உண்மையில் வள்ளலார் குழு, நாவலர் குழு, சிதம்பரம் தீட்சிதர் குழு போன்ற முத்தரப்பினரே இந்தப் பிணக்கில் ஈடுபட்டார்கள். மேலும் இப் பிணக்கானது வெறும் கருத்தியல் மோதல் என்பதனைக் கடந்து சாதி ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு வசைபாடலாகவே ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. இப் பிணக்கிற்குள் போவதற்கு முன் இதனுடன் தொடர்புடைய மூன்று தரப்பினரையும் மேலோட்டமாகப் பார்க்கவேண்டியுள்ளது. சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரையில் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனிய மேலாதிக்கத்தையும், வடமொழிப் பெருமைக்காகத் தமிழ் வெறுப்பினையும் இரு கண்களாகக் கொண்டவர்கள். சிதம்பரம் கோயிலிற்குள் தமிழில் தேவாரம் பாடப்படுவதனையே எதிர்ப்பவர்கள். ஆறுமுக நாவலரோ வேதங்களிற்குப் பதில் சைவ ஆகமங்களினை முதன்மைப்படுத்துபவர். ஈழத்தில் கிறித்தவத் திணிப்பினை எதிர்த்து சைவசமயத்திற்காகப் பாடுபட்டவர்.
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டு”
“”சாதியும், மதமும், சமயமும் பொய் ”
“கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”
மேற்கூறியவற்றையும் உள்ளடக்கி இவர் இயற்றிய அருட்பா பாடல்கள் 1867 இல் அச்சிடப்படுவதற்கு முன்னரே தமிழர்களிடம் பரவலடைந்திருந்தன. பாரதியார் “புதிய விழிப்பின் முன்னோடி” என்று வள்ளலாரை வியப்பார்.
தீட்சிதர்கள்- வள்ளலார் முரண்பாடு:
பார்ப்பனிய மேலாதிக்கத்தினையும், வடமொழிக்காக தமிழ்மொழி வெறுப்புணர்வையும் கொண்டிருந்த தீட்சிதர்களுடன் வள்ளலார் முரண்பட்டது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல. இதனால் வள்ளலாரே போட்டிச் சிதம்பரம் கோயிலினை வடலூரில் அமைத்ததுடன் “சிதம்பரத்திலிருப்பது சிற்றம்பலமே வடலூரிலேயே பேரம்பலம் உள்ளது” என்றும் கூறியதுடன்
“வருவாரழைத்து வாடி-வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்வரமே
இந்த வெளியில் நடமிடத்துணிந்தீரே- யங்கே”
எனவும் பாடினார். பிற்காலத்தில் அனைத்து மதங்களிலுமுள்ள நல்ல கூறுகளை எடுத்து சன்மார்க்கம் என்ற அமைப்பினையும் தோற்றுவித்தவர்.
தீட்சிதர்கள்- ஆறுமுகநாவலர் முரண்பாடு:
யாழ்ப்பாணத்திலேயே பல சைவக் கோயில்கள் ஆகம விதிப்படி செயல்படவில்லை என்பதைத் தன்னுடைய “யாழ்ப்பாணச் சமய நிலை” என்னும் நூலில் நாவலர் விளக்கியிருப்பார். இதே குற்றச்சாட்டினை சிதம்பரம்கோயில் மீதும் வைத்து சிவதீட்சை பெறாத தீட்சிதர்கள் கையாலே திருநீறு வாங்கக்கூடாது என நாவலர் கூற இம் முரண்பாடு தொடங்கியது. இம் முரண்பாட்டினாலேயே சைவப்பிரகாச வித்தியசாலை அமைத்து சிதம்பரத்தில் காலூன்றும் நாவலரின் கனவு நிறைவேறவில்லை.
வள்ளலார்-நாவலர் முரண்பாடு:
சாதிச் சண்டை:
தமிழகத்திலுள்ள மடங்கள் (ஆதினங்கள்) பலவற்றில் இன்றுவரை எழுதப்படாத ஒரு விதியாக அம் மடங்களிற்கான மடாதிபதிகளாக கார் காத்த வேளாளர் (கார் காத்த பிள்ளைமார்) சாதியில் பிறந்தவர்களே வரமுடியும். சைவ மடங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருந்த கார் காத்த வேளாளர் களிற்குப் போட்டியாக சாதியில் குறைவாகக் கருதப்பட்ட தொண்டை மண்டல முதலியார் சாதியைச்சேர்ந்த வள்ளலார் புதிதாக ஒரு மடம் அமைத்திருப்பதும், அதற்கப் பெருமளவு மக்கள் அன்பைப் பெற்றிருப்பதனையும் பார்த்துக் கொதித்துப்போன மடங்களே நாவலரை வள்ளலாரிற்கு எதிராகக் களத்தில் இறக்கின. ஏற்கனவே பார்த்தபடி வேளாள சாதிப்பற்றில் ஊறிப்போன நாவலர் இதற்கு இணைந்து போனமை ஒன்றும் வியப்பிற்குரியதன்று. பார்ப்பனியச் சாதி அடுக்குகளின் நுட்பம் இங்கு தனது வேலையினைக் காட்டிற்று. ஆம், தீட்சிதர்களை எதிர்த்து சிதம்பரத்தைவிட்டு வெளியேறிய இரு பிரிவினரும் தமக்குள் மோதிக்கொள்ள வைக்கப்பட்டனர். தீட்சிதர்களால் சூத்திரர்கள் என இழிவுபடுத்தப்பட்டவர்கள் இப்போது தமக்கிடையே யார் உயர்ந்த சூத்திரர் எனப் போரிடத்தொடங்கினார்கள்.
இந்த நிலையிலேயே வள்ளலாரின் பாடல்களை அவை அருட்பா அல்ல மருட்பா என நாவலர் கூற, அதனைத் தொடர்ந்து அறிக்கைப் போர் இரு தரப்பிலும் இடம்பெற்றது. இங்கு நாவரலரின் வாதம் தேவாரம்,திருவாசகம் போன்றவற்றுடன் சேர்த்துக் தமிழகக் கோயில்களில் வள்ளலாரின் அருட்பாவினைப் பாடக்கூடாது என்றிருக்க யாழ்ப்பாணத்திலோ சைவர்கள் அவரை ஆறுமுக நாயனார் என்றே அழைத்ததுடன் அப்பர், சம்பந்தர் வரிசையில் ‘ஐந்தாம் குரவர்’ என்றும் அழைத்தனர். இவ்வாறு கருத்தியல்ரீதியில் தொடங்கிய மோதல் விரைவிலேயே வசை பாடலாக மாறியது. இருபக்க வசைபாடல்களும் எழுத்துவடிவிலேயே இடம்பெற்றதனால் இன்றும் அவற்றினை ஆவணமாகக் காணக்கூடியதாகவுள்ளது. அவற்றில் சிலவற்றின் தலைப்புக்களைக் கொண்டே (குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம், இராமலிங்கதப்பிள்ளை அங்கதப்பாட்டு, குதர்க்கிகளின் பொய்க்கோள் விலக்கு, சைவ தூஷணப் பரிகாரம்) அவற்றின் உள்ளடக்கத்தினை உய்த்துணரலாம். உள்ளேயோ நாவலர் இணையற்றவர் என்பதனை இணை(சோடி)+ அற்றவர் எனவே ஆண்மையற்றவர் என வள்ளலார் தரப்பும், மறுபுறத்தில் நாவலர் தரப்பு வள்ளலாரை “பூப்புப் பெண்களைப் புணர்ந்தார்…” “பகலிலே துறவி, இரவிலே காமுகர்”, “புறப்புணர்ச்சி செய்பவர்” என்றும் இருதரப்பிலும் கேவலமாகத் திட்டித் தீர்க்கப்பட்டது. சமய ஆச்சாரங்களை கடைப்பிடிப்பவர்களே ஒழுக்கசீலர்கள், சமய நம்பிக்கை கூடக் கூட ஒழுக்கமும் கூடும் என்பவர்கள் ஒருமுறை இந்த ஆவணங்களைப் படித்துப்பார்ப்பது நல்லது. இங்கு இரு பக்கத்திலும் எரிகின்ற நெருப்பினிலே எண்ணை ஊற்றிவளர்க்கும் வேலையினை தீட்சிதர்கள் (பார்ப்பனியம்) செய்துகொண்டிருந்தார்கள்.
மேற்கூறிய முத்தரப்பு முரண்பாட்டினைச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சிதம்பர தீட்சிதர்கள் தரப்பே. தீட்சிதர்கள் தேவையானபோது நாவலர் மூலம் வள்ளலார் தரப்பைத் தாக்கியும், மற்றொரு வேளையில் வள்ளலாரைத் தாங்கியும் கவனமாகக் காய்களை நகர்த்திவந்தனர். ஒரு கட்டத்தில் தீட்சிதர்கள் வள்ளலாரை முழுவதுமாக அணைத்துக்கொண்டு நாவலரைக் கண்டித்து ஒரு கூட்டத்தினை சிதம்பரத்தில் நடாத்தினார்கள். இந்தக் கூட்டமே வழக்கிற்குக் காரணமான கூட்டமாக அமைந்தது. வள்ளலார் இக் கூட்டத்தில் நாவலர் என்ற சொல்லிற்கு பொய்யன், வித்தையில்லாதவன், நாவில் பழிச்சொல்லுடையோன் போன்ற தவறான விளக்கங்களைக் கொடுத்தார். வள்ளலார் தவறாகப் பேசினார் என்பதனைவிடத் தீட்சிதர்களால் தவறாகப் பேசவைக்கப்பட்டார் என்பதே பொருத்தமாகவிருக்கும். வள்ளலார் இத்துடன் நிற்க, தலமைத் தீட்சிதரான சபா நடேச தீட்சிதரோ “நாவலரை அடித்து நொருக்கவேண்டும்” என வன்முறையினை வெளிப்படையாகவே தூண்டினார்.
வழக்குப் பற்றிய தவறான விளக்கம்:
வையாபுரிபிள்ளை, மா.பொ.சி போன்றவர்கள் எழுதியதனை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்குப் பற்றிய ஒரு தவறான விளக்கமே மக்களிடமிருந்து வருகின்றது. அதாவது வள்லாரின் அருட்பாவினை நாவலர் மருட்பா எனக்கூறியதனாலேயே அது உண்மையிலேயே அருட்பாவா அல்லது மருட்பாவா என்று அறியவே வழக்குப்போடப்பட்டதாகவும், வள்ளலாரிற்கும்-நாவலரிற்குமிடையேயான வழக்கினை முத்துச்சாமி என்ற நீதிபதியே விசாரித்தார் எனவும் தவறாகக் கருதப்பட்டுவருகின்றது. வழக்கின் முடிவு பற்றி இருவேறு கருத்துக்கள் உண்டு. வள்ளலார் தரப்போ வள்ளலார் நீதிமன்றத்திற்கு வந்தபோது நாவலர்,நீதிபதி உட்பட எல்லோரும் எழுந்துநின்றதாகவும், அதனையடுத்து நாவலரே வள்ளலாரினைப் பெரியவராக நினைத்து எழுந்துநின்றுவிட்டபடியால் நீதிபதி வழக்கினை வள்ளலாரிற்குச் சார்பாகத் தீர்ப்பளித்துவிட்டதாகக் கூறினார்கள். மறுபுறத்தில் நாவலர் தரப்போ நீதிபதி வழக்கின் ஆரம்பத்தில் வள்ளலாரைப் பார்த்து குற்றவாளியா? சுற்றவாளியா? எனக் கேட்க வள்ளலார் சுற்றவாளி எனக்கூறிப் பொய் கூறியதால், பொய் கூறியவருடன் வழக்காடுவது மானக்கேடு என நினைத்து வழக்கினைத் திரும்பப்பெற்றதாகக் கூறுவார்கள். இவையாவுமே தவறான விளக்கங்களாகும்.
வழக்கின் உண்மை நிலை:
இவ்வாறான பிணக்கு நாவலரிற்குப் பின்னரும் கதிரைவேற்பிள்ளை-மறைமலை அடிகளார் போன்றோரால் பல ஆண்டுகளிற்கு அறிக்கைப்போராகத் தொடர்ந்திருந்தது. இதில் பல சுவையான தமிழ்ச்சொல் விளையாட்டுக்களும் உண்டு. எடுத்துக்காட்டாக அருட்பாவினை “ஆபாசத் தத்துவம்” எனக் குற்றஞ்சாட்டப்பட்டால், மறுதரப்பு அதே சொற்களையே திருப்பி “ஆ! பாசத் தத்துவம்” என எதிர்த்தாக்குதல் செய்தல் ஒரு வகை. “இறந்தார் எழுவர்” என்பது (செத்தோரை எழுப்புதல் அல்ல ) “மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனும் நான்கும், ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்கள் மூன்றும் அப்பாடலில் எழுவர் எனக் கூறப்பட்டுள்ளன. இவை ஏழும் ஒடுங்கி ஆன்ம போதம் முற்படுதலையே இறந்தார் எழுவர் எனக் குறிப்பிட்டுள்ளார் வள்ளலார்”. இறந்து ஆர் எழுவர் ? இறந்தார் யார்தான் எழுவர் ? “என விளக்குவது மற்றொரு வகை . இவை போன்ற பல சுவையான தமிழ்ச்சொல் விளையாட்டுக்கள் உண்டு.
அதேபோன்று இந்த விடயத்திலிருந்து பெறவேண்டிய படிப்பினை முதன்மையானது. இந்த முத்தரப்பு பிணக்கில் வெற்றிபெற்றது பார்பனியமே. வள்ளலாரைப் பொறுத்தவரை அவரது இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். அத்துடன் வள்ளலாரின் சன்மார்க்கம் இன்று நீர்த்திப்போய் வெறும் அன்னதான மடங்களாக சுருங்கிப்போய்விட்டது. நாவலர் தரப்பினரைப் பொறுத்தவரையில் இன்று ஈழத்திலேயே பார்ப்பனியம் ஆகமங்களை எல்லாம் புறந்தள்ளி வேதங்களை முன்நிறுத்திவிட்டது. அண்மைக் காலத்தில் ஈழத்தில் இந்துத்துவா அமைப்புக்களின் ஊடுருவலிற்குப் பின்னர் `சைவம்` என்ற சொல்லே `இந்து` என்ற சொல்லால் பதிலீடுசெய்யப்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் தீட்சிதர்களோ அசைக்கமுடியாத ஆற்றலுடையவர்களாக உருவெடுத்து நிற்கின்றார்கள். சில ஆண்டுகளிற்கு முன்னர் கூட சிவனடியார் ஆறுமுகம் நீதிமன்ற இசைவுடன் தமிழில் தேவாரம் பாடச் சென்றபோது, அவரைத் தாக்கிக் கோயிலிற்கு வெளியே கொண்டுவந்துவிடுமளவிற்கு அதிகாரம் படைத்தவர்களாகவே திகழுகின்றனர்.
வரலாறு திரும்புகின்றது:
இராமயணக் கதையில் வாலி-சுக்கீரிவன் மோதலிலிருந்தோ அல்லது மகாபாரதக் கதையில் பாண்டவர்- கௌரவர் மோதலிருந்தோ பார்ப்பனியம் எவ்வாறு பலனடைந்தது என்பதனை வள்ளலாரோ அல்லது ஆறுமுக நாவலரோ உணர்ந்துகொள்ளாமையால், அதற்கான விலையினைச் செலுத்தினார்கள். அதேபோன்று இந்தப் பிணக்கிலிருந்து எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளாமல் தமிழகத்தில் இன்று மோதிக்கொள்ளும் திராவிட-தமிழ்த்தேசிய மோதலிலும் பலனடையப்போவது உறுதியாகப் பார்ப்பனியமாகவே இருக்கப்போகின்றது. வரலாறு கற்றுத்தருவதற்கு எப்போதும் தயாராகவே உள்ளது, நாம்தான் பல வேளைகளில் கற்றுக்கொள்வதற்குத் தயாராகவிருப்பதில்லை