Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீபன் படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ளல் பற்றி….. : வாசுதேவன்

dheepanmovie
தீபன் திரைப்படத்திற்காக புலம்பெயர் சூழலிலிருந்து உள்வாங்கப்பட்ட சோபாசக்தி(இடது)

2014 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் ஜக் ஓடியார் “எரான்”; எனும் புதிய திரைப்படத்தை நெறியாள்கை செய்ய உள்ளார் என்ற பத்திரிகைச் செய்தி ஓடியாரின் ரசிகர்களுக்கு மகிழ்வளித்திருந்தது. 2015ம் ஆண்டின் கான் திரைப்பட விழாவை முன்நிறுத்தி இப்படப்பிடிப்பு நிகழ உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

18ம் நூற்றாண்டின் பிரபல பிரஞ்சு அரசியல் தத்துவமேதையான மோந்தெஸ்கியோவின் “பாரசீகக் கடிதங்கள்” எனும் நூலின் பாணியிலான அரசியல் கருத்தோவியமாக திரைப்படம் அமையும் எனவும் ஓடியார் தெரிவித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுதாகப் புரிந்து கொள்ள “பாரசீகக் கடிதங்கள்” பற்றிய முன்னறிவு இன்றியமையாததாகும்.

நேரடியாகவும், வெளிப்படையாகவும் தன் அரசியற் கருத்தை முன்வைக்க முடியாத ஒரு முடியாட்சிச் சூழலில், புனைபெயரில் மோந்தெஸ்கியோ இந்நூலை எழுதியிருந்தார்.

அதாவது, பாரசீகத்தில் இருந்து இரண்டு குடிமக்கள் ஐரோப்பா விற்கும், குறிப்பாக பிரான்சுக்கும் வருகை தந்து அவர்கள் தமது நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களாக அந்நூல் அமைந்திருந்தது.

உண்மையைச் சொல்லுவதானால், தனது தாய் நாட்டின்பால் கொண்ட அக்கறையால், அதன் அரசியல், சமூக, மதச் சூழ்நிலைகளின் மீதான தனது காட்டசாட்டமான விமர்சனத்தை அவர் இரண்டு பாரசீக இஸ்லாமியர்களின் பார்வையாக முன்வைத்தார். திட்டமிட்ட வகையிலும், பிரஞ்சு மக்களுக்கு அரசியற் பிரக்ஞையை ஊட்டும் வகையிலுமாக இந்நூல் பிரஞ்சு தேசத்தை அந்தியர்களின் பார்வையில் இழிவுபடுத்தியிருந்து.

இந்தப்பாணியில்தான், ஒடியாரும் தனது “எரான்” (பின்னாளில் “தீபன்” ஆக்கப்பட்ட) திரைக்காவியத்தை இயக்குவதாக முன்கூட்டியே அறிவித்தார். இவ்வியம் பலருக்குத் தெரியாமலிருந்தது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடியதல்ல.

பாசிசக் கட்சியான தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லூ பென்

அடுத்து, கடந்த சில வருடங்களாக பிரான்சின் அரசியல்வாதிகள் போட்டிபோட்டுக்கொண்டு அரபோ-இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை முன்னிலைப்படுத்தி, அதற்குப் பசளையிட்டு வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையானது பாசிசக் கட்சியான தேசிய முன்ணணியை முதன்மைக்கட்சிகளுள் ஒன்றாக மாற்றிவிட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இக்கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் எனும் அச்சம் ஜனநாகயவாதிகள் மத்தியில் தோன்றாமலுமில்லை.

பொருளாதாரப் பிரச்சனைகளின் உண்மைவேரை மறைக்கும் பெருநிதியங்களின் சதிவலைப் பின்னல்களின் பகுதியாக முதன்மையூடகங்களும் மாறிவிட்டன. தினமும் இவ்வூடகங்கள் சிறிது சிறிதாக இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை நஞ்சாக மக்கள் மத்தியில் ஊட்டிக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போ நடைபெறும் பயங்கர வாதச் சம்பவங்களும் இவ்வாறான ஊடகங்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில், பாசிசக் கட்சியான தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பதை வெட்கத்துக்குரிய விடயமாகக் கருதிய பிரஞ்சுக்காரர்கள் தற்போதெல்லாம் அதையொரு தேசிய விடுதலைக்கான கட்சியாகப் போற்றிப் புகழ்கிறார்கள். இதில், பல புத்திஜீவிகளும் அடங்குகிறார்கள் என்பது தான் அச்சத்திற்குரிய விடயம்.

உவெல்பெக்

பிரான்சில், ஐரோப்பாவில் என்றும் கூடச்சொல்லலாம், இஸ்லாமியர்களில் வெறுப்பை உமிழும், இஸ்லாமை இழிவுபடுத்தும் படைப்புகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து அவற்றை முன்தள்ளிவிடுகின்றன என்பது ஒரு இரகசியமான விடயம் அல்ல. உவெல்பெக் எனப்படும் சர்ச்சைக்குரிய பிரஞ்சு எழுத்தாளர் இஸ்லாம் பிரான்ஸை ஆக்கிரமிக்கபோகிறது எனும் பாணியிலான ஒரு நாவலை எழுதினார். அது மில்லியன் கணக்கில் மேற்குலகெங்கும் விற்கப்பட்டது. எரிக் ஸெமூர், அலன் பங்கியல்குரொத் போன்ற மற்றும் பல யூதஇனப் புத்திஜீவிகள் அடிக்கடி சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்புக் கோசங்களை அள்ளி கொட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.

தொலைக்காட்சியில் அவர்கள் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லையெனும்அளவிற்கு அவர்களின் பிரசன்னம் அச்சமூட்டுவதாக உள்ளது.

இஸ்லாமிய எதிரப்பு வாதமென்பது தற்போது பிரான்சில் பெரும் முக்கியத்ததுவத்தைப் பெற்றுவிட்டதுடன், பொதுவாக வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சகிக்கமுடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது எனும் கருத்து மிகப்பெரும்பாலான பிரஞ்சு மக்களின் மனதில் விசாலித்து விட்டிருக்கும் இந்நிலையின்தான் “தீபன்” திரைப்படம் உருவாக்கப்பட்டது என்பதை மனதிருத்தியே இந்தப்பிரஞ்சுப் படத்தை அணுகுதல் வேண்டும்.

மேலும், பிரான்சில் அண்ணளவாக பத்து வீதமானவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்களில் மிகப்பெரும்பான்மையினர் சாத்வீகமாக வாழ்பவர்கள். அனதை;து ஐரோப்பியப் பெருநகரங்களிலும் போன்று பிரான்சின் பெருநகரங்களின் புறநகர்ப்பகுதிகளும் உழைக்கும் வர்க்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நவீன சேரிகளாகக் காணப்படுகின்றன. இங்கு வாழ்பவர்களின் மிகப்பெரும்பான்மையினர் வெளிநாட்டுக் குடிமக்கள். இப்புறநகர்கள் திட்டமிட்டமுறையில் அபிவிருத்தி செய்யப்படாத இடங்களாகவே காணப்படுகின்றன.

சாதாரண ஒரு பாடசாலையில் உள்ள வசதிகள் இப்பகுதிகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இப்பகுதிக்கட்டடங்கள் கூட பிரஞ்சுக்காரர்களால் முயற்கூடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

எல்லாவற்றையும் மீறி கல்வி கற்று உயர்பட்டங்களைப் பெற்றபோதும் அரபோ-இஸ்லாமியர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை எடுப்பது என்பது மிகமிகக் கடினமானது.

அண்ணனுக்கு நடக்கும் சிறுமைப்படுத்தல்களைப் பார்த்து தம்பி படிப்பில் அக்கறை கொள்வது சாத்தியமற்ற விடயமாகியது. இன்னும் இன்னும் பல்வேறு காரணங்களால், புறநகரங்கள் வன்முறையின் உறைவிடங்களாகவும், போதை வஸ்து வியாபார மையங்களாகவும் உருப்பெற்றன. இவ்விடயத்தை பொதுமைப்படுத்தி எல்லாப் புறநகரங்களும் இவ்வாறுதான்உள்ளன என்றும் கூறிவிடமுடியாது. ஐரேப்பா முழுவதிலுமே இவ்வாறான புறநகரங்கள் உள்ளன. (சுவிசைத் தவிர்க்கலாம்என நினைக்கிறேன்).

அடுத்து,ஒன்றரை நூற்றாண்டுக்களுக்கும் அதிகமான காலத்தைய காலணித்துவ ஒடுக்குமுறையுறவு வட ஆபிரிக்க அரபுலகிற்கும் பிரான்சுக்குமிடையில் உள்ளது. அல்ஜீரிய யுத்தத்தின் தளும்புகள் இன்னமும் ஆறாதிருக்கிறது. முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது ஏராளமான கறுப்பின மற்றும் அரபுப் போராளிகள் பிரான்சுக்காக, பிரஞ்சு மக்களின் விடுதலைக்காகப் போராடி மாண்டார்கள். அதற்குரிய உரிமையும் அந்தஸ்த்தும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற சினமும் , வெறுப்பும் மேற்குறிப்பட்டவரகளின் வழித்தோன்றல்களின் மனத்திலேயூறியுள்ளன.

தன் பிரதேசத்தில் அடிமை முறைமை நீக்கப்பட்டபோது பிரஞ்சுக்காரன் தென்னிந்தியத் தமிழர்களைத்தான் தன் தீவுகளுக்குக் கூட்டிச்சென்று அடிமைகள் போல் வேலை செய்ய வைத்தான்.

அல்ஜீரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரஞ்சுப் படைகள்

ஓழுங்கான முறையில் மொழியறிவும், உரிமைசார்ந்த பிரக்ஞையும் கொண்ட அரபு மற்றும் ஆபிரிக்க இளைஞர்களை வேலையிலிருந்து நிறுத்தி பரிசின் உணவகங்கள் எல்லாம் தமிழர்களை வேலைக்கமர்த்தியபோது முன்யைவர்கள் தமிழர்கள் மீது வெறுப்புற்றார்கள் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள். வேலைச் சட்டங்களை அறியாது அடிமைகளாக வேலைசெய்வதற்கு எம்மவர்கள் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டபோது அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்போது தமிழர்களுக்குப் பதிலாக பங்காளதேசிகள் வேலைகெடுக்கப்படுகிறார்கள் என்பது வேறொரு கதை.

ஒருபகுதி வெளிநாட்டவரை வைத்து இன்னொரு பதியினரைக் “காய்வெட்டுவதில்”பிரஞ்சுக் குட்டி முதலாளித்துவத்தினர் கைதேர்ந்தவர்கள்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் உள்வாங்கினால் மாத்திரம் அன்றி தீபன் படத்தின் அரசியல் நோக்கத்தை யாரும் விளங்கிக்கொள்ள முடியாதென்பது வெள்ளிடை மலையாகும்.

தீபன் திரைப்படத்துள்……..

ஓடியார்

“தீபன்” திரைக்கதையமைப்பு மற்றும் அதன் படத்தொகுப்பு அல்லது படத்தொடுப்பு ஓடியார் எத்தனை தூரம் தன் இலக்கைத் துல்லியமாக அடைந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

இலங்கையின் யுத்தமுடிவில் ஆரம்பமாகும் திரைக்கதையானது, ஆரம்பத்தில் தன் பயணத்தை வேகமாக ஆரம்பிக்கின்றது (திரைக்கதையை ஏற்கெனவே தெரிந்திருந்த படியால் விழிப்பு நிலையிலிருந்து படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது). மிகக்குறுகிய நேரத்தில் கதை பிரான்சுக்கு வந்து சேர்ந்துவிட்டதை அவதானிக்கவும் முடிந்தது.

அதாவது, ஓடியார் சொல்ல வந்த விடயத்திற்கான சுருக்கமான முன்னுரையாகவே கதையின் இந்தப்பகுதி விரைந்து சென்றது. மூன்றாவது மண்டல நாடொன்றின் யுத்தத்தின் விளைவு ஐரோப்பாவை நோக்கி, குறிப்பாக, தீபனின் பிரான்சுக்குச் செல்லும் விருப்பை வெளிப்படுத்தி விரைகிறது.

சிலவருடங்களுக்கு முன், முக்கியமான அமைச்சர் ஒருவர் “உலகின் வறுமையனைத்தையும் பிரான்சுக்குள் ஏற்கமுடியாது” என்று கூறிய பிரபல்யமான கூற்று இன்னமும் அரசியல்வாதிகளினால் ஞாபகப்படுத்தப்படும் ஒரு கூற்றாக காணப்படுகிறது. இதில் பிரஞ்சு மொழியில் வறுமை (la misère) என அவர் சொல்லும் பல அர்த்தங்களைக் கொண்டது.

தீபன் படத்தின் இந்த முதற்தொடக்கம், பிரஞ்சுக்காரர்களுக்கு இந்த வாக்கியத்தை அல்லது அதையொத்த ஒரு உளவியல் படிமத்தை இன்றை அரசியல் சூழலில் கொடுத்திருக்கும் என நான் எண்ணுகிறேன். இதுவே ஓடியாரின் இலக்காக அமைந்தது எனவும் எண்ணுகிறேன்.

அடுத்து, அகதிகளை வரவேற்று, அவர்களைத் தன் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பினுள் உள்வாங்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் அக்கறை கொள்வதில்லை என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் ஓடியார் முன்வைக்கிறார்.

செயற்கைக் குடும்பம் (அதாவது யாரும் எந்த அடையாளத்துடனும், பொய்களுடனும் பிரான்சுக்குள் நுழையலாம் எனும் கருத்தை முன்னிறுத்தி) அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அகதியுரிமையைப் பெற்று அவர்கள் வேலை பெற்றுக்கொண்டு செல்வதிலிருந்து திரைக்கதை தன் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது.

செயற்கைக் குடும்பம் வேலைக்கமர்தப்பட்டு, அங்கு வசிப்பதற்குச் செல்லும் இடத்தின் பெயர்: “பசும் புல்வெளி”.

அதாவது ஓதுக்குப்புறமான, சட்டத்தாலும் நிர்வாகத்தாலும் கைவிடப்பட்ட, அந்நியர்களுக்காகக் கட்டப்பட்ட, வன்முறையும் போதைவஸ்தும் குடிகொண்டுள்ள இடத்திற்கு ஓடியார் இட்ட பெயர் “பசும் புல்வெளி”.

ஓடியார் இந்தப்படத்தை பிரஞ்சுக்காரர்களை இலக்கு வைத்துத்தான் இயக்கினார் என்ற விடயம் மிகவும் முக்கியமானது. கதைக்காக அவர் தெரிந்து கொண்ட “கடுகு சீரகம்” தான் தமிழர் பிரச்சனை.

எடுத்த எடுப்பிலேயே செயற்கைக் குடும்பம் “பசும் புல்வெளி” க்கு வரும்போதே காட்சிகள் அச்சமூட்டும் வகையிலாக அமைக்கப்பட்டுள்ளன. இக்குடும்பம், மொழியறியாது, விழிபிதுங்க, இளையாளின் மொழி பெயர்ப்புடன் “பசும் புல்வெளி” க்குள் நுழைகிறது.

“போரை வெறுத்த போராளியில் மீளெழுந்தது போர்க்குணம்” எனும் மகுடவாக்கியம் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே விளம்பர யுக்தியாகப் பயன்படுத்தப்பட்டதால், படம் எப்படி முடியப்போகிறது என்பதை முன் கூட்டியே ஊகிக்கக் கூடியதாக இருந்தது படத்தின் ஒரு பலவீனமான அம்சமாகவே பார்க்கப்படவேண்டும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் வன்முறையின் பிரசன்னம் உள்ளதாக ஓடியாரினால் காட்டப்படும் “அந்நியர் சேரி” அச்சமூட்டுவதாக உள்ளது.

அங்கு வாழ்பவர்கள் அனைவரையும் போதைவஸ்து டீலர்களின் கட்டுப்பாட்டில்வாழ்பவர்கள் போலவும், ஆபிரிக்க, அரபு இளைஞர்கள் அனைவருமே கட்டற்ற வன்முறையாளர்கள் போலவும், அதுவே இயல்பானதும், அவர்கள் சார்பில் நியாயப்படுத்தக் கூடியதுமான ஒன்று என்பது போலவும் கதையும் காட்சிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அந்நியனாக “அந்நியர் சேரியில்” வாழ்ந்தவன் என்ற வகையில் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கும் காட்சியாவே நான் இதைப்பார்க்கிறேன். இந்தக் காட்சிகளினால் பிரஞ்சுக்காரர்களுக்குக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி என்ன என்பதை இப்படத்தைப் பார்த்த சில பிரஞ்சுக்காரர்களுடன் உரையாடியபோது புரிந்து கொண்டேன். ஓடியார் தனது இலக்கில் வெற்றிகொண்டுள்ளார் என்பதை சந்தேகமறப்புரிந்து கொள்கிறேன்.

“அந்நியர் சேரியின்” பாடசாலையில் வகுப்பறைகள் பிரஞ்சுப் பிரசன்னமேயற்ற இடங்களாகக் காட்டப்படுகின்றன. பாடசாலையென்பதும் வன்முறையின் உற்பத்தி மையமாகக் காண்பிக்கப்படுகிறது.

தீபனின் செயற்கைக் குடும்பத்தில் காதலின் ஊற்றுக்கண் திறப்பதைக் காட்டும் காட்சிகள் செறிவற்றுக் காணப்படுவதுபோல் தோன்றினாலும், நடிகர்களின் நடிப்புத்திறமை அதை ஈடுசெய்கிறது என்று சொல்லலாம். ( இது பற்றி மூன்றாவது ஒரு பகுதியில் கூறுகிறேன்)

யாழினியின் தணியாத லண்டன் கனவுக்கு மத்தியிலும், செயற்கைக் குடும்பத்துடன் ஒட்டமுடியாத ஒரு மனேநிiலியிலும், அவளுக்கு ஒரு வேலை வாய்ப்பு எட்டுகிறது. முன்கட்டடத்தில் உள்ள ஒரு முடக்குவாதம் கொண்ட, பேசுந்தன்மையிழந்த ஒரு வயோதிபரைப்பராமரித்தல் மற்றும் அவருக்கு சமைத்துப்போடல்.

அதையடுத்து, அந்த வயோதிபரின் சகோதரியின் மகனின் மீள்வருகை. பல மாதங்களாகச் சிறைவாசம் அனுபவித்து விட்டுவரும் ஓரு போதவஸ்து வியாபார குட்டித்தலைவனின் வருகை. “அந்நியர் சேரியின்” இளசுகளின் பட்டாசுக் கொண்டாட்டம். தீபனின் கையறு நிலை. கடமையுணர்வும், விருப்பும் இருந்தும் தன்வேலையைக் கூடச் சரியாகச் செய்ய முடியாது தவிக்கும் குழப்பநிலை. எங்கும் வன்முறையின் வியாபகம்.

யாழினிக்கும், தீபனுக்குமான காதலின் “நிறைவேற்றம்” ஆலய வழிபாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. ஆலயம், வழிபாடு பூஜை என எல்லாம் முடிந்தபின் காலாச்சார ஆடைகளுடன் ஒரு பூங்காவின் ஏரிக்கரையில் “தமிழர் கூட்டம்” பிக்-நிக் செய்கிறது. ஓடியார் பிரஞ்சுக்காரர்களுக்கு அனுப்பிய இன்னொரு முக்கிய செய்தி.

பிரஞ்சு தேசம் அச்சமுற்றிருக்கும் ஒரு நிலையில் அந்நியர் தங்கள் அடையாங்களைக் காவிக்கொண்டு தங்களை ஆக்கிரமிக்கிறார்கள் என்ற கோசம் ஓங்கியுள்ள நிலையில் அதற்குத் தூபமிட்டுள்ளார் ஓடியார். இந்த நாட்டிலே என்ன நடக்கிறது என்பதை கிஞ்சுத்தும் அறியாவர் இதைக்காணுதல் கடினம். ஆம் பிரான்சின் சமூகக்குழுமங்கள் தம்மைச் சுற்றிக் கலாச்சார வேலிபோட்டு தம்மை பிரஞ்சு தேசத்துடன் கலந்துகொள்ளாது வாழ்கிறார்கள். ( “தமிழர்கள் பிரஞ்சுக்காரர்களை மார்ச் கிரக வாசிகள்போல் பார்க்கிறார்கள்” – வானொலிப் பேட்டியில் ஓடியார் கூறியது.)

பிரஞ்சு தேசம் “சமுகக் குழுமங்களாகிக்” கொண்டிருக்கிறது. தேசத்தின் கலாச்சார, அடையாள ஒருமைப்பாடு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற பாசிசக் கட்சியான தேசிய முன்ணியின் சுலோகங்களுக்கான நிறைவேற்றுச் சாட்சியங்களாக ஓடியார் இக்காட்சியை முன்வைத்துள்ளார் என்று நான் எண்ணுகிறேன். தேசிய முண்ணணி ஆதரவாளர்கள் மத்தியில் இப்படத்திற்கு உள்ள ஆதரவை வேறு விதமாகப் புரிந்து கொள்ளமுடியாதுள்ளது.

முப்பதாம் ஆண்டுகளில் ஜேர்மனியில் நிலவிய அரசியல் காலநிலை தற்போது பிரான்சில் காணப்படுகிறது என்று முற்போக்கு வாதப் பிரஞ்சுக்காரர்கள் கூறுவதை இப்போ நான் நினைந்து கொள்கிறேன்.

மான் வேட்டையாட நாம் ஓடுகையில் சிங்கம் எங்களைக் கலைப்பதைக் காணாமல் இருப்பது எத்தனை ஆபத்தானது.

யூதர்களை இலக்குவைத்த “மூன்றாவது ராச்சியம்” யார்யாரையெல்லாம் மாய்த்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். “அடை-கறுவல்” என்று நாம் கூறும் மக்களை இலக்கு வைக்கும் பிரஞ்சுப் பாசிசம் எங்களை உய்விக்கும் என நினைப்பவர்களே கண்ணைத் திறவுகங்கள். பெருநிதியங்கள் பிரஞ்சு மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு எதனைப் பலியிட எண்ணுகிறார்கள் என்பதன் அறிகுறிகள் உங்களுக்குத் தென்படவேயில்லையா ? 2017 ம் ஆண்டு வரையும் பொறுத்திருங்கள்.

ஒரு திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் நுணுக்கமாக ஆராயப்பட்டு, ஒவ்வொரு படிமங்களும் குறித்த ஒழுங்கில் தொடுக்கப்பட்டு, பலதடவைகள் பார்வையிடப்பட்டபின்னர்தான் காட்சிக்கு வருகின்றன. இது யாருக்கும் தெரிந்த விடயம்.

ஒரு காட்சியை எடுக்கிறேன்…

எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்பாளருமான வாசுதேவன்

யாழினிக்கும், இளையாளுக்குமிடையிலான முரண்பாட்டையடுத்து, அவர்களுக்கிடையில் ஒரு பாச உரையாடல் நடைபெறுகிறது. அந்த உரையாடலில் இளையாள் அணிந்திருக்கும் ரி-சேட்டை மறக்காமல் உற்று நோக்குங்கள். அதில் “NEW WORLD ORDER” எனும் வாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது எதேச்சையானது என என்னை நம்பவைக்க யாராலும் முடியாது. இதுவே இப்படத்தின் முத்திரையும் வெற்றியும்.

நான் பிரான்சில் வாழும் தமிழனல்ல. நான் இங்கு வாழும் ஒரு அந்நியன்.

(தொடரும்)

Exit mobile version