Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உத்திரப் பிரதேசம் : ஹத்ராஸ் குற்றவாளிகளை ஆதரிக்கும் பாஜக !

உத்திரப் பிரதேசம், ஹத்ராஸ் கிராமத்தில் 19 வயது தலித் இளம்பெண் கொடூரமாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டது, இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது. அதே நேரத்தில் மாநில அளவிலோ, இல்லை அந்த குற்றம் நடந்த பகுதி அளவிலோ நிலைமை வேறாக இருக்கிறது. அங்கே தாக்கூர் சாதியைச் சேர்ந்த அந்த நான்கு கொலைகாரர்களை பாதுகாக்கும் முழக்கம் ஓங்கிக் கேட்கிறது.

இரவோடிரவாக எரிக்கப்பட்ட தலித் இளம்பெண்ணின் சடலம்! குற்றத்தை மறைக்க முனையும் போலீசு!

அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை அனைத்தும் ஆதிக்க சாதிகளால் நிரம்பி வழியும் நிலையில் அவற்றை ஆதிரிக்கும் ஆதித்யநாத் பாஜக அரசு இருக்கும் வரையில் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியல்ல. ஒரு போதும் கிடைக்காது என்பதுதான் உண்மை. பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  சி.பி.ஐ சாட்சியங்கள் ஏதுமில்லை என்று சிறப்பு நீதிமன்றம் பாஜக குற்றவாளிகளை விடுவித்தது சமீபத்திய சான்று. அதே சி.பி.ஐ.யை விசாரிக்குமாறு ஆதித்யநாத் அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. வழக்கையும் கையளித்து விட்டது.

இது நடந்து ஒரு நாளில் ஹாத்ராசின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வின் தலைமையில் ஆதிக்க சாதியினர் கொலைகாரர்கள் நால்வரையும் ஆதரித்து ஒரு கூட்டத்தையே அங்கே நடத்தியிருக்கின்றனர். இதற்கு போலீசு பாதுகாப்பு வேறு. மாறாக அந்த கிராமத்தில் தனது மகளை பறிகொடுத்த அந்த ஏழை தலித் பெற்றோரை பார்க்க வருவோரை போலீசு அடித்து விரட்டுகிறது. ஆனானப்பட்ட ராகுல் காந்தியையே பிடித்து தள்ளியிருக்கிறது. மற்ற எதிர்க்கட்சியினருக்கும் அதுவே நிலைமை.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏவானா ரஜ்வீர் சிங் பெஹெல்வன்தான் அந்த பகுதியின் முக்கியமான பாஜக பிரமுகர். அவர் நடத்திய அந்தக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருக்கின்றனர். கொலைகாரர்கள் நால்வருக்கும் நீதி வேண்டும் என்று அவர்கள் அங்கே முழக்கமென கூவியிருக்கின்றனர். நாக்கை அறுத்து முதுகெலும்பை உடைத்து ஒரு இளம்பெண்ணை கொடூராமக கொன்று விட்டு இப்படி குற்றவாளிகளை பாதுகாக்கும் செயல் என்பது இந்தியாவன்றி வேறு எந்த நாட்டில் நடக்கும்?

பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ இப்படி குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறிவிட்டு அரசின் சி.பி.ஐ விசாரணையை வேறு வரவேற்றியிருக்கிறார். சி.பி.ஐ. தனது அரசின் எடுபிடி என்பதில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. மேலும் உண்மை அறியும் சோதனையை குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், போலீசார் அனைவருக்கும் நடத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ‘உண்மை’ என்பது அங்கே ஆதிக்க சாதி குற்றங்களுக்கு தலைமை வகிக்கும் பாஜகவின் சட்டைப் பையில் இருக்கும் போது எந்த சோதனை நடத்தி என்ன பயன்?

கொலைகாரர்களான சந்தீப் (20), ரவி (35), லவ் குஷ் (23), ராமு (26) ஆகியோர் நால்வரும் அப்பாவிகள் என்று நெஞ்சறிய பொய் சொல்கிறது தாக்கூர் தாதி ஆதிக்க வெறிக் கூட்டம். இவர்களை ஆதரித்து அந்த வட்டாரங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. ஒரு புறம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திப்பதற்கும், அதற்கு நீதி கேட்டும் எதிர்க்கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் போராடும் வேளையில் அதை கலைக்கும் போலீசு, ஆதிக்க சாதியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும் பொறுப்பாக பாதுகாப்பு கொடுக்கிறது.

இளம்பெண்ணை பறிகொடுத்த பெற்றோரை பீம் சேனாவின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் சந்தித்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எப்படியாவது தங்களை அந்த கிராமத்திலிருந்து அழைத்துச் செல்லுமாறு அவரிடம் மன்றாடியிருக்கின்றனர். அவரும் அப்படி முயற்சித்தாலும் போலீசும், அதிகார வர்க்கமும் அதை தடுத்து நிறுத்தி விட்டது. அந்தக் குடும்பத்தை வெளியேற அனுமதித்து விட்டால் குற்றத்தை குழி தோண்டி மூடி மறைக்க முடியாது அல்லவா?

பாஜக-விற்கு ஆதரவான கங்கனா ராவத் எனும் பெண் நடிகருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கும் போது அந்த தலித் குடும்பத்திற்கு ஏன் எந்த பாதுகாப்புமில்லை என்று  கேள்வி கேட்கிறார் ஆசாத். மேலும் அந்த பகுதியில் ஆதிக்க சாதிகளின் மகா பஞ்சாயத்து எனப்படும் கிராமக் கூட்டங்கள் ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டர்களுக்கும் நடக்கிறது என்கிறார் ஆசாத். சிபிஐ விசாரணை என்பது ஒரு கண்துடைப்பு என்று கூறும் ஆசாத் அதற்கு பதில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அதுவும் தங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவரைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்கிறார்.

அலிகார் முசுலீம் பல்கலையைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில்தான் அந்த இளம்பெண் இரண்டு வாரம் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மரித்தும் போனார். அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான அசீம் மாலிக், “ அந்த பெண் வல்லுறவு செய்யப்படவில்லை என்று உத்திரப்பிரதேச போலீசு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில் வன்புணர்வு நடந்திருக்கிறதா என்பதற்கான தடவியல் மாதிரிகள் 11 நாட்கள் கழித்தே சேகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு வழிகாட்டுதலின் படி தடயவியல் ஆதாரங்கள் சம்பவம் நடந்து 96 மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார் அந்த தலைமை மருத்துவர்.

இந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக இந்த மருத்துவரை உ.பி. பாஜக அரசு எப்படி பந்தாடப் போகிறதோ தெரியவில்லை. நான்கு தாக்கூர் சாதி கொலைகாரர்களால் அந்தப் பெண் சிதைக்கப்பட்ட தேதி செப்டம்பர் 14. மருத்துவமனையில் அந்தப் பெண் நினைவு வந்து ஒரு மாஜிஸ்ட்ரேட் முன் வாக்குமூலம் கொடுத்த தேதி செப்டம்பர் 22. அதன் பிறகே குற்றப்பத்திரிகையில் போலீசு வன்புணர்வு பிரிவை சேர்க்கிறது. ஒரு வாரம் அந்தப்பெண் வாய் திறப்பதற்கு முன் அது வன்புணர்வு இல்லை என்று போலீசு நம்பியிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இவ்வளவிற்கும் அந்தப் பெண்ணின் தாயும், சகோதரனும் நடந்தவற்றை விரிவாக கூறியிருக்கின்றனர். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்திற்கு பிறகு 11 நாட்கள் கழித்தே மாதிரிகள் தடயவியல் அறிவியல் சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த சோதனைக்கூட அறிக்கையின் படியே போலீசு வன்புணர்வு நடக்கவில்லை என்று கூறுகிறது.

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் தங்குமிட மருத்துவர் சங்கத் தலைவரான மருத்துவர் ஹம்சா மாலிக், தடயவியல் சோதனைக்கூடத்தின் அறிக்கை நம்பகமானது இல்லை என்கிறார். 11 நாட்கள் கழித்து எப்படி மாதிரிகளை எடுக்க முடியும் என்று கேட்கும் அவர், ஆணின் விந்து அணுக்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு அழிந்து விடும் என்கிறார்.

ஊடக வெளிச்சம் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு தங்களுக்கு என்ன நடக்கும் என்ற அச்சத்தில் அந்த தலித் பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமல்ல மற்ற தலித் குடும்பங்களும் பெரும் பயத்தில் தவிக்கின்றனர். அந்த கிராமத்தை  விட்டு வெளியேற விரும்புகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற வருவோருக்கு ஆயிரத்தெட்டு தடை.

தமிழ்நாட்டு பாஜக கும்பலின் சுவரொட்டி!

இப்படி இருக்கையில் தமிழ்நாடு பாஜக கும்பல் வெளியிட்டிருக்கும் ஒரு சுவரொட்டியைப் பாருங்கள்! “உத்திரப் பிரதேசத்தின் மாநிலத்தில் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி.மனிஷாவிற்கு கண்ணீர் அஞ்சலி” என்று வெளியிட்டிருக்கிறார்கள்.

உ.பி.யில் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்! தமிழகத்தில் காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும்தான் குற்றவாளிகள் என்கின்றனர்! கோயாபல்ஸே வெட்கித் தலைகுனியும் இந்த புளுகுணித்தனத்தை செய்யும் கட்சிதான் இந்தியாவை ஆள்கிறது! பாசிசம் நமது வீட்டுக் கதவை தட்டவில்லை, உள்ளேயே நுழைந்து விட்டது, என்ன செய்யப் போகிறோம்?

– வரதன்

Exit mobile version