரதான அம்சங்களாக்க் கொண்டு செயற்படுவதாகவும், ஆகவே அவரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவருக்கான ஆதரவை வழங்குவதே ஒரு செயற்படு ஆளுக்கான சரியான முடிவு என்றும் கூறினார். அரசியல் வகுப்பெடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

சரி கஜேந்திரன் பொன்னம்பலம் அப்பிடி என்னதான் உடனடிப் பிரச்சனை பற்றிப் பேசுகிறார்? இரண்டு தேசம் ஒரு நாடு என்று ஒரு தீர்வு பற்றி சொல்கிறார்? அப்படி என்றால் என்ன? அதை எப்படி இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசி எடுத்துத் தருவீர்கள் என்று கேட்டால் கல்லுளி மங்கை போல வாயே திறக்கிறாங்கள் இல்லை. தமிழ் மக்களுக்கு இப்பதான் முதல் முறையா ஒரு கட்சி தீர்வு வைக்கிறதா? இந்த மண்ணாங்கட்டி உடனடிப் பிரச்சனையில இவை மட்டும்தானோ நிலைப்பாடு எடுத்திருக்கினம். கடந்த அறுவது வருசத்துக்கு மேலால எத்தின கட்சிகள் எத்தின ராசாக்கள் நிலைப்பாடு எடுத்தவை எண்டு யாருக்கும தெரியாத மாதிரி கதைக்கிறது சரியில்லை. ஏக போகத்துக்கும்,

வாறதெல்லாம் சுருட்டோணும் எண்டு ஏகப் பிரதிநிதித்துவம் கேட்டா இது ஞாயமோ? அண்ணை ஏகப்பிரதிநிதியானது வேறை கதை. இடுப்பில கையில எண்டு அந்த மனுசன் நாலைஞ்சு வைச்சுக் கொண்டு சொல்லுற ஏகபோகத்துக்கும் ஏ4 பேப்பரில இரண்டு தேசம் ஒரு நாடு எண்டு எழுதிப் போட்டு ஏகபோகம எண்டு சொல்லுறதுக்கும வித்தியாசம் இல்லையே?

சிங்கம் மூத்திரம் பெய்து எல்லை வைக்கிறமீதிரி நீங்கள் பருத்தித்துறையில கூட்டம் வைச்சிட்டு கருத்துக் கணிப்பு கலக்குது எண்டு சொன்னா யாழ் மக்கள்குமார் பொன்னருக்கு என்ன செய்தவை எண்டதை மறந்திடாதையுங்கோ. நீங்கள் இல்லை உங்ஙகளுக்கு முன் நிறையப் பேர் தீர்வு யாவாரம் செய்திட்டினம். செய்து கொண்டும் இருக்கினம். வேணும் எண்டா உங்கட கடையையும் விரியுங்கோ.

ஆர் கண்டது வியாழன் மாற்றம் பத்தாம் இடத்தைப் பாத்துதெண்டா சிலவேளை அள்ளிக் கொட்டினாலும் கொட்டிடும். அதுக்காக மகிந்த ராஜபக்‌ஷட யோசியரிட்டைப் போகாதையுங்கோ. அந்தாள் மாத்திச் சொல்லக் கூடிய ஆள். சுருட்டிறதெண்டு இறங்கினபிறகு வியாபாரத்தில நேர்மை நியாயம் பாக்க் கூடாது. நீங்கள் பாக்க மாட்டியள் எண்டும் தெரியும்.

இராமநாதன் காலத்தை விடுவம். செல்வநாயகம் காலத்தில இருந்து தொடங்கினாலும் தமிழரசுக் கட்சி தொடங்கி, கூட்டணி, பின் கூட்டமைப்பு ஈறாக இந்தக் கட்சிகள் காலத்துக்கு காலம் வைத்த தீர்வுகளை எண்ணத் தொடங்கினால் அடுத்த மிலேனியம் வந்தாலும் வந்திடும். சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது, இணைந்த மாகாணம், தமிழீழம், மாநிலம், மாவட்டசபை, பிரதேச சபை, பஞ்சாயத்து முறை பற்றியும் கூட சிலாகித்த ஞாபகம் இருக்கு.

ஒவ்வொரு தேர்தலுக்கும் பெரு முழக்கத்தோடு வரும் இந்தக் கட்சிகள் தேர்தலில் வென்றபின் கல்லடி பட்ட நாய் போல காலத் தூக்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ததும் ஏதோ கதைச்சுக் கொண்டுவரப் போறாங்கள் எண்டு காத்திருந்த சனத்தை சுத்தினதைத் தவிர வேறை எதைச் சாதித்தார்கள்.

குறைந்தது இந்தத் தீர்வில ஒன்றை மையமாக வைத்து ஒரு தீர்மானத்தை ஆவது பாராளுமன்றத்திலே கொண்டுவந்திருக்கிறாங்களா? அப்படிக் கொண்டுவந்து தோத்திருந்தாக் கூட பரவாயில்லை ஏதோ முயற்சி செய்திருக்கிறாங்கள் எண்டு கூறலாம்.

இப்ப இரு தேசம் ஒரு நாடு கோசம் போடும் குதிரைக் கூட்டம் இந்த ஆறு வருடங்களில் சாதிச்சதென்ன? பெருந்தலைவன் கொள்கையோடு களம் இறங்குகுறோம் என்று காணொளி முகநூலில் விட்டா சனம் வாக்குப் போடும் என ஒரு கணக்குப் போட்டு இராஜதந்திர வியூகம் அமைச்சிருக்கு இந்தகட்சி. அதைச் சாதிக்க இருபத்தைந்து நாடுகள் சேந்து எங்களுக்கு அடிச்சுப் போட்டாங்கள் என்ற ஒப்பாரி வைத்துத் திரியும் அரசுக்கும், புலனாய்வுக்கும் , நடக்கிற கொள்ளை , கொலை என்று அத்தனை சமூக விரோதச் செயல்களுக்கும முன்னாலையும் பின்னாலையும் திரியும் , லட்சக் கணக்கான மக்களை ஆடு மாட்டைச் சாய்ச்சுக் கொண்டுபோனமாதிரி முள்ளி வாய்க்கால் வரைக்கும் கலைச்சுக் கொண்டுபோய் கடைசியில் குழுவன் மாட்டை அடக்க கிராமங்களில் பாவிக்கப்படுற சிணுங்கி அளவு இடத்தில நின்று கொண்டு ஆயுதங்களை மௌனிக்கிறம் என்று அறிக்கை விட்ட ராஜ கோபுரத் தலைவனின் வாரிசுகளை வேட்பாளர்களாக்கி விட்டு அந்தரங்கப் பகுதிவரை சொகுசு காத்திருக்கிறியள்.

உசுப்பேத்ல்களும் , வீராவேசக் கூச்சல்களும் , நெஞ்சைத் தட்டி குஞ்சு குருக்கான் எல்லாம் குழம்பிப் போகிற ரஜனிகாந்த் பஞ்ச் டயலாக்குகளையும் தமிழ்ச் சனம் அறுவது வருசமா கேட்டுக் கொண்டிருக்கிறது தெரியாமல் இவர்கள் புது டயலாக் உடன் வந்திருக்கிறார்கள்.

மகிந்த பிரதமரானால் இவை பாராளுமன்றுக்குள்ளே போறதுக்கே தவண்டுதான் போகவேணும். இதுக்குள்ளை எங்கை இரண்டு தேசம் பிடிக்கிறது? ரணில் வேட்பு மனு தாக்கல் செய்ய முதலே சொல்லிட்டார் தீர்வு கீர்வு எண்டு சொல்லிக் கொண்டு உள்ளை வந்தா கதவைச் சாத்திப்போட்டு காற்ச்சட்டையை கழற்றி வைச்சிட்டுத் தான் தீர்வு தருவன் எண்டு.

வவ்வால் வரும் எண்டாங்கள். கைதட்டி புள்ளடி போட்டுது சனம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்றாங்கள். பிறகுதான் தெரியும் அஞ்சாது எண்டது நரியையே தவிர நரிக்குணத்தோடு புள்ளடி கேட்ட அவர்களை இல்லை என்று. பாடையிலை என்சாம்பல் கோகும் போதும் பைந்தமிழே சலசலக்க வேணும் எண்டு சொன்னவர் சென்னையில கலக்கித் திரியிறார். தமிழனுக்கு எருமை மாட்டுத் தோல் என்று சொன்னது மட்டும் உண்மை ஏனென்றால் அவன் எவ்வளவு சுத்தினாலும் புள்ளடி போடுறளவுக்கு நல்லவன் என்று இவர்களுக்குத் தெரிந்த படியினால் .

வெளிநாடு சென்ற நாய்கள் ஒருநாள் திரும்பி வருவர் காறி உமுழுங்கள் என்ற புதுவையின் பாடலைப் பாடித் திரிந்த கிளிகள் எல்லாம் வாரிக் குடுங்கள் தீர்வு காண்கிறோம் என்று நாயாய் அலைகிறார்கள். அதே வெளிநாட்டு மெத்தப்படிச்ச அண்ணன்ர படை தொப்பியில இருந்து கொண்டம் வரைக்கும் அண்ணைன்ர படம் போட்டு வியாபாரம்லசெய்யிற கும்பல் அள்ளி இறைக்கினம். அவைக்குத் தேவை வெளிநாட்டு வியாபாரம் சூடுபிடிக்கிறமாதிச் செய்தி உள்நாட்டில இருந்து வரவேணும். அதுக்கு சரியா தலையாட்டக்கூடியது சைக்கிள் எண்டு தெரிவு செய்து அனுப்பியிருக்கினம். .அவரகளைத் தலமை தாங்கி ஊர் ஊராய் போறார் பொன்னம்பலம் அண்ணை.

பாராளுமன்றத்தில போய் கேட்கவும் முடியாது. பேசவும் முடியாது. சம்பந்தன் சொல்லுறமாதிரி இந்தியாவுடனும் சருவதேசத்துடனும் பேசி 2016 க்குள் தீர்வு கொண்டு வருவார்களாம் என்று. அப்ப இவ்வளவு காலமும் இந்தியாவுக்கு போய் வரும் போது இது பற்றிப் பேச நேரம் இல்லையா? வாற வருசந்தான் நேரம் ஒதுக்குவீங்களா? சருவதேசம் எண்டா என்ன? எது சருவ தேசம். சர்வதேசத்தோடு பேசுவியள் எண்டா அது யார். அவைக்கு இலங்கயில யுத்தம் நடந்ததே தெரியாதோ? அங்கை பாவிச்ச ஆயுதம் எல்லாம் ஆகாயத்தில இருந்து அரசாங்கத்தின் கையில விழுந்ததோ? அப்ப ஆரோடை பேசுவியள். என்ன பேசுவியள்? அப்பிடித் தீர்க்கேலாது எண்டா என்ன செய்வியள்? கோவிச்சுக் கொண்டு போவியளோ? உங்களுக்கு கோவம் வந்தா சர்வதேசம் ஆடிப் போயிடுமோ?

சரி அடைக்கலநாதன் எந்தக் கட்சியில இருக்கிறார். அவர் சொல்லியிருக்கிறாரே தீர்வு தரேல்லை எண்டா பிரிஞ்சு போறதைத் தவிர வேறை வழி இல்லை எண்டு. அப்ப அடைக்கலநாதன் பிரிஞ்சு போவம் எண்டு சொன்னா காணுமோ? உடனை பிரிய வேண்டியது தானோ? அந்த நேரத்தில ஆட்சியில இருக்கிற சிங்களக் கட்சியிடம் ஒரு வார்த்தை சொல்லவேணுமோ இல்லை பிறகு ஈமெயில அனுப்பினா போதுமோ?

பிரியும் போது மன்னார் எங்கை இருக்கும்? அடைக்கலநாதனுக்கு எங்கை சிலை வைக்கிறது? பிரிஞ்ச நாட்டின் சட்ட வரைபுகளுக்கு ஆர் பொறுப்பு? அதுவும் அடைக்கல நாதனோ இல்லை அமெரிக்காவில இருந்து ஆக்கள் வருவினமோ?

இப்ப சொல்லுங்கோ. இரண்டு தேசம் ஒரு நாடு எண்டு சொன்னாச் சரியோ? அது உடனை வருமோ இல்லை அடுத்த தேர்தலிலதான் முடிவாச் சொல்லலாமோ? அமெரிக்காவின் கப்பல் வரும் கரைசேர்க்கும எண்டு காத்திருந்த ஆக்களோட களம் இறங்கியிருக்கிறியள். தீர்வு இலங்கையிலிருந்து வருமோ? இந்தியா கொண்டுவரும் எண்டு சொல்லுவியளோ இல்லை அம்மாவாணை அமெரிக்கன்ர கப்பலில தீர்வு வருமோ. கண்டவன் நிண்டவன் எல்லாம் நலமடிக்க மக்கள் ஒன்றும் மாக்கள் இல்லை.

சுத்திச் சுத்தி செத்துப் போன சனம் போக மிச்சமிருக்கிற சனத்துக்கு ஏதாவது செய்ய முடிஞ்சா செய்யுங்கோ.சமகால அரசியலை கையில எடுக்கிறம் எண்டு தேவையில்லாத ஒண்டையும் கையில எடுக்காதையுங்கோ.

மக்கள் தொடர்ந்து நல்லவங்களா இருக்க மாட்டாங்கள். நீங்கள் எப்பிடி அடிச்சாலும் தாங்கிறதுக்கு. பிறகு அமெரிகன் கப்பல் பிந்தினாலும் பிந்தும். சொல்லிப் போட்டன்.

Exit mobile version