Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தெற்காசிய மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க தீர்மானம்: சபா நாவலன்

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு திட்டமிட்டு செயற்படுத்திய இலங்கை அரசியல் ஐ.நா தீர்மானத்தோடு தனது பெரும்பகுதி வெற்றியை எட்டியுள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அரசும் இலங்கை அரசும் இணைந்து ஐ.நாவில் சமர்ப்பித்த இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் தெற்காசியப் பிராந்திய ஜனநாயகத்திற்கும், புரட்சிக்கும் அமெரிக்க அரசு விடுத்துள்ள எச்சரிக்கை! தெற்காசியப் பிராந்தியத்தில் மக்களின் விடுதலைக்கான எந்தப் போராட்டமும் இந்திய அரசிற்கும் எதிரானதாகவே ஆரம்பத்திலிருந்து திட்டமிடப்பட வேண்டும் என்பது மறுக்கவியலாத உண்மை. இன்று அது அமெரிக்க அரசிற்கும் எதிரான மூலோபாயங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதை அமெரிக்க அரசு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இன்றைய நகர்வு பல வருடங்களின் முன்னரே திட்டமிடப்பட்டது.

ஆசியாவை முன்னிலைப்படுத்தல்(Asia Pivot) என்ற அமெரிக்க அரசின் கோட்பாட்டு வரைமுறை 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அத் திட்டத்தில் தெற்காசியாவின் ஈர்பு மையமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டது. அதன் பின்னான ஒவ்வொரு நகர்வுகளும் மிகவும் அவதானமாகத் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டன.

உலகத்தை ஆட்சி செய்யும் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் நிர்வாகியாக ஒபாமா தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சரக் கூட்டத்தில் ஒபாமா தனது வெளியுறவுக் கொள்கையை முன்வைத்தார். ‘மத்திய கிழக்கு நாடுகளில் தாம் கவனம் செலுத்திய அளவிற்கு ஆசியாவில் தமது கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறினார். அமெரிக்கத் தலையீட்டால் மத்திய கிழக்கு முழுவதும் இரத்தம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்த வேளையில் ஒபாமாவின் அரச துறைச் செயலாளராகவிருந்த ஹில்லாரி கிளிங்டன் ஆசியா பிவோட் கோட்பாட்டைச் செழுமைப்படுத்தி தெற்காசியாவில் அமெரிக்கத் தலையீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

அமெரிக்கத் தலையீட்டின் தெற்காசிய ஈர்ப்பு மையம் இலங்கை

தெற்காசியாவில் அமெரிக்கத் தலையீட்டின் ஈர்ப்பு மையமாக இலங்கை மாற்றமடைந்த போதே அந்த நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நபர்கள் நியமிக்கப்பட்டனர். தென்கொரியாவின் வெளிவைகார அமைச்சராகவிருந்த பன் கி மூன் ஊடாக ராஜபக்ச குடும்பத்திற்கு தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளராகப் பதவியேற்ற பன் கீ மூன், புது டெல்லியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திலேயே தனது முதலாவது வெளிவிவகாரத் தொழிலை ஆரம்பித்தார். பன் கீ முன் ஐ.நா செயலாளராகப் பதவியேற்றதும் தனது தலைமை நிர்வாகியாக விஜை நம்பியாரை நியமித்தார்.

ஹம்பாந்தோட்டை தாதாவான ராஜபக்ச ஆட்சியமைத்ததும் அமெரிக்காவில் குடியிருந்த கோத்தாபய மற்றும் பசில் ராஜபக்சக்கள் இலங்கைக்குத் திரும்பினர்.

வன்னிப் படுகொலைகளின் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டதற்கான ஆதாரங்கள்

வன்னி இனப்படுகொலை ஆரம்பித்த நாட்களில் அதனை விரைபடுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் ராஜபக்சவிற்கு அறிவுறுத்தியதாக விக்கிலீக்ஸ் இன் மற்றொரு தகவல் கூறுகின்றது.

ராஜபக்ச அரசு ஆட்சியமைப்பதற்கு பன் கீ மூன் மட்டுமல்ல, அமெரிக்கா சார்பான மேலும் சக்திகளும் உதவி வழங்கின. விக்கி லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில், எவ்வளவு உயிரிழப்பு எற்பட்டாலும் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று உலக வங்கியும், உலக நாணய நிதியமும் விரும்பியிருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைக் கூறுகளான இந்த நிறுவனங்களின் விருப்புத் தொடர்பாக ஹில்லாரி கிளிங்டனுக்கு அவரது ஆலோசகர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் அனுசரணையுடன் அமெரிக்க அரசால் திட்டமிட்டு ஏவப்பட்ட இனப்படுகொலையின் உள்ளூர் வேலையாள் தான் மகிந்த ராஜபக்ச. சந்திரிக்கா ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் அவரின் கைப் பொம்மையாகச் செயற்பட்ட மகிந்த ராஜபக்சவின் காலத்திற்குரிய திறைமையை அமெரிக்க ஏகாதிபத்தியம் அடையாளம் கண்டுகொண்டது.

அமெரிக்கா மக்கள் கொல்லப்படுவதை விரும்பியது

தெற்காசியாவில் தனது ஆதிக்கத்திற்கான மையப் புள்ளியாக இலங்கை மாற வேண்டுமானால் இலங்கையில் ஆயுதப் போராட்டமும் சமூக முரண்பாடுகளும் தணிந்திருக்க வேண்டும் என அமெரிக்கா சார்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் திட்டமாகவிருந்தது. அந்த அடிப்படையில் இரண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன.

1. புலிகளை முற்றாக அழிப்பது

2. அதிக அளவிலான மக்கள் அழிப்பை ஏற்படுத்தி மிக நீண்ட காலத்திற்குப் ஆயுதம் தாங்கிய போராட்டம் மீதான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது.

அதன் முதல் பகுதியாக புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலின் சிறிய பகுதிக்குள் முடக்கும் திட்டம் அரங்கேறியது. அங்கு மக்களின் ஓலம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் எதிரொலித்தது.

கிரேக்க கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள்

1949 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானிய அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் இதே போன்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறுகிய பிரதேச வரம்புக்குள் முடக்கப்பட்ட போராளிகளும் மக்களும் நீண்ட அவலத்தின் மத்தியில் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இன்றுவரை கிரேக்கத்தின் மீது தமது ஆதிக்கத்தை கோரமாகச் செலுத்தும் ஏகாதிபத்தியங்கள், அங்கு மீண்டும் மக்கள் எழுச்சி தோன்றிவிடாமல் திட்டங்களை வகுத்துக்கொள்கின்றன. கிரேக்கத்தில் மிக நீண்ட காலத்திற்கு ஆயுதப் போராட்டம் பின்போடப்பட்டது. அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன.

அதே போன்ற திட்டம் ஒன்றே வன்னியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. நோர்வேயின் மத்தியத்துவத்தின் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்தி புலிகள் இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை களைந்து மானில சுயாட்சி போன்ற அமைப்பு வழங்கப்பட்டிருந்தால் கூட அது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியாகவே கருதப்பட்டிருக்கும். திட்டமிட்டு மக்களையும் போராளிகளையும் விரக்திக்கு உள்ளாகி ஏகாதிபத்தியங்கள் நடத்திய அழிப்பின் விளை பலனாக மிக நீண்ட காலத்திற்கு மக்கள் ஆயுதப் போராட்டம் குறித்துச் சிந்திக்க மாட்டார்கள்.

தவிர, கிரேக்கத்தில் நடைபெற்றது கம்யூனிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் என்பதால், அதன் அழிவிலிருந்தே பல கம்யூனிஸ்டுக்கள் தோன்றினார்கள். ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான உணர்வு இன்றுவரை கிரேக்க மக்களை உறுதி குலையாத போராட்ட சக்திகளக ஐரோப்பாவில் பேணி வருகிறது என்பது வேறு விடையம்.

அழிக்கப்பட்டதற்குக் காரணம் ஏகாதிபத்தியங்கள் மட்டுமல்ல..

வியற்னாம் போரின் போது தோற்றுப் போன அமெரிக்கப்படைகள் அப்பாவிகளைக் குறி வைத்தன.

கிரேக்க கெரில்லாக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையேயான சில ஒற்றுமைகளும் உண்டு, இரண்டு போராட்டங்களுமே மக்கள் அணிதிரட்டப்பட்ட ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தத்தை மறுத்து ஆயுதம் தாங்கிய கெரில்லா யுத்தத்தையும், மரபு வழிப் போர்முறையையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலை புலிகள் ஏகாதிபத்திய நாடுகளில் குடியிருந்த தமிழர்களை ஆயுதக் கொள்வனவிற்காக நம்பியிருந்ததைப் போன்று கிரேக்கக் கெரில்லாக்கள் யூகோஸ்லாவியாவை நம்பியிருந்தனர். இரண்டு பகுதியினரும் மக்களை நம்பியிருக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைத் தொழிற்சங்கங்களாகவும், நிர்வாக அலகுகளாகவும் அணிதிரட்டி தற்காப்பு யுத்தத்தை நடத்துவதை விட சில நபர்களின் கூட்டான இராணுவத்தை உருவாகுவதையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் தோற்றதாக வரலாறில்லை. சீனாவில் மாவோ சேதுங்கும் அவரது தோழர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் இராணுவத்தை ஒழுங்கமைப்பது தொடர்பன நவீன முறையை உலகத்திற்கு வழங்கியிருந்தனர். அதனைப் பின்பற்றிய வியட்னாமியப் போராட்டம் அணுவாயுதங்களோடு யுத்தம் செய்த பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஆகிரமிப்புப் படையை புறமுதுகு காட்டி ஓடச் செய்தது. இன்று பிலிப்பைன்ஸ் கெரில்லாக்களை அமெரிக்கப் படைகளால் கூட அணுக முடியவில்லை. இந்திய அரசின் கொல்லைப் புறத்தில் நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் மன்னராட்சியை அழித்துத் தலை நகரைக் கையகப்படுத்தியது.

ஆக, தெளிவான அரசியல் வழிமுறையும் அதன் வழியில் கட்டமைக்கப்பட்ட மக்கள் இராணுவமும் இல்லாமை புலிகளை அழிப்படக்கூடிய இயக்கமாகவே பேணி வந்தது. ஏகாதிபத்தியங்கள் அழிப்பின் வழிமுறையைத் தமது எதிர்கால நலன்களுக்கு ஏற்பவே திட்டமிட்டன. மக்கள் அழிவில்லாமல் புலிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தால் போராட்டம் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிராது. ஆக, இலகுவில் அழிக்கப்படக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை பேரழிவின் ஊடாக அழித்தமைகான காரணங்கள் தெளிவானவை. அவ்வாறான கோரமான அழிப்பின் பலனை இன்றைய அமெரிக்கத் தீர்மானம் அறுவடை செய்திருக்க்றது.

போரின் பின்னரும் ராஜபக்சவின் பங்களிப்பு அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது

வன்னி இனப்படுகொலையின் பின்னர் ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்டார். போர் வெற்றியை வாக்குகளாக மாற்றிய ராஜபக்ச ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய அரசிற்கும் தேவைப்பட்டது.

போரின் பின்னான அரசியலில் இரண்டு முக்கிய நகர்வுகளைக் காணலாம்:

1. போரை எதிர்த்க்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை அமெரிக்க சார்ப்பனவர்களாக மாற்றுவது.

2. எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கக் கூடியவர்களை ராஜபக்ச ஊடாகச் சுத்திகரிப்பது.

இந்த இரண்டையும் போரின் பின்னான ஐந்து வருடங்களின் கன கச்சிதமாக அமெரிக்க அரசு நடத்தி முடித்துள்ளது.

அதே காலப்பகுதியில் ராஜபக்ச அரசிற்கு எதிரான விசாரணை என்ற பெயரில் தனது புலம்பெயர் அடிமைகள் ஊடாக அமெரிக்க அரசு போர்க்குற்ற விசாரணை என்ற நாடகத்தை நடத்தி புலம்பெயர் தமிழர்களின் பெரும் பகுதியினரைத் தமக்கு ஆதரவாக உள்வாங்கிக் கொண்டது. புலம்பெயர் நாடுகளிலுள்ள அனைத்து அமைப்புக்களும் இணைந்து உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்து மக்களை அன்னியப்படுத்தின.

ஆக, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கருதிய அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் அன்னியப்படுத்தப்பட்டு போராட்டத்திற்கான நியாயம் அழிக்கப்பட்டது. மறுபக்கத்தில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தவிர்க்கவியலாமல் ராஜபக்ச எதிர்பு என்ற தலையங்கத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை நோக்கித் தள்ளப்பட்டனர்.

தவிர, அமெரிக்காவின் நோக்கங்களைப் புரிந்துகொண்ட எதிர்ப்பு நாடுகளை இலங்கை மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தும் பணியையும் அமெரிக்கா செய்து முடித்திருக்கிறது.

அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரவர்க்கங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென இதனைக் கருதலாம்.
இவ்வாறு இலங்கையிலிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளும், புரட்சிகரச் சிந்தனை கொண்டவர்களும் சுத்திகரிக்கப்பட்டதோடு ராஜபக்சவின் பணி தேவையற்றதாகிவிட்டது.

அழிப்பிற்காக உருவாக்கப்பட்ட புதியவர் மைத்திரிபால

புலம்பெயர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய அமெரிக்க பிரதி ராஜாங்க செயலருடன் மைத்திரி

புலிகளை அழிப்பதற்கு தகுதியானவராக ராஜபக்சவை அடையளம் கண்ட அமெரிக்கா, ராஜபக்சவை அகற்றுவதற்கு தகுதியானவராக மைத்திரிபாலவை அடையாளம் கண்டுகொண்டதன் விளைவே ஜனவரி 8ம் திகதி ஆட்சி மாற்றம். அதன் பின்னர் ஏற்கனவே அமெரிக்காவின் ராஜாங்கத் திணைகளத்தின் நிதி வளத்தில் மசூசெட் பல்கலைக் கழகத்தில் பயிற்சிபெற்ற ரனில் விக்ரமசிங்க என்ற நேரடி முகவரின் கீழ் இலங்கையில் புதிய ஆட்சி நிறுவப்பட்டது.
இந்த வெற்றிகளின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் அமெரிக்கா தொடர்பான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும், தமிழர்கள் மத்தியில் அதனைப் பேணுவதற்கும் போர்க்குற்ற விசாரணை நாடகத்தை முடிவிற்குக் கொண்டுவர வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருந்தது.

அதுவே இப்போது வெளியிடப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானம்.

அமெரிக்கத் தீர்மானத்தின் நோக்கம்

 சிங்கள மக்கள் மத்தியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்பான நேர்மறையான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதும், சிங்கள அதிகாரவர்க்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டைப் பேணுவதுமே தீர்மானத்தின் முதலாவது பிரதான நோக்கம்.

இரண்டாவதாக தமிழ்ப் பேசும் ஜனநாயக சக்திகளின் மத்தியில் சமரசப் போக்கை வளர்ப்பதும், ஒரு வகையான அச்ச உணர்வை ஏற்படுத்துவதும் அதன் அடுத்த நோக்கம்

மூன்றாவதாக பயங்கரவாதம் என்று அமெரிக்க அரசு கருதும் அனைத்தும் அழிக்கப்படும் என்றும்  அழிக்கப்பட்டவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் நீதி கிடைக்காது என்ற பொதுக் கருத்தை ஏற்படுத்துவது.

இவை அனைத்தையும் நிறைவேற்றிய பெருமை தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களையும், புலம்பெயர் ஏகாதிபத்திய முகவர்களையுமே சாரும்.

மகிந்தவும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படுவார்களா?

இதன் மறுபக்கத்தில் இனப்படுகொலையை நடத்தி முடித்த மகிந்த ராஜபக்சவின் குடும்பம் தண்டனைக்கு உட்படுத்தப்படுமா என்றால் இல்லை என்பது தான் பதில். இன்று சிங்கள ஏகாதிபத்திய அடிவருடிகளைத் திருப்திப்படுத்த போர்க்குற்ற விசாரணை மாற்றியமைக்கப் படுகிறது என்றால், அந்த அதிகாரவர்க்கத்தின் பேரினவாதக் குறியீடாகவிருக்கும் ராஜபக்சவைத் தண்டிபது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல நடைபெறாது என்பதும் உண்மை.

வேண்டுமானால் ஊழல் குற்றங்களை முன்வைத்து ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சிகள் இடம்பெறலாம். ஆபத்தானவர்கள் அல்ல என இலங்கை அரசும் அமெரிக்காவும் கருது சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படலாம். போர் வெற்றியுடன் நேரடியாக அடையாளப்படுத்தப்படாத சில இராணுவத் தொழிலாளர்கள் தண்டிக்கப்படலாம்.

இனி…

இதன் பின்னரும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடரும். உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசுடன் நேரடியான தொடர்பிலிருப்பார்கள். பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமிழ் அதிகாரவர்க்கத்துடன் இணைந்துகொள்ளும் இன்னும் எஞ்சியிருக்கும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட உணர்வைக் கையகப்படுத்தி, தமிழ்த் தேசியம் பேசி அழிப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தென்னிந்திய ‘உணர்வாளர்’ உணர்ச்சிக் குழுக்களும் செயற்படும்.

தவிர, அமெரிக்கத் தலையீடுகளுக்கு எதிரான குழுக்களை அமெரிக்காவே உருவாக்கும். மறுபுறத்தில் இலங்கையில், இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்ற மக்கள் போராடிப்பெற்ற உரிமைகள் அழிக்கப்பட்டு அதன் வளங்கள் சுரண்டப்படும் மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்படுவர்.

இவை அனைத்திற்கும் எதிராகப் போராட புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் இதனை மறுப்பவர்கள் தமிழ் நாட்டிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலுமிருந்தும் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது அமெரிக்க அரசு மக்கள் அழுத்தங்களுக்கு செவிசாய்க்கும் ஜனநாயக அரசு என்ற தோற்றப்பாடை மக்களுக்கு மீண்டும் வழங்க முற்படுகின்றனர்.

ஏகாதிபத்தியங்களுக்கு என்று திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது. அதன் அடிப்படையில் அவை எந்த அழிவுகளை வேண்டுமானாலும் ஏற்படுத்தத் தயார். சொந்த நாட்டு மக்களையே அவர்கள் மதிப்பதில்லை. அமெரிக்கா முழுவதும் கருப்பு நிற தொழிலாளர்கள் மூன்றாம் தரப் பிரசைகளாகவே இன்றும் நடத்தப்படுகின்றனர். அரைக் கருப்பரான ஒபாமா ஆட்சியிலேயே அதிகமான கருபர்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள தமிழ்த் தலைமைகளின் பலத்தை மீறி, புதிய அரசியலை முன்வைத்து நடைமுறைப்படுத்துவது என்பது இன்று இலகுவானதல்ல. பெரும்பாலான ‘தமிழ்த் தேசிய’ வாதிகள் தங்கள் ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்கு பிரபாகரனையும் புலிப் போராளிகளின் தியாகங்களையும் துணைக்கு இழுக்கின்றனர். விமர்சனம் சுய விமர்சனம் என்ற பக்கத்தை நிராகரித்து தோற்றுப்போன வழிமுறைகளையே மீண்டும் அரசியலாக்க முனைகின்றனர். இலங்கையில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற நிலை அழிந்து அவர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டாலும் பிழைப்புவாதத் தலைமைகள் மாறப்போவதில்லை.

எது எவ்வாறாயினும் இன்றைய அரசியல் சூழல் முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு சார்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதி முன்னணிச் சக்திகள் ஏகாதிபத்தியங்கள் என்றால் என்னவென்று நடைமுறை அளவில் புரிந்துகொண்டுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வறிய சமூகம் ஒன்று மைத்திரி-ரனில் கூட்டரசால் தோற்றுவிக்கப்படும். அந்த சமூகத்தின் போராட்டங்களில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பங்களிப்பை வழங்குவதன் ஊடாக சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை அவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும். அதற்கான அரசியல் வழிமுறை மட்டுமே இலங்கை பேரினவாத அரசையும், அதிகார வர்க்கத்தையும் பலமிழக்கச் செய்யும்.

இலங்கையில் இனப்படுகொலையக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டவரே பன் கீ மூன்

http://www.innercitypress.com/foia1hillarysri063015.html

WikiLeaks: Bush Personally Had Encouraged Rajapaksa To Pursue Defeat Of The LTTE

புலிகளை அழிப்பதற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணையும்

Hillary Clinton Could Save America’s Asia Pivot
Sri Lanka’s pivot to India breaks China’s dreams
Obama intensifies “pivot” to Asia
அமெரிக்கா பயிற்றுவித்த முகவர் ரனில் பதவியேற்பு :இலங்கையில் புதிய அழிவுகளின் தொடக்கம்
Exit mobile version